Featured Posts
Home » சட்டங்கள் » பெருநாள் » பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்

பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் இத்தொழுகைகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் தான் ஆண்களை தொழுகைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் வீட்டு (சமையல்) வேளைகளில் முடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பள்ளியில் தொழுது விட்டு வந்து வீடுகளில் பெண்களுக்கு தொழுகை நடாத்துகிறார்கள். இது பெரும் தவறாகும்.

ஹப்ஸா பின்த் ஸிரீன் (ரலி) கூறியதாவது :
நாங்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜிப் பெருநாளிலும் தொழும் இடத்திற்கு எங்கள் குமரிப் பெண்கள் செல்வதை தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்தப் பெண்மணி அன்னை உம்மு அதிய்யா (ரலி) அறிவித்த ஹதீஸை பின்வருமாறு கூறினார்கள்.

நாங்கள் யுத்தக்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடியவர்களாகவும் நோயாளிகளை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருந்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அல்லாஹ் வின் தூதரே! எங்கள் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமாகுமா? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளுக்கு மேலங்கி இல்லாவிட்டால், அவளது தோழி தனது மேலதிகமான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம் களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும் எனக் கூறினார்கள்.

மேலும் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக தொழும் திடலுக்கு (மைதானத்திற்கு) வீட்டைவிட்டு புறப்படச் செய்யும் படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள் என உம்மு அதிய்யா (ரலி) கூறினார்கள். நூல்: புகாரியில்

பெண்கள் கண்டிப்பாக பெருநாள் தொழுகைக்காக வீட்டைவிட்டு புறப்பட வேண்டும் மாதவிடாய்க்காரியாக இருந்தாலும் கூட கலந்துகொண்டு தொழும் இடத்திலிருந்து விலகியிருந்து அங்கு நடைபெறும் குத்பாவை செவி மடுக்க வேண்டும் என்பது நபி அவர்களின் கட்டளையாக இருக்கும் போது அந்தக் கட்டளையை ஏற்று செயல்பட பெண்கள் முன்வர வேண்டும். பொறுப்பிலுள்ள ஆண்கள் ஏற்பாடுகள் செய்யணே;டும்.

மைதானத்தில் தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யவேண்டும்

சில பகுதிகளில் ஆண்களுக்கு ஒரு நேரத்திலும், பெண்களுக்கு வேறொரு நேரத்திலும் பள்ளிவாசல்களில் இருமுறை தொழுகை, குத்பா நடாத்துகிறார்கள். சில சமயங்களில் வீடுகளில் பெண்களுக்கு மாத்திரம் ஜமாஅத் தொழுகை நடாத்துகிறார்கள். இவை நபிவழிக்கு முரணான செயலாகும். ஊர்மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஒரே ஜமாஅத்தின் கீழ் ஒரே நேரத்தில் ஒரே (திடலில்) மைதானத்தில் தொழக்கூடியதாக ஏற்பாடுகள் செய்வதே நபிவழியாகும்.

”நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) மைதானத்திற்கு (தொழுவதற்கு) செல்பவர்களாக இருந்தார்கள் என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி)

உம்முஅதிய்யா (ரலி) அறிவிக்கும் மேலேயுள்ள ஹதீஸிலும் மைதானத்திற்கு தொழுகைக்காக புறப்பட்டுச் செல்லுமாறுதான் நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. எனவே பெருநாள் தொழுகைகளை ஏற்பாடு பண்ணக்கூடிய பள்ளி நிர்வாகிகள் அல்லது பேஷ் இமாம்கள் ஊரிலுள்ள மைதானத்தில் ஆண்கள், பெண்களுக்கு ஒரே நேரத்தில் -ஒழுக்கம் பேணி- தொழுகை நடாத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே நபியவர்கள் நடைமுறைபடுத்திக் காட்டிய சுன்னாவாகும். ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனியாக நபியவர்கள் ஜமாஅத் நடாத்தியதில்லை. ஒரே நேரத்தில் தொழுகை நடாத்துவதன் மூலம் அன்றைய நாளின் வேலைகளை செய்து முடிப்பதற்கும் ஏனைய விடயங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். நபியவர்கள் காட்டிய முறை நிச்சயமாக இந்த உம்மத்திற்கு நன்மையாகவே இருக்கும்.

ஊரில் மைதானம் இல்லை அல்லது மழை சூராவளி மற்றும் மைதானத்தில் தொழுவிக்கக்கூடிய சூழல் இல்லை போன்ற காரணங்களுக்காக பள்ளியில் தொழுவிழக்கலாம். எந்த தடுங்களும் இல்லாமல் பெண்களை தடுத்து நிறுத்துவது சுன்னாவை புறக்கணிக்கும் செயலாகும்.

______________

Originally published on: 07 Jan 2011
Republished on: 02 Oct 2014
Republished on: 16 Jul 2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *