Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-26)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-26)

– M.T.M.ஹிஷாம் மதனீ

وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن . حيث يقول : ” قل هو الله أحد , الله الصمد , لم يلد ولم يولد , ولم يكن له كفوا أحد ”
(سورة الإخلاص , 1 – 4)

விளக்கம்:
அல்லாஹ்வின் பெயர்களையும் அவனது பண்புகளையும் அல்குர்ஆனில் இருந்து உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள்

1. அல்லாஹ் தொடர்பான வர்ணனையில் உறுதிப்படுத்துவதற்கும் மறுப்பதற்குமிடையிலான கூட்டுச் சேர்வு

இதற்கு முன்னர் நாம் பார்த்த விளக்கத்தில் இருந்து அல்லாஹ்வின் பெயர்களும் அவனது பண்புகளும் உறுதிப்படுத்தல் மற்றும் மறுத்தல் ஆகியவற்றிக்கிடையில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அதனை அடுத்து இக்கூற்றை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை இமாமவர்கள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து முன்வைத்துள்ளார்கள். அதன் முதற்கட்டமான அல்குர்ஆனில் இருந்து சில ஆதாரங்களை முன்வைத்து தனது விளக்கத்தைத் துவங்கியுள்ளார்கள். வாசகர்களின் பூரண தெளிவை நாடி அவ்விளக்கத்தை ஒவ்வொரு தொகுதியாகப் பிரித்து உபதலைப்புக்களில் இலகுபடுத்தியுள்ளோம்.

இமாமவர்கள் தனது விளக்கத்தின் முதல் கட்டத்தை அல் இஹ்லாஸ் அத்தியாயத்தைக் கொண்டு ஆரம்பித்துள்ளார்கள். ஏனெனில், இவ்வத்தியாயமானது:

அல்லாஹ்வின் பண்புகள் விடத்தில் பூரண தெளிவை வழங்கும்.

அதனைப் பாராயணம் செய்யக்கூடியவரை இணைவைப்பைவிட்டும் பாதுகாக்கும்.

மேலும், இமாமவர்கள் அல் இஹ்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகையில், இவ்வத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்கிறார்கள். அதன் விளக்கமாவது, மொத்தமாக அல்குர்ஆன் தன்னகத்தே பொதிந்துள்ள கருத்துக்களை மூன்று பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.

  1. ஏகத்துவம்
  2. வரலாறு
  3. சட்டதிட்டங்கள்

இவ்வத்தியாயத்தைப் பொருத்தளவில் இதில் அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையால் ஏகத்துவம் என்ற பகுதியை இது நிரப்பக்கூடியதாக அமைந்துள்ளது எனலாம்.

மேலும், அல் இஹ்லாஸ் அத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்ற செய்தியை நபியவர்களே தன் நாவால் நவின்றுள்ளதாக அபூ ஸஈத் அல்குர்திரி (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் இது குறித்த செய்திகள் தொடர்பாகக் கூறுகையில்: ‘அல்இஹ்லாஸ் அத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்பதைக் குறிக்கும் நபிமொழிகள் ஹதீஸ் கலையில் அல்முதவாதிர் எனும் பொய்ப்பிக்க முடியாத தரத்தை பெற்றுள்ளன’ என்கிறார்.
அல் இஹ்லாஸ் அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக உற்று நோக்கினால் அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் பயன்தரும் பல அம்சங்கள் உள்ளடங்கியிருப்பதை அவதானிக்கலாம். அந்தவிதத்தில்…

  • قل (கூறுவீராக): என்ற வார்த்தையானது நபியவர்களை விழித்துக் கூறப்பட்டுள்ளது. இது அல்குர்ஆனானது அல்லாஹ்வின் வார்த்தை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உண்மையில் அல்குர்ஆனானது நபியவர்களின் வார்த்தையாகவோ அல்லது வேறு ஒருவரின் வார்த்தையாகவோ இருந்திருந்தால் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா நபியவர்களை விழித்து قل (கூறுவீராக) என்று சொல்லியிருக்கமாட்டான்.
  • الله أحد (அவன் ஒருவன்): இவ்வசனமானது அவன் ஒருவன் அவனுக்கு உதவியாளனோ, அமைச்சரோ, கூட்டாளியோ கிடையாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
  • الله الصمد (அவன் எவ்வித தேவையுமற்றவன்): இவ்வசனமானது படைப்பினங்கள் அனைத்தும் அவன் பால் தேவையுடையனவாக இருக்கின்றன என்பதை தெளிவுற இயம்புகின்றது.
  • لم يلد ولم يولد (அவன் எவரையும் பெறவும் இல்லை, அவன் எவருக்கும் பிறக்கவும் இல்லை): இவ்வசனமானது அல்லாஹ்வுக்கு மகனோ, தந்தையோ இல்லை என்பதைக் சூசகமான விளக்குகின்றது. மேலும், இவ்வசனம் அல்லாஹ்வுக்கு மகன் உண்டு என்று கூறக்கூடிய கிரிஸ்தவர்கள், அரேபிய இணைவைப்பாளர்கள் பேன்றோருக்கு சிறந்த மறுப்பாக அமைந்துள்ளது.
  • ولم يكن له كفوا أحد (மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை): இவ்வசனமானது அவனது அந்தஸ்துக்குப் பாத்திரமாக உலகில் எவரும் இல்லை என்பதைப் பறை சாட்டுகின்றது.

எனவே, இவ்வத்தியாயத்தில் அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளடங்குபவை மற்றும் உள்ளடங்காதவை பற்றிய தெளிவு உள்ளது என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள்..

இவற்றைக் கருத்தில் கொண்டு நாமும் அவனது பண்புகளில் உறுதிப்படுத்த வேண்டியதை உறுதிபடுத்தியும் மறுக்க வேண்டியதை மறுத்தும் வாழ்வோமாக!

2 comments

  1. Assalamu Alaikum,

    Brother,

    Can we have a pdf version of this book.

    Jazakallah Hairan

    Abu Umer

  2. அஸ்ஸலாமு அலைக்கும்,
    இப்புத்தகத்தை தொடர் 01 முதல் 28 வரை PDF வடிவில் பெற்றுக்கொள்ள dawahsalaffiyyah@yahoo.com முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

    01-28 PDF – Please contact dawahsalaffiyyah@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *