Featured Posts
Home » பொதுவானவை » நுட்பம் » அறிவியல் » பிளாட்டிபஸ் (PLATIPUS)

பிளாட்டிபஸ் (PLATIPUS)

[தொடர் 3 : பல ஒற்றுமைகளில் சில வேற்றுமைகள்]

‘பிளாட்டிபஸ்’ என்னும் இந்த உயிரினம் மிகச் சிறிய பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். இவை முட்டையிட்டு பாலூட்டுவதால் இவை விதிவிலக்கான அல்லாஹ்வுடைய படைப்புகளில் ஒன்றாகும். இவை மற்ற பாலூட்டிகளினின்று எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் இவைகளின் செயல்பாடுகள், வாழ்க்கை முறைகள் இவற்றை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

‘பிளாட்டிபஸ்’ முட்டையிட்டு குஞ்சு பொரித்து தன் குஞ்சுகளுக்கு பால் கொடுப்பது மற்றும் அதன் உடல் அமைப்பு மற்ற எல்லா விலங்கிலிருந்தும் வேறுபட்ட ஒன்றாகும். ‘வாத்து’விற்கு உள்ளது போன்ற வாய் அமைப்பு. கால்களில் அமையப்பெற்ற விஷச்சுரப்பி. கழுத்து என்பதே இல்லாத ஓர் உயிரினம்.

இவை தாஸ்மேனியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவைகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும், பல வகைகளிலும் வித்தியாசமான செயல்பாடுகளும் உடல் தகவமைப்புகளும் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்பியல்புகளாகும். 30 முதல் 40 செ.மீ. வரை நீளமும் 1 கிலோ முதல் 3 கிலோ எடை வரை வளரக்கூடியவை. இவற்றின் வாய் அமைப்பு வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் அலகு போன்ற வாய் அமைப்பு 6 செ.மீ. வரை நீளமும் 5 செ.மீ. வரை அகலமும் உடையது.

இவற்றின் வாயுடைய நுனிப்பகுதியில் மிருதுவான மோப்ப சக்தியை உணரக்கூடிய சதைப்பகுதியை கொண்டுள்ளது. (பன்றியின் வாய் பகுதியைப் போன்று), வாலும் உடலும் தடித்த மிருதுவான ரோமங்களை உடையதாகவும் பிதுங்கியது போன்ற தோற்றத்திலும் காணப்படுகின்றது. இவற்றின் வால் பகுதி தட்டையாகவும் சிறியதாகவும் அமைந்துள்ளது. இவற்றின் முக்கியமான எடுப்பான தலை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவைகள் சிறிய கண்களைப் பெற்றிருப்பினும் கூர்மையான பார்வைத் திறனையும் செவிப்புலன்களையும் பெற்றுள்ளன. இவற்றின் சிறிய தலைப்பகுதியானது கழுத்துப்பகுதி எதுவுமின்றி உடலுடன் நேரடியாக இணைந்துள்ளது. இந்த அம்சமும் மற்ற பாலூட்டிகளினின்றும் வேறுபட்ட ஒன்றாகும்.

‘பிளாட்டிபஸின்’ கால் விரல்கள் ஜவ்வு போன்ற தோலினால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் பறவையினத்தின் வாத்தை ஒத்ததாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறந்த நீச்சல் திறனையும் பெற்றுள்ளன. இது நீர்வாழ் உயிரினங்களை ஒத்த அம்சமாகும். உலகில் காணப்படும் விஷத்தன்மை வாய்ந்த சில பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும். பெண் பிளாட்டிபஸைக்காட்டிலும் ஆண் பிளாட்டிபஸ் அதிக விஷத்தன்மையைக் கொண்டுள்ளன. இவைகளின் பின்புறக்கால்களில் உள்ள குழிவுப்போன்ற பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இவற்றின் கால் பகுதியில் அமைந்துள்ள விஷச்சுரப்பியும் எந்த பாலூட்டிகளிலும் இல்லாத ஒன்றாகும். இவற்றின் மூலம் குறிப்பிட்ட அழுத்தத்தை பிரயோகித்து தங்கள் எதிரிகளின் மீது மிக வேகமாக விஷத்தைப் பீய்ச்சி அடிப்பதின் மூலம் இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இதுவே இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாகும்.

பூமியின் மிக ஆழத்தில் அமைக்கும் உல்லாச விடுதி

‘பிளாட்டிபஸ்’ தங்கள் வலைகளில் ஏற்;படுத்தும் பாதுகாப்பு அரண் இறைவனின் சான்று. இவைகள் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழுகின்றன. இவை ஆறுகளின் ஓரக்கரைகளில் பூமியில் மிக நீண்ட வலைத்தோண்டி அதில் வசிக்கின்றன. வலை ஏறக்குறைய 50 முதல் 60 அடி வரை ஆழம் உடையவை. இவ்வளவு ஆழத்தில் வலை தோண்டி வாழக்கூடிய பாலூட்டியும் இதுவாகத்தான் இருக்கமுடியும். இதுவும் மற்ற பாலூட்டிகளிலிருந்து வேறுபடும் ஒரு அம்சமாகும். வலை தோண்டும் பணியில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே ஈடுபடுகின்றன. ஏனெனில் பெண் பிளாட்டிபஸ் மாத்திரமே வலையில் வசிக்கின்றன. ஆண் பிளாட்டிபஸ் தங்களின் வாழ்வை வலைக்கு வெளியே கழிக்கின்றன. மேலும் இவைகள் தங்கள் வலையில் செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுகள், உண்மையில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிறைய சான்றுகளை பகர்கின்றது.

Platipus

வெள்ளப்பெருக்கு மற்றும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நிறைய தடுப்புக்களையும் வளைவுகளையும் மண்ணினால் தங்கள் வலையிலே ஏற்படுத்துகின்றன. தங்களின் வலையின் இறுதியில் மிக நேர்த்தியான இருப்புக்களை புற்களைக்கொண்டும், இலை, தழைகளைக்கொண்டும் பரப்பி சொகுசான முறையில் அமைத்துக்கொள்கின்றன. நிச்சயமாக இவைகளின் திட்டமிட்ட இந்த ஏற்பாடுகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் உண்டானது என்று எவ்வாறு நியாயப்படுத்த முடியும். நம்மைப்பொறுத்த வரை பின்வரும் வசனம் நமக்கு நல்லதொரு தெளிவைக் கொடுக்கின்றது.

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் நன்கு அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.
(அல்குர்ஆன் 11 : 06)

இனப்பெருக்கத்தின் மூலம் கருவுறும் பெண் பிளாட்டிபஸ், ஒன்று முதல் நான்கு முட்டை வரை இடுகின்றது. பிறக்கும் போது குட்டிகள் (குஞ்சு) பற்களை உடையதாகவும் முடிகள் அறவே இல்லாத நிலையிலும் பிறக்கின்றன. இவைகளைத் தாய் பிளாட்டிபஸ் தன் வாலைக்கொண்டு அரவணைத்து பாதுகாக்கின்றது.

இவைகள் தங்களின் இரையை பிடிக்க கையாளும் யுத்தி (முறை) மிக சுவாரசியமானது. ஆறுகள் மற்றும் குளங்களின் அடிப்பரப்பிற்குச் சென்று தங்கள் அலகு மூலம் சேறு சகதிகளைக் கிளருகின்றன.

இதன் மூலம் வெளிப்படக்கூடிய கிளிஞ்சல்கள், பூச்சிக்கள் மற்றும் புழுக்களை உட்கொள்கின்றன. இரையை பிடிப்பதில் இவைகளின் அலகு பெரும் பங்கு வகிக்கின்றன.

அறிவியல் அறிஞர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு உபயோகத்திற்கும் பயனில்லாத ஒரு உயிரினமாக இது கருதப்படுகின்றது. எனினும் இவைகளின் பயன்பாடுகளைபற்றி வரும் காலங்களில் தெரிய வரலாம்இறைவன் நாடினால்..

சர்வதேச விதிகளின்படி ‘பிளாட்டிபஸை’ கொல்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஆய்வுக்கூடத்தில் அதனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய இவை பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன. இவற்றின் பல வித்தியாசமான தன்மைகளைப் பார்க்கும் போது ஒரு விதியின் அடிப்படையில் ஒன்றை படைக்கக்கூடிய இறைவன் அதற்கு நேர் மாற்றமாக பலத்தன்மைகளைக்கொண்ட மற்றொன்றைப் படைக்க ஆற்றல் உள்ளவன் என்று உள்ளங்கை நெல்லிக்கனியென தெளிவாகின்றது.

بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ

‘அவன் வானங்களையும், பூமியையும், எந்த முன் மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது ஆகுக என்று கூறுவான் உடனே ஆகிவிடும்’.
(அல்குர்ஆன் 2 : 117).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *