Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்

உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.

சிறுவர் துஷ்பிரயோகம்:
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்கள் பல மட்டத்திலும் நடந்தேறி வருகின்றன. இது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும், இவ்விதம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் குடும்ப கௌரவத்திற்காக மூடி மறைக்க முற்படுவதனால், இந்தக் குற்றம் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது. 2006-ல் ஐ.நா வின் ஒரு ஆய்வின்படி, 18 வயதிற்குட்பட்ட 15 கோடி சிறுமிகளும் 7 கோடியே முப்பது இலட்சம் சிறுவர்களும் ஓர் ஆண்டிற்குள் பாலுறவில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டதாக அல்லது வேறு விதமான பாலியல் கொடுமைக்கு ஆளாகுவதாகக் கண்டுணரப்பட்டுள்ளது. அத்துடன் அதே அறிக்கை உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக இதை விட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றது. மேலும், சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களில் 36 சதவீதத்தினரும், ஆண்களில் 29 சதவீதத்தினரும் தாம் பிள்ளைப் பருவத்தில் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்ட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதில் இந்தக் கொடுமையை அவர்களுக்கு இழைத்தவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்ப உறவினர்களே என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.

இன்றைய ஆபாச சினிமாக்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் நிகழ்ச்சிகள் என்பன எரிகின்ற இந்தத் தீயில் எண்ணைய் வார்ப்பதாய் அமைந்துவிடுகின்றன.

ஆண்-பெண் இரு சாராரின் திருமண வயதெல்லை உயர்ந்து செல்வது, நெருக்கமான குடும்ப அமைப்புக்கள் என்பனவும் இதற்கான வாய்ப்பையும், சூழலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. பெருகிவரும் மதுப் பழக்கம் மற்றுமொரு அரக்கனாக மாறி இப்பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

மது போதையில் ஒன்பது வயது மகளைக் கற்பழித்த தந்தை, சாராயக் கடன் அடைக்க மகளை அடகு வைத்த தந்தை போன்ற பத்திரிகைச் செய்திகள் இதையே உணர்த்துகின்றன.

ஆண்களின் வக்கிர பார்வைக்குச் சிறுவர்-சிறுமியர் உள்ளாவது போன்றே, மோசமான பெண்களின் வலையில் சிறுவர்கள் சிக்கும் விபரீதமும் நிகழ்ந்து வருகின்றது. 11, 12, 13, 14 வயதுகளையுடைய 4 மாணவர்களை மாலை வகுப்புக்கள் என்ற பெயரில் வீட்டுக்கழைத்து அவர்களைப் பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்திக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ஆசிரியைக்கு அண்மையில் 28 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற சூழ்நிலைகளுக்குள்ளாகும் சிறுவர்-சிறுமியர் உளவியல் ரீதியில் பாரிய பிரச்சினைக்குள்ளாகின்றனர். 15 வயதுடைய இளம் சிறுமி ஒருவர் தனது சகோதரனால் தவறாக வழி நடத்தப்பட்டதால், ஹிஸ்டீரியாவுக்குள்ளான செய்தி, அச்சிறுமியை உளவியல் ஆய்வுக்குட்படுத்திய போது அறியப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு தவறாக வழி நடத்தப்படுகின்ற சிறுவர்-சிறுமியர் மிதமிஞ்சிய பாலியல் வேட்கை – இல்லை வெறி கொண்டவர்களாக மாறி தமது வாழ்வையும் சீர்குலைத்துக் கொள்ளும் ஆபத்துள்ளது. எனவே, இது குறித்து மிகுந்த அவதானம் தேவை!

அறிவு அவசியம்:
முதலில் இத்தகைய கொடுமை உலகில் அன்றாடம் நடந்து வருகின்றது என்ற அறிவு குறிப்பாக பெற்றோருக்கு இருப்பது அவசியமாகும். அறிவு இருந்தால் தான் அவதானமாக இருக்கலாம். பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது. பகிரங்கக் குற்றவாளிகளை விட நல்லவர்களாக நடப்பவர்கள் தான் குடும்பத்துக்குள்ளும், தம்மை அண்டி வாழ்பவர்களிடமும் இந்தக் குற்றத்தைப் புரியும் அபாயம் இருக்கின்றது. எனவே, அனைவர் விடயத்திலும் பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.

குறிப்பாக மாற்று சமூகங்களில் இது போன்ற குற்றங்கள் தந்தை, சிறிய தந்தை, மாமா போன்றோரால் நிகழ்த்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. முஸ்லிம் சமூகத்தில் இந்நிலை இல்லையென்றாலும் தூரத்து உறவினர், அண்டை அயலில் வசிப்போர், நண்பர்களுடாக நடக்கும் சாத்தியம் அதிகமுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற ஒரு நாவல் ஒரு கதாபாத்திரத்தைச் சித்திரிக்கின்றது. அதில் வரும் ஒரு மாமன் தனது மருமகளை அன்போடு அரவணைக்கின்றான். செல்லமாகத் தட்டிக் கொடுக்கின்றான். தாயோ தனது சகோதரன் தன் மகளுடன் பாசத்துடன் இருப்பதை எண்ணி பூரித்துப் போகின்றாள். ஆனால், அந்தப் பெண்ணோ மாமனின் சில்மிஷத்தை உணர்ந்து தடுக்கவும் முடியாமல், தட்டிக் கழிக்கவும் முடியாமல், அவனின் கபடத் தனத்தை உணராதது போல் செல்லமாக நடித்துக் கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் அதிகமான பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மற்றும் சில தாய்மார்கள், தமது அயலவர்களுடன் கொஞ்சம் ஓவராகவே நெருங்குவதாக உணர்ந்தாலும், ‘அவர் வஞ்சகம் இல்லாமல் பழகுபவர்; பிள்ளைகளுடன் சரியான இரக்கம்’ என்று தம் மனதுக்கு விரோதமாகப் பேசி சமாளித்துச் செல்கின்றனர்.

தனது பிள்ளைகளுடன் அன்பாகப் பழகாதவன் அடுத்த வீட்டுப் பிள்ளையுடன் செல்லமாக விளையாடுகின்றான். 8-9 வயதுப் பிள்ளைகளுக்கும் முத்தம் கொடுக்கின்றா னென்றால் சிந்திக்க வேண்டிய விடயம்தான். எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளுடன் யார், என்ன விதத்தில் பழகுகின்றனர் என கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

– வீட்டில் தனியாக ஓர் ஆண் இருக்கும் போது பொருட்கள் வாங்கவோ அல்லது ஏதேனும் உதவிகள் செய்யவோ பெண் பிள்ளைகளை அனுப்பக் கூடாது!

– ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அடுத்தவர் வீட்டில் சிறுவர்-சிறுமியரை உறங்க அனுப்பக் கூடாது!

– அவரவர் வயதுக்கு மூத்தவர்களுடன் நேசத்துடனும், நெருக்கமாகவும் பழக விடக்கூடாது! சம வயதுடையவர்களுடன் நட்பாக இருக்கலாம்!

– தனிமைப்படும் சந்தர்ப்பத்தைக் குறைக்க வேண்டும். சிறுவர்-சிறுமியர் தனிமையில் இருக்கும் போதே துஷ்பிரயோகத்திற் குள்ளாகின்றனர்.

– ஒன்பது வயது தாண்டியவர்கள் ஒரே போர்வையைப் போர்த்தியவர்களாக உறங்கு வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இந்த வகையில் உறவுக்காரர்கள், அந்நியர்கள், நண்பர்கள், வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் போன்றவர்களுடன் ஒரே கட்டிலில் ஒன்றாக சிறுவர்-சிறுமியரை உறங்க விடலாகாது.

– வீட்டில் நடைபெறும் விஷேடங்களின் போது, பிள்ளைகளின் உறக்கம் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை. கண்டபடி அவர்கள் உறங்கிவிடுவர். அத்தகைய கலப்பு உறக்க சந்தர்ப்பங்களைக் காமுகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, இதில் விழிப்பு அவசியம்!

– சிறுவர்-சிறுமியர் அன்பளிப்புக்களுக்கு ஏமாறாதவர்களாக பழக்குதல் பெற்றோரின் கடமையாகும். சிறுவர்களை பலி கொள்ளும் பாதகர்கள் ‘டொஃபி (மிட்டாய்) தருகிறேன்; சொக்கலேட் தருகிறேன்; பலூன் தருகிறேன். வா!’ என அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே, யார் எதைத் தந்தாலும் எடுக்கக் கூடாது; ஏமாறக் கூடாது என்ற கட்டுப்பாடு அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்.

– எமது பிள்ளைகள் அடுத்தவர்களிடத்தில் தேவையுடையோராக இருக்கக் கூடாது! தம்மை நாடி தேவையுடன் வருபவர்களிடம் காமுகர்கள் துணிச்சலுடன் கை நீட்டலாம். சிறுவர்களும் தமது தேவை நிறைவேற வேண்டும் என்ற ஏக்கத்தில் அதற்கு இசைந்து செல்லலாம்.

– ஏற்கனவே நன்றாகப் பழகிய ஒருவர் வீட்டிற்கு வந்ததும் நமது சிறுவர்கள் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க முனைந்தால், அல்லது அவர்களது சிறு விளையாட்டுக்குக் கூட அதிகம் ஆத்திரம் கொண்டால், அவர்கள் மூலம் இவர்கள் விரும்பத்தகாத ஏதோ ஒன்றைச் சந்தித்துள்ளனர் என்பது அர்த்தமாகும். எனவே, சிறுவர்களின் நடத்தைகளில் ஏற்படும் மாறுதல்களை அவதானித்துப் பெற்றோர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும்.

ஒரு மலையகப் பெண் கவிஞரின் கவிதை வரிகள் பின்வரும் கருத்தில் அமைந்துள்ளன.

தனது பாட்டனுக்குப் பணி செய்யுமாறு தாய் நச்சரிக்கிறாள்; மகள் மறுக்கிறாள். காரணம் பாட்டனார் சிறுமியிடம் சில்மிஷம் பண்ணுகிறார். இதைத் தாயிடம் சொல்லிக்கொள்ள முடியாத மகள் மனதுக்குள்ளே வெதும்புகிறாள்! தாயோ தன் மகள் பாட்டனுக்குச் செய்ய வேண்டிய கடமையில் அசட்டை செய்வதாகவே அதை எடுத்துக்கொள்கிறாள். இது போன்ற இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கும் சிறுவர்கள் உளவியல் ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

– அத்துடன் பெற்றோர் பிள்ளைகளை சதாவும் தமது கண்காணிப்பில் வைத்திருப்பதன் மூலமும், அவர்களுடன் அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுவதன் மூலமும் பிள்ளைகள் துஷ்பிரயோகத் திற்குள்ளாகுவதைப் பெரும் அளவில தவிர்க்க முடியும்.

– அத்துடன் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், சிறுவர்-சிறுமியர் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்தும் சிக்கலான சந்தர்ப்பங்களில் தம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

– மார்க்கத்துக்கு முரணான எந்தச் செயலை யார் செய்யச் சொன்னாலும் செய்யக்கூடாது! தவறைச் செய்யுமாறு யார் கட்டளையிட்டாலும் கட்டுப்படக் கூடாது! என்ற உணர்வு அவர்களுக்கூட்டப்பட வேண்டும்.

– குழந்தைகள் தமது பிரச்சினைகளைப் பெற்றோர்களிடம் கூறக் கூடிய அவகாசத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதுடன் அதற்கான துணிவையும் அவர்களுக்கு அளிக்கவேண்டும்.

– அடுத்தவர்கள் நட்புக்காகவும், அன்புக்காகவும் தீண்டத்தக்க உறுப்புக்கள் எவை? தீண்டக் கூடாத உறுப்புக்கள் எவை என்ற தெளிவு அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

– தவறைத் துணிவுடனும், உரத்த தொனியிலும், உறுதியுடனும் மறுக்கும் துணிவு அவர்களுக்கு ஊட்டப்படுவதுடன், தேவைப்பட்டால் ஆபத்தின் போது எப்படித் தப்ப முடியும்? என்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.

– இவ்வாறு, பெற்றோர்கள் தமது குழந்தைகள் விடயத்தில் விழிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டால் எமது சிறுவர்களின் எதிர்கால வாழ்வை நாசப்படுத்தும் துஷ்பிரயோக நடவடிக்கைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். இது விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

13 comments

  1. Assalamu Alikkum (Varah) Ithu oru Nalla Advice Arinthu kulla kudiya visayam keep it up thanks/bathusha

  2. அவசியமான கட்டுரை. இந்த விசயத்தில் தாய் தந்தையரின் பொறுப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக விடுதிகளில் தங்கி படிக்கவைக்கும் முன் பெற்றோர் படுக்கை வசதிகளை நன்கு ஆராயவேண்டும். கூட்டு குடும்பத்தில் வசிக்கும் போதும் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். இரவு நேரங்களில் குறிப்பாக மஃரிபிற்கு பிறகு வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ளவர்களிடம் அதிகம் பழகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    சிறு வயதில் தன் பிள்ளை தவறாக நடப்பதாக அறிந்தால் கடுமையாக தண்டித்திட்டால் பெரியவனானதும் ஹோமா போன்ற ஓரினச்சேர்க்கை போன்ற தீய பழக்கங்களிலிருந்தும் பாதுகாக்கலாம்.

    இது சமுதாய விழிப்புணர்வு கட்டுரை. எழுதிய ஆசிரியருக்கும் அதனை வெளியிட்ட இஸ்லாம்கல்விக்கும் வாழ்த்துக்கள்.

  3. alhamdulillah.

    very good topic.
    it is useful to all parents.
    jazakallah

  4. Assalamu alaikum very good topic useful to us

  5. very very essential messege to all peoples

  6. Assalamu Alaikum Wrah,…
    Zakamullahu Khairan for you to give this usefull message.

  7. Assalamu Alaikum Wrah… Thanks for posting this kind of message and i hope that
    other parents would follow this and keep a eye on their children.I would aspect this kind of messages from you all.Jazakallahu khairan khathirah.

  8. All parents are salute you.
    Other good compositions are expecting from you.
    Thank you very much.

  9. ALL PARENTS SHOULD LISTEN THIS ONE IT IS TOO IMPORTANT

  10. jazakallh brother, may allah shower his rahmath

  11. very useful article,

  12. இது oru சமுதாய விழிப்புணர்வு கட்டுரை. எழுதிய ஆசிரியருக்கும் அதனை வெளியிட்ட இஸ்லாம்கல்விக்கும் வாழ்த்துக்கள்.

    Thanks
    Abu Ayhan
    From KSA

  13. Assalamu alaikum. …Masha Allah nalla karthu…. …Insha Allah pillai valakurathula parents rmb kavanama irukanum. ….first parentsku itha pathi awareness important….Allhumdulillah rmb useful’ah iruthuchu. ….Allah vidam athihama pillaikaluku pathukapu thedanum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *