Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-27)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-27)

– M.T.M.ஹிஷாம் மதனீ

وما وصف به نفسه في أعظم آية في كتابه حيث يقول :
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
سورة البقرة : 255
ولهذا كان من قرأ هذه الآية في ليلة لم يزل عليه من الله حافظ ولا يقربه شيطان حتى يصبح .

ஆயதுல் குர்ஷியில் அல்லாஹ் பற்றிய வர்ணனை
இதற்கு முன்னர் நாம் பார்த்த தொடரை முதற்கொண்டு அல்லாஹுத்தஆலா பற்றி அல்குர்ஆனில் இடம்பெற்றிருக்கக்கூடிய வர்ணனைகளை ஆரம்பித்து வைத்தோம். அதன் வரிசையில் இத்தொடரில் அல்குர்ஆனில் இடம்பெற்றிருக்கக்கூடிய மகத்துவமிக்க ஒரு வசனம் குறித்துப் பேசவுள்ளோம். அதுதான் அல்லாஹுத்தஆலாவின் குர்ஸி பற்றிப் பேசக்கூடிய ஆயதுல் குர்ஷியாகும்.

அவ்வசனமானது மகத்துவமிக்கது என்பதற்குச் சிறந்த சான்றாக பின்வரும் வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

ஒரு முறை நபியவர்கள் உபை இப்னு கஃப் (ரழி) அவர்களை நோக்கி அல்குர்ஆனில் மகத்துவமிக்க ஒரு வசனத்தைக் குறிப்பிடுமாறு வினவினார்கள். அதற்கு அவர், இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என பதிலளித்தார். இப்படி பல விருத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து அவர் ஆயதுல் குர்ஷி என பதிலளித்தார். அதற்கு நபியவர்கள், அபூ முன்திரே உனது அறிவு உனக்கு வாழ்த்தைத் தெரிவிக்கக்கூடியாதாக இருக்கட்டும்! எனக்கூறி போற்றினார்கள். (முஸ்லிம்)

ஆயதுல் குர்ஷியானது முழுமையாக அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை உறுதிப்படுத்தக்கூடியதாகவும், அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளை விட்டும் தூய்மைப்படுத்தக்கூடியதாகவும் இருப்பதினால் இவ்வசனம் இது விடயத்தில் பிரதானமாகக் கணிக்கப்படுகின்றது. அதன் பொருளாவது:

‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன். நிலைத்திருப்பவன்;. சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார் தான் பாரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரம மன்று அவன் மிக உயர்ந்தவனும் மிக்க மகத்துவமானவனுமாவான்.’ (அல்பகரா: 255)

இவ்வசனத்தில் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளில் எவை அவனுக்குத் தகுந்தன இன்னும் எவை அவனுக்குத் தகாதன என்ற தெளிவு இடம்பெற்றுள்ளது. அந்தவிதத்தில் அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

அல்லாஹ்வுக்கு பூரணத்துவத்தைக் கற்பிக்கும் பண்புகளை உறுதி செய்தல்.

  • அல்லாஹ் மாத்திரமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
  • அவன் என்றென்றும் உயிருடன் நிலைத்திருப்பவன்.
  • வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிப் பொறுப்பு அவனிடமே உள்ளது.
  • அவனிடத்திலே இறந்த காலம் மற்றும் நிகழ்காலம் தொடர்பான பூரண அறிவுள்ளது.
  • அனைத்துப் படைப்பினங்களும் அவன் பால் தேவையுடையனவாக இருக்கின்றன.
  • அவனுக்கொன்று தனியான குர்ஸி இருக்கின்றது. அதன் மூலம் அவன் பூரணமான மகத்துவத்திற்குச் சொந்தக்காரனாக விளங்குகின்றான்.
  • அவன் உயர்வான இஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கின்றான்.

குறிப்பு: இத்தகைய பண்புகளை உறுதிப்படுத்துவதின் மூலம் அல்லாஹ்வுக்கு பூரண பண்புகளைச் சேர்ப்பிக்க முடியும்.

அல்லாஹ்வுக்கு குறை கற்பிக்கும் பண்புகள் நிராகரித்தல்.

  • அல்லாஹ்வுக்கு சிறு தூக்கமோ பெரும் தூக்கமோ ஏற்படாது.
  • அவனது அனுமதியின்றி எவருக்கும் சிபார்சு செய்ய முடியாது.
  • அவனுக்கு இயலாமையும் களைப்பும் இருக்காது.

குறிப்பு: இப்படியான அல்லாஹ்வுக்கு குறை கற்பிக்கும் பண்புகளை நாம் நிராகரிக்காது போனால், அல்லாஹ்வின் தகுதிக்குத் தகாத விதத்தில் அவனை வர்ணித்த குற்றத்திற்குள்ளாவோம். எனவே, இப்பண்புகளில் நிராகரிக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக நிராகரிப்பது எமது பொறுப்பாகும்.

இமாமவர்கள் ஆயதுல் குர்ஷியைக் குறிப்பிட்டுவிட்டு அதன் ஈற்றில் அவ்வாயத்திற்கு இருக்கக்கூடிய சிறப்பு குறித்துப் பேசியுள்ளார்கள். அதாவது ஆயதுல் குர்ஷியை இரவு நேரத்தில் ஓதக்கூடிய ஒருவருக்கு காலை வரை ஷைத்தானில் இருந்தும் பாதுகாப்பளிக்க ஒரு வானவர் நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்கள். இச்செய்தியானது நபியவர்களின் பொன்மொழிகளில் உறுதி செய்யப்பட்ட விடயமாகும். (பார்க்க: புகாரி, இப்னு ஹுஸைமா, அஸ்ஸூனனுல் குப்றா லின் நஸாயி) எனவே, அதன் சிறப்பை உணர்ந்து ஆவன செய்ய எல்லாம் வல்ல நாயன் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *