Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்

ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இஸ்லாம் கூறும் அடிப்படை வணக்கங்களில் நோன்பு
பிரதானமான தொன்றாகும். மனித ஆன்ம பரிசுத்தத்திற்கு வழி வகுக்கும் இவ்வணக்கத்தை மேற்கொள்ளும் ஒருவரின் உள்ளத்தில் எழக்கூடிய ஐயங்கள் எவை என யூகித்து அவற்றைத் தெளிவுபடுத்துமுகமாக இவ்வாக்கம் எழுதப்படுகின்றது.

சந்தேகம்:-
அனைத்து இபாதத்துக்களும் “நிய்யத்” அவசியமானது. நோன்பிற்கும் “நிய்யத்” அவசியமானதே. நோன்பின் நிய்யத் எனக் கூறப்படும் வாசகங்கள் ஆதாரபூர்வமானவைதாமா?

தெளிவு:-
“நிய்யத்” என்றால் “எண்ணங்கொள்ளல்” என்பதே அர்த்தமாகும். “நிய்யத்தை” வாயால் மொழிதல் கூடாது. எந்த இறை வணக்கத்தைச் செய்தாலும், அல்லாஹ்வுக்காக செய்கின்றேன் என்ற இஹ்லாஸான எண்ணத்துடன் செய்வதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

நோன்பின் நிய்யத் என நபி(ஸல்) அவர்கள், குறிப்பிட்ட ஏதேனும் வாசகங்களைக் கற்றுத் தந்துள்ளார்களா? என வினவினால் அனைத்து ஹதீஸ்களும் “இல்லை” எனத் தலையசைக்கின்றன. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ழி ரமழான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹித் தஆலா” என்ற நோன்பு நிய்யத் (?) வாசகங்கள் ஒரு ஹதீஸ் கிரந்தத்தில் கூட இடம்பெறவில்லை. (வேண்டுமானால் உலமாக்களிடம், இந்த வாசகங்கள் எந்த ஹதீஸ் கிரந்தத்தி;ல் இடம்பெற்றுள்ளது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் நழுவுவதை நீங்களே காண்பீர்கள்) ஹதீஸ்களில் இல்லாத இந்த துஆவை மக்கள் கூறும் விதத்திலும், இந்த துஆவின் வாசகங்களிலும் அநேக தவறுகள் உள்ளன.

தராவீஹ் தொழுது முடிந்தவுடன் இமாம் இந்த துஆவை (?) மஃமூனுக்குச் சொல்லிக் கொடுப்பார். இமாம் இதை அரபியிலும் கூறி பொருளையும் தமிழில் கூற மஃமூம்களும் வழிமொழிவர். நிய்யத் இரு மொழிகளில் கூற வேண்டுமா? மக்களுக்கு அரபியில் சொல்ல (?) முடியுமென்றால் தமிழ் தேவையில்லை. அல்லாஹ்வுக்குத் தமிழ் தெரியாது; மக்களுக்கு அரபு புரியாது என்ற தவறான எண்ணம் அடி மனதில் இருப்பதனால் தானோ என்னவோ இவர்கள் இரு மொழிகளிலும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

சில இடங்களில் அரபியிலும், தமிழிலும் மும்மூன்று விடுத்தங்கள் சொல்லிக் கொடுப்பர். தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம் என்று சமாளிக்க முடியாத அளவுக்கு சின்னஞ் சிறுசுகளின் உள்ளங்களில் கூட இந்த துஆ ஆழப் பதிந்துள்ளது. தொழுகைக்கும் அரபு, தமிழ் என்று ஆறுவிடுத்தம் இவர்கள் “நிய்யத்”துச் சொல்லுவார்களோ?

ஆதாரமில்லாத நிய்யத்தை அர்த்தமற்ற விதத்தில் சொல்லிக் கொடுக்கின்றனர். சொல்லப்படும் வாசகங்களாவது தவறில்லாமல் இருக்கக்கூடாதா? “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன். அல்லாஹ்வுக்காக!” எனச் சொல்லப்படுகின்றது.

றமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் ஒருவன் சென்ற வருடத்து நோன்பையோ, வருகின்ற வருட நோன்பையோ நோற்கப் போவதில்லை. எனவே, “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின்” என்ற வார்த்தை அர்த்தமற்றதாகின்றது. “பர்ழான நோன்பை” என்ற அடுத்த வாசம்கூட றமழான் மாதத்தில் சுன்னத்தான நோன்பு இல்லை என்பதால் தேவையற்ற ஒன்றாகின்றது.

அடுத்து “நாளை பிடிக்க” நிய்யத்துச் செய்கிறேன் என்று சொல்லப்படுகின்றது. நாளை எதையேனும் செய்வேன் எனக் கூறுவதாயின் “இன்ஷா அல்லாஹ்” என்ற வாசகத்தை இணைத்தே கூற வேண்டும் என்ற சின்ன விடயம் கூட “துஆ”க் கண்டு பிடிப்பாளருக்கோ, அதை அணுவும் பிசகாது நடைமுறைப் படுத்தும் ஆலிம்களுக்கோ தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

மேலும் ஒரு விபரீதம் நிகழ்வதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா முஸ்லிம்களும் ஸஹரில் சாப்பிட்டு விட்டு “நாளை நோன்பு பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன்” (அதாவது இன்று நான் நோன்பு பிடிக்கவில்லை) என்று கூறிவிடுகின்றனர். இது எவ்வளவு விபரீதமான வார்த்தை? இதை உலமாக்களும் கண்டு கொள்வதில்லை; மக்களும் சிந்திப்பதில்லை. மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்களோ அதை அப்படியே செய்வதை உலமாக்களும், உலமாக்கள் எதைச் செய்தாலும் அது பற்றி சிந்தனை செய்யாது பின்பற்றுவதைப் பொது மக்களும் வழமையாகக் கொண்டுள்ளனர். சாதாரண தமிழ் அறிவுள்ளவன் கூட இந்த “துஆ” தவறானது என்பதை அறியமுடியுமல்லவா?

இறுதியாக “அல்லாஹ்வுக்காக” என்று சொல்லப்படுகின்றது. நோன்பின் நிய்யத் என்று சொல்லப்படும் வார்த்தைகளிலே இது ஒன்று மாத்திரம் தான் அர்த்தமுள்ளதாக உள்ளது. எனவே, “நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன்” என்ற எண்ணத்துடன் மாத்திரம் நோற்போமாக!


சந்தேகம் :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாமா?

தெளிவு :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாம். தொழுகைக்காக மாத்திரம் அவர் குளித்துக் கொண்டால் போதுமானது. இது பற்றி அன்னை ஆயிஷா(ث), உம்மு ஸல்மா(ث) ஆகியோர் கூறும் போது, “நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பும் நோற்பார்கள்” என அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: தாரமீ-1725, புஹாரி-1925, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா- 1704, முஅத்தா-644,645)

சந்தேகம்: நோன்பாளி ஒருவர் பகலில் உறங்கிக் கொண்டிருக்கும் போது “இஹ்திலாம்” ஏற்பட்டு (கனவில் விந்து வெளிப்பட்டு) விட்டால் அவரின் நோன்பு முறிந்து விடுமா?

தெளிவு :-
உறக்க நிலையில் ஒருவர் முழுக்காளியாவதால் நோன்பு முறிந்து விடாது. அவர் தொடர்ந்து அந்நோன்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், “கனவின் மூலம் முழுக்காளியானவர் நோன்பை விட்டுவிட வேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்:பாகம்-1:பக்:554)


சந்தேகம் :- ‡“ஸஹர்” உடைய முடிவு நேரம் எது?

தெளிவு :-
ஸஹர் செய்யுமாறும், அதில் அதிகம் பரக்கத் உள்ளதாகவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள பல ஹதீஸ்கள் உள்ளன. (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஹதீஸ் எண் -1692). இந்த ஸஹர் உணவை முடிந்தவரை தாமதப்படுத்துவதையே இஸ்லாம் விரும்புகின்றது. சுப்ஹுடைய நேரம் வந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தால் கூட உண்பதை நிறுத்த வேண்டியதில்லை. சுப்ஹுடைய நேரம் வந்துவிட்டது என்று உறுதியானால் தான் உண்பதை நிறுத்த வேண்டும். இதையே “குமரி இருட்டு நீங்கி விடியற்காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரை புசியுங்கள், பருகுங்கள்…” (2:187) என்ற வசனம் உணர்த்துகின்றது.

றமழான் காலத்தில் மக்களை எழுப்புவதற்காகவும், சுப்ஹுடைய தொழுகைக்காகவும் இரு அதான் கூறும் வழிமுறை நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அந்த இரு அதான்களுக்குமிடையில் சுமார் 50 ஆயத்துக்கள் ஓதும் இடைவெளி இருந்ததாக ஸஹாபாக்கள் கூறுகின்றனர். (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா 1694)

சுப்ஹுடைய தொழுகைக்காக கூறப்படும் இரண்டாவது அதான் வரையிலும் உண்ணல், குடித்தல், எதுவும் தடுக்கப்படடதல்ல; சுப்ஹுடைய அதான் கூறுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னரே ஸஹருடைய நேரம் முடிந்து விட்டது என்ற கருத்து தவறானதாகும். ஏனெனில் “பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள், உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்” என நபி() அவர்கள் ஏவியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆராதம்: இப்னு குஸைமா 1932)


சந்தேகம் :‡
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ண ஆரம்பிக்கும் போதே சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் அவர் தொடர்ந்து உண்ணலாமா? அல்லது உண்ணாமலே பட்டினி நோன்பு இருக்க வேண்டுமா,

தெளிவு :-
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ணும் போது சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் உண்பதை உடனே நிறுத்தி விட வேண்டியதில்லை. இதை அறியாத மக்கள் பலர் சுப்ஹுடைய அதானுக்குப் 15 நிமிடங்கள் இருக்கின்ற போது எழுந்தால் கூட பட்டினி நோன்பிலிருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வதுடன், தனது நோன்புக்கும், யூத நஸாராக்களின் நோன்புக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் “ஸஹர்” எனும் சுன்னத்தையும் விட்டு விடும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர். இதோ! இந் நபிமொழியைக் கவனியுங்கள்.
“தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில், உங்களில் எவரும் “அதான்” கூறுவதை செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம்.” (அபூ ஹுறைரா(ரழி) ஆதாரம் – அபூதாவூத்)


சந்தேகம் :‡
நோன்பாளியொருவர் மறந்த நிலையில் எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் நோன்பு முறிந்து விடுமா?

தெளிவு :-
பதினொரு மாதங்கள் உண்டு பழக்கப்பட்டிருப்பதனால் சில வேளைகளில் நோன்பாளிகள் எதேச்சையாக எதையேனும் வாயில் போட்டு விடுவதுண்டு. இவ்வாறு மறதியாக உண்பதால் நோன்பு முறியவும் மாட்டாது; அதன் பலன் குறைந்து விடவும் மாட்டாது. அவர் தொடர்ந்து நோன்பிலேயே இருக்க வேண்டும்.

“யாரேனும் ஒரு நோன்பாளி மறதியாக எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் அவர் தனது நோன்பை (நிறுத்திவிடாமல்) பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்ள். (அறிவிப்பவர்: அபூ ஹுறைரா(ரழி) – ஆதாரம்: புஹாரி, தாரமீ, முஸ்லிம்)


சந்தேகம் :‡
நோன்பாளி பகல் வேளைகளில் பல் துலக்குவதால் நோன்பின் பலன் குறைந்து விடுமா?

தெளிவு :-
நோன்பாளி பகல் வேளைக்குப் பின் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து ஷாபி மத்ஹபு உடையோருக்கிடையே நிலவி வருகின்றது. நோன்பாளியின் வாயின் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிடச் சிறந்ததாகும் என்ற கருத்துடைய ஹதீஸ்களையே அவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.

இந்த ஹதீஸ் வாயில் வாடை வீச வேண்டும் என்ற கருத்தைத் தரவில்லை. இது இயற்கையாகப் பசியின் போது எழுகின்ற மணத்தையே குறிக்கும் என்று மாற்றுக் கருத்துடைய சிலர் விளக்கமளிப்பர்.

தர்க்க ரீதியாக நோக்கும் போது நாற்றம் வீசும் வாயே கஸ்தூரி போல் மணக்கும் எனின் நாற்றமற்ற நல் மணம் கொண்ட வாய் அல்லாஹ்விடத்தில் அதிக நறுமணமுள்ளதாக இருக்கும். எனவே, நோன்பு காலத்தில் மற்றக் காலத்தை விட அதிகமாகப் பல் துலக்க வேண்டும் என்றும் கூட இதே ஹதீஸை வைத்து முடிவு செய்ய வேண்டும். தர்க்க ரீதியாக இத் தீர்மானத்திற்குப் பின்வரும் ஹதீஸ் பலமுள்ள சான்றாகத் திகழ்கின்றது.

“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கின்ற போது என்னால் கணிப்பிட முடியாது என்கின்ற அளவுக்கு அதிகமாக பல்துலக்க நான் கண்டேன்” என ஆமிர் இப்னு ரபீஆ(ரழி) கூறினார்கள். (புஹாரி:1933, அபூ தாவூத், திர்மிதி:721)

இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் “இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள், முற்பகலிலோ, பிற்பகலிலோ பல் துலக்குவதில் தவறிருப்பதாகக் கருதவில்லை” எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

எனவே, நோன்பாளி அதிகளவில் பல் துலக்க வேண்டும். அதுவே, தூய்;மைக்கும், சுகாதாரத்திற்கும், தொழும் போது அணியில் இருப்போர்க்கும், மலக்குகளுக்கும் தொல்லை கொடுக்காத வழிமுறையாகும்.


சந்தேகம் :‡-
நோன்பாளி பகல் வேளையில் நீராடலாமா? உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக தண்ணீரை தன் மேனியில் ஊற்றிக்கொள்ளலாமா?

தெளிவு :-
மக்களில் சிலர் நோன்பென்றால் தன்னைத் தானே வருத்திக் கொள்வதென்று கருதுவதால் கஷ்டத்தை நீக்கும் எதையும் செய்யலாகாது என நினைக்கின்றனர். இதனால் தான் நோன்பாளி பகலில் நீராடக் கூடாது என்றும், வெயிலைத் தணிக்க தண்ணீரை ஊற்றிக் கொள்வது நோன்பின் “பாயிதாவை” குறைத்து விடும் என்றும் நம்புகின்றனர். “நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தாகத்தை அல்லது சூட்டைத் தனிப்பதற்காக தங்கள் தலையில் நீரை ஊற்றிக் கொள்வதை நான் பார்த்தேன்” என அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஅத்தா, அபூ தாவூத்)

குளிக்கும் போது உடல் உரோமத்தால் நீர் உட்செல்வதால் நோன்பு முறியாது. அவ்வாறே மணச் சவக்காரம் உபயோகித்தல், வாசனை பூசல், நுகர்தல், கண்ணுக்கு சுருமா இடல் என்பவற்றாலும் நோன்புக்கு எத்ததைய பாதிப்பும் இல்லை என்பதைக் கவனத்தில கொள்க.


சந்தேகம் :‡-
நோன்பாளி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன் மனைவியை முத்தமிட்டுவிட்டார். இப்போது இவரது நோன்பின் நிலை என்ன? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

தெளிவு :-
நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்தமிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம்24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)

சில அறிவிப்புக்களில். “நானும் நோன்பாளியாக இருக்கும் நிலையிலேயே நோன்பாளியான அவர் என்னை முத்தமிட்டார்” என்று காண்ப்படுகிறது. (அபூ தாவூத், கிதாபுல் ஸவ்ம் 24ம் பாடம்)

இது நபி(ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரிய சட்டமல்ல. என்பதற்கும் அநேக சான்றுகள் உள்ளன. அதில் ஒன்றை மாத்திரம் வேறு சில தேவை கருதி இங்கே குறிப்பிடுகின்றோம்.

“ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தமது மனைவியை முத்தமிட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் பெரியதொரு தவறைச் செய்து விட்டேன். நோன்புடன் (என் மனைவியை) முத்தமிட்டுவிட்டேன் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ நோன்பு நோற்றிருக்கும் போது வாய் கொப்பளிப்பது பற்றி என்ன எண்ணுகிறாய்? என வினவினார்கள். உமர்(ரழி) அவர்கள், அதில் தவறில்லையே எனப் பதிலளித்தார்கள். உடலுறவு, நீர் அருந்துதல் போன்றது என்றால் முத்தமிடுவது வாய்கொப்பளிப்பது போன்றது தான் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்கள் சூசகமாக உணர்த்தினார்கள்” (ஆதாரம்: தாரமீ-1724, அபூதாவூத்- 2385, இப்னு குஸைமா-1999)

எனவே, நோன்பாளியான கணவன்-மனைவி முத்தமிட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதை உணரலாம். உணர்ச்சி வசப்பட்டு உடலுறவில் ஈடுபட்டுவிடுவோமோ என்ற அச்சம் இருப்பின் அதிலிருந்து விலகிக் கொள்ளல் கடமையாகும். நபியவர்களின் உவமானத்தைக் கூர்ந்து நோக்கும் போத இன்னுமொரு உண்மையையும் அறியலாம். “நோன்பாளி ஒருவர் வாய் கொப்பளிக்கும் போது தொண்டை வரை நீர் சென்று விடும் அளவுக்கு எல்லை மீறிச் செல்லலாகாது” என்பது நபிமொழி. இதனோடு ஒப்பிட்டு உவமையை நோக்கும் போது முத்தமிடுவதில் எல்லை மீறிச் சென்றிடலாகாது என்பதையும் யூகிக்கலாம்.

14 comments

  1. Naan ketka vendiya anaittu kelvikalukum vidai kidaittu vittadu alhamdullila jasakallah hair

  2. this articles are very useful.

  3. masha allah good explain
    now full clear

  4. “தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில், உங்களில் எவரும் “அதான்” கூறுவதை செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம்.” (அபூ ஹுறைரா(ரழி) ஆதாரம் – அபூதாவூத்)

    இந்த ஹதீஸின் எண் என்ன? இது ஆதாரமானது தானா?

  5. nonbin pothu tvs scan parisotanai seital enadu nonbu murindu widuma?

  6. This is very useful website,I got all the answer for my questions.

  7. jasakmullah hair idu pontra melum pala vidayamhali edir paakkintrom insha allah.

  8. maylum pala nalla ethuponra theenudaya vilakkangalai eangalukku thara allah ungalukku kirubai sayivanaga.

  9. Assalamu Alaikkum…….Tholugum pothu parthu kondu Quran Othalama????Please reply me

  10. nonpin potu scan paricotanai saiwatal noonpu muriyatu

  11. This is very useful website for every body,

    i have one doubt on thahajat prayer,
    most of the places now praying 8 rakat,but
    in mecca they pray 20 rakat ?

    please clear it to me & everybody

  12. As-Sheikh Irshad Moomeen

    //தாமதித்து எழுந்த ஒருவர் உண்ணும் போது சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் உண்பதை உடனே நிறுத்தி விட வேண்டியதில்லை. இதை அறியாத மக்கள் பலர் சுப்ஹுடைய அதானுக்குப் 15 நிமிடங்கள் இருக்கின்ற போது எழுந்தால் கூட பட்டினி நோன்பிலிருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வதுடன், தனது நோன்புக்கும், யூத நஸாராக்களின் நோன்புக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் “ஸஹர்” எனும் சுன்னத்தையும் விட்டு விடும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர். இதோ! இந் நபிமொழியைக் கவனியுங்கள்.
    “தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில், உங்களில் எவரும் “அதான்” கூறுவதை செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம்.” (அபூ ஹுறைரா(ரழி) ஆதாரம் – அபூதாவூத்)//

    நீங்கள் சொல்லி இருக்கும் இந்த விளக்கம் தவறானதாகும்.
    இது தவறான விளக்கம் என்பதை இதற்கு முன்பு நீங்கள் குறிப்பிட்டிருக்கும்: “பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள், உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்” புகாரியுடைய அறிவிப்பு தௌிவு படுத்துகிறது.

    இது பற்றி இமாம் நவவி (றஹ்) அவர்கள் மஜ்மூஇலே தௌிவு படுத்தி இருக்கிறார்கள்.

    அவர்கள் அதில்: பஜ்ருடைய அதான் சொல்லும்போது வாயில் உணவு இருந்தால் அதை துப்பிவிடவேண்டும் என்று தௌிவாகவே எழுதி விட்டு நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் பஜ்ருக்கு முன்னால் சொல்லப்படும் பிலாலுடைய அதான் என்றே விளங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.

  13. Nombu nerathil thalai vali vanthal thailam theikkalama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *