Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-25)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-25)

– M.T.M.ஹிஷாம் மதனீ

وهو سبحانه قد جمع فيما وصف به نفسه بين النفي والإثبات. فلا عدول لأهل السنة والجماعة عما جاء به المرسلون فإنه الصراط المستقيم.

விளக்கம்:
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளின் எதார்த்த தன்மை
மேற்கூறப்பட்டுள்ள வசனமானது, அல்லாஹுத்தஆலாவின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை உறுதி செய்யும் விடயத்தில் அவன் தனது வேதத்தில் வகுத்துத்தந்துள்ள போக்கை – மன்ஹஜ் – த் தெளிவுபடுத்தக்கூடியதாகவுள்ளது. விசுவாசிகளாக இருக்கக்கூடிய நாம் அதனைப் புரிந்து எமது போக்கை சீராக்கிக் கொள்வது கடமையாகும்.

பொதுவாக அல்லாஹுத்தஆலாவின் அனைத்துவிதமான பெயர்களும் பண்புகளும் இரு விடயங்களுக்கு மத்தியில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அவையாவன,

1. அல்லாஹ்வின் பூரணத்துவத்திற்கு மாற்றமாக அவனுக்கு குறை கற்பிக்கும் அம்சங்களை மறுத்தல். உதாரணமாக, அல்லாஹுத்தஆலாவிற்கு நிகரில்லை என்றும் அவனுக்கு சிறு தூக்கமோ பெருந்தூக்கமோ மரணமோ ஏற்படாது என்றும் கூறுவதைக் குறிப்பிடலாம்.

2. அல்லாஹ்விற்கு பூரணத்துவத்தை வழங்குகின்ற பண்புகளை அவனுக்கு உறுதிப்படுத்தல். உதாரணமாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை நோக்குக.

‘அவன்தான் அல்லாஹ். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனையன்றி வேறு யாரும் இல்லை. (அவனே) ஆட்சியாளன், பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், பாதுகாப்பவன், கண்காணிப்பவன், யாவற்றையும் மிகைத்தவனும், அடக்கியாளுபவனும், பெருமைக்குரியவனுமாவான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவனே அல்லாஹ். (அவனே) படைப்பவனும், தோற்றுவிப்பவனும், உருவமமைப்பவனுமாவான். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்.’ (அல்ஹஷ்ர்: 23,24)

எனவே, அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரைச் சார்ந்தோருக்கு தூதர்கள் காட்டித்தந்த பாதையைவிட்டும் வேறுபாதைகளை நாடிச் செல்வது உகந்ததல்ல. மாற்றமாக, அவர்கள் தூதர்களின் கருத்துக்களில் ஒருமைப்பட்டவர்களாகவும், அவர்களின் ஒளியைக்கொண்டு பிரகாசிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதன் பிரதிபளிப்பாகவே அவர்கள் அல்லாஹ்விற்கு பூரணத்துவத்தைக் கற்பிக்கும் பண்புகளை உறுதிப்படுத்தக்கூடியவர்களாகவும், அவனது அந்தஸ்திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய பண்புகளை மறுக்கக்கூடியவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள்.

மேலும், தூதர்கள் காண்பித்த பாதையானது நேரிய பாதையாகும். அந்நேரிய பாதையைவிட்டும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு விலகிச் செல்ல முடியாது. அப்பாதை குறித்து அல்லாஹுத்தஆலா கூறும் போது,
‘நிச்சயமாக இது எனது நேரான வழியாகும். எனவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள் பல வழிகளைப் பின்பற்றாதீர்கள். அப்பொழுது அது அவனது வழியைவிட்டும் உங்களைச் சிதறடித்துவிடும்.’ (அல்அன்ஆம்: 153)

صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين.

விளக்கம்:
அல்லாஹ் அருள் புரிந்தோரின் பாதை
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள் அகீதா மற்றும் எனைய விடயங்களில் காட்டித்தந்த நேரிய பாதையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் பயணிக்கக் கூடியவர்களாக இருந்தனர். மேலும், அதுவே அல்லாஹ் அருள்புரிந்தோரின் பாதையுமாகும். அவ்வருளுக்குச் சொந்தக்காரர்களாக நான்கு பிரிவினர் உள்ளனர்.
1. நபிமார்கள்: இவர்கள் அல்லாஹுத்தஆலாவினால் தனது நபித்துவத்திற்கும் தூதுத்துவத்திற்கும் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.

2. ஸித்தீகீன்கள்: இவர்கள் உண்மையிலும், உண்மைப்படுத்துவதிலும் உச்ச கட்டத்தை அடைந்தவர்களாவர். இன்னும், இவர்கள் அல்லாஹ்வோடு பூரண இஹ்லாஸுடன் நடந்து கொண்டு நபியவர்களுக்கு முழுமையாகக் கட்டுப்படக்கூடியவர்களாகத் திகழ்ந்தனர்.

3. ஷுஹதாக்கள்: இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்து கொலை செய்யப்பட்டவர்களாவர். மேலும், இவர்கள் சுவனத்தைக் கொண்டு சாட்சியளிக்கப்பட்டவர்களாக இருப்பதினாலும், இவர்களது மரணத்தின் போது ரஹ்மத்துடைய வானவர்கள் சமுகம் தருவதினாலும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

4. ஸாலிஹீன்கள்: இவர்கள் அல்லாஹ்வினதும் அவனது அடியார்களினதும் உரிமைகளை சரிவர நிறைவேற்றுபவர்களாவர்.

மேலும், الصراط – ஸிராத் – என்ற சொல்லானது சிலசமயங்களில் அல்லாஹ்வுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்படுவது, சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதைக் குறிப்பதற்காகும். இதனைப் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அவதானிக்கலாம்.
‘நிச்சயமாக இதுவே எனது நேரான வழியாகும். எனவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள்.’ (அல்அன்ஆம்: 153)

மேலும் சில சமயங்களில் இச்சொல்லானது அடியார்களுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்படுவது, அல்லாஹுத்தஆலாவின் அடியார்கள் அப்பாதையில் பயணிப்பதைக் கருத்திற்கொண்டேயாகும். அந்நேரிய பாதையில் பிரயாணிப்பவர்களின் சிறப்பைக் கருதியே நாம் நாள்தோரும் ஐவேளைத் தொழுகையில் ஸுரதுல் பாதிஹா அத்தியாயத்தை ஓதிப் பிரார்த்திக்கின்றோம். தற்காலத்தில் அதில் பிரயாணிக்கக்கூடியவர்கள் சொற்ப தொகையினராக இருந்தாலும் அப்பாதை நாம் முன்பு குறிப்பிட்டோரின் பாதை என்பதை நினைவில் கொள்க!

One comment

  1. اسلام عليكم

    aqeedatul wasitiya by imaam ibn taymeeya

    artical is good ;

    i need this book in pdf format upto current chapter;
    please replay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *