Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-5)

குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-5)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
திட்டுவதையும், குறை கூறுவதையும் தவிர்த்தல்:
சில பெற்றோர் எப்போதும் தமது குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டும், குத்திப் பேசிக்கொண்டும் இருப்பர். அவர்களின் பணிகளில் குறை காண்பதில் இவர்களுக்கு அளாதிப் பிரியம் இருக்கும். இருப்பினும் குழந்தைகளின் நன்மைகளையோ, திறமைகளையோ மறந்தும் கூட இவர்கள் போற்றுவதும் இல்லை; புகழ்வதுமில்லை. இதனைப் பின்வரும் விதமாக ஒரு கவிஞன் பாடுவதை இவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்;

ஊக்கமருந்தினைப் போன்றது பெற்றோர் போற்றும் புகழுரைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றது கற்றோர் கூறும் அறிவுரைகள்

பிள்ளைகள் பெற்றோரின் புகழுரைகளை விரும்புகின்றனர். இது அவர்களை ஊக்கப்படுத்தும்; உற்சாகப்படுத்தும். அவர்களின் ஆற்றல்களை அதிகரிக்கும்.

சில பெற்றோர் குழந்தைகளின் திறமைகளைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்துகொள்வர். ஆனால் பிள்ளைகளைப் போற்ற மாட்டார்கள். வகுப்பில் மகன் இரண்டாவது வந்துள்ளான் என்றால் முதலில் இரண்டாவது வந்ததைப் போற்றாமல் ‘ஏன் முதலாவது வரவில்லை எனக் கண்டிப்பர். சில பெற்றோர் பெண் பிள்ளைகளின் வேலைகளைப் பார்த்துக் குறை கூறுவர். யாருடைய நினைப்பில் வீட்டைக் கூட்டினாய்? என்ற தொணியில் பேசுவர். பிள்ளைகளுடன் இப்படி நடந்துகொண்டால் எதையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைகளின் உள்ளத்தில் பிறப்பதில்லை. நான் எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் எனது பெற்றோர் குறைதான் கூறுவார்கள் என்ற மனநிலையுடன்தான் செயற்படுவார்கள். எனவே சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று கவனமெடுத்துக் கருமமாற்ற மாட்டார்கள். அவர்களின் பணியைப் பார்த்துப் பெற்றோர் பாராட்டுவர் என்ற நிலையிலிருந்தால் பாராட்டைப் பெறுவதற்காக, பெற்றோரின் மனதைப் பரவசப்படுத்துவதற்காகக் கூடிய அவதானிப்புடன் செயற்படுவர். இது குழந்தைகளிடம் ஆற்றலையும், ஆளுமையையும், ஆக்கத்திறனையும் அதிகரிக்கும்.

சிலர் பிள்ளைகளின் குற்றங்களின் போது அவர்களை மட்டரகமாகப் பேசுவர். ‘இவன் ஒன்றுக்கும் உதவமாட்டான்!’, ‘இவன் மாடு மேய்க்கத்தான் சரிப்படுவான்!’, ‘இவனைப் பெற்றதற்கு ஒரு உலக்கையைப் பெற்றிருக்கலாம்!’ இப்படியெல்லாம் குழந்தைகளைக் குறைத்துப் பேசிக்கொண்டிருந்தால் அவர்களது உள்ளத்திலேயே அவர்களைப் பற்றிய மட்டரகமான எண்ணம் எழுந்து விடும். இதன் பின்னர் இவர்கள் எந்தப் பொறுப்புக்களையும் ஏற்க அஞ்சுவர். நான் எதற்கும் இலாயக்கற்றவன் என்ற எண்ணம் அவர்களது ஆழ்மனதில் பதிந்து அவர்களது முயற்சிகளுக்கும், திறமைகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கும். எனவே குழந்தைகளைக் குறை கூறிக்கொண்டோ, மட்டரகமாகக் குறைத்து மதிப்பிடும் வண்ணமோ பேசிக்கொண்டிருக்கலாகாது. அவர்களைப் போற்றும் வார்த்தைகளால் வார்த்தெடுக்க வேண்டும்; வளர்த்தெடுக்க வேண்டும். குறைகளை நிதானமாகவும், முறையாகவும் சுட்டிக்காட்டி அவர்களின் திறமைக்கான வாயில்களைத் திறந்து விடவேண்டும்.

‘நான் நபி(ஸல்) அவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் என்னைப் பார்த்து ‘சீ..!’ என்றோ, நான் செய்த ஒரு செயல் குறித்து ‘ஏன் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத ஒரு செயல் குறித்து ‘ஏன் செய்யவில்லை?’ என்றோ கேட்டதில்லை’ என்ற அனஸ்(ரழி) அவர்களின் கூற்றுக் குறித்துச் சிந்திப்பது அவசியமாகும்.

இதேவேளை, குழந்தைகளுக்கு எதிராகப் பெற்றோர்கள் சபிப்பதையும், திட்டுவதையும் அவசியம் நிறுத்தியாக வேண்டும். சில பெற்றோர் – குறிப்பாகத் தாய்மார்கள் தமது பிள்ளைகளைச் ‘சனியன் பிடித்தது! செத்துத் தொலைஞ்சால் நிம்மதி! இதுல வாயில மண்ணப் போட..!’ என்று திட்டித் தீர்ப்பார்கள்.

திட்டுவதைப் பொதுவாக இஸ்லாம் தடுக்கின்றது. பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்யும் துஆக்கள் விரைவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் பெற்றோர் தமது குழந்தைகளின் நலனுக்காகப் பிரார்த்திக்க வேண்டும். இதற்கு மாற்றமாகக் குழந்தைகளுக்கு எதிராகத் திட்டுவது கண்டிக்கத் தக்கதாகும்.

‘உங்களுக்கு எதிராகவோ, உங்கள் குழந்தைகளுக்கு எதிராகவோ, உங்கள் பணியாளர்களுக்கு எதிராகவோ, உங்கள் சொத்துக்களுக்கு எதிராகவோ நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். கேட்பதை அல்லாஹ் வழங்கும் ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் துஆக் கேட்கப்பட்டு விட்டால் பதிலளிக்கப்பட்டு விடும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர்(ரழி) – முஸ்லிம்)

குழந்தைகளைத் திட்டுவோர் இந்த ஹதீஸைக் கவனத்திற்கொண்டு தம்மைத் திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

உற்சாகமூட்டப் பரிசில்கள் வழங்குதல்:
குழந்தைகளின் ஆற்றல்களையும், ஆளுமையையும் வளர்ப்பதற்காக அவர்களிடையே போட்டி வைத்துப் பரிசில்கள் வழங்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் – அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், கதீர் இப்னு அப்பாஸ் போன்றோரை ஒரு வரிசையில் நிறுத்தி வைத்து, யார் என்னிடம் முதலாவது வருகிறாரோ அவருக்கு இப்படி இப்படிப் பரிசு வழங்குவேன் என்று கூறுவார்கள். அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவார்கள். வந்த வேகத்தில் அவர்கள் நபி(ஸல்) அவர்களது மார்பின் மீதும், தோளின் மீதும் விழுவார்கள். நபியவர்களும் அச்சிறுவர்களை வாரியணைத்து அன்பு முத்தம் பொழிவார்கள்’ என அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனவே, பாராட்டுடன் பரிசில்களும் இணைந்துகொண்டால் அவர்களின் உற்சாகமும், உத்வேகமும் உச்சக் கட்டத்திற்கு உயரும்.

அறிவைத் தூண்டல்:
குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்காக அவர்களிடம் கேள்வி கேட்டு அவர்கள் சரியான பதிலளிக்கும் போது அவர்களைப் பாராட்டலாம்.

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்;
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு மரம் உள்ளது. அதன் இலை விழாது. அது முஸ்லிமுக்கு ஒப்பானது. அது என்ன மரம்? என்று எனக்குக் கூறுங்கள்!’ என்றார்கள். மக்கள் ஏதோ பாலைவன மரம் என எண்ணினர். எனினும் அது ஈத்தமரம் என நான் நினைத்தேன். ஆனால் வெட்கத்தால் கூறவில்லை. பின்னர் ‘அது என்ன மரம்?’ என்று நீங்களே கூறுங்கள்!’ எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் ‘அது ஈத்தமரம்!’ என்று கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

இது போன்ற கேள்விகள் சிறுவர்களைச் சிந்திக்கத் தூண்டும். பழமொழிகள், விடுகதைகள், புதிர்க் கணக்குகள் என்பவையும் இந்த வகையில் பெரிதும் உதவக் கூடியவையாகும்.

குழந்தைகளிடையே பாரபட்சம் வேண்டாம்:
சில பெற்றோர் தமது குழந்தைகளுக்கிடையே பாரபட்சம் காட்டுவர். ஆண் பிள்ளைக்கும், பெண் பிள்ளைக்குமிடையில் பாரபட்சம் காட்டுவர். சில வீடுகளில் மூத்தபிள்ளை-இளைய பிள்ளைக்கிடையே பாரபட்சம் காட்டப்படுவதுண்டு. இது தவறாகும். இந்த நடைமுறையால் குழந்தைகளுக்கு இடையே சகோதர பாசம் செத்துப் போய் விடுகின்றது. குரோத எண்ணம் ஏற்படுகின்றது. போட்டியும், பொறாமையும் அவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அவர்களது உள்ளம் சுருங்கி விடுகின்றது. விட்டுக் கொடுக்கும் இயல்போ, தாராளத் தன்மையோ, பணிந்து போகும் பண்போ, பகிர்ந்துண்ணும் பக்குவமோ அவர்களிடம் ஏற்பட வழியற்றுப் போகின்றது. எனவே பெற்றோர் இது விடயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

உங்கள் குழந்தைகள் அனைவரும் உங்கள் குழந்தைகளே! அவர்கள் மீது பாசம் வைப்பதில் உள்ளத்தைச் சமநிலையில் வைத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஏற்றத் தாழ்வோ, வித்தியாசங்களோ ஏற்பட்டு விடக்கூடாது.

‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! உங்கள் குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடந்துகொள்ளுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

ஒரு நபித்தோழர் தனது ஒரு குழந்தையை அன்போடு மடியிலும், மற்றொரு குழந்தையை ஒதுக்கியும் வைத்த போது ‘இவ்விருவர்களையும் நீ சமமாக நடத்தக் கூடாதா?’ என நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள்.

ஒரு நபித்தோழர் தனது ஒரு பிள்ளைக்கு ஒரு தோட்டத்தை அன்பளிப்பாக வழங்குவதாகவும், அதற்கு நபி(ஸல்) அவர்களைச் சாட்சியாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கு வேறு பிள்ளைகள் இருக்கின்றார்களா?’ எனக் கேட்டார்கள். அவர் ‘இருக்கின்றார்கள்!’ என்று கூறியதும், ‘இதே போன்று அவர்களுக்கும் வழங்கியுள்ளாயா?’ எனக் கேட்டார்கள். நபித்தோழர் ‘இல்லை!’ என்றதும், ‘இந்த அநியாயத்திற்கா என்னைச் சாட்சியாக்குகின்றாய்?’ என நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டி அவர்களின் ஆளுமையை ஆணி வைத்து அறையும் அநியாயத்தை அவசியம் அகற்றியேயாக வேண்டும்.

ஒழுக்க விழுமியங்களைப் போதித்தல்:
நபி(ஸல்) அவர்கள் தம்மோடு அண்டி வாழ்ந்த சிறுவர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு, நலன் அனைத்திலும் அக்கறை காட்டியுள்ளார்கள்.

ஹிஜாப் சம்பந்தப்பட்ட சட்டம் இறக்கப்படுவதற்கு முன்னர் அனஸ்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் ‘சர்வசாதாரணமாக அனுமதியின்றியே வந்து செல்வார்கள். ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட போது அனஸ்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள்; ‘மகனே! அப்படியே நில்லுங்கள்! உள்ளே நுழைவதற்கான சட்டம் மாற்றப்பட்டு விட்டது. நீங்கள் உள்ளே நுழைவதென்றால் அனுமதி பெற்றே வரவேண்டும்’ எனக் கூறினார்கள்.
(ஆயிஷா(ரழி): புகாரி – அதபுல் முப்ரத்)

சிறுவர்கள் – குறிப்பாக 3 நேரங்களில் வீட்டில் அறைகளுக்குள் நுழைவதாக இருந்தால் கூட அனுமதி பெறவேண்டும்.

‘நம்பிக்கை கொண்டோரே! உங்களது அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதவர்களும், பஜ்ரு தொழுகைக்கு முன்னரும், உங்கள் (மேலதிக) ஆடைகளைக் களைந்திருக்கும் நண்பகல் வேளையிலும், இஷாத் தொழுகையின் பின்னரும் ஆகிய மூன்று வேளைகளிலும் (உங்களிடம் நுழைய) உங்களிடம் அனுமதி கோரிக்கொள்ளட்டும். (இவை) மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க நேரங்களாகும். இவை அல்லாத வேளைகளில் (அவர்கள் உங்களிடம் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. உங்களில் சிலர் மற்றும் சிலரைச் சுற்றி வருபவர்களே!’ (24:58)

பெண்கள் தங்கள் ஆடைகளைத் தளர்த்தியிருக்கும் சந்தர்ப்பங்களில் அனுமதி பெற்றே உள்ளே வரவேண்டும் என்பதைச் சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தப் பழக்கம் அவர்களின் ஆளுமையை வளர்க்கின்றது.

பாதுகாப்புத் தேடுதல்:
குழந்தைகளின் வெளிப்படையான பாதுகாப்பில் மட்டுமன்றி, ஆன்மிக ரீதியான பாதுகாப்பிலும் பெற்றோரும், மற்றோரும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸன்-ஹுஸைன்(ரழி) ஆகிய இருவருக்குமாக பின்வருமாறு பாதுகாப்புத் தேடுவார்கள்;

பொருள்:
அனைத்து வகைச் ஷைத்தான்களை விட்டும், விஷஜந்துக்களை விட்டும், நோவினை தரும் அனைத்து வகைக் கண்ணூறுகளை விட்டும் அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

குறிப்பு:
நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரழி), ஹுஸைன்(ரழி) ஆகிய இருவருக்குமாகப் பாதுகாப்புத் தேடும் போது ‘உயீதுகுமா’ (உங்கள் இருவரையும் பாதுகாக்க வேண்டுகின்றேன்!) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஒரு ஆண்மகனுக்காகப் பிரார்த்திப்பதாயின், ‘உயீதுக’ என்றும் பெண்பிள்ளைக்கு ‘உயீதுகி’ என்றும் மாறுபடும்.

அதே வேளை, இஸ்மாயீல்-இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்கும் இவ்வாறு பிரார்த்தித்ததாகவும் கூறுவார்கள்’ என இப்னு அப்பாஸ்(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அஹ்மத்)

எனவே, கண்ணுக்குப் புலப்படாத பாதிப்புக்களிலிருந்து எமது குழந்தைகளைப் பாதுகாக்கும் விடயத்திலும் பெற்றோர் கவனஞ்செலுத்த வேண்டும்.

தீய நேரங்களைத் தவிர்த்தல்:
சிறுவர்கள் விளையாடுவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. இருப்பினும் அவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்தும் நேரங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘சூரியன் மறையும் நேரம் ஷைத்தான்கள் (இரவுதங்க இடம் தேடி) பரவும் நேரமாகும். இந்த நேரத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இரவு ஆரம்பமாகும் போது உங்கள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருங்கள்! ஏனெனில் அப்போது ஷைத்தான்கள் பரவித் திரிகின்றன. இரவானதும் நீங்கள் அவர்களை விடலாம். ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி உங்கள் கதவை மூடுங்கள்! ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி விளக்கை அணையுங்கள்!. ‘பிஸ்மில்லாஹ்!’ கூறித் தண்ணீர்ப் பையைக் கட்டுங்கள்! ‘பிஸ்மில்லாஹ்!’ கூறி உங்கள் பாத்திரங்களை மூடுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

எனவே, மஃரிப் வேளையில் குழந்தைகள் வீட்டிற்குள் வந்து விடும் விதத்தில் அவர்களுக்கான விளையாட்டு நேரத்தை மட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம் வளரும் சந்ததியின் இரவு நேரங்களில் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தவிர்க்கலாம். விளையாட்டின் பெயரில் இளம் சந்ததியினர் ஆபாசப் படங்களைப் பார்க்கவும், சிகரட்-போதைப்பொருள் பாவனை-ஒழுக்கச் சீர்கேடுகளில் ஈடுபடவும் இந்தச் ஷைத்தான் பரவும் நேரம் பயன்படுத்தப்படுவதையும் தவிர்க்கலாம்.

படுக்கையை விட்டும் பிரித்தல்:
சிறுவர்கள் வளர்ந்து 7 வயதைத் தாண்டும் போது பெற்றோர்கள் அவர்களைத் தனியான படுக்கைக்கு மாற்ற வேண்டும். அவர்கள் தனியாகப் படுக்கும் போது தானும் பெரிய மனிதனாகி விட்டதாக உணர்கின்றனர். அவர்களுக்கு எனத் தனியறை-தனிக்கட்டில்-தனிமேசை என்று ஒதுக்கப்பட்டால் அதைப் பராமரிப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றனர். இது அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அடுத்து, சிறுவர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரும் அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து உறங்குவதில் பாரிய ஒழுக்க வீழ்ச்சிக்கான பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறுவர்கள் எதையும் அறியும் ஆவலில் உள்ளனர். சிலபோது பெற்றோரின் இல்லற நடத்தைகளைத் தூங்குவது போன்ற பாவனையில் அவர்கள் அவதானிக்கலாம். இதனால் அவர்களது நடத்தையில் பாரிய மாற்றம் ஏற்படும். ‘இது என்ன?’ எனச் செய்து பார்க்க முற்படுவர். சிலபோது பார்ப்பதில் ஆர்வம் அதிகரித்து விட்டால் இதற்காக முயற்சி செய்து பார்க்கும் மனநிலைக்கு மாறிவிடுவர். சிலர் இதில் உச்சக்கட்ட மனநிலைப் பாதிப்புக்குக் கூட ஆளாகுகின்றனர்.

இஸ்லாம் குழந்தைகள் 7 வயதைத் தாண்டிய பின்னர் ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுக்க வைப்பதையும், ஒரே போர்வையில் ஒன்றாகப் போர்த்திப் படுக்கும் நிலையைச் சகோதரர்களுக்கு மத்தியில் கூட தவிர்க்குமாறும் கட்டளையிடுகின்றது.

நல்ல நட்பு:
மனிதனின் மன அமைதிக்கு நல்ல நட்பு அவசியமாகும். சிறுவர்களும், இளைஞர்களும் நட்பை மதிக்கின்றனர். எனவே குழந்தைகளின் நட்பு விஷயத்தில் பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நல்ல நட்புகளை ஏற்படுத்த வேண்டும். 10 வயதுப் பையன் 20 வயது இளைஞனுடன் நெருங்கிப் பழகுவது போன்ற நட்பு முறைகளைத் தவிர்க்க வேண்டும். தன்னினச் சேர்க்கையும், தவறான பாலியல் நடைமுறைகளும் பரவி வருவதால் குழந்தைகளின் நட்பு விடயத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் தீய நட்பின் தீங்கு பற்றியும் எச்சரிக்க வேண்டும்.

தவறுகளைக் களைதல்:
குழந்தைகள்-வளர்ந்த வாலிபர்களின் நடத்தைகளை உன்னிப்பாக அவதானித்து அவர்களை வழிநடத்துவது அவசியமாகும்.

பழ்ல் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தார். அப்போது கருப்புக் கன்னங்களையுடடைய ஒரு அழகான பெண் நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கத்தைக் கேட்பதற்காக வந்தாள். இந்த இளைஞர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். நபி(ஸல்) அவர்கள் அவர்களது முகத்தை மறுபக்கம் திருப்பி விட்டார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன. இங்கே நபி(ஸல்) அவர்கள் அந்த இளைஞனின் இயல்பைப் புரிந்து அவரது நடத்தையை அவதானித்து வழிநடத்தியிருப்பதை அவதானிக்கலாம்.

அவர்களின் உரிமைகள் விடயத்தில் அனுமதி பெறல்:
குழந்தைகளின் உரிமைகள் விடயத்தில் பெற்றோர் நிதானமாகச் செயற்பட வேண்டும். பிள்ளைகளின் உரிமைகளைப் பெற்றோரோ, பெரியவர்களோ அலட்சியம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் ஒரு சபையில் இருந்த போது பால் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தி விட்டு வலது பக்கம் பார்த்த போது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இருந்தார்கள். இடது பக்கத்தில் பெரிய ஸஹாபாக்கள் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பெரிய ஸஹாபாக்களுக்குப் பாலை வழங்க விரும்பினார்கள். அந்தச் சிறுவரிடம் ‘இந்தப் பெரியவர்களுக்கு முதலில் பாலை வழங்க எனக்கு நீ அனுமதி தருவாயா?’ எனக் கேட்டார்கள். அவர் மறுத்த போது அவரிடமே முதலில் வழங்கினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பாலை முதலில் பெறும் உரிமையைக் கூட நபி(ஸல்) அவர்கள் மறுக்க விரும்பவில்லை. எனவே குழந்தைகளின் நியாயமான உரிமைகள் பெற்றோர்களால் பறிக்கப்படக் கூடாது.

நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுத்தல்:
குழந்தைகள் பெரியவர்களானதும் அவர்களுக்கு மார்க்க ஒழுக்கமுள்ள நல்ல துணையை மணமுடித்துக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் சம்மதிக்காதவர்களுடன் நிர்ப்பந்தமாக நிச்சயதார்த்தம் செய்யக் கூடாது. சில தாய்மார் ‘நீ எனது மருமகளைத்தான் முடிக்க வேண்டும்!’ என்று மகனையும், ‘அவன்தான் உனது முறைமாப்பிள்ளை!’ எனப் பெண்ணையும் நிர்ப்பந்திக்கின்றனர். இது தவறாகும்.

சில பிள்ளைகள் பெற்றோர்களைப் பற்றிச் சிந்திக்காமல் அனைத்தையும் தாமே செய்து முடித்து விடுகின்றனர். இதுவும் தவறாகும். பிள்ளைகள் காதலித்துத் திருமணம் செய்வதை அனுமதிக்க முடியாது. இதை இஸ்லாம் கண்டிக்கின்றது. எனினும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்க்கைத் துணை பற்றிய ஆசைகளும், ஆர்வங்களும், கற்பனைகளும் இருக்கும். இதனைக் கவனத்திற்கொண்டு அவர்களின் ஆசைக்கு ஏற்ப தகுதியான துணையைப் பெற்றோர் திருமணம் செய்து வைப்பது பெற்றோரின் கடமையாகும்.

இதுவரை குழந்தைகள்-சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த பல வழிகாட்டல்களை ஆய்வு செய்தோம். சிறுவர் உளவியல் தொடர்பான அறிவும், ஆராய்ச்சியும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் பழகிய விதத்தினை ஆழமாக ஆய்வு செய்தால் இன்னும் பயனுள்ள பல தகவல்களைப் பெறமுடியும். இது எனது அறிவுக்கு எட்டிய விதத்தில் முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாத சில அவதானங்கள் மட்டுமே! என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இதில் ஏதும் குறைகள் இருந்தால் அது எனது ஆய்வினதும், அனுபவத்தினதும் குறையே தவிர நபி(ஸல்) அவர்களது வழிகாட்டலில் உள்ள குறையாக நிச்சயமாக அது இருக்காது என்பதை கவனத்திற்கொள்க!

(முற்றும்)

5 comments

  1. haja jahabardeen

    அஸ்ஸலாமு அழைக்கும் ! இதை அவசியம் படித்து தெரிந்துகொள்ளவேண்டும் !பெற்றோர்களும் ,
    பிள்ளைகளும் !

  2. குழந்தை வளர்ப்பு எவ்வளவு முக்கியமானதாக சொல்லபபட்டுள்ளது.

  3. i love this very much

  4. Alhamthulillah, thanks a lot to islamkalvi.coM

  5. insha allah may allah bless you and forgive all your sins..aameen…its really very useful to this generation parents…jazakkallah khair…allah hafiz..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *