Featured Posts
Home » பொதுவானவை » நுட்பம் » அறிவியல் » [08] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

[08] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

பெண் சிசுவதைக்கு முற்றுப்புள்ளி

கடந்த தொடரில் பெண் சிசு எவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்தன என்பதைப் பார்த்தோம். இந்த கொடுமைகளுக்கு, ஈவு இரக்கமற்ற ஈனச்செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மார்க்கமே இல்லையா? நிச்சயம் இருக்க வேண்டும். இந்த கொடூரத்திற்கு சமுதாயத்திலிருந்து இறுதி விடை கொடுத்துவிட வேண்டும்.

என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரை, வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையானவளும் என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று வினவப்படும் போது.. (அல் குர்ஆன்: 81: 8,9)

இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அந்த இஸ்லாமியச் சமூகமக்கள் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டிற்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த கொடூரமான கொலை பாதகச் செயலைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.

அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறி, தான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி கால முழுவதும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

பெண்ணுரிமை போற்றிய பெருமானார்(ஸல்) அவர்கள்

பெண் குலத்திற்கு பெருமைச் சேர்த்த இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? என்று எதிர்பார்த்து வாழும் நிலைக்கு பெண்களின் புகழை பன்மடங்கு உயர்த்தி விட்டார்கள். அரபு மொழி பேசும் இஸ்லாமிய நாடுகளில் பெண்குழந்தையை பெருமைபடுத்தும் காட்சிகளை, தனக்கு பெண் குழந்தை பிறப்பதை பெருமையாக கருதும் நிலையை அங்கு பணிபுரியும் இந்தியர்கள் இன்றும் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த உயர் நிலை அவர்களிடையே எவ்வாறு ஏற்பட்டது? பெண் குழந்தை பிறப்பது தனக்கு பெருத்த அவமானம் என்று கருதிக் கொண்டிருந்த அந்த அரபு மக்கள், பெண்களை போகப்பொருளாக, குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக கருதிக் கொண்டிருந்த அந்த அறியாமைக் காலத்து மக்களிடையே, பெண்களுக்கு உயிர், உரிமை உள்ளதா என்று விவாதம் புரிந்து கொண்டிருந்த காட்டு மிராண்டி குணம் படைத்த அந்த மக்களிடையே பெண்மைக்கு உயிருள்ளது, ஆண் மகனுக்கு இருப்பது போன்ற உணர்ச்சிகள் பெண்ணுக்கும் உண்டு, வாழ்க்கையில் ஆண் ஒரு பக்கம் எனில், பெண் இன்னொரு பக்கம், பெண்மை இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்று உணர்ந்து, பெண்ணினத்தை மதிக்க அந்த மக்களுக்கு கற்றுத்தந்தது எது? அந்த அறியாமைக் காலத்து மக்கள் மிகக்குறைந்த நாட்களில் மனம் மாற்றம் அடைவதற்கு எது காரணமாக அமைந்தது? அதற்கெல்லாம் பின் வரும் நபி மொழி பதிலாக அமைகிறது.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு கொடுக்க என்னிடம் கிடைக்கவில்லை. ஆகவே அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே, அதனை இரண்டாக பங்கிட்டு தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்று விட்டார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்று கூறினார்கள். நூல்: புஹாரி

இந்த நபிமொழியைக் கேட்ட ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? அதனை மனம் நோகாமல் சீராட்டி, சிறப்பாக வளர்க்க வேண்டும், அதற்கு பரிசாக இறைவனிடத்தில் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரவு பகலாக கனவு காண ஆரம்பித்து விட்டார்கள். பெண் குலத்தின் பெருமைக்கும், சிறப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் அமைந்துள்ள பின் வரும் இன்னொரு நபி மொழியைப் பாருங்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது குடும்பத்திற்கு (மனைவிக்கு) சிறந்தவனாக விளங்குகிறாரோ அவரே சிறந்தவராவார். எனது குடும்பத்திற்கு நான் சிறந்தவனாக விளங்குகிறேன். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள், நூல் திர்மிதி, இப்னு ஹிப்பான்.

இந்த நபிமொழியில் ஒரு ஆண்மகன் சிறந்தவனாக கருதப்படுவதற்கு அளவுகோலாக தனது மனைவியிடத்தில் நல்ல நடைமுறை கடைபிடித்து, அவளின் மதிப்பிற்குரிய சிறப்பான கணவனாக திகழவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றால் பெண்குலத்தின் மரியாதைக்கு எவ்வளவு பெரிய மணிமகுடம் சூட்டியிருக்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இந்த நிலையில் தனது மனைவிக்கு ஆறாத மனவேதனை தரும் சிசுவதை செய்வதற்கு அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட எந்த ஆண் மகன் துணிவான்? சிந்தித்துப் பாருங்கள். நபிகள் நாயகத்தின் இந்த மந்திர வார்த்தைகள்தான் பெண்சிசுக் கொலையில் இன்பம் கண்டுவந்த அந்த அரபிகளை முற்றிலுமாக மாற்றியமைத்தது. அந்த இறைத்தூதரின் வார்த்தைகளை தங்களின் உயிரினும் மேலாக மதித்து வந்தார்கள் என்றால் அது மிகையாகாது. உலக அழிவுவரைக்கும் அவர்களிடையே இந்த சிசுக் கொலை நடைபெற முடியாத அளவிற்கு இந்த சமுதாயத்தை உருவாக்கிய பெருமை மனிதப்புனிதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குத்தான் உண்டு. பெண்ணினத்திற்கு உயிர் வாழும் உரிமம் பெற்றுத்தந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தான் என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத ஒன்றாகும்.

எனினும் இன்று வாழும் சாமான்ய இஸ்லாமியர்களில் சிலர் தங்களுக்கு பெண்குழந்தை பிறப்பதை வெறுத்து வருகிறார்கள். (அந்த வெறுப்பு பெற்ற குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு மாறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்) காரணம் தூய இஸ்லாமிய நெறியிலிருந்து சற்று விலகி வாழும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் எப்படியோ வரதட்சிணைப் பேய் புகுந்து, அவர்களது இறைவிசுவாசத்தில் சிறிய சிராய்ப்பை ஏற்படுத்தி விட்டது. அதனை சரிசெய்வது விவரம் அறிந்த ஒவ்வொரு இஸ்லாமியர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாயக் கடமை என்றுணர்ந்து அதற்காக இந்த அறிவியல் தொடரில் சில வரிகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன்.

பெண்மையில்லாத உலகம்

பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து, தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இவர்களது ஆசைப்படி ஆண்குழந்தையே அனைவருக்கும் பிறந்தால் என்ன பின் விளைவுகள், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. பெண்மை இல்லாத ஓர் உலகத்தை எவ்வாறு கற்பனை செய்ய முடியும். அது சாத்தியமா? ஓவ்வொரு தாயும் ஆண்குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்தால் மனித இனம் விரைவில் அழிந்து போய்விடுமே! இது இறைவிதிக்கு முற்றிலும் மாற்றமானது. ஏனெனில் இறைவன் உலகில் எல்லாப் பொருளையும் ஆண், பெண் என ஜோடிகளாகத்தான் படைத்திருக்கிறான். அது பல்கிப் பெருக வேண்டும் என்பது அவனது திட்டம். இது அல்லாஹ் ஏற்படுத்திய எல்லாப்படைப்புகளுக்கும் உள்ள பொதுவான மாற்றி எழுதமுடியாத நியதி.

ஓவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் (ஆண், பெண் என இருவகை கொண்ட) ஜோடிகள் இரண்டை அதில் உண்டாக்கினான். (அல் குர்ஆன்: 13: 3)

நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) இருவகையை நாம் படைத்திருக்கிறோம். (அல் குர்ஆன்: 51: 49)

ஆண், பெண் என பாகுபடுத்தி பார்க்க முடியாத கனிவர்க்கங்களிலும், மரம் செடி முதல் எல்லாப் பொருளிலும் ஆண் பெண் என இரு இனம் இருக்கும் போது மனித குலம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? எனவே, பெண்ணினம் இல்லாத ஓர் உலகை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. பெண்மை இல்லாத இனம் விரைவில் அழிந்து போய்விடும்.

அல்லாஹ்வின் அருளே!

எனவே, எந்த குழந்தை பிறந்தாலும் அல்லாஹ் தனக்கு செய்த அருள் என்று கருதி அவனுக்கு நன்றிசெய்யும் பண்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டும். பெண் குழந்தை கொடுத்தவன் இறைவனே! அதனை பாதுகாப்பாக வளர்ப்பவனும் அவனே! என்ற ஆழமான இறை நம்பிக்கை நம்மில் வளர்ந்து மிளிர வேண்டும். தாம் விரும்பும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் உலகில் யாருக்கும் வழங்கப்பட வில்லை. அது சாத்தியமும் அன்று. யாருக்கு என்ன குழந்தையை தர வேண்டும் என்று தீர்மானிப்பதில் இறைவனைத்தவிர வேறு யாருடைய தலையீடும், அந்த தீர்மானத்தை மாற்றி எழுதும் வல்லமை பெற்ற யாரும் இந்த உலகில் இல்லை. இதனை பின்வரும் இறைவசனம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

பெண்ணினத்தை வெறுப்பவன் இறைவனை வெறுப்பவனாகும்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும் அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண்மக்களை அன்பளிப்பு செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது, ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான் அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய) மிக்க ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 42: 49, 50)

யாருக்கு என்ன குழந்தையைக் கொடுக்க வேண்டும், யாரை குழந்தைப் பாக்கியமற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது என்று இந்த வசனம் உரக்கப் பேசுவதைக் கவனியுங்கள்.

எனவே, பெண்குழந்தை பிறப்பதை வெறுக்கும் ஒருவன் இறைவன் செய்த தீர்மானத்தை வெறுத்தவனாக கருதப்பட்டு இஸ்லாத்தின் வட்டத்திலிருந்தே வெளியேறியவன் என்று முத்திரை குத்தப்படும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இறைவனுடைய தீர்மானம், அது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது இறைவிசுவாசியின் கடமைகளில் ஒன்றாகும். அதனை ஏற்றுக் கொள்ளாத போது அவன் ஒரு முஸ்லிமாக அறவே இருக்கமுடியாது. எனவே ஒருவனுக்கு பெண் குழந்தை பிறப்பதும், ஆண் குழந்தை பிறப்பதும் அல்லாஹ்வின் தீர்மானமாகும்.

இறைவன் மட்டும் அறிந்த இரகசியம்

ஆணின் உயிரணுவை மனித வடிவமாக மாற்றி, கண், காது மற்றும் பல உடலுறுப்புகளையும் உருவாக்க வேண்டும் எனும் கட்டளைகள் வழங்கப்பட்ட வானவருக்கு, உரிய நேரம் வரும்வரை ஆணாக அல்லது பெண்ணாக அதனை ஆக்க வேண்டுமா? என்பது அறிவித்துக் கொடுக்கப்பட வில்லை. அதனால் அதனை ஆணாக அல்லது பெண்ணாக ஆக்க வேண்டுமா? என்பதற்கான அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னவாக ஆக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் கேட்டும் விடுகிறார்.

உண்மையில் உயிரணு கருவறைக்குள் செல்லும் போதே அது ஆணா அல்லது பெண்ணா என்பது தீர்மானமாகிவிடும். (இது குறித்து பின்பு உரிய இடத்தில் விளக்கப்படும்.) எனினும் பாலுறுப்புகளை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வரும் வரை அல்லாஹ் மட்டுமே அறிந்த இரகசியமாக அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. உரிய நேரம் வந்ததும், தான் எதுவாகப்படைக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தானோ அதற்குரிய பாலுறுப்பை வெளிப்படுத்த வானவருக்கு உத்தரவிடுகிறான். அந்த இறை உத்தரவைப் பெற்ற பிறகுதான் அந்த வானவர் அதனைச் செயல் படுத்துகிறார். அதற்கு முன்புவரை அந்த வானவராலும் அறிய முடியாது. அது மட்டுமா? வேறு எவ்வளவு பெரிய அதிநுட்பமான நவீன கருவியின் மூலமும் ஆணா? பெண்ணா? என்பதை அறவே அறிந்து கொள்ள முடியாது. வானவர் பாலுறுப்பை வெளிப்படுத்தியப்பின்புதான் அதனை நவீன கருவிகளைப் பயன் படுத்தி அதன் மூலம் மனிதர்களால் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு பாலுறுப்பு வெளிப்படுத்தப்பட்டப்பின்பு நவீன கருவிகள் மூலம் பார்த்து ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்வதில் நமக்கு என்ன பெருமை இருக்க முடியும்?. சிறு குழந்தை கூட இந்த நவீன கருவிகளின் துணை கொண்டு கருவறையை உற்று நோக்கி அதனுள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துத் தெள்ளத் தெளிவாக சொல்லி விடுமே. அதனைத் தெரிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வுகள் ஒன்றும் தேவையில்லையே! வெளிப்படுத்தப் பட்டுவிட்ட ஒரு பொருளை கருவிகளின் துணை கொண்டு அறிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?. பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு அந்த கரு ஆணா? பெண்ணா? என்பதை ஒருவரால் சொல்ல முடியும் என்றால் அது பெரிய சாதனைதான். அந்த அளவிற்கு விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்துள்ளதா? என்றால் அதுதான் இல்லை. இனி ஒரு போதும் அது சாத்தியமும் இல்லை.

ஹார்மோன்களை ஆய்வு செய்து ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறியும் முறையும் இருப்பதாக இன்றைய விஞ்ஞானம் உலகம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ரோஜன் (Androgen) என்ற ஆண்களுக்கான ஹார்மோன் கருவில் அதிமாக இருக்கும் போது அது ஆண் குழந்தை எனவும், ஈஸ்டோரஜன் (Oestorgen) என்ற பெண்களுக்கான ஹார்மோன் அதிமாக இருக்கும் போது அந்தக் கரு பெண் குழந்தை எனவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த செயல் முறைச் சோதனை எப்போது சாத்தியமாகும் எனில் பாலுறுப்பு உண்டாகும் போதுதான். பாலுறுப்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும் முன்பு இந்த ஹார்மோன் சோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியாது என்பதை தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள் மருத்துவ மேதைகள். காரணம் பாலுறுப்பு வெளிப்படும் முன்பு கருக் குழந்தையிடம் உள்ள ஹார்மோன்கள், ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என வித்தியாசப்படுத்தியோ, வேறுபடுத்தியோ பார்க்க முடியாத விகிதத்தில்தான் இருக்கும். அப்போது இந்த ஆய்வு, கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று மருத்துவ மேதைகள் பேசிக் கொள்வது நமது காதுகளில் விழுகிறது.

சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் மட்டுமே அறிந்த இந்த இரகசியம், உரிய நேரம் வரும் வரை யாரும் எந்த விதத்திலும் அறிந்து கொள்ள முடியாத படி எந்த அளவிற்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பார்த்தீர்களா? பாலுறுப்பு வெளியே தெரிய ஆரம்பித்ததும் அதனை முதலில் வானவர் அறிந்து கொள்கிறார். அப்போது அது அல்லாஹ் மட்டுமே அறிந்த இரகசியம் என்ற நிலையிலிருந்து மாறி பலரும் அறிந்து கொள்வதற்கு முடியும் என்ற நிலைக்கு ஆகிவிடுகிறது. ஆனால் அதைத் தெரிந்து கொள்வதற்குக் கூட நமக்கு நவீன கருவிகள் தேவைப்படுகிறது என்பதுதான் நமது அறிவாற்றலுக்குரிய பலஹீனத்தின் வெளிப்பாடாகும். இதில் நாம் பெருமை கொள்வதற்கும், இறைவனுடைய அறிவோடு போட்டிபோடுவதற்கும் என்ன இருக்கிறது என்பது இங்கே சிந்திக்கப்பட வேண்டிய தகவலாகும்.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான, அதே நேரத்தில் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன்.

அதாவது அல்லாஹ் மட்டும் அறிந்ததாக குறிப்பிடும் ஐந்து விஷயங்களில் கருவைறையில் இருப்பது என்ன? என்று அறிவது ஒன்றாகும். இது அத்தியாம் 31-ல் 34 வது வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

கருவறைகளில் உள்ளவைகளை அவன் அறிகிறான். (அல்குர்ஆன் 31:34)

நவீன கருவிகள் மூலம் கருவறையில் இருப்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ள இந்தக் காலகட்டத்தில் கருவறையில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிகிறான் என்ற கருத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிலர் இந்த வசனத்தின் மீது ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள்.

இதற்கு நாம் மேலே சொன்ன பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு அறிந்திருப்பது அல்லாஹ்தான் என்று பொருள் கொள்ளும் போது, மேற்கூறிய அனாவிசியமான கேள்வி எழுவதற்கு அறவே வாய்ப்பு இல்லாமல் போய்விடும். காரணம் பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு எந்த நவீன கருவிகளின் மூலமும் இந்த தகவலை அறிந்து கொள்ள முடியாது என்பது நிதர்சனமான சத்தியமாகும். அதனை அறிந்திருப்பது அல்லாஹ் மட்டும்தான் அவனைத்தவிர இந்த உண்மையை அறிந்தவர்கள் யாரும் இல்லை. நெருக்கமான வானவர்களாக இருந்தாலும் சரி, மிகப் பெரிய அந்தஸ்து பெற்ற நபிமார்களாக இருந்தாலும் சரி, எவராலும் அறிந்து கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் இந்த வசனத்தின் பொருளை சரிகாண்பதற்கும், அந்த வசனத்தின் மீது எழுப்பப்பட்ட வினாவிற்கு பதில் கூறுவதற்கும் நினைத்த சிலர், இந்த வசனத்துடன் பொருந்திவராத விதத்தில் சில பதில்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

எவ்வாறெனில் ஒரு சாரார்,

கருவறையில் இருப்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்பதன் பொருள் அது ஆணா? பெண்ணா? என்பது பற்றியதல்ல. காரணம் பாலைக் (Sex) குறிக்கக்கூடிய வார்த்தை அந்த வசனத்தில் இடம் பெறவில்லை. (கவனிக்க வசனம்.)

மாறாக தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் தன்மையைத்தான் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதன் படி கருவறையில் இருக்கும் அந்தக் குழந்தையின் தன்மைகள் என்ன? நல்லவனா? கெட்டவனா? அது தனது பெற்றோருக்கு அருட்கொடையாக இருக்குமா? சாபக்கேடாக இருக்குமா? அது சமுதாயத்திற்கு நன்மையாக அமையுமா? தீமையாக அமையுமா? சுவர்க்கத்திற்குச் செல்லுமா? நரகத்திற்குச் செல்லுமா? போன்ற அனைத்து விபரங்களையும் அறிந்தவன் அல்லாஹ்தான். வேறு யாரும் அறிந்திருக்க முடியாது. என்று பதில் கூறியுள்ளார்கள்.

மேலோட்டமாக இந்தப்பதிலை படித்துப் பார்க்கும் போது இந்த பதில் சரிதானே என்று தோன்றும். சற்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விஷயத்திற்கும் இந்த பதிலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது புரியவரும்.

அவர்களது பதிலில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தன்மைகளை அறிந்திருப்பது அல்லாஹ் மட்டும்தான் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு மட்டுமல்ல, குழந்தை கருவில் உருவானதிலிருந்து, பிறந்து, வளர்ந்து மரணிக்கும் வரை உள்ள மேற்கூறிய அதனது தன்மைகள் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் மட்டும்தான். வேறு யாரும் எந்த நவீனக் கருவிகள் மூலமும் அறிந்து கொள்ள முடியாது. ஏன்? ஒருவன் மரணித்ததன் பின்பு கூட அவன் சுவர்க்கத்திற்குச் செல்வானா? நரத்திற்குச் செல்வானா? என்பதை கூட யாரும் அறிந்து கொள்ள முடியாது, அதனையும் அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான். அவ்வாறெனில் இந்த வசனத்தில் கருவறையில் இருப்பதை அறிந்தவன் அல்லாஹ் மட்டும்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?

எனவே கருவறையில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிகிறான் என குறிப்பாக சொல்லப்பட்டதற்கு இது அல்லாத வேறு ஒரு பொருள் நிச்சயம் இருக்க வேண்டும். அது தான் நாம் மேலே குறிப்பிட்ட பதில். அதாவது கருவறையில் உள்ள குழந்தை பாலுறுப்பு வெளிப்படும் முன்பு அது ஆணா? பெண்ணா? என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்று பொருள் கொள்ளவதுதான் சரியாக இருக்கும்.

இந்த வசனத்தின் மீதான வினாவிற்கு பதில்கூற நினைத்த வேறு சிலர், இந்த வசனத்தின்

ما في الأرحام

என்ற சொற்றொடரில் (மா) என்ற அரபி எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதால், அது உயர்திணைக்கு (பகுத்தறிவுள்ள இனம்) பயன்படுத்தும் வார்த்தை அல்ல, மாறாக அது அஃறிணைக்கு (பகுத்தறிவற்ற இனம்) பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். கருவில் வளரும் குழந்தை உயர்திணையாக இருப்பதால், அதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவது பொருத்தமற்றது, எனவே, இந்த வசனத்தில் கருவறையில் உள்ளதை அறிவது என்பது கருவறையின் தன்மைகளை அறிவது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். காரணம் கருவறை ஒரு அஃறிணைப் பொருளாகும் என்று கூறுகிறார்கள். அதாவது கருவறை எத்தகைய தன்மையுடையது, மலட்டுத் தன்மையுடையதா? பிரசவிக்கும் தன்மையுடையதா? அது ஆண் குழந்தையைப் பிரசவிக்குமா? பெண் குழந்தையைப் பிரசவிக்குமா? என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது என்பது அவர்களது விளக்கத்தின் சாராம்சமாகும்.

இந்த பதிலும் பொருத்தமானதல்ல. காரணம் மருத்துவம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணை பல மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவளா? இல்லையா? என்பதை தெளிவாக சொல்லிவிடுகின்ற அளவிற்கு விஞ்ஞான உலகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. எனவே, அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்று பொருள் கொள்வது பொருந்தி வரக் கூடியதல்ல.

மேலும், ஒரு கருவை ஆணாக, பெண்ணாக உற்பத்தி செய்கின்ற திறன் கருவறைக்கு இல்லை. அது ஒரு விளை நிலம் மட்டுமே! (பின்னர் இது குறித்து விவரிக்கப்படும்) எந்த விதையை ஆண் மகன் விதைக்கிறானோ அதைத்தான் விளைவிக்கும். ஆணா? பெண்ணா? என்பதைத் தீர்மானிப்பது பெண் கருவறையல்ல. ஆண் உயிரணுக்களின் மூலமே தீர்மானிக்கப்படும். எனவே, கருவறையில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் என்ற வசனத்திற்கு மேற்கூறிய விளக்கம் தொடர்புடையதல்ல என்பது தெளிவு.

மேலும், கரு உயிரூட்டப்படும் வரை அது அஃறிணைப் பொருளாகவே இருக்கிறது என்பதை குர்ஆனின் பின் வரும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பின்னர் அந்த உயிரணுவை அலக்காக (இதனைப் பின்பு விவரிக்கப்படும்.) படைத்தோம் பின்னர், அந்த அலக்கை மாமிசத் துண்டாகப் படைத்தோம் பின்னர் அந்த மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம் பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம் பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைக்கிறவர்களில் மிக அழகானவனான அல்லாஹ் மிக உயர்வானவன். (அல்குர்ஆன்: 23:14)

இந்த வசனத்தில் கருவின் ஆரம்ப நிலையிலிருந்து இறுதிக்கட்டம் வரை உள்ள அதன் பல நிலைகள் சொல்லப்பட்டிருக்கிறது. கருவின் ஆரம்ப நிலையான உயிரணு முதல் எலும்புகளுக்கு மாமிசம் அணிவிக்கப்படும் நிலை வரை அந்தக் கரு அஃறிணையாகவே இருக்கும். மாமிசம் அணிவிக்கப் பட்டப் பிறகுதான் அந்தக் கருவினை ஆணாக அல்லது பெண்ணாகப் படைக்க வேண்டுமா? என்பதை வானவர் இறைவனிடத்தில் கேட்டு செயல் படுத்துகிறார். (பார்க்க மேலே கூறப்பட்ட முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்ற நபி மொழி.) அதற்குப்பிறகு வேறு ஒரு படைப்பாக (முழு மனித வடிவமாக) மாறுகிறது. அப்போது அது உயர்திணை நிலையை அதாவது மனித நிலையை அடைகிறது. பாலுறுப்பு வெளிப்படும் முன்புவரை கருவின் நிலை அஃறிணையாக இருப்பதால்தான் அந்த நிலையைக் குறிக்க, மேற்கூறிய இறை வசனத்தில் அஃறிணைக்கு பயன்படுத்தப்படும்ما (மா) என்ற எழுத்து உபயோகிக்கப் பட்டுள்ளது. மாறாக கருவறையைக் குறிப்பதற்கல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, அஃறிணைக்குரிய எழுத்தான மா என்பது பயன்படுத்துப்பட்ட நோக்கமும் தெளிவாகிவிடும் இந்த வசனத்திற்கு நாம் கொடுத்த விளக்கம் எவ்வளவு யதார்த்தமாக உள்ளது என்பதும் தெரியவரும். (அல்லாஹ்வே மிக நன்கு அறிந்தவன்)

காரணம் இல்லையேல் காரியம் இல்லை

எனவே கருவறையில் உருவாகும் சிசுவினை ஆணாக பெண்ணாக படைப்பது அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளதாகும். எதுவாக படைக்க விரும்புகிறானோ அதுவாகவே படைக்கும் ஆற்றலுடையவன். எனினும் காரண காரிய மிகுந்த இந்த உலகில் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு சில காரணங்களை அமைத்து வைத்துள்ளான் ரப்புல் ஆலமீனான அல்லாஹ். (அவன் காரணம் இல்லாமலேயே காரியத்தை உண்டாக்குவதற்கு ஆற்றல் பெற்றவன் என்பது யாரும் சந்தேகம் கொள்ள முடியாத விஷயமாகும். ஆண் துணையின்றி மரியம் (அலை) அவர்கள் மூலம் ஈஸா நபியை பிறக்கச் செய்தது அவனது ஆற்றலுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.) காரணம் இருக்கும் போது காரியம் நடைபெறும். (நடைபெறாமலும் போய்விடலாம் என்பது வேறு விஷயம்.) இது அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு நியதியாகும். உதாரணமாக மழை பொழிவதற்கு கருமேகம் கூடுவதை காரணமாக ஆக்கியிருக்கிறான். விளை நிலம் விதைகளை முளைக்க வைப்பதற்கு நீரை காரணமாக ஆக்கி இருக்கிறான். இந்த காரணங்கள் இல்லாத போது இந்த காரியங்கள் நடப்பது அரிதாகும்.

யார் காரணம்?

அது போல் குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கும் அல்லாஹ் சில காரணங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அறிவியல் முதிர்ச்சி அடைந்த இந்த நவீன காலத்தில் பல ஆய்வுகளுக்குப் பிறகு குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு யார் காரணம் என்பதை சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த கண்டுபிடிப்பு, பெண்கள் தான் அதற்கு காரணம் என்று இது நாள் வரை பாமரனாலும், படித்தவர்களாலும் நம்பப்பட்டு வந்த கருத்தோட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. அறிவியல் ஆய்வுகளின் படி ஆண்கள் தான் அதற்கு முழுக் காரணம், ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள்தான் ஆணா? பெண்ணா? என்பதைத் தீர்மானிக்க காரணமாக இருக்கிறது என்று மருத்துவ அறிஞர்கள் ஆதாரத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த தகவலை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மிகத் தெளிவாக கூறிவிட்டது. அத்துடன் பெண்களை காரணமாக ஆக்கக்கூடாது என்ற செய்தியையும் அதில் தெளிவாக சொல்லப்பட்டிருப்பது வியக்கத்தக்க ஒரு தகவலாகும். பெண்களைக் காரணமாக ஆக்க முடியாது என்ற செய்தியை எந்த வசனத்தில், எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

குறிப்பு: கட்டுரையின் கருத்துகளுக்கு ஆசிரியரே பொறுப்பாவார்.

3 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களின் கட்டுரையில்,

    உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையானவளும் என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று வினவப்படும் போது.. (அல் குர்ஆன்: 82: 8,9)

    இது குர்ஆன் வசனம், 81:8, 9 .

    என்பது தான் சரி. திருத்தி கொள்ளவும்.

  2. நிர்வாகி

    வ அலைக்கும் சலாம் வரஹ்..

    அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்கட்டும்.

    திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    நன்றி

    அன்புடன்
    நிர்வாகி

  3. dear brothers,

    i understand the verses

    ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான் means xxy choromosome like ladyboy.

    பின்னர் அந்த உயிரணுவை அலக்காக (இதனைப் பின்பு விவரிக்கப்படும்.) படைத்தோம் பின்னர், அந்த அலக்கை மாமிசத் துண்டாகப் படைத்தோம் பின்னர் அந்த மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம் பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம் பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைக்கிறவர்களில் மிக அழகானவனான அல்லாஹ் மிக உயர்வானவன். (அல்குர்ஆன்: 23:14

    here allah describe about how he create the first woman (hawwah)from man in intial creation. also he describe about stemcell create method.

    i think may be secondary creation by male and female fertilation also same method.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *