Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 1

அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 1

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இஸ்லாத்தின் அத்திபாரமாகத் திகழ்வது அகீதாவாகும். இஸ்லாமியப் பிரசாரத்தின் முக்கிய இலக்கும் அகீதாவாகும். அகீதாவைப் போதிக்காமல் அதற்கு முதன்மை வழங்காமல் இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாது. இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய அழைப்பாளர்களும் அடிப்படையான அகீதாவுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை உரிய முறையில் வழங்கத் தவறி விட்டன என்றே கூற வேண்டும். அகீதாவை விட ஃபிக்ஹ் மஸ்அலாக்களும், பழாயில்களும்தான் அதிகமாக மக்களிடம் தாக்கம் செலுத்தியுள்ளன.

இஸ்லாமிய அகீதாவில் அல்லாஹ்வின் அழகுத் திரு நாமங்கள், பண்புகள் பற்றிய நம்பிக்கையும் முக்கியமானதாகும். தவ்ஹீதை மூன்று வகைகளாகப் பிரித்து நோக்கும் அறிஞர்கள், “தவ்ஹீதுல் அஸ்மாஉ வஸ்ஸிஃபாத்” என மூன்றாவது வகையாக இதைக் குறிப்பிடுவர். இந்த வகையில் இது குறித்த நம்பிக்கை தவ்ஹீதில் மூன்றில் ஒன்றாகத் திகழ்கின்றது. எனினும் பெரும்பாலும் பேசப்படாத தவ்ஹீதாகவே இது இருக்கின்றது. பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளுக்கு இப்படியொரு பகுதி இருப்பதே தெரியாது. மற்றும் சில அமைப்புகளுக்கு இப்படியொரு பகுதி இருப்பது தெரிந்தாலும் இது பேசத் தேவை இல்லாத சாதாரண சமாச்சாரமாகவே உள்ளது. மற்றும் சிலர் இது முதஷாபிஹாத் போன்றது எனக் கூறி இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாகிய இதை அடிப்படையல்ல என ஒதுக்கி விடுகின்றனர்.

ஆரம்ப கால அறிஞர்கள் தவ்ஹீதின் இந்தப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்தப் பகுதியைத் தவறாகப் புரிந்து கொண்டதால்தான் வரலாற்றில் பல வழிகெட்ட அமைப்புகள் தோற்றம் பெற்றன. அந்நிய தத்துவ வித்துகள், தர்க்கவியல் சாஸ்திரம் எனும் சகதிக்குள் சிக்கித் தவித்த சிலர் சிதைத்து சின்னாபின்னமாக்கிய பகுதியும் இதுதான். எனவே “அல் அஸ்மாஉ வஸ்ஸிஃபாத்” எனும் இப்பகுதியைப் புரிந்துகொள்வதற்கான சில அடிப்படைகளை இந்த ஆக்கத்தின் மூலம் வாசகப் பெருமக்களாகிய உங்களுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றோம்.

(1) இது நம்பிக்கைக்குரிய பகுதி
“அல் அஸ்மாஉ” என்றால் அல்லாஹ்வின் அழகுத் திருப்பெயர்களைக் குறிக்கும். “அஸ்ஸிஃபாத்” என்றால் அல்லாஹ்வின் பண்புகளைக் குறிக்கும். அல்லாஹ்வின் பண்புகளையும், பெயர்களையும் அவன் சொன்னால் மாத்திரமே எம்மால் அறிந்துகொள்ள முடியும். அல்லது அவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சொன்னால்தான் எம்மால் அறிய முடியும். எனவே “அஸ்மா வஸ்ஸிஃபாத்” எனும் இந்தப் பகுதி அல்லாஹ்வாலும், அவனது தூதராலும் சொல்லப்பட்டதை அப்படியே நம்புவதை அடிப்படையாகக் கொண்டது. அல்லாஹ்வைப் பற்றியோ, அவனது பண்புகள் பற்றியோ நாம் ஆராய்ந்தறிய முடியாது; சிந்தித்துப் புரிய முடியாது. இது ஆய்வுக்கோ, சிந்தனைக்கோ உட்பட்ட விஷயமல்ல; ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த விடயமாகும்.

“அவன் அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும் அவர்களுக்குப் பின்னுள்ளவற்றையும் நன்கறிகிறான். அவனை அவர்களால் (முழுமையாக) அறிந்து கொள்ள முடியாது.” (20:110)

அவன் அனைத்தையும் அறிந்தவன். ஆனால் அவனைப் பற்றி அவன் சொல்லாமல் எவராலும் அறிய முடியாது. சிலர் “இல்முல் கலாம்” என்ற பெயரில் அல்லாஹ் பற்றியும், அவனது பண்புகள் பற்றியும், மறைவான விடயங்கள் பற்றியும் தேவையற்ற தத்துவ விமர்சனங்களில் ஈடுபட்டனர். அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் அவரவர் அறிவுக்கும், தர்க்க சிந்தனைக்கும் ஏற்ப பேச முற்பட்டனர். இது அவர்களை வழிகேட்டிலிட்டுச் சென்றது. இமாம்கள் பலரும் “இல்முல் கலாம்” எனும் இத்துறையை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

எனவே “அஸ்மா வஸ்ஸிஃபாத்” விடயத்தில் ஆய்வுக்கோ, சிந்தனைக்கோ, தர்க்க ஞானத்திற்கோ இடம் கொடுக்காமல் சொல்லப்பட்டிருப்பதை நம்புதல் என்ற அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

(2) மறுக்கக் கூடாது
அல்லாஹ்வின் எந்த ஒரு பெயரையோ, பண்பையோ மறுத்து விடக் கூடாது. அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் மறுப்பது குஃப்ருக்கு இட்டுச் செல்லும். சில கடந்த கால அறிஞர்களில் சிலர் அல்லாஹ்வின் பெயர்கள்-பண்புகளில் சிலவற்றைத் தவறாக விளங்கி அவற்றை நிராகரித்தனர். அல்லாஹ் தன்னைப் பற்றிச் சொன்ன ஒரு செய்தியை இது அல்லாஹ்வுக்குத் தகுதி அற்றது என மறுக்கும் அதிகாரம் யாருக்குமில்லை.

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வுக்கு “அர்ரஹ்மான்” என்றொரு பெயர் இருப்பதை அறிந்திருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் “யா அல்லாஹ்! யா ரஹ்மான்!” என அழைத்ததை அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இது குறித்துக் குர்ஆன் பேசும் போது;
“அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டு விடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற் ;காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.” (7:180)

அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் மறுப்பது மாபெரும் குற்றமென்பதை இந்த வசனம் மறுக்கின்றது;

“வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.” (89:22)

மலக்குகள் அணியணியாக நிற்கையில் உமது இரட்சகன் வருவான் என இந்த வசனம் கூறுகின்றது. அல்லாஹ் தனக்கு வருதல் என்றொரு பண்பு இருப்பதாகக் கூறும் போது வருதல் என்ற பண்பு அல்லாஹ்வின் தகுதிக்கு உகந்ததல்ல. எனவே அல்லாஹ்வுக்கு வருகை என்ற பண்பு இல்லை என மறுக்க முடியாது. வழிகெட்ட பல அமைப்புகளும் அல்லாஹ்வின் பண்புகள் குறித்து இப்படிச் சிந்தித்துப் பண்புகளை நிராகரித்து வருகின்றனர். அல்லாஹ்வின் பண்புகளை நிராகரிப்பது, அல்லாஹ்வை நிராகரிப்பதில் ஒரு பகுதியாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

(3) மாற்று விளக்கம் கூறக் கூடாது:-
அல்லாஹ்வைப் பற்றி அல்லாஹ்வும், அவனது தூதர்களும் என்ன சொன்னார்களோ, என்ன அர்த்தத்தில் சொன்னார்களோ அதை அதே அர்த்தத்தில் நம்ப வேண்டும். மாற்று அர்த்தம் கூறலாகாது.

குர்ஆன் மனிதர்கள் பேசும் மொழியில் அருளப்பட்டது. மனிதர்கள் நம்பி நடப்பதற்காக அருளப்பட்டது. தூய்மையான அறபு மொழியில் அருளப்பட்டதாகும். இந்தக் குர்ஆனையும், அதன் விளக்கத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள்.

அல்லாஹ்வைப் பற்றியும், அவனது பண்புகள் பற்றியும் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது நபித் தோழர்கள் எதைப் புரிந்து கொண்டார்களோ அதுதான் அதன் அர்த்தமாகும். அல்லாஹ்வைப் பற்றி நபித் தோழர்கள் எப்படி நம்பினார்களோ அப்படியே நாமும் நம்ப வேண்டும். அல்லாஹ்வைப் பற்றிப் பின்னால் வந்தவர்கள் ஆய்வு செய்தோ, விஞ்ஞான ஆய்வுக்குட்படுத்தியோ அறிந்துகொள்ள முடியாது. நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ் வருவான்!” என்று கூறிய போது, நபித் தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அதுதான் அதன் அர்த்தமாகும். இந்த அடிப்படையில் அல்லாஹ்வும், ரஸூலும் சொன்னதைத் ஸஹாபிகள் எளிமையாகப் புரிந்து கொண்டது போல் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சொல்லிற்கு அதன் அடிப்படை அர்த்தத்தைத்தான் முதலில் கொடுக்க வேண்டும். முகம், கை, கால் போன்ற பதங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் முகம் என்றால் முகத்தைத்தான் குறிக்கும்.

எல்லா மொழியிலும் இலக்கியமாக சில வார்த்தைகள் பயன்படுத்தப்படும். இலக்கியமாகப் பயன்படுத்தப்படும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது எல்லாம் இலக்கியம்தான் என்று ஆகி விடாது. வீரனைக் குறிக்கச் சிங்கம் என்றும், தந்திரசாலியைக் குறிக்க நரி என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. “நான் சிங்கத்தைக் கண்டேன்!” என்று ஒருவர் கூறினால், அவர் கண்டது சிங்கத்தைத்தான் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். “நான் ஒரு சிங்கத்தோடு உறங்கினேன்!” என்றால், நேரடிப் பொருள் கொள்ள முடியாத தடையொன்று ஏற்படுவதால், சிங்கமென்பதற்கு “வீரம் நிறைந்த மனிதர்” என்று அர்த்தம் செய்யலாம்.

அல்லாஹ் வருகின்றான் என்றால் அவன் அவனது தகுதிக்கும், மகத்துவத்துக்கும் ஏற்ப வருகின்றான். அவனுக்கு வருகை என்ற பண்பு உண்டு என்றால் அவனது தகுதிக்கும், மகத்துவத்துக்கும் ஏற்ப அவனுக்கு வருகை என்ற பண்பு உண்டு என்று கூறுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

“அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்த தினால் அவர்களை நாம் சபித்து, அவர்களது உள்ளங் களை இறுக்கமானதாக ஆக்கி விட்டோம். (அதனால்) அவர்கள் (வேத) வார்த்தைகளை அதன் இடங் களை விட்டும் திரிபுபடுத்தி விடுகின்றனர். இன்னும் தமக்கு உபதேசிக்கப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டும் விட்டனர்..” (5:13)

இமாம் ஷாபிஈ(றஹ்) அவர்கள் இது குறித்துக் கூறும் போது, “நான் அல்லாஹ்வை நம்புகின்றேன்! அவனிடமிருந்து வந்தவற்றையும் நம்புகின்றேன்! அல்லாஹ் எந்த அர்த்தத்தில் சொன்னானோ, அதே அர்த்தத்திலும் நம்புகின்றேன்! நான் அல்லாஹ்வின் தூதரையும், அவரிடமிருந்து வந்தவற்றையும் நம்புகின்றேன்! அவர் எந்த அர்த்தத்தில் கூறினாரோ அதே அர்த்தத்திலும் நம்புகின்றேன்!” எனக் கூறினார்கள்.

எனவே அல்லாஹ்வின் பண்புகள்-பெயர்களுக்கு மாற்று விளக்கம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(4) ஒப்புவமை கூறக் கூடாது:
அல்லாஹ்வின் பண்புகளைப் படைப்பினங் களின் பண்புகளுக்கு ஒப்பாக்கவும் கூடாது; ஒப்பாக எண்ணவும் கூடாது. அவ்வாறு ஒப்பாகப் பேசினால் அல்லது நம்பினால் அல்லாஹ்வைப் படைப்புக்கு ஒப்பாக்கி இணை வைத்த குற்றம் நேரும். அவ்வாறே படைப்புகளின் பண்புகளை அல்லாஹ்வின் பண்புகளுக்கு இணையாகஃநிகராக ஆக்கினாலும் இணை வைத்தல் ஏற்படும். இந்த வித்தியாசத்தைப் புரிந்து அவனது பண்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்குப் பார்வை உண்டு; கேள்வி உண்டு. மனிதனுக்கும், ஏனைய படைப்புகளுக்கும் கேட்டல்-பார்த்தல் என்ற பண்புகள் உண்டு. அல்லாஹ்வுக்கு அவனது அந்தஸ்துக்கும், தகுதிக்கும் ஏற்ற கேட்டலும், பார்த்தலும் உள்ளன. மனிதனுக்கு அவனது தகுதிக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற கேட்டலும், பார்த்தலும் உண்டு. மிருகங்களுக்கு அவற்றின் தகுதிக்கும், தேவைக்கும் ஏற்ற கேட்டலும், பார்த்தலும் உள்ளன.

கேட்டல், பார்த்தல், உயிர் வாழ்தல் என்ற பண்புகள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தன்மையில் வித்தியாசமுள்ளது. “நான் கண்டியில் இருந்து கொழும்பு சென்றேன்!” என்று கூறும் போது, “செல்தல்” என்ற எனது செயலை மக்கள் ஒரு விதத்தில் புரிந்துகொள்கிறார்கள். பஸ் தரிப்புக்குச் சென்றிருப்பார். வரிசையாய் நின்றிருப்பார். பஸ்ஸில் ஸீட் பிடித்திருப்பார். மூன்று-மூன்றரை மணித்தியாலங்கள் பயணத்தில் கொழும்பை அடைந்திருப்பார் என மக்கள் புரிந்துகொள்வார்கள்.

“இலங்கை ஜனாதிபதி கண்டியில் இருந்து கொழும்பு சென்றார்!” என்று கூறப்பட்டால் இதை நான் போனது போல் மக்கள் கற்பனை பண்ண மாட்டார்கள். ஜனாதிபதியின் தகுதிக்கு ஏற்ற விதத்தில் அந்தப் பயணம் அமைந்திருக்கும் என்றே மககள் நம்புவார்கள். சாதாரண மனித நடத்தையிலேயே இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்கின்றோம்.

“யானைக்கும் கால் உண்டு! எறும்புக்கும் கால் உண்டு!” இவ்வாறு ஒருவர் கூறினால், எறும்பின் காலை யானையின் காலுக்கு ஒப்பிட்டதாக ஆகாது. யானைக்கு அதன் உடல் வாகுக்கு ஏற்ற கால் உள்ளது. எறும்புக்கு அதன் உடலுக்கு ஏற்ற கால் உள்ளது என்றே புரிந்துகொள்வோம்.

“..அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் செவியேற்பவன்; பார்ப்பவன்.” (42:11)

இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்கு ஒப்புவமை இல்லை என்று கூறப்படுகின்றது. அதே வேளை அவன் கேட்பவன்-பார்ப்பவன் என்றும் கூறப்படுகின்றது.

எனவே அல்லாஹ்வுக்குப் பார்வை உள்ளது என்று நம்ப வேண்டும். எந்தப் படைப்பின் பார்வையும் அல்லாஹ்வின் பார்வை போன்றதல்ல. அல்லாஹ்வின் பார்வைக்கு நிகரானதோ, சமமானதோ அல்ல என்றும் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வுக்குக் கேள்வி உள்ளது என்று நம்ப வேண்டும். அல்லாஹ்வின் கேள்விப் புலனுக்கு நிகராகஃசமமாக யாராலும் கேட்க முடியாது என்றும் நம்ப வேண்டும்.

இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாத சிலர் “அல்லாஹ்வுக்குப் பார்வை உண்டு!” என்று சொன்னால் மனிதனுக்கும் பார்வை உண்டு! எனவே இணை வைத்தல் ஏற்பட்டு விடும்.! எனவே அல்லாஹ்வுக்குப் பார்வை இல்லை! அல்லது அவன் கண் இல்லாமல் பார்க்கின்றான்! காதில்லாமல் கேட்கின்றான்!” என்றெல்லாம் கூற ஆரம்பித்தனர்.

அல்லாஹ்வின் பார்வை மனிதப் பார்வைக்கு ஒப்பானது என்று எண்ணித்தான் இவர்கள் இந்தத் தவறைச் செய்தனர். அல்லாஹ்வின் பண்பு படைப்புகளின் பண்புகளுக்கு ஒப்பாகி விடக் கூடாது என எண்ணிய இவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தல் என்ற தவறில் விழுந்தனர். இஸ்லாம் சொல்லிய பிரகாரம் நம்பினால் அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கவும் தேவை இல்லை. அல்லாஹ்வுக்கு ஒப்பீடு செய்வதாக அஞ்சவும் தேவை இல்லை.

“மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.” (112:4)

மேற்படி வசனத்தின் படி மனிதனும் பார்க்கின்றான்; அல்லாஹ்வும் பார்க்கின்றான். பார்க்கும் விடயத்தில் அல்லாஹ்வுக்கு நிகரோ, சமமோ இல்லை.

அல்லாஹ்வும் கேட்கின்றான்; மனிதனும் கேட்கின்றான். கேட்கும் விடயத்தில் அல்லாஹ்வுக்கு நிகரோ, சமமோ கிடையாது.

என அனைத்திலும் அல்லாஹ் நிகரற்ற, சமனற்ற, உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாக நம்பும் போது ஒப்பீடு ஏற்படாது. எனவே அல்லாஹ்வின் பெயர்கள்-பண்புகளை அதே அர்த்தத்தில் எத்தகைய ஒப்பீடும் இல்லாமல் படைப்புகளின் பண்புகளுக்கு நிகராகஃசமமாக எண்ணாமல் அப்படியே நம்ப வேண்டும்.

இப்படி நம்பும் போது வழிகெட்ட சிந்தனை களிலிருந்தும், வழிகெட்ட எண்ணங்களிலிருந்தும் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

(மேலும் சில அடிப்படைகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில்)

One comment

  1. Alhamdu lillah This is usefull for every muslim, and very importent for ever muslim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *