Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » உள்ளமும் உளநோய்களும்

உள்ளமும் உளநோய்களும்

– எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி)
மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடைய உள்ளம் உயிரோட்டமுள்ள உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும் மற்றும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இவ்வடிப்படையைக் கருத்தில் கொண்டே அல்லாஹ்வும் அவனது தூதரும் தத்தம் பொன்மொழிகளை அமைத்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக. . .

அல்லாஹ் கூறுகின்றான்: “எவருக்கு உள்ளம் இருக்கிறதோ அவருக்கும், அல்லது மன ஒருமைப்பாடுடன் செவியேற்கின்றாரோ அவருக்கும் நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கின்றது.” (காப்: 37)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்). (அல் அஹ்ஸாப்: 5)

நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் இருக்கின்றது, அது சீர் பெறுமானால் உடம்பு பூராகவும் சீர் பெற்றுவிடும், அது கெட்டுவிட்டால் உடம்பு பூராகவும் கொட்டுவிடும், அதுவே உள்ளமாகும்.” (புகாரி, முஸ்லிம்)

உள்ளத்தின் பண்புகள்

பிரதானமாக உள்ளத்திற்கு இரு பண்புகள் உள்ளன.

1. தடம் புரளக்கூடிய தன்மை
உள்ளமானது எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. அவ்வப்போது நிலை மாறக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை பின்வரக்கூடிய ஹதீஸைப் படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டுவந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)

இப்படி உள்ளமானது நிலைமாறும் தன்மையைக் கொண்டிருப்பதால், அதனைச் சீர் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது எமது கடமையாகும். அல்குர்ஆனிலும் நபி மொழியிலும் அதற்கான பிரார்த்தனைகள் நிரம்பக் காணப்படுகின்றன.

  • அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (ஆலஇம்ரான்: 5)
  • “இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பால் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)
  • “மேலும், உன்னிடத்தில் சாந்தியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)

2. பித்னாக்களை உள்வாங்கக்கூடிய தன்மை

பொதுவாக மனித உள்ளமானது எப்போதும் பித்னாக்களை உள்வாங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு அவற்றை விட்டும் உள்ளங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எம் பாரிய பொறுப்பாகும். ஒரு மனிதன் பித்னாக்களுக்கு உட்பட்டு, அவற்றில் ஆர்வம் கொண்டு, ஈடுபாடு காட்டினால் அவனது உள்ளம் காலப்போக்கில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிய முடியாத அளவுக்கு இருளடைந்துவிடும். அதேபோன்று பிரிதொரு மனிதன் பித்னாக்களைவிட்டு ஒதுங்கி தன்னைத் தற்காத்துக் கொண்டு காரியம் அற்றினால் அவனது உள்ளம் பளிச்சிடும் வெண்ணிறத்தை அடையும் என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

உள்ளத்தின் வகைகள்

பொதுவாக உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. சீராண உள்ளம்
  2. மரணித்த உள்ளம்
  3. நோய்வாய்ப்பட்ட உள்ளம்

1. சீராண உள்ளம்

இத்தகைய உள்ளமானது, மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றைவிட்டும் ஈடேற்றம் பெற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளமானது முழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாக இருக்கும். அத்தோடு மார்க்கத்திலிருந்து ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும் போது அதற்கெதிராகத் தன்னுடைய அபிப்பிராயத்தையோ, மனோ இச்சையையோ வெளிப்படுத்தாது இருக்கும். இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமை நாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர். இது குறித்து இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன்தராது” என்கிறான். (அஷ்ஷூஅரா: 88,89)

2. மரணித்த உள்ளம்

இவ்வுள்ளமானது சீராண உள்ளத்திற்கு மாற்றமானதாகும். மேலும், இவ்வுள்ளமானது தன்னுடைய இரட்சகனை அறியாத நிலையிலும் அவனை வணங்காத நிலையிலும் காணப்படும். அத்தோடு தனது இரட்சகனின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக முழுமையாக மனோ இச்சைக்கு வழிப்பட்டதாக இருக்கும். இத்தகைய உள்ளம் குறித்து நபியவர்கள் கூறும் போது: “அல்லாஹ்வை ஞாபகிப்பவனுக்கும் ஞாபகிக்காதவனுக்கும் உதாரணம் உயிரோடு இருப்பவனும் மரணித்தவனும் ஆவார்;கள்.” (புகாரி, முஸ்லிம்)

3. நோய்வாய்ப்பட்ட உள்ளம்

இவ்வுள்ளத்தைப் பொருத்தளவில் உயிரோட்டமுள்ளதாகக் காணப்படினும் நோயுற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளத்தில் அல்லாஹ் மீது அன்பும் உறுதியான விசுவாசமும் காணப்படும். ஆயினும் தவறான விடயங்களின் பால் ஆர்வம் கொண்டாதகவும் அதில் அதிக ஈடுபாடு உடையதாகவும் இருக்கும். சில சமயம் இந்நோய் முற்றி ஒருவரை மரணித்த உள்ளம் உடையவர் என்ற நிலைக்குக் கூட தள்ளிவிடும்.

உள நோய்களின் வகைகள்

பொதுவாக உளநோய்களை இரு பெரும் பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.

  1. சந்தேகங்களுடன் தொடர்புடைய நோய்கள்
  2. இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்

 

1. சந்தேகங்களுடன் தொடர்புடைய நோய்கள்

இவ்வகையான நோயானது உள்ளம் தொடர்பான நோய்களில் மிகக் கடுமையானதாகும். இந்நோயானது நம்பிக்கை சார்ந்த அம்சங்களில் பெரிதும் தாக்கம் விளைவிக்கின்றது. இந்நோயின் காரணமாக தவறான கொள்கைகளும் கற்பனைகளும் மனதில் பதியப்படுகின்றன.

மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டவர்களாக இணைவைப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும், நூதன அநுட்டாளிகளையும் குறிப்பிடலாம்.

அல்பகரா அத்தியாயத்தின் 10ஆம் வசனத்தில் இந்நோயால் பீடிக்கப்பட்டவர்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகையில்: “அவர்களின் உள்ளங்களில் (சந்தேகம் எனும்) நோய் உள்ளது. எனவே, அல்லாஹ் அவர்களுக்கு நோயை அதிகப்படுத்தி விட்டான்” என்கிறான். (அல்பகரா: 10)

இந்நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு:

  • அல்குர்ஆன், அஸ்ஸுன்னாஹ்வில் இடம்பெற்றிருக்கக்கூடியவற்றிக்கு முழுமையாகக் கட்டுப்படல்.
  • அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாஹ்வையும் எம்முடைய முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறே நாமும் விளங்க முற்படல்.

2. இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்
இவ்வகை நோய்களில் மனிதன் நன்றாக அறிந்து வைத்துள்ள அனைத்து வகையான பாவமான காரியங்களும் உள்ளடங்கும். அதனடிப்படையில் பொறாமை, உலோபித்தனம், விபச்சாரம், மற்றும் ஹராமான பார்வை போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.

மேலும், இத்தகைய உளநோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடிய உள்ளத்தைப்பற்றி அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது: “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பீர்களானால், குழைந்து பேசாதீர்கள். ஏனெனில், எவனது உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ, அவன் ஆசை கொள்வான்” என்கிறான். (அல்அஹ்ஸாப்: 32)

இந்நோயில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு:

  • அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் ஏவல் விலக்கல்களுக்கு முழுமையாக அடிபணிதல்.
  • எவ்வேளையும் அல்லாஹ் எம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் காரியமாற்றுதல்.
  • ஷைத்தானின் சதிவலைகளை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
  • ஒவ்வொரு பாவமான காரியத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளை கருத்தில் கொண்டு அவற்றை விட்டும் விலகிக் கொள்ளல்.

உள்ளம் சீர் பெறுவதற்காக சில ஆளோசனைகள்

  • தான் ஏற்றிருக்கும் மார்க்கத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியங்களைத் தவிர்ந்துக் கொள்ளல்.
  • உள நோய்களைவிட்டும் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்.
  • பித்னாக்கள் ஏற்படக்கூடிய இடங்களை விட்டும் தூரமாகுதல்.
  • ஒவ்வொரு நாளும் தன்னை சுயபரிசோதனை செய்தல்.
  • நல்லமல்கள் புரிவதற்கு உள்ளத்துடன் போராடல்.
  • அல்லாஹ்வை வழிப்படும் விடயத்திலும், அவனுக்கு மாறு செய்யும் விடயத்திலும் பொறுமையைக் கடைபிடித்தல்.
  • படிப்பினை பெறும் நோக்கில் நல்ல மனிதர்களின் வரலாறுகளை வாசித்தல்.
  • அல்குர்ஆனை தொடர்ந்து ஓதி வரதல்.
  • உள்ளத்தை சீர் செய்யுமாறு அல்லாஹுத்தஆலாவிடம் பிரார்த்தித்தல்.
  • அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கக்கூடிய நண்பர்களைத் தெரிவு செய்தல்.
  • பாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் தன்னையே நொந்து கொள்ளல்.
  • தான் செய்த நல்லமல்களை எண்ணிப் பெருமிதமடையாதிருத்தல்.
  • எப்போதும் அல்லாஹ்வை வழிப்படும் விடயத்தில் தான் திருப்தியற்ற நிலையில் உள்ளேன் என்ற உணர்வில் இருத்தல்.
  • மரணத்தை அடிக்கடி ஞாபகப்படுத்தல்.
  • மண்ணறைகளை தரிசிக்கச் செல்லல்.
  • தவறான ஊசலாட்டங்களை விட்டும் மனதை தற்காத்துக் கொள்ளல்.
  • ஒவ்வோர் ஆத்மாவும் ஒவ்வொரு கணணொடிப்பொழுதிலும் அல்லாஹ்வின் பால் தேவையுடையதாக இருக்கின்றது என்ற எண்ணத்தை மனதில் பதித்தல்.
  • உள்ளத்திற்குப் பூரணமான மார்க்க அறிவை வழங்குதல்.
  • இம்மை மறுமை வாழ்க்கையின் எதார்த்த தன்மையைப் புரிந்து கொள்ளல்.
  • அதிகமாக திக்ர் செய்தல்.
  • பாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் அதிகமாக இஸ்திக்பார் மற்றும் தவ்பா செய்தல்.
  • சிறுபாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் அவற்றைத் தொடர்ந்து நல்ல காரியங்களில் ஈடுபடுதல்.

எனவே, மேற்குறிப்பிடப்பட்ட போதனைகளைக் கருத்தில் கொண்டு எம் உள்ளங்களையும் சீர் செய்து நல்ல மனிதர்களாக வாழ்ந்து ஈடேற்றம் பெறவதற்கு எனக்கும் உங்களுக்கும் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!

6 comments

  1. அல்லாஹ்வை வழிப்படும் விடயத்திலும், அவனுக்கு மாறு செய்யும் விடயத்திலும் பொறுமையைக் கடைபிடித்தல்.Tell me this explanation.

  2. Good article.
    Everyday watch kovai ayub Bayan or good scholars to keep our mental state to be in islAmic mode.

  3. ASSALAMU ALAIKUM This is good articale all members follow this lesson implement succssful all place

  4. MashaAllah….

    This website is realy usefull

  5. எல்லா விடயத்திலும் பொறுமையைக் கடைபிடித்தல்

  6. அல்லாவுக்கு எல்லா புகழும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *