Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-18)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-18)

– M.T.M.ஹிஷாம் மதனீ
இக்கூற்றை உறுதி செய்யக்கூடிய பல ஆதாரங்களை அல்குர்ஆனில் இருந்து முன்வைக்கலாம். மேலும் புத்திரீதியான பல ஆதாரங்களும் கூட இதற்குள்ளன.

அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்’ என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல் அஃராஃப்: 33)

மேற்கூறப்பட்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் ஒருவர் அல்லாஹ்வை அவன் வர்ணித்தற்கு மாற்றமாக வர்ணிக்க எத்தனிப்பது தனக்கு அறிவில்லா ஒன்றில் தலையை நுழைப்பதற்குச் சமனாகும். எனவே, இவ்வாறு நடந்து கொள்வது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பிறிதோர் இடத்தில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கும் போது, ‘ (நபியே!) எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக, செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் – அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.’ (பனீ இஸ்ராயீல்: 17)

இவ்வசனத்தில் கூட எவ்விடயத்தில் எமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அவ்விடயத்தில் நாம் ஈடுபடலாகாது என்ற பாடம் புகட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி எவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்களோ நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட ஒன்றில் ஈடுபட்டவர்களாகிவிடுவர்.

நாம் மேலே குறிப்பிட்ட பிரகாரம் அல்லாஹ்வுடைய பண்புகளானது மறைவான விடயங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும். அவற்றை புத்தியின் மூலம் அணுகமுடியாது. எனவே, அவனை அவன் வர்ணித்த வர்ணனைகள் மூலமன்றி எம் இஷ்டப்படி வர்ணிப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அவன் எமக்கு இனங்காட்டித்தந்த வர்ணனைகளைக்கூட எம் கற்பனைக்குத்தக்கவிதத்தில் பயன்படுத்தி உருவமைத்துவிடவும் முடியாது. இந்த அடிப்படையை அல்லாஹ் விடயத்தில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சுவனத்து இன்பங்கள் தொடர்பான எத்தனையோ வர்ணனைகளை நாம் குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இருந்து தெரிந்து வைத்துள்ளோம். ஆயினும் அவை முழுமையாக படைக்கப்பட்டிருந்தும் எங்களில் எவராலும் அதனுடைய உண்மையான அமைப்பை விளக்கிக் கொள்ள முடியாதுள்ளது. சான்றாக, சுவனவாசிகளுக்கு சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கனிகள் மற்றும் அக்கனிகளில் உள்ளடங்கக்கூடிய பேரீச்சம் பழம், மாதுளை போன்ற பல கனி வர்க்கங்களை எடுத்துக் கொள்வோம். அவை எமக்கு நன்கு அறிமுகமான கனிகளாக இருந்தாலும் அதன் எதார்த்த தன்மையை எங்களால் கூற முடியாது இருக்கின்றது. அதேநேரத்தில் அவ்வின்பங்கள் பற்றி சற்று வர்ணிக்குமாறு எம்மிடத்தில் வினவப்பட்டாலும் எங்களால் முழுமையாக அதன் இன்பங்களை வர்ணித்துக் கூற முடியாது. காரணம், அல்லாஹ் சுவனம் பற்றிக் குறிப்பிடும் போது, ‘ ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கனிகளின் குளிர்ச்சியை எந்த ஒர் ஆத்மாவும் அறியாது’ என்கிறான். (அஸ்ஸஜ்தா: 17)

மேலும், ஹதீஸூல் குத்ஸியில் அல்லாஹ் கூறும் போது, ‘நான் என்னுடைய ஸாலிஹான அடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திறாத, எந்தக் காதும் கேட்டிறாத, எந்த மனித உள்ளமும் கற்பனை செய்திறாத சுவனத்தை தயார் செய்து வைத்துள்ளேன்’ என்கிறான். எனவே, படைக்கப்பட்டு பண்புகளில் பல இனங்காட்டப்பட்ட ஒரு படைப்பையே எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ள நிலையில் எவ்வாறு படைப்பாளனான அல்லாஹ்வைப்பற்றி கற்பனை செய்ய முடியும் ?!!!

மேலும் புரிந்து கொள்வதற்காக பிறிதோர் உதாரணத்தை முன்வைக்கின்றேன். எம்முடன் இருக்கும் ரூஹைப்பற்றி உங்களில் எவரும் சிந்தித்ததுண்டா? அணு தினமும் அது எம்முடன் இருந்தும் அதனைப்பற்றி அறிவற்றவர்களாகவுள்ளோம். உண்மையில் அர்ரூஹானது கைப்பற்றப்படும் போது கண்களால் பார்க்கமுடியுமான ஒன்றாக இருந்தும் கூட எம்மால் அதனைப் பற்றி வர்ணிக்க முடியாதுள்ளது. காரணம் அதன் வர்ணனைகளில் அல்லாஹ் தெரியப்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் எம்மால் கூற முடியாததேயாகும். இவ்வாறிருக்க, எப்படி ஒருவர் அல்லாஹ்வின் பண்புகளைக் கண்டறிவதில் தன் சிந்தனையை முடுக்கிவிடுவதை காத்திரமான செயல் எனக்கூற முடியும்?!!!

எனவே, அல்லாஹ்வின் பண்புகளை உள்ளபடி நம்புவதே எமது கடமை. அதைவிடுத்து அவற்றை விளக்கிக்கூற எத்தனிப்பது தனது மடமையின் வெளிப்பாடே!!! அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் பாதுகாப்பானாக.

2 comments

  1. mashalllah thabarakallah

  2. assalamu alaikum
    What a beautiful explanations! zazakallahu khairan!
    unnecessary questions regarding Islamic faith is strictly prohibited in Islam. Indeed our knowledge is a drop of ocean! thankyou hisham madani. Indeed your work is marvellous! I expect more such kind of translations from you! May ALLAH increase your knowledge and help You!
    wassalaam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *