Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » மேற்கின் கழுகுப் பிடிக்குள் லிபியா!

மேற்கின் கழுகுப் பிடிக்குள் லிபியா!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
லிபியா ஒரு இஸ்லாமிய நாடு!
போராட்டக் குணம் கொண்ட நாடு!

இத்தாலியின் அடக்குமுறைக்கு எதிராக உமர் முக்தாரின் தலைமையில் வீரியம் மிக்க சுதந்திரப் போராட்டம் நடத்திச் சாதனை படைத்த நாடு!

சர்வாதிகாரி முஸோலினியின் அதிகாரக் கனவை ஆட்டங்காணச் செய்த உயிரோட்டம் மிக்க சுதந்திரப் போராளிகளைப் பெற்றெடுத்த நாடு!

வீரம் விளைந்த மண்!

கடந்த 42 வருடங்களாக லிபியாவை ஆட்சி செய்யும் கேர்னல் கடாபி அமெரிக்க எதிர்ப்புக் கோசமொன்றை மட்டும் முன்வைத்துப் பாமர முஸ்லிம்களுக்கு மத்தியில் தன்னை ஹீரோவாகக் காட்டிக் கொண்டவர்.

இவர் அமெரிக்க எதிர்ப்பாளர். அதே வேளை ரஷ்ய ஆதரவாளர். ஒரு ஷைத்தானை எதிர்த்து மறு ஷைத்தானுடன் கைகோர்த்துக் கொண்டவர். ஆனால் இஸ்லாமிய உலகில் அமெரிக்காவுக்கு எதிராகப் பேசுவோரெல்லாம் ஹீரோக்களாகப் பார்க்கப்பட்டதால் இவரும் ஹீரோவாகப் பார்க்கப்பட்டார்.

சொந்த நாட்டில் இஸ்லாமிய எழுச்சியை அடக்கியொடுக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர். இஹ்வான்களையும், தவ்ஹீத் சிந்தனையுடைய ஸலபி அமைப்புகளையும் அடக்கியொடுக்குவதில் தயவு-தாட்சண்யமில்லாமல் கடும் போக்கைக் கைக்கொண்டவர். இவரது இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடுகள், சிந்தனைகள், ஹஜ் கிரியைகள் குறித்து இவர் வெளியிட்ட மார்க்க முரணான கருத்துகள் போன்றவற்றால் பல உலமாக்களால் ழால்-முழீல் (வழிகேடன்-வழிகெடுப்பவன்) என்று தீர்ப்புக் கூறப்பட்டவர்.

தனது நாட்டிலேயே இஸ்லாமியச் சிந்தனைக்கு எதிராகச் செயற்பட்ட இவர், இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டார் என்பது இலங்கை இனவாதிகள் கட்டவிழ்த்து விட்ட நகைச்சுவையான ஒரு அவதூறாகும்.

தூனீஸியா, எகிப்தைத் தொடர்ந்து லிபியாவிலும் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். கடாபி புரட்சியின் ஆரம்பத்தின் போதே ‘இது எகிப்தோ, தூனீஸியாவோ அல்ல! உயிருள்ள வரை போராடுவேன்!’ என ஆக்ரோஷமாகக் கூறினார். அவரது புதல்வர்களும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். கடாபி கொஞ்சம் கூட இராஜ தந்திரமில்லாமல் ‘புரட்சியாளர்களைத் தாக்குங்கள்!’ எனப் பகிரங்கமாகத் தனது ஆதரவாளர்களிடம் வேண்டுதல் விடுத்தார். லிபிய இராணுவமும் மக்கள் புரட்சியை எதிரி நாட்டு மக்களின் ஆயுதப் போராட்டம் போல் கருதித் துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலைக் களத்தை உருவாக்கியது.

நிலைமை கட்டுக்கடங்காமல் தொடர்வதைக் கண்ணுற்றாவது, இரு தரப்பும் மாற்று முடிவுகளுக்கு வந்திருக்க வேண்டும். இருப்பினும் இஸ்லாத்தின் எதிரிகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்க ஆயுதப் போராட்டம் வெடித்தது. மக்கள் கிளர்ச்சி உள்நாட்டுப் போராக உருமாறியது.

இல்லாத ஒரு நன்மையைக் கொண்டு வருவதை விட, இருக்கும் ஒரு தீமையைத் தவிர்ப்பதற்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டுமென்பது இஸ்லாமிய அடிப்படை விதிகளில் ஒன்றாகும்.

லிபியாவில் நல்லாட்சி இல்லை. நல்லாட்சியைக் கொண்டு வருவதைக் காட்டிலும் படுகொலை, போர், சொத்தழிவு, பெருகும் அகதிகள், வறுமை, அதனால் உண்டாகப் போகும் மார்க்க விரோதச் செயற்பாடுகள், பாதுகாப்பின்மை, அந்நிய சக்திகளின் தலையீடு, நாடு அந்நியர் வசமாதல் போன்ற தீமைகளைத் தவிர்ப்பதற்கு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்.

ஆனால், யூசுப் கர்ளாவி போன்ற அறிஞர்களும் ‘லிபியர்களே! நீங்கள் எடுத்துள்ள நிலைப்பாடு மிகச் சரியானது! உங்கள் பாதையில் நீங்கள் உறுதியுடனும், பொறுமையுடனும் பயணியுங்கள்!’ என ஒரு பக்கத்தை உற்சாகப்படுத்தும் வண்ணம் அழைப்பு விடுத்தனர்.

தொடர்ச்சியாக நடந்த முட்டாள்தனமான ஆர்ப்பாட்டமும், மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதலும் இன்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஷைத்தான்கள் லிபியா மீது தாக்குதல் நடத்தும் சூழ்நிலையை உண்டாக்கியுள்ளன.

ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் பல முக்கிய நகரங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னர் கடாபியின் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் படிப்படியாகக் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள முக்கிய நகரங்கள் கடாபி வசமாயின. கடாபியின் வான் படையின் தாக்குதல்களுக்கு இந்த வெற்றியில் முக்கிய பங்குள்ளது.

எனவே, கிளர்ச்சியாளர்கள் லிபியாவின் வான்பரப்பை விமான சூனிய பிரதேசமாக்க வேண்டுமென்ற கோரிக்கையைச் சர்வதேச சமூகத்திடம் முன்வைத்தனர். இது குறித்த தீர்மானமெடுக்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்காவும், பிரிட்டனும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கின.

இந்த ஷைத்தான்கள் சுயநலம் இல்லாமல் இப்படி வந்து உதவ மாட்டார்கள் என்ற சிந்தனை கிளர்ச்சியாளர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏற்படவில்லை.

ஐ.நா. லிபியாவின் வான்பரப்பை விமான சூன்யமாக்குதல் தொடர்பில் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே அமெரிக்காவின் போர்க் கப்பலொன்று 2000 படை வீரர்கள் மற்றும் போர் விமானங்களுடன் மத்திய தரைக் கடலில் முகாமிட்டது. பிரிட்டனும் தனது படைகளைத் தயார் நிலையில் கொண்டு வந்து நிறுத்தியது.

இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் குழப்பமான சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதை இதன் மூலம் முஸ்லிம் உலகு அறிந்து, சர்ச்சைக்குரிய ஆர்ப்பாட்டக்காரர்கள்-லிபிய அரசுக்கு இடையே இணக்கத்துக்கான ஒரு முயற்சியைச் செய்திருக்க வேண்டும்.

அல்லது இரு சாராரும் நிகழவிருக்கும் ஆபத்தை எண்ணித் தமக்குள் உள்ள பூசலை நிறுத்தியிருக்க வேண்டும். இதற்கிடையில் கடாபி போர் நிறுத்தத்தை அறிவித்தார். அவர் போர் நிறுத்தம் அறிவித்த தினத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தினர். லிபியப் படை தாம் தாக்குதல் நடத்தவில்லை எனக் கூறுகின்றது.

நிலைமை சீராகி விடக்கூடாது என்ற அடிப்படையில் மூன்றாம் தரப்பொன்று அங்கு இயங்கி வந்ததா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலைமையைச் சிக்கலாக்கும் விதத்தில் நேச நாடுகள் (NATO) (நாச நாடுகள்?) விமானத் தாக்குதல்களையும், செல் தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளன.

இந்தக் கட்டுரை மக்கள் மன்றத்துக்கு வரும் போது பெரும்பாலும் லிபிய அரசு வீழ்ச்சியடைந்து இருக்கலாம். ஆயினும் லிபிய மக்கள் இஸ்லாமிய ஆட்சி, நல்லாட்சி என எதை எதிர்பார்த்துத் தூண்டப்பட்டார்களோ அது நடக்காது. மேற்கின் ஒரு கைப்பொம்மையின் கையில் லிபியா ஒப்படைக்கப்படப் போகின்றது. ஒரு சிறிய தீமையைப் பல இழப்புகளுக்கு மத்தியில் நீக்கி, ஒரு பெரிய தீமையை லிபிய மக்கள் பெற்றெடுக்கப் போகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

ஈராக்குக்கும், குவைட்டுக்கும் இடையில் முறுகல் நிலையிருந்த போது அமெரிக்கா குவைட்டுக்கு தைரியமூட்டி அந்த முறுகல் வளர வழி வகுத்தது. சதாம் குவைட்டை ஆக்கிரமித்தார். பிரச்சினை தீர்ந்து விடுமென்ற நிலையில் அமெரிக்கா, ஈராக் மீது தாக்குதலை தன்னிச்சையாக ஆரம்பித்தது. இரண்டாவது வளைகுடாப் போரின் போது சதாமின் பிடியிலிருந்து ஈராக் மக்களை விடுவிக்கப் போவதாகக் கூறி, தாக்குதலைத் தொடுத்து சதாம் கொல்லப்பட்ட பின்னர் கூட ஈராக்கை விட்டும் அது படைகளை வாபஸ் பெறவில்லை. லிபியாவுக்கும் இதே நிலைதான் ஏற்படப் போகின்றது.

ஈராக் போரின் போது உலக நாடுகள் பலவும் ஈராக் மீதான தாக்குதலைக் கண்டித்தன. அமெரிக்க-பிரிட்டனில் கூட இலட்சக் கணக்கான மக்கள் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இப்போது கடாபியின் முட்டாள் தனமான செயற்பாட்டால் எந்த வித எதிர்ப்புமில்லாது நேட்டோ படை தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஈராக், ஆப்கான் போன்ற நாடுகளில் அரசுக்கெதிராகப் போராடுவோரை அமெரிக்காவும், நேட்டோப் படைகளும் கொன்று குவிக்கின்றன. லிபியாவில் அரச கிளர்ச்சியாளர்களைத் தாக்குவதற்கு எதிராகத் தாக்குதல் நடத்துகின்றது. இவர்களின் இந்த இரட்டை முகமே இவர்களின் கபடத்தனத்தை உணர்த்தப் போதிய சான்றாகும்.

அல்லது ‘முஸ்லிம்களைக் கொல்லும் உரிமை கடாபிக்கு இல்லை! அது எங்களுக்கு மட்டுமே உள்ள உரிமை!’ என அமெரிக்கா கூற விரும்புகின்றதோ தெரியவில்லை. ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக ஊக்கமளித்த கர்ளாவி போன்ற அறிஞர்கள் இந்த அயோக்கியர்களின் தாக்குதல் குறித்துக் கண்டிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

இன்னும் சில தினங்களில் லிபியா வீழ்ச்சியடைந்ததும் அமெரிக்காவின் நலனைக் காக்கும் விதத்தில் ஒரு பொம்மை அரசு அங்கே உருவாக்கப்படும். மக்களை ஏமாற்றுவதற்காக ஏதேனும் அரசியல் சீர்திருத்தமென்ற பெயரில் ஏமாற்று வேலைகள் நடக்கும். ஒரு கண்கட்டி வித்தை போன்ற தேர்தல் நடக்கும். அதன் பின் மீண்டும் ஒரு கடாபி யுகம் ஆரம்பமாகும். இஸ்லாமிய அமைப்புகள் எழுச்சி பெறுவது நிச்சயம் ஒடுக்கப்படும்.

அமெரிக்கா ஏதேனும் ஒரு சாட்டை வைத்து லிபியாவில் கால் பதிக்கும். இது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்றாகும்.

சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை ஆட்டங்காணச் செய்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருகின்றது. லிபியா சீனாவினதும், ரஷ்யாவினதும் நட்பு நாடுகளில் ஒன்றாகும். லிபியாவின் எண்ணெய் வளத்தில் பெரும் பகுதி சீனாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆபிரிக்காவில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், தனது செல்வாக்கை அதிகரிக்கவும் லிபியாவில் கால் பதிப்பது அமெரிக்காவின் அரசியல் நலன் சார்ந்த அம்சமாகும்.

அதற்கான வாய்ப்பைக் கிளர்ச்சிகளும், கடாபியின் முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட எதிர் நடவடிக்கைகளும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டன.

ஆப்கான், ஈராக் பட்டியலில் லிபியாவும் இணையப் போகின்றது!

ஒரு முஃமின் ஒரே பொந்தில் இரு முறைகள் கொத்தப்படமாட்டான் என்பது நபிமொழி!

அமெரிக்கா பொந்தில் அடிக்கடி கொத்துப்படுவதன் மூலம் நாம் நமது ஈமானிலுள்ள குறைபாட்டைத்தான் உலகுக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றோமா?

11 comments

  1. such good article please translate to this english can every body read & relaise what is going on in libya

  2. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ், இஸ்மாயில் சலஃபி அவர்களுக்கு அருள் புரியட்டும்.மிக அருமையான செய்திகள்.

  3. sarabdeen lafeer

    அனைத்து நாடுகலிலும் வாழக்கூடிய முஸ்லிம்கலின் நிலையும் கேல்விக் குறியாகவே உள்ளது,காரனம் ஈமானில் உறுதி இல்லாதது,[அல்லாஹ் என்றும் சத்தியக் கொல்கயுடன் வாழக் கூடிய முஸ்லிம்கலாக நமனைவரையும் ஆக்கியருல்வானாக]

  4. Assalamu Alaikum (Rah)

    Gaddafi & his sons destroy the image of Islam and the Path Party same like Communist idealogy party and every where they are having statute and Gaddafi son invited western singers for his birth day party and paid millions pounds. This is who’s mony?

    Gaddafi should accept the people’s request for political reform and allow the peoples to take part in the Govt. He and his sons were greedy and selfish and took wrong decision to announce war against his own people.

    Further west always enemy of Islam and waiting for the oppurtunity to seize the oil wealth of Libiya.

    When we talk about Omer Mukthar, he is a great Imam and know the rules and regulations of Islam and he sacrified him self for the freedom of Libiya from Italy. Such kind of people are Sahid and they did not care of their soul. Allah may accept him and his followers.

    Gaddafi is a munafiq having personal women’s body guard & he did not feel shame on it & always available with them.

  5. actually the true reason of the attack revealled by this article, jazz………

  6. What a contradictions! why these muslim rulers not follow caliphs! Father of Indian Nation Gandhiji has recommend the indian rulers to follow the ruling style of caliphs! Gandhiji’s deep study of Islamic rulers make him to recommend the rulers to follow umar,usman and ali (Raliallahu anhuma)
    It is a great shame that Ghadafi and his regime not follow the path of khalifas which is based on Holyquran and sunnah!
    Refusing Sunnah is the way of inviting fitna!

  7. கடாபி டோனி ப்ளைஎரை (ஒரு நசரணியை) தனது அட்வைசர் ஆக நியமித்தான் அப்போதே அவன் கதை முடிந்தது .

  8. கடாபியை போல் இன்னும் எத்துணையோ இஸ்லாமிய நாட்டின் போலி ஆட்கியளர்கள் யகோதி நசரநிகளை தங்களின் அட்விசெர்களாக வைத்துகொண்டு தங்கள் நாட்டின் அழிவை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

  9. Nalliah Thayabharan

    கிறிஸ்தவ ஏகாதிபத்திய நாடுகள் மற்றைய நாடுகளை வலிய யுத்தத்துக்கு அழைத்து அழிக்க முயலும் சரித்திரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    1930களில் யப்பான் பெற்றோலியம், இறப்பர், தாதுப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இங்கிலாந்தும் அமெரிக்காவும் தடை விதித்து, அதன் மூலம் யப்பானை வலிந்து யுத்தத்துக்கு அழைத்து, இறுதியில் யப்பான் மீது அணுகுண்டுகளை வீசி யப்பானை அழித்தனர். ஆனால் அதிலிருந்து யப்பான் மீண்டுள் தளைத்து உலகின் பெரிய பொருளாதார தொழில்நுட்ப நாடாக மலர்ந்தது.

    தற்போது சீனாவின் பெற்றோலிய தேவைகட்கு தடைகளை ஏற்படுத்து சீனாவை யுத்தத்துக்கு அமெரிக்கா வலிய அழைக்கிறது. லிபியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் சீனாவின் உதவியோடு தற்போது நடக்கும் பெற்றோலிய அகழ்வுகளை நிறுத்தி சீனாவுக்கும் லிபியாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே தற்போது லிபியா மீது தாக்குதல்களை அமெரிக்கா நடாத்துகின்றது.

    ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே ஈரான் மீதும் தாகுதல்களை மேற்கொள்ள அமெரிக்கா முஸ்தீபுகளை செய்து வருகின்றது.

    ஆனால் 1930களில் யப்பானை போருக்கு வலிய இங்கிலாந்தும் அமெரிக்காவும் அழைத்த போது யப்பானிடம் அணுகுண்டு இருக்க வில்லை. ஆனால் தற்போது சீனாவிடம் அணுகுண்டுகளும் உண்டும். அண்மையில் பாரிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது இங்கு குறிப்பிடத்தக்கது

  10. Assalamu Alaikkum, we are getting good benefit your service to promote our knowledge.

  11. ஜோதிடம் பற்றி இஸ்லாமின் கருத்து அறிய விருப்பம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *