Featured Posts
Home » சட்டங்கள் » குற்றப்பரிகாரம் » குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)

குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா)

இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும்.

குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா) என்பது, பாவம் செய்த ஒருவரின் பாவத்தை தர்மம், தொழுகை இன்னும் அவைகள் போன்றதைக் கொண்டு பரிகாரம் தேடுவதாகும். குற்றப்பரிகாரம், பாவம் செய்தவரின் பாவத்தை போக்குவதால், அதற்கு குற்றப்பரிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவைகளை ஒரு முஸ்லிமும் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், வாசகர்களுக்கு இதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

குற்றப்பரிகாரத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1. பெரும்பாவங்களுக்காக இஸ்லாம் குறிப்பிட்டுக்கூறிய குற்றப்பரிகாரம்.
2. சில வணக்கங்களை செய்வதால், நாம் செய்த சிறுபாவங்களை போக்கும் பரிகாரம்.

பெரும்பாவங்களுக்கான குற்றப் பரிகாரங்கள்

1. ரமளான் மாத நோன்பை நோற்ற நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டவரின் பரிகாரம்
ரமளான் நோன்பை நோற்ற நிலையில் தன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் பின்வரும் பரிகாரங்களில் ஒன்றை முறைப்படி கொடுக்க வேண்டும்.

அ. ஒரு அடிமையை உரிமை இட வேண்டும், அதற்கு முடியாவிட்டால்.

ஆ. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியா விட்டால்

இ. அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். உம்மை அழித்தது எது என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ஒரு அடிமையை உரிமையிடுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றேன். இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோருங்கள் என்றார்கள், அதை என்னால் தாங்கி கொள்ள முடியாது என்றேன், அறுபது மிஸ்கீன்களுக்கு உணவளியுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றேன், உட்காரு என்றார்கள் அவரும் உட்கார்ந்து விட்டார். அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்கும் போதே அரக் என்று அழைக்கப்படும் (பேரீத்தம்பழ) கூடை (நபி – ஸல் – அவர்களிடம்) கொண்டுவரப்பட்டது, இதைக் கொண்டு தர்மம் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களை உண்மையை கொண்டு அனுப்பியவன் (அல்லாஹ்வின்) மீது ஆணையாக, மதீனாவின் இரு மலைகளுக்கு மத்தியில் எங்களை விட மிகத்தேவையுள்ளவர்கள் இல்லை என்றார். இக்கூடையை எடுத்துக் கொண்டு உமது குடுப்பத்துக்கு உணவளியும் என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். (இப்னு மாஜா)

இன்னும் ஒரு அறிவிப்பில்: நபி(ஸல்) அவர்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள்.

2. மாதவிடாய் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொண்டவரின் பரிகாரம்
மனைவி மாதவிடாய் காலமாக இருக்கும் போது உடல் உறவு கொள்வது பெரும் பாவமாகும். அப்படி ஈடுபட்டவர், பின்வரும் பரிகாரத்தை வழங்க வேண்டும்.
மாதவிடாய் நேரத்தில் தன் மனைவியுடன் உடல் உறவு கொண்டவர் ஒரு தங்கக் காசு அல்லது அரை தங்கக் காசு தர்மமாக கொடுக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)

3. சத்தியத்தை முறித்தவருக்குரிய பரிகாரம்
சத்தியத்தை முறித்தவர் பின்வரும் மூன்று பரிகாரங்களில் விரும்பிய ஒன்றை நிறை வேற்ற வேண்டும்.

அ. பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது

ஆ. பத்து ஏழைகளுக்கு உடை வாங்கி கொடுப்பது, அல்லது

இ. ஒரு அடிமையை உரிமை விடுவது.

குறிப்பு: இம்மூன்றில் ஒன்றையாவது ஒருவருக்கு நிறைவேற்ற முடியாவிட்டால், அவர் மூன்று நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது; உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிறாவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். 5:89

யாராவது ஒருவர், நான் நல்ல காரியத்தை செய்யமாட்டேன் என சத்தியம் செய்தால், அவர் சத்தியத்திற்குரிய பரிகாரத்தை செய்துவிட்டு அந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யாராவது ஒருவர் சத்தியம் செய்து அதைவிட சிறந்த ஒன்றை கண்டால், அவரின் சத்தியத்திற்கு பரிகாரம் செய்துவிட்டு (அந்த நல்ல காரியத்தை) செய்யட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: அக்காரியத்தை செய்யட்டும் இன்னும் தனது சத்தியத்திற்கு பரிகாரமும் செய்யட்டும். (முஸ்லிம்)

4. நேர்ச்சைக்குரிய பரிகாரம்
யாராவது ஒருவர் குறிப்பிடாத நேர்ச்சை செய்தால், அல்லது நேர்ச்சை செய்து அதை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அல்லது அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தை செய்வதாக நேர்ச்சை செய்தால் அவர்கள் சத்தியத்தை முறித்தவருக்குரிய பரிகாரத்தை வழங்க வேண்டும். பின்வரும் ஹதீஸ் அதை தெளிவு படுத்துகின்றது.

யாராவது ஒருவர் பெயர் குறிப்பிடாத நேர்ச்சை செய்தால், அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். அல்லது நேர்ச்சை செய்து அதை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். அல்லது அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விஷயத்தை செய்வதாக நேர்ச்சை செய்தால் அவருக்குரிய பரிகாரம், சத்தியத்தை முறித்ததற்குரிய பரிகாரமாகும். யார் தன் சக்திக்குட்பட்ட நேர்ச்சை செய்கின்றாரோ அவர் அதை நிறைவேற்றட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

5. கொலை செய்தவனுக்குரிய பரிகாரம்

கொலை இரண்டு வகைப்படும்.
1. வேண்டுமென்று செய்யும் கொலை.
2. தெரியாமல் நடக்கும் கொலை.

1. வேண்டுமென்று கொலை செய்தவனுக்குரிய தண்டனை
வேண்டுமென்று கொலை நடந்திருந்தால், கொலை செய்தவனை கொல்ல வேண்டும். கொலை செய்யப்பட்டவரின் உரிமையாளர்கள் கொலை செய்தவனை மன்னித்து நஷ்ட ஈட்டுத்தொகையை வேண்டினால், அதை அவன் வழங்க வேண்டும்.

அ. கிஸாஸ் (கொலைக்கு கொலை)
ஆ. அல்லது கொலை செய்யப்பட்டவரின் பொறுப்புதாரிகள், கிஸாஸை மன்னித்து, கொலைக்கான நஷ்ட ஈட்டுத்தொகையை கேட்டால், அதை அவர் வழங்க வேண்டும்.

அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன் அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்டயீட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் – இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்;. ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்கு கடுமையான வேதனையுண்டு. 2:178

வேண்டுமென்று கொலை செய்தவனுக்கு மறுமையில் கொடுக்கப்படும் தண்டனை மிகவும் கொடுமையானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். 4:93

2. கொலை தவறுதலாக நடந்திருந்தால், பின்வரும் பரிகாரத்தை முறைப்படி கொடுக்க வேண்டும்.

அ. கொலை செய்யப்பட்டவர் முஃமினாக இருந்தால் ஒரு அடிமையை உரிமை இடவேண்டும், அத்துடன் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

ஆ. கொல்லப்பட்டவன் கொலை செய்தவனின் பகை இனத்தைச் சார்ந்த முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும்.

இ. கொலை செய்யப்பட்டவன், கொலை செய்தவனின் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்.

ஈ. இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும்.

அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல, உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் – அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய. கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை, இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் – அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான். 4:92

6. ளிஹார் செய்தவருக்குரிய பரிகாரம்
அறியாமை காலத்தில் தன் மனைவியை தலாக் இடுவதற்கு பயன் படுத்தும் வார்த்தைகளில் ஒன்றுதான் ளிஹார் என்பது. அதாவது ஒருவர் தன் மனைவியை பார்த்து நீ என் தாயின் முதுகைப் போல் என்று கூறினால், அந்தப் பெண் தலாக் இடப்பட்டவளாக கருதப்படுவாள். அதாவது என் தாய் எனக்கு ஹராம் என்பது போல், நீயும் என்மீது ஹராம் என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும். நம்மில் யாராவது அப்படி கூறினால், அது தலாக்காக கணக்கிடப்பபடமாட்டாது, ஆனால் அவ்வாறு கூறியவர் அதற்குரிய பரிகாரத்தை செலுத்தாத வரை அந்த மனைவியிடம் உடல் உறவு கொள்வது ஹராமாகும்.

பின்வரும் பரிகாரங்களை முறைப்படி நிறைவேற்ற வேண்டும்:

1. அடிமையை உரிமை இடுதல், அதற்கு முடியாதவர்

2. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியாதவர்

3. அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.

ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. 58:3,4

2. சிறுபாவங்களுக்கான குற்றப்பரிகாரங்கள்

1. ஐவேளைத் தொழுகை
பெரும் பாவத்தை தவிர்ந்து கொண்ட எந்த ஒரு முஸ்லிமாவது பர்ளான தொழுகைக்காக நல்ல முறையில் ஒழு செய்து அத்தொழுகையை நல்ல முறையில் தொழுதால் அதற்கு முந்திய பாவங்களுக்கு அது பரிகாரமாகும், இது காலம் முழுவதுமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் பைஹகி)

2. ஜும்ஆத் தொழுகை
யார் வெள்ளிக் கிழமை குளித்து, பல் துலக்கி, அவரிடத்திலுள்ள மணத்திரவியத்தை பூசி, அவருடைய ஆடையில் நல்லதை அணிந்து, பள்ளிக்கு வந்து மனிதர்களின் பிடரியை மடக்கிகொண்டு செல்லாமல் அவருக்கு முடிந்த அளவு (சுன்னத்து) தொழுது, இமாம் (குத்பா பிரசங்கத்திற்காக) வெளியானதிலிருந்து(ஜும்ஆ) தொழுகையை தொழும் வரை வாய்மூடி (யாரிடமும் பேசாமல்) இருந்தால் இந்த ஜும்ஆவிற்கும் அதற்கு முந்திய ஜும்ஆவிற்கும் மத்தியிலுள்ள பாவங்களுக்கு பரிகாரமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் பைஹகி)

பெரும் பாவங்களிலிருந்து தவிர்ந்து கொண்டால், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஒரு ஜும்ஆவிலிருந்து இன்னுமொரு ஜும்ஆ (அவைகளுக்கு மத்தியில் நிகழும் சிறு தவறுகளுக்கு) பரிகாரமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3. உம்ரா செய்தல்
ஒரு உம்ரா இன்னும் ஒரு உம்ராவுக்கு மத்தியிலுள்ள (சிறு பாவங்களுக்கு) பரிகாரமாகும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்குரிய கூலி சுவர்க்கத்தை தவிர வேறில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

4. அரஃபா நோன்பு இரு வருட பாவங்களுக்கு பரிகாரமாகும்
அரஃபா நாளின் நோன்பை நோற்பது முன் சென்ற பின்வரும் இரு வருடங்களின் பாவங்களுக்கு பரிகாரமாகும், ஆஷுரா நாளின் நோன்பை நோற்பது ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல்பைஹகி)

5. ஆஷுரா நோன்பு ஒரு வருட பாவங்களுக்கு பரிகாரமாகும்
அரஃபா நாளின் நோன்பை நோற்பது முன் சென்ற பின்வரும் இரு வருடங்களின் பாவங்களுக்க பரிகாரமாகும், ஆஷுரா நாளின் நோன்பை நோற்பது ஒரு வருட பாவத்திற்கு பரிகாரமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல்பைஹகி)

6. சபையில் ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரம்
நபி(ஸல்) அவர்கள், அவர்களின் கடைசி காலத்தில் ஒரு சபையிலிருந்து எழுந்தால்,

سُبْحَانَكَ اللهم وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا أنت أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

(சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லா அன்த அஸ்தக்பிருக வஅதூபு இலைக)

என்று ஓதுவார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன்பு கூறாத வார்த்தையை இப்போது கூறுகின்றீர்களே என (நபித்தோழர்கள்) கேட்டார்கள். இது சபையில் நடந்த (தவறுகளுக்கு) பரிகாரம் என்றார்கள். (சுனனுத்தாரமி)

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

One comment

  1. Masha allah!!!!
    This website is very useful…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *