Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
உலக வரலாறு பல்வேறுபட்ட புரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி(ச) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி 14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்பதைக் காணலாம்.

அவர்கள் ஏற்படுத்திய அந்த மகத்தான புரட்சி குறித்து சில விடயங்களை மிகச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டலாம் என எண்ணுகின்றேன்.

உலகம் பல்வேறுபட்ட ஆன்மீகப் போதகர்களைக் கண்டு வருகின்றது. அவர்களில் அனேகர் மக்களின் பக்தியையும் மடமையையும் மூலதனமாக்கி மக்களைச் சுரண்டி வாழ்வதைக் காணலாம். நபி(ச) அவர்கள் ஒரு மாபெரும் ஆன்மீக வாதியாக இருந்த அதேநேரம், தன்னைச் சாதாரண ஒரு மனிதனாகவே அறிமுகப் படுத்தினார்கள்.

‘நானும் உங்களைப் போன்ற மனிதன்தான்’ என்று கூறியது மட்டுமன்றி தனது காலில் பிறர் விழவோ, தனக்காக குருவணக்கம் செய்யவோ அவர் இடம் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் தனது வருகைக்காகப் பிறர் எழுந்திருப்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள்.

ஏனைய ஆன்மீக வாதிகள் தாம் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் பெற்றோர், மறைவானவற்றை அறிந்தோர் என்றெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்ள மக்கள் மன்றத்தில் சில செட்டப்புக்களைச் செய்து கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால், ‘எனக்கு மறைவான அறிவில்லை! நான் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் அற்றவன்’ என்று கூறிக்கொண்டே மாபெரும் ஆன்மீகப் புரட்சியை நபி(ச) அவர்கள் தோற்றுவித்தார்கள்.

கல்லையும் மண்ணையும் மரத்தையும் கொடியையும் கடவுளாகக் கருதி வழிப்பட்டு வந்த மக்களிடம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். தன்னைப் படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எதற்கும் தலைவணங்காத தன்மானத் தலைவர்களாக அவர்களை மாற்றினார்கள். கடந்த நூற்றாண்டுகளில் கூட மாபெரும் அரசியல் பலத்துடன் சிலைவணக்கத்தை எதிர்த்தவர்கள் எண்ணிக்கூட பார்க்க முடியாதளவு புரட்சியை அந்த மக்கத்து மண்ணில் நபி(ச) அவர்கள் அன்று நிகழ்த்திக் காட்டினார்கள்.

உலக இச்சைகளில் ஊறித்திளைத் தவர்களை, இரவில் விழித்திருந்து வணங்குவதிலும், அல்குர்ஆனை அனுதினமும் ஓதுவதிலும், வணக்க வழிபாடுகளிலும், திக்ர் செய்வதிலும் இன்பத்தையும் அமைதியையும் பெறக்கூடிய மனித மாணிக்கங்களாகவும் மாற்றினார்கள்.

நபி(ச) அவர்கள் ஆன்மீகத்துறையில் மட்டுமன்றி சமூகவியலிலும் மாபெரும் புரட்சியைத் தோற்றுவித்தார்கள். அறிவியலிலும், நாகரிகத்திலும் விண்ணை முட்டும் அளவு முன்னேறிவிட்டோம் என்று முழங்கும் பல்வேறு நாடுகளிலும் சமுகங்களிலும் இன, நிற, மொழி வேறுபாடுகள் தலைவிரித்துத் தாண்டவ மாடுவதைக் காணலாம்.

சில மேலைத்தேய நாடுகளில் கறுப்பு இனத்தவர் வெறுப்புடனேயே நோக்கப் படுகின்றனர். இன்னும் சில பகுதிகளில் மொழி வேற்றுமை வேரோடிப் போயிருப்பதைக் காணலாம். மொழி வேறுபாடுகளை அடிப் படையாகக் கொண்ட போராட்டங்கள் பலகூட நடந்துள்ளன, நடக்கின்றன.

இன்னும் சில நாடுகளில் சாதி வேறுபாடு தலைவிரித்தாடுவதைக் காணலாம். தாழ்த்தப்பட்ட சாதியினர் எனக் கூறப்படும் மக்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்படுவதையும் மலசலத்தை உண்ணுமாறு கூட துன்புறுத்தப்படும் கொடூரமும் நடந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய பல்வேறு வேறுபாடுகள் நிறைந்திருந்த அன்றைய அரேபிய சமூகத்தை சமத்துவ சகோதரத்துவ சமூகமாக நபி(ச) அவர்கள் மாற்றியது மாபெரும் புரட்சியாகும்.

அரபிகள் மிகப்பெரும் மொழி வெறியர்களாக இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் வேற்றுமொழி பேசியோர் சமமாக நடத்தப்பட்டனர். கறுப்பரான, அடிமையாக இருந்த பிலால்(ர) அவர்களை உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட இஸ்லாமிய கிலாபத்தின் இரண்டாம் பேரரசர் உமரை பிலால் எங்கள் தலைவராவார் என அழைக்கவைத்தது நபி(ச) அவர்களின் மாபெரும் புரட்சியாகும்.

நபி(ச) அவர்கள் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையரில் இருந்து வந்தோர் என்று பிரகடனப்படுத்தினார்கள். மனிதர்களுக்கு மத்தியில் உடலமைப்பிலும்; நிறத்திலும் வேறுபாடு இருப்பது ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காகவே என்பதைத் தெளிவு படுத்தினார்கள்.

‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்து, நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணி யத்திற்குரியவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்ளூ நுட்பமானவன்.’ (அல்குர்ஆன்: 49:13)

வெறும் வாய்ப் பேச்சில் மட்டுமன்றி அன்றாட நடைமுறையிலும் இக்கொள்கையைக் கொண்டுவந்து அவர்கள் சாதனை நிகழ்த் தினார்கள். அன்று அவர்கள் தனிமனிதனாக நின்று நிகழ்த்திய இந்த சாதனையை இன்று ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் நிகழ்த்த முடியாது பல நாடுகள் விழி பிதிங்கிக் கொண்டிருப்பதே நபி(ச) அவாகள் ஏற்படுத்திய புரட்சியின் மகத்துவத்தைப் புரியவைக்கப் போதிய சான்றாகும்.

அரபிகள் இரக்கமற்ற அரக்க குணம் கொண்டோராக அறியாமைக் காலத்தில் வாழ்ந்தனர். கல்நெஞ்சம் படைத்த, கறடுமுறடான சுபாவம் கொண்ட அவர்களின் இதயங்களையும் இழகச் செய்து ஈரமுள்ள இதயங்களில் அவர்களை இமயங்களாக மாற்றியதும். நபி(ச) அவர்கள், நிகழ்த்திய மற்றுமொரு புரட்சி எனலாம். சாதாரணப் பிரச்சினைகளுக்காக 70 வருடங்கள் அளவில் பரம்பரை பரம்பரையாக யுத்தம் செய்து இரத்தத்தில் குளித்து வந்த அவர்கள், எதையும் தாங்கும் இதய முடை யவர்களாக, தன்னை அடித்த, தன் பொருளை அபகரித்த தன் உறவினரைக் கொண்டவர்களை யெல்லாம் ஏசாமல் பேசாமல் எதுவும் செய்யாமல் மன்னித்தனர். மக்கா வெற்றியின் போது அனைத்துக் காபிர்களுக்கும் நபி(ச) அவர்கள் பொது மன்னிப்பு அளித்தார்கள். அதனை அனைத்துச் ஸஹாபாக்களும் அங்கீகரித்தார்கள். நாட்டைவிட்டும் விரட்டப் பட்டோர் ஆயுத பலத்துடன் இரத்தம் சிந்தாது நாட்டைக் கைப்பற்றிய போதிலும் மக்காவில் எந்த வீடும் சேதப்படுத்தப்படவில்லை யாருடைய பொருளும் சூறையாடப்படவில்லை. ஆணோ பெண்ணோ எவரும் மானபங்கப் படுத்தப்படவுமில்லை. எவரும் அச்சுறுத்தப்படவில்லை. இத்தகையதொரு மாற்றத்தை ஜனநாயக நாடுகளில் யுத்தத்தின் பின் அல்ல வெறும் தேர்தலின் போது கூட காணமுடியாது என்பது நிதர்சனமாக இருக்கும் போது நபி(ச) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி மகத்தானது என்பதை மறுக்கமுடியாது.

அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் முன்னேறியுள்ள பல நாடுகளிலும் சமூகங் களிலும் கூட மூடநம்பிக்கைகள் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். அறியாமைக்கால மக்களிடம் குடிகொண்டிருந்த அத்தனை மூட நம்பிக்கைகளையும் மூட்டை கட்டி குழிதோண்டிப் புதைத்தது நபி(ச) அவர்களது புரட்சி. பேய், பிசாசு, தாயத்து அட்சரம், சகுணம், மந்திரம், மாயம் போன்ற அனைத்து மூட நம்பிக்கைக்கும் நபி(ச) அவர்கள்தான் முடிவு கட்டியுள்ளார்கள். அறிவியல் உலகத்தில் கூட இவற்றை நிறைவேற்ற முடியாது எனும் போது அறியாமை உலகில் இதை ஒழித்துக்கட்டிய நபி(ச) அவர்களது புரட்சியைப் புகழாது இருக்க முடியுமா?

ஒழுக்கவியல் துறையில் ஒப்பற்ற புரட்சியை பூமான் நபி பூமி முழுவதும் ஏற்படுத்தினார்கள். ஒழுக்கசீர்கேட்டில் ஊறித் திளைத்தவர்களை உலத்திற்கே உதாரணப் புருஷர்களாக மாற்றினார்கள். காலை மாலை என்ற வேறுபாடின்றி மதுவிலும், மாதிலும் மதிமயங்கி மனித மிருகங்களாக வாழ்ந்த வர்களை மனிதப்புனிதர்களாக மாற்றினார்கள்.

இன்றைய உலக நாடுகளெல்லாம் பல்கோடி டொலர்களைக் கொட்டியும் கொடிய போதைப் பொருள் பாவனையின் கொட்டம் தீர்ந்தபாடில்லையென்றிருக்கும் போது, நபி(ச) அவர்கள் நிகழ்த்திய மது ஒழிப்பு நடவடிக்கை யைச் சற்று எண்ணிப்பாருங்கள். மது தடுக்கப் பட்டுவிட்டது என்ற செய்தியை ஏந்திக் கொண்டு, ஒருவர் வருகிறார். நபித் தோழர்கள் மது அருந்திக் கொண்டிருக்கின்றனர். செய்தி கிடைத்தவுடன் வாயில் ஊற்றியதைக் கூட உமிழ்ந்து விட்டு குவளையையும் மதுப் பாத்திரங்கள் சட்டிகளையும் உடனே தாமே உடைத்தனர். இதனால் மதீனா வீதியெங்கும் மது ஆறு ஓடியது என்று வரலாறு சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படியான மாற்றத்தை வரலாற்றில் யாரும் ஏற்படுத்தியதில்லை. நபிவழி நடந்தாலேயன்றி ஏற்படுத்தவும் முடியாது.

அன்றைய சமூகத்தில் மட்டுமன்றி இன்றும்கூட பெண் வித்தியாசமாகவே நோக்கப் படுகிறாள். பெண் சிசுக் கொலைகள் தொடர் கதையாகத்தான் இருக்கின்றன. பல பெண் சிசுக்களுக்கு கருவறையே கல்லறையாக மாறுகின்றது. அரேபிய சமூகத்தில் பெண் குழந்தையை உயிருடன் புதைக்கும் மிருகத்தனம் காணப்பட்ட சமூகத்தை எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இல்லையே என்று ஏங்கும் அளவுக்கு மாற்றியது மாநபியின் மகத்தான புரட்சியாகும்.

பெண் கல்வி, பெண் சொத்துடமை, வாரிசுரிமை விவாகரத்துரிமை விரும்பிய துணையைத் தெரிவு செய்;தல் போன்ற பல் வேறு உரிமைகளைப் பெண்கள் போராட்டம் நடத்தாமலேயே கேட்காமலேயே சட்டரீதியாக சமூகத்தில் நடைமுறைப்படுத்தி, பெண்ணின் பெருமை காத்தது பெருமான் நபியின் மகத்தான புரட்சி. நபி(ச) அவர்கள் அரேபியாவில் பிரசாரத்தை ஆரம்பித்த காலம் அகில உலகும் அறியாமையில் மூழ்கிய காலமாகும். இந்த அறியாமை இருளகற்றும் அறிவியல் தீபங்களாக நபி(ச) அவர்களின் புரட்சி திகழ்ந்தது.

எழுத வாசிக்கத் தெரியாத ஒருவரால் எழுத்தறிவில்லா சமுகத்தில் அடித்தளமிடப்பட்ட புரட்சி வித்துக்கள்தான் இன்று விருட்சமாக வளர்ந்திருக்கும் விஞ்ஞானத்திற்கே அடிப்படை என்பதை நடுநிலை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய உலகு இருளில் மூழ்யிருந்தபோது அறிவியல் தீபத்தை அகிலமெல்லாம் ஏந்திச் சென்றவர்கள் இந்த புரட்சியில் பூத்த புது மலர்களேயாவார்கள்.

இத்தகைய மகத்தான மாற்றங்களை நபி(ச) அவர்கள் மந்திரத்தாலோ தந்திரத்தாலோ நிகழ்த்திவிடவில்லை. பல்வேறுபட்ட சமுதாயச் சடங்குகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்தே இந்த சாதனைகளை அவர்களால் நிகிழ்த்த முடிந்தது. இது நீரூற்றி வளர்க்கப்பட்ட விருட்சமல்ல. பல்லாயிரம் மக்களின் உயிர்களும், உடல் உறுப்புக்களும் உதிரமும் உரமாகப் பாய்ச்சப்பட்டு வளர்க்கப்பட்ட புரட்சியாகும்.

இந்தப் புரட்சியின் மகத்தான வெற்றியை அவர்கள் பெற அல்லாஹ்வின் உதவியும் அருளும் அவர்களுக்குக் குறை வின்றிக் கிடைத்தன.

மீண்டும் ஒரு புரட்சியோ சமூகமாற்றமோ இதன் மூலம்தான் ஏற்படுத்த முடியும்.

நபி(ச)அவர்களின் போதனைகள் இன்னும் வீரியத்துடனேயே இருக்கின்றன. சமூகத்தைப் புடம்போட அது ஒன்றே வழியாகவும் இருக்கின்றது.

நபி(ச) அவர்கள் தோற்றுவித்த இந்த புரட்சி நிச்சயம் உலகை ஆளும் சகல புரட்சிகளையும் புறம் தள்ளிவிட்டு அது அரசாளும். அது வரை இந்த உலகு அழியாது. என்பது மட்டும் திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *