Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » சுதந்திர லிபியா ஏகாதிபத்தியவாதிகளால் சுரண்டப்படுமா?

சுதந்திர லிபியா ஏகாதிபத்தியவாதிகளால் சுரண்டப்படுமா?

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
கேர்ணல் முஅம்மர் கடாபி!

பெயரைக் கேட்டாலே குதூகலித்த மக்களும் உண்டு. கூனி குனிந்த மக்களும் உண்டு. முஸ்லிம் உலகில் கடாபியின் பெயருக்கு தனி இடம் இருந்தது. கடாபி ஏகாதிபத்தியவாதிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கியவர்.

1969-ஆம் ஆண்டு லிபியாவை ஆண்ட முஹம்மத் இத்ரீஸ் என்பவரின் ஆட்சியை இரத்தம் சிந்தாத புரட்சியின் மூலம் கடாபி கைப்பற்றினார். அப்போது கடாபிக்கு சுமர் 27 வயது. இராணுவத்தில் கடாபி அப்போது கேர்ணலாக இருந்தார்.

இத்தாலியின் முசோலினியின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்ற பின் இத்ரீஸின் ஆட்சி ஆரம்பமானது. ஆனால் லிபிய மக்கள் எதிர்பார்த்த ஆட்சியை இத்ரீஸ் கொடுக்கவில்லை. சர்வதிகார போக்கும் ஆட்சியும் இத்ரீஸிடம் காணப்பட்டது என வர்ணிக்கப்பட்டது. இந்நிலையிலேயே கடாபி ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டார். லிபியாவின் தலைவரானார்.

லிபியாவின் மக்களின் நலன் கொண்டு கடாபி ஆட்சி புரியத் தொடங்கினார். 1977 ஆம் ஆண்டில் லிபியா அரப் அல் ஜமாஹி ரியா எனும் பெயரில் லிபியாவை அறிமுகப்படுத்தினார். லிபியாவுக்கென தனியான அரசியல் சாசனத்தை உருவாக்கினார். அவர் எழுதிய பசுமை நூல் (Green Book) அரசியல் சாசனமாகக் கருதப்பட்டது. இந்நூலில் இஸ்லாத்திற்கு முரண்பட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என பல விமர்சனங்களும் எழுந்தன. இஸ்லாத்தின் சில அடிப்படையான விடயங்களை அவர் குறைகண்டதுமல்லாமல் நிராகரிக்கவும் செய்தார். 1980ஆம் ஆண்டில் அவர் ஒரு முர்தத் (மதம் மாறியவர்) என தீர்ப்பும் கொடுக்கப்பட்டது.

அதேவேளை, லிபியாவின் வளத்தை நாட்டின் அபிவிருத்திக்கு முழுமையாகப் பயன்படுத்தினார். எண்ணெய் வளத்தை அரசுடமையாக்கி மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார். லிபியாவை கடன் அற்ற நாடாக மாற்றினார். பசுமை நாடாக மாற்றிக் காட்டினார். அணிசேரா நாடுகளை உருவாக்குவதிலும் பாதிக்கப் பட்ட ஏழை நாடுகளுக்கு உதவி புரிவதிலும் அக்கறை செலுத்தினார். பலஸ்தீன மக்களுக்கு உதவி நல்குவதில் கவனம் செலுத்தினார்.

இராணுவ ரீதியில் பலம் பொருந்திய நாடாக மாற்றுவதில் அவர் பெரியளவில் அக்கறை செலுத்தவில்லை. அவரைச் சுற்றி பாதுகாப்பு வழங்குவதற்கு இளம் வாலிப இராணுவப் பெண்களையே மெய் பாதுகாவலாளிகளாக அமைத்துக் கொண்டார்.

1988ம் ஆண்டு லொக்கர் பீ விமான குண்டுவெடிப்புக்கு லிபியா காரணம் என அமெரிக்கா கூறியபோது அதனை ஏற்க மறுத்த கடாபி 2003ல் அதற்கான பொறுப்பை ஏற்றதுடன் அவ்விபத்தில் மரணித்த 270 பேருக்கான நஷ்டஈட்டையும் கொடுக்க முன்வந்தார்.

லிபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பகைமைகள் இருக்கவே செய்தன. காரணம் கடாபி ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி ரேகனுடைய காலத்தில் பல முறை லிபியா மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈராக் மீது ஏகாதிபத்தியவாதிகள் போர் தொடுத்து போலி குற்றச்சாட்டின் மீது ஈராக்கை ஆக்கிரமித்து சதாம் ஹுஸைனை தூக்கிலிட்டு வஞ்சகம் தீர்த்து எண்ணெய் வயல்களை ஏப்பமிட்ட காட்சிகளை கண்டு உலகில் எவரும் கண்டிக்காத சூழ் நிலையில்தான் தன் நாட்டின் மீது ஏகாதி பத்தியவாதிகள் போர் தொடுக்கலாம் என கடாபி புரிந்து கொண்டார். எனவே தம் வசமுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிப்ப தாகவும் அணு உற்பத்திகளை கைவிடுவதாகவும் கடாபி சர்வதேசத்திடம் கூறினார்.

அதன் பின்பே அமெரிக்கா பிரிட்டன் மற்றும் மேற்கத்திய உலகுடன் கடாபி தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

சதாமின் ஆட்சியை கவிழ்க்க மேற்கத்திய உலகம் கையாண்ட சூழ்ச்சி தங்களுக்கும் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொண்ட கடாபி, அவ்வாறான சூழ்ச்சி இன்னுமொரு வடிவில் வரக் கூடும் என் பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய கிழக்கில் உருவாகி வந்த மக்கள் போராட்டம் பல அறபு நாட்டு தலைவர்களை அச்சம் கொள்ளச் செய்தது. தூனீசியாவில் ஆரம்பித்து எகிப்து, யெமன், சிரியா, பஹ்ரைன் என பரந்து விரிந்த போராட்டம் லிபியாவில்தான் உக்கிரமடைந்தது.

தூனீசியா மற்றும் எகிப்து நாட்டுத் தலைவர்கள் மக்கள் போராட்டத்திற்கு முன் தோல்வியை கண்ட பிறகே லிபியாவில் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தது.

மக்கள் போராட்டத்தை கடாபி தன் இரும்பு கரங்களைக் கொண்டு அடக்கினார். எலிகளை நசுக்குவது போல் நசுக்குவதாக சூளுரைத்தார். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் எழச்சி ஒரு கட்டத்தில் வீழ்ச்சிக்கு வந்தபோது, மேற்குலக நாடுகள் உடனடியாகவே கிளர்ச்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க பகிரங்கமாகவும் நேரடியாகவும் முன்வந்தன.

கிளர்ச்சிப் படைகள் ஒருங்கிணைக்கப் பட்டன. ஒரு தலைமை உருவாக்கப்பட்டது. ஆயுத குழுக்களாக உருமாற்றப்பட்டார்கள். கடாபியை பதவியிலிருந்து வெளியேற்ற நேட்டோ படைகள் பக்கபலமாக இருந்தன. இந்நேரம்தான் கடாபி சற்று சிந்தித்திருக்க வேண்டும். பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.

சதாமின் வீழ்ச்சியைக் கண்டு பாடம் படித்தவர், நேட்டோ படைகள் மூக்கை நுழைத்தபோதே விபரீதத்தை புரிந்திருக்க வேண்டும். ஆனால், கடாபி தன் அதிகாரத்தின் மீது ஆட்சி செலுத்தவே விரும்பினார். லிபியாவில் அப்பாவி மக்கள் அடக்கப்படுகிறார்கள். மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. மனிதாபிமான உதவிகள் புரிய வேண்டும் என்ற போர்வையிலே நேட்டோ படைகள் லிபியாவுக்குள் நுழைந்தன.

உலகில் இதுபோன்ற அடக்குமுறைகள் கொலைகள் நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் நடந்து வரும் பல நாடுகள் உண்டு. ஏன் பலஸ்தீனில் இந்த அக்கிரமம் தானே நடக்கிறது. மண்ணின் மக்களைத் தானே இஸ்ரேல் சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறி செய்கின்றது. அங்கு நுழையாத நேட்டோ படை லிபியாவுக்கு மட்டும் நுழைகிறது.

நாளுக்கு நாள் வாரத்திற்கு வாரம் கிளர்ச்சிப் படை வெற்றி வாகை சூடிய அதேநேரம். லிபியா நெட்டோவின் குண்டுத் தாக்குதல்களால் சின்னாபின்னமாக்கப்படுகிறது. அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் இறந்து போனார்கள். கோடிக் கணக்கில் சொத்துகள் அழிக்கப் பட்டன. மேற்குலகிலுள்ள கோடிக்கணக்கான லிபியாவின் சொத்துக்கள் அமெரிக்காவினால் முடக்கப்பட்டன. கடாபியின் குடும்பம் அண்டை நாட்டுக்கு தப்பி ஓடியது. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

இறுதியில் கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகருக்கு தன்னுடைய மகன் முஃதஸிம் மற்றும் பாதுகாப்புப் படையுடன் செல்கையில் நோட்டோ படையின் தாக்குதல்களுக்கு உள்ளாகி காயங்களுடன் கழிவு நீர் குழாயில் பதுங்கியிருந்தபோதே பிடிபட்டார். உயிருடன் பிடிபட்ட கடாபி கிளர்ச்சிப் படைகளின் அடிதடி தாக்குதல்களுக்கு ஆளாகி இழுத்துச் செல்லப்பட்டார். இரத்தக் காயங்களுடன் இருந்த கடாபி கிளர்ச்சிப் படைகளாலே சுட்டுக் கொல்லப்பட்டார். கடாபியின் 42 வருட கால ஆட்சி முடிவுக்கு கொண்ட வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிர்த் நகரில் தேடுதல் நடாத்திய கிளர்ச்சிப் படை கடாபிக்கு ஆதரவான 53 பேர்களையும் சுற்றி விளைத்து கொலை செய்ததாக அறிய முடிந்தது.

கடாபியின் இரத்தம் சிந்தாத புரட்சி இரத்தக் கசிவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. கடாபியின் மரணம் படுகொலையில் முடிந்தது. இம்மரண செய்தியை கேள்விப்பட்டதும் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசமடைந்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறும்போது, ”எதேச்சதிகாரத்தின் இருண்ட நிழல் அகற்றப்பட்டது. அமெரிக்கப் படையினரில் ஒருவர் கூட இழக்காமல் நாம் எமது குறிக்கோளை நிறைவேற்றி விட்டோம்” என்றார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் கூறுகையில், பிரிட்டன் இதில் பங்காற்றியது குறித்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

இதில் லிபியா மக்களை விட கிளர்ச்சிப் படைகளை விட மேற்கு நாடுகளே அதிக சந்தோசமடைகின்றன. கடாபியும் அவரது மகனும் கடாபியின் ஆதரவுப் படைகளும் கைது செய்யப்பட்ட பின் கொலை செய்யப்பட்டமை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கான விசாரணை தேவை என்றும் கூறியிருக்கிறது.

அமெரிக்காவோ பிரிட்டனோ தனக்கு இலாபமில்லாமல் எந்த காரியத்திலும் இறங்காது. லிபியாவில் கடாபி கொல்லப்படுவதற்கு முன்னரே அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி லிபியாவுக்குப் போய் கிளர்ச்சிப் படைகளை சந்தித்து லிபியாவின் இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா ஜலீல் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரி ஆகியோரை சந்தித்தமையும், கிளர்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் லிபியாவின் இடைக்கால கவுன்சிலை மேற்கு நாடுகள் அங்கீகரித்தமையும் இங்கே கவனிக்கத்தக்கது.

லிபியாவை ஆபிரிக்காவின் சுவிட்சர்லாந்து என்பார்கள். ஆபிரிக்காவில் வளம் பொருந்திய மண்ணாகவும் காட்சியளித்த லிபியா இன்று மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறது.

தற்போது லிபியா சுதந்திரமடைந்துள்ளதாகவும் ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றப்படும் எனவும் லிபியாவின் பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார். லிபியாவின் சுதந்திரமும் இஸ்லாமிய சட்டங்களும் எப்படி கட்டியெழுப்பப்படும் என்பதை இனிவரும் காலங்களில்தான் காண முடியும். இன்ஷா அல்லாஹ்.

கடாபியின் சர்வதிகாரம் கண்டனத்திற்குரியது என்பது போலவே கடாபியின் மரணமும் அவரடைய மையத்து (சடலம்) துர்நாற்றம் வீசும் அளவுக்கு வைத்தமையும் கடுமையான கண்டனத்திற்குரியது. கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என குரல் எழுப்பியவர்கள் அவரை கழிவு நீர் குழாயிக்கு வெளியே கொண்டுவந்து கதையை முடித்தது மனிதாபிமானமற்ற செயலாகும்.

2 comments

  1. very good article

  2. very useful article, thanks to islamkalvi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *