Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை அடைந்து விடலாம் என்றெண்ணி செய்கின்றனர். உதாரணமாக முஹர்ரம் மாதம் பாஞ்சாவென்றும், ஸஃபர் மாதம் வந்தால் ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதனென்றும், ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மீலாது விழா கொண்டாட்டமென்றும், ரஜப் மாதத்தில் பூரியான், பாயாசம் சகிதம் பாத்திஹாவென்றும், ஷாஃபான் மாதத்தில் ஷபே பராஅத் இவைகள் போன்ற பித்அத்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஆனால் இஸ்லாத்தில் ஒரு வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. ஒன்று இக்லாஸ் என்னும் மனத்தூய்மையுடன் செய்தல் அவசியம் மற்றொன்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எடுத்து இயம்பிய வழிமுறையில் செய்தல் அவசியம் இவைகள் இரண்டையும் விடுத்து காலம்காலமாக செய்த செயல் என்றோ, முன்னோர்கள் செய்தவைகள் என்றோ, செய்வோமேயானால் நாளை மறுமையில் எந்த பயனும் கிடைக்காது மாறாக புதுமையை புகுத்திய குற்றத்திற்காக தண்டனையை பெற்று தரும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஆதாரமாக உள்ளது.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்), பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும், வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிட்டது போன்று சிறந்த வார்த்தையாகிய குர்ஆனிலும் சிறந்த நடைமுறையாகிய நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளிலும் இல்லாத ஒன்றை யார் செய்தாலும், சொன்னாலும், அங்கிகரித்தாலும் அனைத்தும் வழிகேடுகளாகும், வழிகேடான வணக்கங்கள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்க போதுமானதாகும்.

இதுபோன்ற வழிகேடுகளில் ஒன்றுதான் ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று கருதி அந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை வரை எந்தவொரு நல்ல காரியங்களையும் செய்யாமல் பிற்படுத்துவதும் அல்லது தடுப்பதுமாகும். இந்த காலங்களில் இப்படி ஏதாவது சுபநிகழ்ச்சிகளை நடைபெற செய்தால் நன்மை கிடைக்காது என்று உறுதியாக நம்பி பிற்படுத்துகின்றனர். எவ்வாறு மாற்று மதத்தில் மார்கழி மாதத்தை பீடை மாதமென்று கருதி சுப நிகழ்ச்சிகளை செய்யாமல் பிற்படுத்தியோ அல்லது முற்படுத்தியோ செய்கின்றார்களோ அதேபோன்று தூய மார்க்கமாகிய இஸ்லாத்தில் இருப்பவர்களும் மாற்று மதத்தாரை காப்பி அடிப்பதை போன்று அடிபிறழாமல் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். எந்ததளவிற்கெனில் திருமணமான புதுமண தம்பதிகளையும் ஒன்றுசேரவிடாமல் பிரித்து வைத்து பீடை கழிக்கின்றனர் எவ்வாறு மாற்று மதத்தினர்கள் மார்கழி மாத்தில் செய்கின்றார்களோ அதே போன்று.

யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே! (நூல் அபூ தாவூது).

இந்த ஹதீதின் சாராம்சம் என்னவெனில் சமுதாயத்தின் மற்றும் நாட்டின் எண்ணிக்கையில் பெயரளவு முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வும் அவனுடைய ரசூல்(ஸல்) அவர்களும் காட்டி தந்த அழகிய வழிமுறையினை பின்பற்றி வாழ்ந்து உயர்ந்த நிலையான சொர்க்கத்திற்கு தகுதியானவர்களாக வாழாமல், மார்க்கம் அனுமதித்திருக்கின்றதா, அல்லாஹ் அங்கிகரிப்பானா? மற்றும் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதுமோ அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது செய்தார்களா?, சொன்னார்களா? அல்லது அங்கீகாரம் வழங்கினார்களா? என்றெல்லாம் பார்க்காமல் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மற்றவர்களை பார்த்து பின்பற்றி வருகின்றார்களே அவர்கள் அந்த சமுதாயத்தையே சார்ந்தவராவார் என நபி(ஸல்) அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்கள்.

இன்னும் இந்த ஸபர் பீடையை கழிக்க அல்லது நீக்க இவர்களிடத்தில் நடைமுறையில் உள்ள செயல்கள் அனைத்தும் ஆச்சரியப்பட வைக்கின்றன. அதாவது ஸஃபர் மாதத்தின் கடைசி புதனன்று வீடுகளை சுத்தம் செய்து அந்தந்த பகுதியை சேர்ந்த ஜமாஅத் தலைவர்களின் உத்தரவின் மூலம் மா இலைகளில் மையினால் என்னவென்றே தெரியாத மற்றும் புரியாத ஒருசில அரபி எழுத்துக்களை எழுதி அதனை எல்லா வீடுகளுக்கும் வினியோகம் செய்து அந்த மா இலையில் எழுதப்பட்ட வார்த்தையை தண்ணீரில் கரைத்து எல்லோரும் குடித்துவிட்டு, பல்வேறு வகையான உணவு பண்டங்கள் மற்றும் பதார்த்தங்களை அன்றைய தினத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு அல்லது பார்சல் எடுத்துக் கொண்டு ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து ஆற்றங்கரைக்கோ, கடற்கரைக்கோ, புல்வெளிகளுக்கோ சென்று குளித்துவிட்டு நேராக அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப சினிமா தியேட்டர்களுக்கோ அல்லது தர்ஹாக்களுக்கோ சென்று அருள்(?!) பெற்றுவிட்டால் ஸஃபர் மாத பீடை நீங்கும் என்ற எண்ணத்தில் இன்றும் அறியாமை கால பழக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த அனாச்சாரங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் காரணம் வினோதமானது அதாவது நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத ஆரம்பத்தில் நோய்வாய்பட்டு கடைசி புதனன்று நிவாரணம் பெற்றார்கள், நோய் ஏற்பட்ட நாட்களை பீடையென்றும் நிவாரணம் கிடைத்த நாளை பீடை போக்கிய நாளென்றும் கருதி இதுபோன்ற சடங்கு சம்பிரதாங்களை செய்து வருகின்றனர். இந்த காரணம் சரியென்றிருந்தால் அதனை அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்க வேண்டும் அல்லது அருமை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன் வாய் மொழிந்திருக்க வேண்டும், ஆனால் அதன்பிறகு நபி(ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிர் வாழ்ந்த அடுத்தடுத்த வருடங்களில் வரக்கூடிய ஸபர் மாதத்தை நான் நோயுற்று நிவாரணம் பெற்ற காரணத்திற்காக இவ்வாறு இவ்வாறாக செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கவுமில்லை. பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கத்தில் ஏதோ ஒருசிலர் தன்னுடைய வருமானத்திற்காக புதிதாக புகுத்தி உள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஒரு மனிதருக்கு ஏதாவது ஒரு துன்பத்தை நீக்குவோனும் மேலும் நன்மையை கொடுப்போனும் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் கிடையாது என்பதை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்

இன்னும் (நபியே) அல்லாஹ் உமக்கு ஏதாவது (ஒரு) துன்பத்தைக் கொண்டு பீடிப்பானாகில் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை (அவ்வாறே) அவன் உனக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தித் தந்தால் (அதைத் தடுத்துவிடுவோர் எவருமில்லை) அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (அல்-குர்ஆன் 6: 17).

இதுபோன்ற செயல்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டு உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணித்து வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தை பெறுவோமாக!

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *