Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஏகத்துவ அமைப்புக்களுக்கு ஏன் இந்த இழிநிலை?

ஏகத்துவ அமைப்புக்களுக்கு ஏன் இந்த இழிநிலை?

– முஹம்மது நியாஸ்
அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழிகாட்டுதல்களும் மாத்திரமே புனித இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் என்ற கொள்கைக் கோட்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட ஏகத்துவப் பிரச்சார இயக்கங்கள் இன்று அந்த நோக்கங்கள், இலட்சியங்களை மறந்து தங்களின் கொள்கைகளை, கருத்துக்களை நிலைநாட்டுவதற்காக வன்முறைகளை, வசைபாடல்களையும் கையில் எடுத்திருப்பது மிகவும் வேதனையான ஓர் விடயமாகும்.

அந்தவகையில் தற்போது ஏகத்துவ சமூகத்திற்குள் ஓர் சாபக்கேடாக உருவெடுத்துள்ள விடயம்தான் ஒருவருக்கொருவர் வசைபாடிக்கொள்வதும், ஏனைய அமைப்பைச் சார்ந்தவர்களின் பிரச்சாரத்திற்குத் தடைக்கற்களாக நிற்பதுமாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடுகள் என்பவை இக்காலத்திற்கு மாத்திரம் உரிய ஒன்றல்ல. கருத்து வேறுபாடுகள் என்பவை நபிகளார் மரணித்த அடுத்த கணமே உருவாகிவிட்ட ஒன்று. அது சஹாபாக்கள் காலம் தொடக்கம் இமாம்கள் காலத்தைத் தாண்டி சமகாலத்திலும் காணப்படுகின்ற ஒரு விடயமாகும். ஆனால் இக்கருத்து வேறுபாடுகளுக்காக எந்தவொரு இமாமோ, நபித்தோழரோ சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வுகளையோ, வசைபாடிக்கொண்ட வரலாறுகளையோ நாம் காணமுடியாது.

ஆனால் இன்று நபிகளாரின் வழிகாட்டுதல்களில் பிரச்சாரம் புரிகிறோம் என்று மேடைகள் தோறும் முழங்குகின்ற அழைப்பாளர்கள், தங்களின் கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துடைய அமைப்பினரை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்ற அழைப்பாளர்கள் ஏனைய அமைப்பினர்கள் தங்களின் கருத்தில் மாற்று நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, அவர்களின் கருத்துக்களை விமர்சிப்பதற்குப் பதிலாக அந்நபர்களின், உலமாக்களின் தனிப்பட்ட விவகாரங்களை சந்திக்கு இழுப்பதும், அவர்களின் குடும்ப உறவுகளைக் கூடக் கொச்சைப்படுத்துவதும் இன்று ஏகத்துவப் பிரச்சார மேடைகள் தோறும் நடைபெறக்கூடிய ஓர் சாதாரண நிகழ்வாகவே மாறிவிட்டது.

இதற்கு ஓர் உதாரணமாக கீழ்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன். ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெறக்கூடிய ஸாலிம் (ரழி) அவர்கள் தொடர்பு படுகின்ற வளர்ப்பு மகனுக்குப் பாலூட்டும்படி நபிகளார் கட்டளையிட்ட ஓர் நீண்ட ஹதீஸ். இந்த ஹதீஸை ஸஹீஹானது, ஏற்றுக்கொள்ளவேண்டியது என ஓர் மார்க்க அறிஞர் பிரச்சாரம் செய்கிறார். அவருடைய அக்கருத்தை முறியடிப்பதற்காக நமது நாட்டிலுள்ள ஓர் பிரபல ஜமாத்தின் பிரச்சாரகர் ஒருவர் அம்மார்க்க அறிஞருடைய சகோதரியைக் கொச்சைப்படுத்தி தனது வாதத்திற்கு வலுச்சேர்க்க முற்படுகிறார்.

நபிவழியை மாத்திரமே போதிக்கிறோம் என கொள்கை(?) பேசுகின்ற இப்பிரச்சரகர்கள் மேற்குறித்த விடயத்திற்கு எந்த நபிமொழியை ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள்? அகீதாவில் மாற்றுக்கருத்துள்ள யூதர்களைக் கூட நபிகளார் இவ்வாறு விமர்சனம் செய்ததாக, வசைபாடியதாக வரலாறுகள் இல்லை. அவ்வாறிருக்க மஸாயில் தொடர்பிலுள்ள விடயத்திற்கு ஓர் மார்க்க அறிஞரின் குடும்பப் பெண்களின் மானத்தைக் கூட சந்தி சிரிக்க வைப்பது எந்தவகையில் நியாயம்? இது எந்தவகையில் நபிவழிப் பிரச்சாரத்தில் அடங்கப்போகிறது? குறிப்பாக அப்பிரபல ஜமாத்திலுள்ள ‘முன்மாதிரிமிக்க அழைப்பாளர்கள்’ என தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டுள்ள சிலர் இந்த வழிமுறையை தங்களின் பிரச்சாரங்களுக்காக நடைமுறைப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையல்ல.

அதேபோன்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் பெண்கள் மஹ்ரமான ஆண் துணையின்றிக் கலந்து கொள்வது தவறு எனக்கூறி மக்கா பள்ளிவாயிலின் இமாம் மௌலானா சம்சுதீன் (காசிமி) ஓர் கருத்தை முன்வைத்தார். இக்கருத்து சம்சுதீன் (காசிமி) யின் தனிப்பட்ட கருத்தல்ல. இவ்விடயம் ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெறக்கூடிய பல நபிமொழிகளின் ஆதாரத்தோடு பலநூற்றுக்கணக்கான உலமாக்களாலும் சரிகாணப்பட்ட ஓர் மஸாயிலாகும். இதை குறித்த அவ்வறிஞர் கூறிவிட்டார் என்பதற்காக வன்முறையை தூண்டும் வகையில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் ஒருவரால் தொலைக்காட்சியில் பேட்டியளிக்கப்படுகிறது. அதன் விளைவாக அந்த ஜமாஅத்திலுள்ள பெண் உறுப்பினர்கள் சம்சுதீன் (காசிமி) யின் வீட்டிற்குச் சென்று அங்கே அவருடைய படத்திற்கு செருப்பால், மாட்டுச்சாணியால் அடித்து அவரையும், குடும்பத்தினரையும் பல இழிசொற்களால் அநாகரிகமான முறையில் அவருடைய ஒன்பது மாதப் பேரக்குழந்தை முன்னிலையில் வசைபாடியதும் அண்மையில் நடைபெற்ற ஓர் நிகழ்வாகும்.

அதேபோன்று கடந்த வாரம் இலங்கையில் சம்மாந்துறை நகரில் மூன்று உலமாக்கள் கலந்துகொண்டு பொலிசாரின் அனுமதியோடு நடாத்திய இஸ்லாமிய மாநாட்டில் ஓர் ஏகத்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் உள்நுழைந்து கூச்சலிட்டு குழப்ப முற்பட்டதையடுத்து அவர்களில் இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம், மற்றும் சாய்ந்தமருதில் நடைபெற்ற மார்க்கப்பிரச்சார நிகழ்வொன்றில் இதே ஏகத்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் குழப்ப முயற்சித்து அடிதடியில் தொடங்கி இறுதியில் பொலிஸ் நிலையம் வரைக்கும் சென்று ஒட்டுமொத்த சமுதாயத்தின் கண்ணியமும் சந்திசிரித்த சம்பவங்கள் பலவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடமுடியும்.

இச்சம்பவங்கள் அனைத்திலும் நாம் ஒரேயொரு விடயத்தை அவதானிக்கலாம். அதாவது கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக கேவலமான, காடைத்தனத்தின் மூலம் பதிலடி கொடுக்கின்ற ஓர் ஆரோக்கியமற்ற போக்கே இச்சம்பவங்களிலிருந்து நம்மால் அவதானிக்க முடிகிறது.

யாருடைய வழிமுறை?
கடந்த காலங்களில் இந்த ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற வேளையில் ஏகத்துவத்தின் எதிர்த்தரப்புக்களான ஷூபிச வாதிகள், தப்லீக் அமைப்பினர்கள், இஹ்வான்கல், ஜமாஅதே இஸ்லாமி இன்னும் இதுபோன்ற இஸ்லாத்தின் அடிப்படையை அறியாத சில அமைப்புக்களால் தௌஹீத்வாதிகள் மீது உச்ச பட்ச வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு அதன் வடுக்கள் இன்றுவரைக்கும் அழியாமல் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றேயாகும். அதற்கு சமகால சான்றுகளாக பேருவளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயிலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், மதம்பையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினருக்கெதிரான ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் கீழ்த்தரமான செயற்பாடுகள் போன்றவற்றைக் குறிப்பிடமுடியும். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்குத் திராணியற்ற, பிற்போக்குத்தனமான கொள்கைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கடும் போக்குவாத அமைப்புக்கள் கடந்த காலங்களில் ஏகத்துவவாதிகள் மீது மேற்கொண்டுவந்த கேவலமான செயற்பாடுகளே இவைகளாகும். இன்னும் இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அதிகமான சகோதரர்கள் நம்மத்தியில் வாழ்ந்துவருவதும் நாமறிந்ததே.

ஆனால் இதில் மனவேதனையான விடயம் என்வென்றால் அல்லாஹ்வின் வேதமும் நபிகளாரின் வழிகாட்டுதல்களும் மாத்திரமே நமது வழிமுறை எனக்கூறிக்கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கிய அமைப்புக்களே இன்று ஷூஃபிகளையும், தப்லீக்வாதிகளையும் விடக்கேவலமான முறையில் நடந்துகொள்வதும் இதனால் முன்மாதிரிமிக்க இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் அழைப்பாளர்கள் இன்று பொலிஸ் நிலையங்கள் தோறும் அலைந்து திரிவதும் முற்போக்கு சிந்தனை என அமைப்பு ஆரம்பித்த அந்த அழைப்பாளர்களுக்கு மாற்றுமத அதிகாரிகளால் ஒற்றுமை குறித்த பிரத்தியேக வகுப்பெடுக்கப்படுவதும் ஒட்டுமொத்த பிரச்சாரப் பணியிலுள்ள அனைவருக்குமே இழுக்கை ஏற்படுத்துகின்ற ஓர் செயற்பாடாகும்.

அதிலும் குறிப்பாக தமிநாடு தௌஹீத் ஜமாத்தைப் பொறுத்த வரையில் அவர்கள் ஏனைய அமைப்பினரை விடவும் மேலும் ஓர் படி ஏறிச்சென்று மாற்றுமதத்தவர்களுக்கும் ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்’ என்னும் பிரச்சாரப் பணியின் மூலம் இஸ்லாத்தைப் பற்றிய நல்லெண்ணங்களை அவர்கள் மனதில் விதைக்க முற்படுபவர்கள். ஆனால் அந்த அமைப்பினரே மாற்றுக்கருத்துள்ள உலமாக்களின் கருத்துக்களை அறிவார்ந்த ரீதியாக அணுகுவதை விடுத்து இவாறான கீழ்த்தரமான செயற்பாடுகளின் மூலம் அணுகுவதனால் மென்மேலும் இஸ்லாத்தின் மீதான சேறு பூசல்களுக்கு நாமே வழிவகுக்கிறோம் என்பதை ஏனோ அவர்கள் சிந்திக்கத்தவறி விடுகின்றனர்.

ஏகத்துவ வாதிகள் எனக்கூறிக்கொண்டே சில பிற்போக்குவாதிகளும் அவர்களைச் சார்ந்துள்ள அமைப்புக்களும் மேற்கொள்கின்ற இவ்வாறான கீழ்த்தரமான இரண்டாந்தர செயற்பாடுகளின் மூலம் பழங்கால மௌட்டீக சிந்தனையில் சிக்கித்தவிக்கின்ற ஒருவர் ஏகத்துவக்கொள்கையினை விளங்கி அதை ஏற்றுநடக்க எத்தனிக்கின்றபோது அவர் வந்த பாதையிலேயே திரும்பிச் செல்லவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

ஆரம்ப காலங்களில் ஏகத்துவவாதிகளை நோக்கி கப்ர் வணங்கிகள் மற்றும் இன்னோரன்ன கொள்கையற்ற அமைப்புக்கள் பலவும் எவ்வாறான விமர்சனங்களையும் அவதூறுகளையும் பரப்பி செயற்பட்டனவோ அதற்கு சற்றேனும் பிசகாமல் இன்று தௌஹீத் சமூகம் எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்ற ஓர் பிரிவினர் மாற்றுகருத்துள்ள உலமாக்கள், தனிநபர்கள், அமைப்புக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது இவ் ஏகத்துவக் கொள்கையின் எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றி சற்று சிந்திக்கின்ற கடமைப்பாட்டை உணர்த்தியுள்ளது.

அதுமாத்திரமல்லாது இலங்கை நாட்டில் தற்போது வேர்விட்டு விழுதுகள் இறங்கத் துவங்கியுள்ள இனவாத அமைப்புக்கள் குறிப்பாக ஏகத்துவத்தைப் போதிக்கின்ற அமைப்புக்களையே குறிவைத்து தங்களின் சதித்திட்டங்களைத் தீட்டிக்கொண்டு வருகின்றன. ஆனால் நமது ஏகத்துவ அமைப்பினர்களோ, அதுபற்றியோ, எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்புக்கள் பற்றியோ அணுவளவும் அலட்டிக்கொள்ளாது தங்களின் கொள்கையினை நிலை நாட்டுவதற்காக தங்களின் உச்சபட்ச வன்முறையினைக் கையாள்கின்றபோது அவ்வினவாதிகளும் நம்மை தீவிரவாத சிந்தனை கொண்டவர்களாகவும் இந்நாட்டில் குழப்பங்கள் விளைவித்து சமாதானத்தை சீர்குலைக்கின்ற குழப்பவாதிகளாகவும் சித்தரிக்கின்ற காட்சிகளையும் நாம் காண்கிறோம். இஸ்லாம் ஓர் அமைதியான மார்க்கம் என்றும் அது சமாதானத்தை விரும்புகின்ற சமயம் என்றும் அடுத்தவர்களுக்குப் போதிக்கின்ற அமைப்புக்களே இன்று இனவாதிகளின் வாய்க்குத் தீனி இடுகின்ற படுபாதகச் செயல்களைக் கட்டவிழ்த்துவிடுவது ஓர் சமூகவிரோத செயற்பாடாகவே கருதப்படவேண்டிய ஒன்றாகும்.

இஸ்லாம் ஏக இறைவனின் மார்க்கம்
பொதுவாக இஸ்லாம் என்பது இன்றைய காலகட்டத்தை விடவும் அய்யாமுல் ஜாஹிலிய்யா எனப்படுகின்ற மிகவும் கரடுமுரடான காலகட்டத்தைத் தாண்டியே இன்று நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. அதற்கும் மேலாக முந்தைய நபிமார்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை தங்களின் அடுத்த தலைமுறைக்கு தூய்மையான வடிவில் விட்டுச் செல்லவேண்டும் என்பதற்காக பட்ட துன்பங்கள், அனுபவித்த கொடுமைகள் எழுத்தில் வடிக்கமுடியாதவைகள். இருந்தபோதிலும் அவர்கள் யாருமே எதிரிகளால் துன்பங்களுக்குள்ளாகும் போதும் சரி கொடுமைகளுக்கு உட்படுத்தபோதும் சரி பொறுமை என்னும் கேடயத்தையே தாங்கிப்பிடித்தார்கள் என்பதும் எச்சந்தர்ப்பத்திலும் தங்களின் கொள்கைக்கு இழுக்கை ஏற்படுத்துகின்ற விதத்தில் இழி சொற்களையோ, ஏனையோர் மீதான வசைபாடல்கள், வன்முறைகளையோ மேற்கொள்ளவில்லை என்பதும் நாமெல்லாம் அறிந்து வைத்துள்ள விடயங்களாகும்.

இதனையே அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்,

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.(03:159)

ஆக, நபிகளாரின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மீது குறைஷியர்களால் எவ்வளவோ அழுத்தங்களும் ஆக்கிரமிப்புக்களும் நிகழ்ந்தபோதும் அல்லாஹ் தனது தூதரிடம் மிகவும் நளினமான நடைமுறையை கடைப்பிடிக்குமாறு ஏவல் விடுக்கிறான். ஏனெனில் இந்த இஸ்லாமிய மார்க்கம் என்பது யாருடைய ஏகபோக சொத்தும் கிடையாது. நபிகளாருக்கே இந்த மார்க்கத்தில் மாற்றங்களையோ, கையாடல்களையோ செய்வதற்கு இறைவன் அதிகாரம் வழங்கவில்லை. மாறாக இது அல்லாஹ்வினுடைய மார்க்கம். இம்மார்க்கத்தில் ஓர் விடயத்தை எடுத்து ஏவுவதும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் மாத்திரமே அடியார்களான நம்மீதுள்ள பொறுப்பாகும். யாரும் இதைப் புறக்கணிக்கிறார்கள் என்பதற்காக அவர்களை திட்டுவதோ, வசைபாடுவதோ பாவத்தின் பால் இட்டுச் செல்லக்கூடிய ஓர் செயற்பாடு என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இந்த மார்க்கத்தில் அல்லாஹ்வோ அவனது தூதரோ ஏவிய, வலியுறுத்திய ஓர் விடயத்தை நாம் முன்வைப்பதாக இருந்தால் அதற்கென்று ஓர் வழிமுறை உள்ளது. அந்த வழியைத் தவிர வேறு எவ்வாறான முறையினைக் கையாள்வதற்கும் பிரச்சாரகர்களான யாருக்கும் அல்லாஹ் அனுமதியளிக்கவில்லை. மார்க்கத்தை நடைமுறைப்படுத்துவதென்பது ஒரு முஸ்லிம் தனது மறுமை வாழ்வுக்கான இவ்வுலக முன்னேற்பாடே அன்றி வேறில்லை. ஆனால் ஒரு அழைப்பாளருக்கு உரிய பொறுப்பு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது மாத்திரமே. இஸ்லாத்திலுள்ள எந்தவொரு கோட்பாடையும் யாருக்கும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் இடமில்லை. எல்லாம் வல்ல இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் – நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக.(50:45)

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; (02:256)

ஆக, மேலுள்ள இறைவசனங்களின் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்திக்கப் பட்டவைகள் என எதுவும் கிடையாது என்பதும், யார் இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு அடி பணிகிறார்களோ அவர்கள் அதற்குரிய நன்மையினை மறுமையில் பெற்றுக்கொள்வார்கள். மறுத்தால் அதற்குரிய தண்டனையையும் பெற்றுக்கொள்வார்கள் என்பது தெளிவாகிறது. நம்மால் முடிந்தவரையில் நளினமான முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர அபாசமான, அருவருப்பான, ஒருவருடைய தனிப்பட்ட மானத்தை கொச்சைப்படுத்துகின்ற வகையிலான கருத்துக்களை கூறுவது இறையச்சமுள்ள ஓர் அழைப்பாளருக்கு உகந்ததல்ல.

சில வேளைகளில் ஏகத்துவப்பிரச்சாரம் செய்கின்ற அமைப்பினரை நோக்கி தேவையற்ற எதிப்பலைகள் தோன்றுவதற்கு நளினமற்ற, ஆபாசமான வார்த்தைகளுடன் கூடிய, இங்கிதமற்ற பிரச்சார முறையும் ஓர் காரணியாக அமைந்துவிடுகின்றது. நமது பிரச்சார முறையில் ஓர் நளினப்போக்கிருந்தாலே பாமரமக்களும் அதன்பால் கவரப்படுவர். மாறாக நாம் பிரயோகிக்கின்ற வார்த்தைகளில் கடினமோ, காரமான சொற்பிரயோகங்களோ, மாற்றுக்கருத்துள்ளவர் மீதான வசைபாடல்களோ இருக்குமிடத்தில் தேவையற்ற எதிர்ப்புக்களை வீணாக தேடிக்கொள்ளவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். அதற்காக கொள்கைகளில் வளைந்துகொடுக்க வேண்டியதில்லை. நபிகளார் (ஸல்) அவர்கள் நளினமிக்க தஃவா முறையையே கடைப்பிடித்தார்கள். ஆனால் அவர்கள் எந்தவொரு கருத்துக்களுக்கும் வளைந்து கொடுக்கவில்லை. வளைந்துகொடுப்பதென்பது வேறு, வசைபாடுவதென்பது வேறு. ஆக மொத்தத்தில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய அல்லாஹ் நமக்களித்த அறிவை ஏனைய மக்களிடத்தில் நாகரீகமான வார்த்தைகளின் மூலம் கொண்டு செல்வதே தஃவா பணியின் முன்னேற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.

ஒருவர் அல்லது ஓர் அமைப்பு மாற்றுக்கருத்துக்களில் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்றால் அவர்களை அணுகி அழகிய வார்த்தைகளால் உபதேசம் செய்ய வேண்டும், மறுத்தால் இறைவனின் வார்த்தைகளைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கைகள் செய்ய வேண்டும். அதற்கும் மறுத்து நம்மீது பொய்யான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டால் அதற்கான சான்றுகளைக் கொண்டுவரும்படி ஏவுவதற்கும் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. அதையே அல்லாஹுத்தஆலா இவ்வாறு கூறுகிறான்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.(16:125)

ஆனால் அவர்கள் விவாதத்திற்கு வரவில்லை என்பதற்காகவோ சான்றுகளை முன்வைக்கவில்லை என்பதற்காகவோ நம் அவர்களின் மானத்தில் கைவைக்கமுடியாது. பொய்யர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். பிரச்சாரத்தை மட்டுமே நாம் மேற்கொள்ளவேண்டும். சமூகத்தின் விழிப்புணர்வு கருதி நாம் விமர்சிக்கின்ற விமர்சனங்கள் நாளை நமது மண்ணறை வாழ்விற்கு உதவி புரியுமா அல்லது நம்மை நரகப்படுகுழியில் தள்ளிவிடுமா என்பதை நாம் அனைவரும் ஒரு கணம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஒருவர் தாம் கூறுகின்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக மறுத்தால்கூட அவர்மீது கோபம் கொள்வதற்கோ ஆத்திரப்பட்டு அவரது மானத்தில் கைவைப்பதற்கோ ஒரு அழைப்பாளருக்கு எதுவித அதிகாரத்தையும் அல்லாஹ் வழங்கவில்லை. இஸ்லாமிய மார்க்கப்பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க பொறுமையைக் கடைப்பிடிப்பதிலேயே தங்கியுள்ளது.

இன்று நமது சமூகத்திலுள்ள மாற்றுக்கருத்துள்ளவர்கள் மீது நாம் இவ்வாறான அத்துமீறல்களை மேற்கொள்கிறோம் என்றால் நபிகளாரின் காலத்தில் நபிகளார் காட்டிய அற்புதங்களைக் கூட கண்ணால் பார்த்துவிட்டு நபிகளாரை சூனியக்காரன் அல்லது சூனிய வயப்பட்டவன் எனக்கூறிய சமுதாயம் அக்காலத்தில் வாழ்ந்த சமூகம். ஆனால் நபிகளார் அதைக்கூடப் பொறுமையுடன் தாங்கிக்கொண்டார்கள். அதற்கு முன்வாழ்ந்த எத்தனையோ நபிமார்களை அந்தந்த சமுதாயத்தவர்கள் கொலை செய்த, சித்திரவதைகளுக்குட்படுத்திய சம்பவங்களைக் கூட அல் குர்ஆன் நமக்குக் கற்றுத்தருகிறது.

“நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!(03:21.)

இன்னும் இதுபோன்று நபிமார்கள் கொலை செய்யப்பட்ட, சொல்லொண்ணாத துன்பங்களையும் அனுபவித்த வரலாறுகளை உணர்த்தி நிற்கும் எத்தனையோ இறைவசனங்கள் நம்முன்னே படிப்பினையாக இருக்கின்றன. எனவே இஸ்லாமியப்பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க பொறுமை என்னும் அத்திவாரத்திலேயே கட்டி எழுப்பட்டுள்ளது என்பதை சமகால அழைப்பாளர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது.

விவாதங்களின் நோக்கும் போக்கும்
இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக தேவைப்படுமிடத்து விவாதம் புரிவது அனுமதிக்கப்பட்ட ஓர் விடயமாகும். அந்த விவாதம் அல்லாஹ் அனுமதித்த, வலியுறுத்திய விதத்தில் அமைந்திருக்க வேண்டுமேயன்றி மாறாக அல்லாஹ்வின் சாபத்தை அள்ளிவீசக்கூடியதாக அமைதல் கூடாது. அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.(16:125)

மேலுள்ள இறைவசனத்திலிருந்து விவாதம் செய்வது அனுமதிக்கப்படுவதோடு மாத்திரமல்லாது அது அழகிய முறையில் இருக்கவேண்டும் என்பதும் தெளிவாகக்கூறப்படுகிறது.

ஆனால் இன்றைய தஃவா களத்தில் நிலைகொண்டுள்ள விவாதங்களின் நிலைமையினை எடுத்து நோக்கினோமானால் தேவையற்ற விடயங்களுக்கும் வீணான கருத்துக்களுக்கும் விவாதம் என்றொரு இறைகட்டளை வீணடிக்கப்படுவதை நாம் காண்கிறோம். ஒருவருடைய தனிப்பட்ட விடயத்தை அவர் அல்லாஹ்விடம் மன்றாடி மீண்டதன் பிற்பாடும் அவருடைய அப்பாவச்செயலை ஓர் விவாதப் பொருளாக்குவதிலேயே இன்னும் முனைப்புடன் செயல்ப்படுகின்ற அமைப்புகளையும் நாம் காண்கிறோம். இதிலிருந்து இவ்வமைப்புக்களுக்கு ஒருவரின் தனிப்பட்ட அசிங்கத்தை வெளிக் கொணருவதே பிரதான நோக்கம் என்பதும் அந்நபருடைய மார்க்கரீதியான பிழைகளை மக்களுக்குத் தெளிவு படுத்துவதென்பது இரண்டாம் பட்சமே என்பதும் தெளிவாகிறது. இவ்விவாதத்தில் அல்லாஹ் கூறிய அழகிய விவாதம் என்பது அணுவளவும் கிடையாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

அதுமாத்திரமல்லாது மார்க்க அறிஞர்களுக்கு இடையிலுள்ள கருத்து வேற்றுமைகள் தொடர்பில் பாமர மக்களுக்கு ஓர் தெளிவினை ஏற்படுத்துவதே விவாதங்களின் பிரதான நோக்கமாகும். ஆனால் இன்றைய விவாதங்களின் தேவைப்பாடுகளை நாம் பார்க்கின்றபோது, அவை தங்களை அறிவாளிகள் அல்லது திறமைசாலிகள் என்பதை நிரூபித்துக்காட்டுவதற்காகவும் எதிரணியில் இருப்பவர்கள் மார்க்கவிடயங்களில் அடிப்படையற்றவர்கள் என நிரூபிப்பதற்குமே பயன்பட்டுவருகின்ற பரிதாபத்தை நாம் உணருகின்றோம். இதன்காரணமாகவே இஹ்லாசான எண்ணத்தின் உந்துதலால் பல உலமாக்களால் விவாதம் செய்ய முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் விவாத ஒப்பந்தங்கள் இடுகின்ற சபைகளிலே தோல்வியுற்ற வரலாறுகளை நாம் கண்டிருக்கிறோம். எனவே விவாதம் என்பது தமக்கு பூரண அறிவுள்ள விடயங்களில் மாத்திரமே நடைபெறவேண்டுமே தவிர தங்களின் புத்திக்கு விரோதமான தனக்கு தெளிவில்லாத விடயங்களின் பால் விவாதம் செய்வதை இஸ்லாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. அந்தவகையில்தான் தற்போது அல் குர்ஆனின் விடயத்திலோ ஹதீஸ்கலையின் அடிப்படையிலோ தேர்ச்சியற்ற குற்றைந்த பட்சம் சுயமாகப் பார்த்து விளங்கிகொள்ளக்கூடிய அறிவாற்றல்கூடக் கிடயாத சாதாரண பாமரர்கள் கூட தங்கள் ஜமாஅத்தின் அத்தலைவர் தீர்ப்புக்கூறிவிட்டார் என்ற குருட்டு நம்பிக்கையில் பிரச்சார மேடைகளில் அபத்தமான கேள்விகளின் மூலம் உலமாக்களை விளிக்கின்ற ஓர் பலஹீனமான சமுதாயம் உருவாகிவருவதைக் காணலாம். இதோ இறைமறை பேசுகிறது.

உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.(03:66)

ஆக, மேற்கண்ட திருமறை வசனத்திலிருந்து விவாதங்கள் என்பது வீணான விடயங்களுக்கல்லாமல் அது சாதாரண மக்களுக்கும் பிரயோசனம் அளிக்கின்ற வகையில் அமையவேண்டும் என்பதும் தனக்குப் பூரண அறிவில்லாத விடயங்களில் விவாதம் புரிவது அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டுவரக்கூடிய பாவங்களில் ஒன்று என்பதும் தெளிவாகிறது.

தௌஹீதும் தக்லீதும்
இஸ்லாமிய மார்க்கம் என்பது அல்லாஹ்வின் ஏவலும் நபிகளாரின் வழிகாட்டலும் மாத்திரமே. அதை விடுத்து தனிநபர்களின் கருத்துக்களோ, ஊர் வழக்காறுகளோ, சமுதாய வழிமுறைகளோ இஸ்லாமிய மார்க்கம் அல்ல என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதே இந்த ஏகத்துவப் பிரச்சாரப் பணியாகும். ஆனால் இன்று இப்பணி எந்தளவிற்கு மாறிப்போயுள்ளதென்றால் தமது அமைப்பின் தலைவர்களோ அல்லது அவ்வமைப்பின் முக்கியபொறுப்பிலுள்ள ஓர் மார்க்க அறிஞரோ ஓர் கருத்தை முன்வைத்துவிட்டால் அதை தலைமேல் தூக்கி வைத்து செயற்படுத்தக் கூடிய காட்சிகளை நாம் காண்கிறோம். அது உண்மையில் சரியானதுதானா, அந்த மார்க்க அறிஞரின் ஆய்வில் பிழை ஏற்பட்டிருக்காதா, இது தொடர்பில் மாற்றுக்கருத்துள்ள உலமாக்களின் கருத்து என்ன என்பது போன்ற விடயங்கள் அவ்விடத்தில் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. தங்களின் கருத்துகளுக்காக மாற்றுக் கருத்துள்ளவர்களை வழிகேடர்கள் என்றும், நிராகரிப்பாளர்கள் என்றும் வாய்கூசாமல், மறுமை நாளின் அச்சமென்பது அணுவளவும் இல்லாமல் தீர்ப்பு வழங்கக் கூடிய நிலைமையும் இன்று பறந்து விரிந்து காணப்படுகிறது.

அவ்வாறு ஏனைய அமைப்பிலுள்ள ஓர் அறிஞர் அதற்கு மாற்றமான கருத்தைக் கூறிவிட்டால் அக்கருத்திலுல்ல சரி பிழைகளை ஆராயாமல் குறித்த அறிஞருடைய குறை நிறைகளை வெளிப்படுத்தி அக்கருத்திலுள்ள நியாயப்பாட்டை இருட்டடிப்புச் செய்கின்ற ஓர் சமுதாயமாக இன்று ஏகத்துவ சமூகம் மாறிவருகின்ற பரிதாப நிலையையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

எந்தளவுக்கென்றால் பொதுவான ஓர் விடயத்தை கலந்தாலோசிக்கின்றபோது கூட நீங்கள் மாற்றுக் கருத்தில் உள்ளீர்கள் என அடுத்தவர்களின் முகத்திலேயே கூறிவிடுகின்ற அளவிற்கு இன்று மனிதப்பண்பு என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இக்கருத்துக்கள் சுயமாக ஆய்வை மேற்கொண்டு பெறப்பட்டதல்ல. மாறாக அமைப்பின் தலைமைகளின் கூற்றை சரிகண்டதன் விளைவாகவே ஓர் விடயம் சரி என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால் தங்களின் இவ்வுலகத் தேவைக்காக ஒரு பொருளை வாங்கும்போது நான்கு இடங்களில் அலைந்து திரிந்து அதிலுள்ள குறை நிறைகளை ஆராய்கின்ற நமது சகோதரர்கள் நாளை நிரந்தர மறுமையின் தேவை கருதி மேற்கொள்கின்ற நற்செயல்களின் விடயத்தில் குறித்த ஓர் வட்டத்திற்குள்ளேயே சுருங்கி விடுவது உண்மையிலேயே பரிதாபமான ஒன்றாகும்.

இறுதியாக.. ..
எனவே, இஸ்லாமியப் பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே நோக்காகக் கொண்டு செய்யப்படவேண்டிய ஓர் அறப்பணியாகும். இதில் யாருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால் ஓர் இறைவனின் அன்பு ஒன்று மாத்திரமே நமது குறிக்கோளாகும். அறிவு, ஆய்வு என்பவைகள் யாருக்கும் ஒரே மாதிரியான தரத்துடன் இருப்பதில்லை. ஒருவருக்கு சரியாகப் படுவது இன்னொருவருக்கு தவறாகப் படலாம். ஆனால் அதை இறையச்சத்தை மாத்திரம் ஒருவர் முன்னிறுத்தி ஆய்வு செய்து செயற்படுத்துவாரானால் அவரை நாம் விமர்சிக்கவோ, கேலி செய்யவோ முடியாது. அதன் பிரதிபலனை அவர் மறுமையில் கண்டுகொள்வார். நாம் சரியாக ஆய்வை மேற்கொண்டிருந்தாலும் தவறான கருத்திலுள்ளவரை தரந்தாழ்த்தி விமர்சிக்கின்றபோது நமது சரியான ஆய்வுகளைக் கூட அவர் புரிந்துகொள்வதற்குப் பின்வான்கிவிடுவார். அதற்கான பாவத்தையும் நாமே சுமக்கவேண்டிய நிலை நமக்கு ஏற்படும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்தும் நமது தஃவா பணிகளை இறைவன் விரும்புகின்ற விதத்தில் சுமூகமான, சாந்தமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக.

وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَىٰ رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (05:92)

2 comments

  1. எஸ்.ஹலரத் அலி

    ஏகத்துவ அமைப்புகளுக்கு ஏன் இந்த இழிநிலை?….கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.இன்றைய இயக்க வெறியர்களின் இழிசெயலை அடையாளம் காட்டியுள்ளது.ஆனாலும் கட்டுரையில் ஒரு அடிப்படை தவறு உள்ளது.

    இஸ்லாத்தில் தனித்தனி அமைப்புகள் தனிப் பெயரை வைத்துக்கொண்டு மக்களை அதன் பக்கம் அழைக்க ஆதாரம் உண்டா?அது ஏகத்துவ அழைப்போ அல்லது பித் அத் அமைப்போ எதுவானாலும் சரி.வழி கேட்டில் மக்களை இழுக்க சைத்தான் தான் பல பக்கங்களிலும் பல பிரிவாக பிரிந்து நின்று தன் பக்கம் இழுப்பான்.
    நபி(ஸல்) அவர்கள் ஏற்ப்படுத்தி தந்த உலகளாவிய இஸ்லாம்-முஸ்லிம் என்ற ஒரே அமைப்பு இன்றும் உள்ளது.இந்த அமைப்பில் இருந்துகொண்டுதான் ஒருவருக்கொருவர் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும்.சுயநலமிகள் தனி இயக்கம் உருவாக்குவது இஸ்லாமிய வளர்ச்சிக்கு அல்ல.தங்களது இயக்க வளர்ச்சிக்கே.

    இஸ்லாம் அனுமதிக்காத இயக்கங்களில் எந்த நன்மையையும் பெறமுடியாது.முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பது ஒன்றே அதன் பலன்.இயக்கம் என்னும் மரத்தை வேரோடு வெட்டாமல் அதன் கிளையை தறிக்கும் செயலையே இக்கட்டுரை செய்கிறது.அதாவது இயக்கத்தை நியாயப்படுத்துகிறது.
    நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திச் சென்ற ஜமாத்தில் ஏகத்துவ ஜமாஅத் என்று எதுவும் தனியாக இல்லை.ஒன்று பட்ட உம்மத்தை பிரித்து நாசமாக்கும் தலைவர்களுக்கு கேடுதான்.

  2. Why editor didn’t mention SLTJ vanished in Paragadeniya?….Don’t ever write SAs by double stands…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *