Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
     அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.
 
                சில வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி பல ஹதீஸ்களை மறுத்தனர். இதனை அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த நல்லறிஞர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரம் மறுக்கவும் செய்தனர்.
 
                நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸை முஃதஸிலாக்கள் எனும் வழிகேடர்கள் மறுத்தனர். நவீன காலத்தில் அபூரய்யா எனும் வழிகேடனும் அவனது சிந்தனையால் தாக்கப்பட்ட சில சிந்தனையாளர்களும் இந்த தவறான வழிமுறையைக் கையாண்டு பல ஹதீஸ்களை மறுத்து வருகின்றனர்.
 
                நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை முஃதஸிலாக்கள் மறுக்கும் போது “நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரைப் பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்” (25:8)
 
                என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டினர். அநியாயக்காரர்கள்தான் நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸை ஏற்க முடியாது என்றனர்.
 
                வழிகேடர்களான முஃதஸிலாக்கள் இப்படிக் கூறினாலும் நல்ல வழி நடந்த நல்லறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த ஆயத்தும், ஹதீஸும் முரண்படுவதாகத் தென்படவும் இல்லை.
 
                “அவர்களின் உள்ளங்கள் பொடுபோக்காக இருக்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லையல்லவா? நீங்கள் பார்த்துக் கொண்டே சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநியாயம் செய்தோர், தமக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டனர்.”                                                                                                 (21:3)
 
                இங்கே அநியாயங்கள் நபி(ஸல்) அவர்களை உங்களைப் போன்ற மனிதர் என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் எம்மைப் போன்ற மனிதர்தான் என்பதைக் குர்ஆன் பல இடங்களில் உறுதி செய்கின்றது.
 
                “நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இரட்சகன் ஒருவனே என்று எனக்கு (வஹி) அறிவிக்கப்படுகிறது என (நபியே) நீர் கூறுவீராக!”                                 (18:110)
 
                “நான் உங்களைப் போன்ற மனிதர்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இரட்சகன் ஒரே ஒருவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது என (நபியே!) நீர் கூறுவீராக!”                              (41:6)
 
                அநியாயக்காரர்கள் நபி(ஸல்) அவர்களை மனிதர் என்று கூறினார்கள் என்பதற்காக நபி(ஸல்) அவர்களை மனிதன் என்று கூறும் அனைவரும் அநியாயக்காரர்களாகிவிடுவார்களா? இந்தக் காபிர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து மனிதர் என்று கூறிய கூற்று சரியானது. ஆனால் அவரது தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே இப்படிக் கூறினர். எனவே தண்டிக்கப்படுகின்றனர். இது போன்ற வசன அமைப்புக்களைக் குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.
 
                மக்கத்து இணைவைப்பாளர்களில் சிலர் கழா கத்ரை தமது இணை வைப்புக்குச் சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்தினர். அல்லாஹ் நாடியிருந்தால் நாம் இணைவைத்திருக்க மாட்டோம். ஹலாலானவற்றை ஹராமாக்கியிருக்கமாட்டோம் என்று கூறினர். அவர்கள் கூறிய கூற்று சரியானதே! அல்லாஹ் நாடியிருந்தால் இணைவைத்திருக்க மாட்டார்கள். எனினும் இந்த வார்த்தையைத் தவறான நோக்கத்தில் அவர்கள் பயன்படுத்தியதால் அவர்களைக் குர்ஆன் பொய்யர்கள் என்கின்றது.
 
                “அல்லாஹ் நாடியிருந்தால் நாமோ, நமது மூதாதையர்களோ இணைவைத்திருக்கமாட்டோம். (ஆகுமான) எதையும் விலக்கியிருக்கவும் மாட்டோம்” என்று இணைவைத்தோர் கூறுவர். இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தோரும் நமது தண்டனையை சுவைக்கின்ற வரை பொய்ப்பித்துக் கொண்டேயிருந்தனர். “உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? (இருந்தால்) அதை எமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் கற்பனை செய்வோரேயன்றி வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (6:148)
 
                நபி(ஸல்) அவர்கள் குறித்து அந்த அநியாயக்காரர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னார்கள். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது தூதுத்துவத்தை முழுமையாக நிராகரித்து சூனியம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதனால் உளறிய உளறலாக அவர்களது போதனையைச் சித்தரிக்க முற்படுகின்றனர். அவர்களது அந்தக் கூற்றுக்கும் ஹதீஸ் சொல்லும் செய்திக்கும் சம்பந்தமே இல்லை. எனவேதான் புஹாரி, முஸ்லிம் போன்ற பெரும் பெரும் மேதைகளுக்கெல்லாம் இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தென்படவில்லை.
 
                ஒரு ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தென்பட்டால் அவற்றுக்கிடையே இணக்கம் காண வேண்டும். இணக்கம் காண முடியாவிட்டால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளன. இரண்டையும் நான் நம்புகின்றேன் என்று ஈமான் கொள்ள வேண்டும். இவற்றுக்கிடையே முரண்பாடு இல்லை. இருந்தாலும் நான் புரிந்து கொண்டதில்தான் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்று எண்ணி மௌனம் காக்க வேண்டும்.
 
                இந்த உண்மையைத் தெளிவாக விளக்குவதற்காக நாம் குர்ஆனிலிருந்து சுமார் 10 உதாரணங்களை உங்கள் முன் வைக்கின்றோம். ஏனெனில் குர்ஆனில் எந்த முரண்பாடும் இல்லை என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.
 
                “இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துணர வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அவர்கள் இதில் அதிகமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” (4:82)
                குர்ஆனில் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களுடன் முரண்படுவது போல் தென்படலாம். ஆனால் அதில் எந்த முரண்பாடும் இருக்காது. இருக்கவும் முடியாது. முரண்படுவதாகத் தோன்றினாலும் புரிந்து கொண்டதில்தான் தவறு ஏற்பட்டிருக்கும். எமக்கு முரண்பாட்டைக் களைய முடியாவிட்டாலும் இரண்டும் உண்மை என்று ஈமான் கொள்ள வேண்டும்.
 
                குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுக்கும் இந்தப் போக்கு ஆபத்தானதாகும். இந்த சிந்தனை முற்றிப் போனால் ஈற்றில் இதே அணுகுமுறையில் குர்ஆனையும் அணுகி குர்ஆனையும் நிராகரிக்கும் அல்லது முழுமையாக நம்பாத நிலை ஏற்படும். பெரிய சிந்தனைச் சிக்கலில் மூழ்க நேரிடும். (நஊதுபில்லாஹ்)
 
                இன்று தவ்ஹீத் வட்டாரத்தில் பாமர மக்கள் கூட இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று வாய் கூசாமல் கூறிவருகின்றனர். முரண்பாடுகளைக் களைந்து இணக்கம் காண்பதென்பது துறைசார்ந்த அறிஞர்களுக்கே உரிய பணியாகும். இந்த சிந்தனையைப் பரப்புகின்றவர்கள் அளவுகோளைக் கூறிவிட்டோம் அதற்குப் பின்னர் நீங்கள் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எனப் பாமர மக்களது கரங்களில் இந்தத் தவறான அளவு கோளைக் கொடுத்தவர்கள் நீச்சல் தெரியாதவனை ஆழ் கடலில் தள்ளிய துரோகத்தைச் செய்துள்ளனர். இது கரையேற முடியாத கடல் போன்ற ஆழமான அம்சம் என்பதைப் பாமரர்களும் புரிந்து கொள்ள இந்தப் பத்து உதாரணங்களும் உதவும் என்று நம்புகின்றேன்.
 
01. மறுமையில் காபிருக்கு பார்வை உண்டா?
                “மறுமை நாளில் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் தமது முகங்களால் (நடந்து வருபவர்களாகவும் அவர்களை)  நாம் ஒன்று சேர்ப்போம்” (17:97)
 
                இந்த வசனம் வழிகேடர்கள் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் என்பதை உறுதி செய்கின்றது. மார்க்கப் போதனைகளை புறக்கணித்தவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதைப் பின்வரும் வசனம் உறுதி செய்கின்றது.
 
                இந் வசனங்களைப் பார்கும் போது காபிர்கள், வழிகேடர்கள், வேத போதனையைப் புறக்கணித்தவர்கள், குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பது உறுதியாகின்றது. ஆனால், மற்றும் பல வசனங்கள் மறுமையில் காபிர்கள் பார்ப்பார்கள் என்று கூறுகின்றது.
 
                “குற்றவாளிகள் நரகத்தைப் பார்த்து, “நிச்சயமாக தாம் இதில் விழக்கூடியவர்களே என்பதை அறிந்து கொள்வர். அதை விட்டும் தப்பித்துக்கொள்ளும் எந்த இடத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.”                                                                                   (18:53)
 
                குற்றவாளிகள் நரகத்தைப் பார்ப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.
 
                “மேலும், பதிவேடு (அவர்கள் முன்) வைக்கப்படும். அதில் உள்ளவற்றினால் அஞ்சியவர்களாக குற்றவாளிகளை நீர் காண்பீர். இன்னும் அவர்கள், “எமக்கு ஏற்பட்ட கேடே! இப்பதிவேட்டிற்கு என்ன ஆனது! (எங்கள் செயல்களில்) சிறியதையோ, பெரியதையோ அது பதிவு செய்யாமல் விட்டு வைக்கவில்லையே! என்று கூறுவர். மேலும், தாம் செய்தவற்றை தம் முன்னால் கண்டு கொள்வர். இன்னும் உமது இரட்சகன் எவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.” (18:49)
 
                குற்றவாளிகள் தமது பதிவேட்டைப் பார்ப்பர் என்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது.
 
                குற்றவாளிகள் நரகத்தைக் கண்டது மட்டுமன்றி மறுமையில் அவர்கள் பார்ப்பார்கள், கேட்பார்கள், பேசுவார்கள் என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது.
 
                “குற்றவாளிகள் தமது இரட்சகன் முன்னிலையில் தலை குனிந்தவர்களாய் நிற்பதை நீர் பார்ப்பீரானால், “எங்கள் இரட்சகனே! நாங்கள் பார்த்துவிட்டோம். நாங்கள் செவிசாய்த்துவிட்டோம். நீ எங்களை (உலகிற்கு) மீட்டிவிடு (அவ்வாறு செய்தால்) நாங்கள் நல்லறம் புரிவோம். நிச்சயமாக நாம் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்” (என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.)”             (32:12)
 
                இங்கே குற்றவாளிகளே பார்த்தோம்ளூ கேட்டோம் என்று கூறுகின்றனர். எனவே அவர்கள் பார்த்தார்கள்ளூ கேட்டார்கள்; பேசினார்கள். ஆனால், ஆரம்பத்தில் கூறிய (17:97) ஆம் வசனம் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர் என்று கூறுகின்றது. இரண்டும் நேருக்கு நேர் முரண்படுவதாகத் தென்படுகின்றது.
 
                “அவர்கள் நம்மிடம் வரும் நாளில் எவ்வளவோ தெளிவாகக் கேட்பார்கள்! எவ்வளவோ தெளிவாகப் பார்ப்பார்கள்! ஆனால், இன்றைய தினம் அநியாயக்;காரர்கள் மிகத் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.”     (19:38)
 
                இந்த வசனம் மறுமை நாளில் அவர்கள் தெளிவாகப் பார்ப்பார்கள், தெளிவாகக் கேட்பார்கள் என்று கூறுகின்றது. அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் என்ற வசனத்தை மறுப்பது போன்று இவ்வசனம் அமைந்துள்ளது. (நஊதுபில்லாஹ்) இப்போது நாம் என்ன செய்வது? இரண்டில் ஒன்றை மறுத்து மற்றதை ஏற்பதா? அல்லது முரண்படுகின்றது என்று கூறி இரண்டையும் மறுப்பதா? அல்லது இரண்டுக்கும் இணக்கம் கண்டு இரண்டையும் ஏற்பதா? என்று கேட்டால் மூன்றாவதாகக் கூறியதுதான் சரியான முடிவாக இருக்கும். ஒரு வேளை இரண்டையும் இணைத்து எம்மால் இணக்கம் காண முடியாவிட்டால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. இரண்டும் அல்லாஹ்வின் வார்த்தை என்று நான் ஈமான் கொள்கின்றேன் என்று கூறி நம்ப வேண்டும்.
 
                இந்த அடிப்பiயில் இந்த இரண்டு கருத்துக்களையும் தரும் வசனங்களையும் சில அறிஞர்கள் பின்வருமாறு இணக்கம் காண முயல்கின்றனர்.
 
1. அவர்கள் எழுப்பப்படும் போது குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர். பின்னர் அவர்களுக்கு அல்லாஹ் பார்வையையும், பேச்சையும் செவிப்புலனையும் கொடுப்பான். அப்போதுதான் நரகத்தைப் பார்த்து அஞ்சி கத்திக் கதறி அவர்கள் முழுமையாக வேதனையை அனுபவிக்க முடியும். இது அருள் அல்ல தண்டனையை முழுமையாக அடைவதற்கான வழியாகும். அவர்கள் குருடர்களாக இருப்பார்கள் என்பது ஒரு சந்தர்ப்பம். பார்ப்பார்கள், பேசுவார்கள் என்பது வேறொரு சந்தர்ப்பம். எனவே, முரண் இல்லை என்ற அடிப்படையில் அறிஞர் அபூஹய்யான்(ரஹ்) போன்றவர்கள் விளக்க மளிக்கின்றார்கள்.
 
2. அவர்கள் தமக்கு மகிழ்வளிக்கும் எதையும் காணவும் மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள்! தமக்குப் பயனளிக்கும் எதையும் பேசவும் மாட்டார்கள்! உலகத்தில் இருக்கும் போது சத்தியத்தைப் பார்க்காமலும், கேட்காமலும், பேசாமலும் இருந்தது போல் மறுமையில் இப்படி இருப்பர். சத்தியத்தைக் காணாதவர்கள் குருடர்களாகவும், சத்தியத்தைக் கேட்காதவர்கள் செவிடர்களாகவும், கூறப்படுவதுண்டு ஒன்று இருந்தும் அதன் மூலம் பயன்பெறாமல் இருப்பது இல்லாமல் அவை இருப்பதற்கு சமமானதாகும். இந்த அடிப்படையில் அவர்கள் குருடர்கள், ஊமையகள், செவிடர்கள் என்று கூறப்படுவதாக இப்னு அப்பாஸ்(ரழி), ஹஸன் அல் ஆலூஸி(ரஹ்) போன்றோர் கூறுகின்றனர்.
 
3. மற்றும் சிலர் இதனை வேறொரு கோணத்தில் பார்க்கின்றனர். நரகவாதிகள் நரகத்திற்குப் போன பின்னரும் பேசுவர். அப்போது அல்லாஹ் அவர்களைப் பேசாமல் தடுத்துவிடுவான்.
 
                “அதிலேயே நீங்கள் சிறுமையடைந்து விடுங்கள், என்னுடன் பேசாதீர்கள் (என்று கூறுவான்.)” (23:108
 
                “அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததின் காரணமாக (எமது) விதி அவர்கள் மீது நிகழ்ந்துவிடும். எனவே, அவர்கள் பேசமாட்டார்கள்.” (27:85)
 
                அல்லாஹ்வின் ஏற்பாடு இருக்கும் வரை பார்ப்பர்ளூ பேசுவர்ளூ கேட்பர். அல்லாஹ்வின் தடை வந்த பின்னர் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் மாறிவிடுவர். இந்த வசனங்களை ஒருவர் சாதாரணமாகப் பார்க்கும் போது நேருக்கு நேர் முரண்படுவது போன்று தோன்றலாம். ஆனால் முரண்பாடு இல்லை என்பதை அறிய ஆழமான ஆய்வுப் பார்வை தேவைப் படுகின்றது. இதனால் பாமரர்கள் புரிந்து கொண்டு ஆழமறியாமல் காலை விடும் ஆபத்தான வேலையை விட்டும் ஒதுங்கிக் கொள்வது அவரவர் அவரவரது ஈமானையும் மார்க்கத்தையும் பாதுகாக்கப் பெரிதும் உதவும்.
 
02. மறுமையில் விசாரிக்கப்படுவார்களா?
 
                “எவர்களுக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ, அவர்களை நிச்சயமாக நாம் விசாரிப்போம். மேலும், அத்தூதர்களையும் நாம் விசாரிப்போம்.” (7:6)
 
                இந்த வசனம் தூதர்களும், தூதர்கள் அனுப்பப்பட்ட சமூகங்களும் அதாவது அனைத்து மனிதர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றது.
 
                “உமது இரட்சகன் மீது சத்தியமாக,  அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி  நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நாம் விசாரணை செய்வோம்”(15:92-93)
 
                இந்த வசனத்தில் அனைவரும் விசாரிக்கப்படுவர் என்று சத்தியம் செய்து கூறப்படுகின்றது.
 
                “மேலும், அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் (என்று கூறப்படும்.)” (37:24)
 
                “அவன் அவர்களை அழைக்கும் நாளில், “தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?” எனக் கேட்பான்.” (28:65)
 
                இந்த வசனங்கள் அனைத்தும் மறுமையில் கேள்வி கணக்கு, விசாரனை இருக்கின்றது என்று கூறுகின்றது. ஆனால் பின்வரும் வசனங்கள் இதற்கு மாற்றமாக அமைந்திருப்பது போன்று தோன்றுகின்றது (நஊதுபில்லாஹ்).
 
                “வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் இருப்பார்கள்.” (55:39) முரண்படுவது போல் தோன்றுவதை இங்கே குறித்த முரண்பாட்டை நீக்குவதற்காக தெளிவு பெறுவதற்காக) என அடைப்புக் குறி போடப்பட்டுள்ளது. அடைப்புக்குறி போட விரும்பாதவர்கள் மனிதனிடமும், ஜின்னிடமும் அவனது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது என மொழியாக்கம் செய்துள்ளனர்.
 
                “குற்றவாளிகள் தங்களது பாவங்கள் குறித்து (தெளிவு பெறுவதற்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்.”                                                                                             (28:78)
 
                இந்த வசனம் குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகின்றது. அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் மனிதனோ, ஜின்னோ விசாரிக்கப்படமாட்டார்கள் என்றும் குர்ஆனே கூறுகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே நேருக்கு நேர் முரண்படுவதாகவே தோன்றும். ஆனால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதுதான் உண்மையாகும். நாம் உடன்பாடு கண்டாலும், காணாவிட்டாலும் கூட இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதும் இரண்டும் இறை வார்த்தைதான் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
 
                இந்த இருவித கருத்தைத் தரும் வசனங்களுக்குமிடையில் பின்வருமாறு இஸ்லாமிய அறிஞர்கள் இணக்கம் காண முனைந்துள்ளனர்.
 
1. கேள்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தகவலை அறியச் செய்வதற்காகவும், செய்திகளைச் சொல்வதற்காகவும் கேட்கப்படும் கேள்வி. இந்தக் கேள்வி குற்றவாளிகளிடம் கேட்கப்படமாட்டாது.
 
                அடுத்து கேட்பதன் மூலம் கேட்கப்படுபவர்களைக் கேவலப்படுத்தும் கேள்வி. இது குற்றவாளிகளிடம் கேட்கப்படும் என்று கூறப்படும் வகையைச் சார்ந்த கேள்வியாகும். குற்றவாளிகளிடம் கேட்கப்படுவதாகக் கூறப்படும் கேள்விகளை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம்.
 
                “மேலும், அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் (என்று கூறப்படும்.)” (37:24-55)
 
                “இது சூனியமா? அல்லது நீங்கள் பார்க்க முடியாதவர்களா?” (52:15)
 
                “நிராகரித்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பால் இழுத்துக்கொண்டு வரப்படுவர். அவர்கள் அங்கு வந்தவுடன் அதன் வாயில்கள் திறக்கப்படும். “உங்களது இரட்சகனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டி, உங்களது இந்நாளின் சந்திப்பை உங்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பர். அ(தற்க)வர்கள், “ஆம். (வந்தனர்) எனக் கூறுவர். எனினும் வேதனையின் வாக்கு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது.” (39:71)
 
                “அது கோபத்தால் வெடித்துவிடப் பார்க்கின்றது. அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா?” என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்.” (67:8)
 
                இந்தக் கேள்விகள் தகவல் பெறுவதற்காகக் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. இவை கேட்கப்படுபவர்களை இழிவுபடுத்துவதற்காகக் கேட்கப்படும் கேள்விகளாகும்.
 
                நபிமார்களும் விசாரிக்கப்படுவதாக குர்ஆன் கூறுகின்றது. இது தகவல் பெறுவதற்கோ, கேட்கப்படுபவரை இழிவு படுத்துவதற்காகவோ கேட்கப்படமாட்டாது. இது அவருடன் சம்பந்தப்பட்ட சமூகத்தில் உள்ள கெட்டவர்களை இழிவு படுத்துவதற்காகவே கேட்கப்படும் கேள்வியாகும். உதாரணமாக, உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தைகள் என்ன குற்றத்திற்காக நீங்கள் கொல்லப்பட்டீர்கள் என்று விசாரிக்கப்படுவர். (81:9) இது அவர்களுக்கு எதிரான விசாரணை அல்ல. இது அவர்களைக் கொன்ற அவர்களது பெற்றோர்களை இழிவுபடுத்தக் கேட்கப்படும் கேள்வியாகும். இந்த அடிப்படையில் நபிமார்களும் பின்வருமாறு விசாரிக்கப்படுகின்றனர்.
 
                “தூதர்களை அல்லாஹ் ஒன்று சேர்க்கும் நாளில் “நீங்கள் என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான். அ(தற்க)வர்கள், “எங்களுக்கு எவ்வித அறிவும் இல்லை. நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்” எனக்  கூறுவார்கள்.” (5:109)
 
                எனவே, கேள்வி உண்டு என்பது அவர்களை இழிவுபடுத்தும் கேள்வி உண்டு என்கின்றது. கேள்வி இல்லையென்பது தகவல் பெறுவதற்காக எந்தக் கேள்வியும் கேட்க வேண்டிய தேவை இருக்காது என்பது குறித்துப் பேசுகின்றது. இரண்டும் வெவ்வேறு விடயம் பற்றி உண்டு, இல்லை என்று பேசுவதால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை. நபிமார்களிடம் கேட்கப்படும் கேள்வி அவர்களுடன் சம்பந்தப்பட்ட சமூகத்திலிருந்த கெட்டவர்களை இழிவுபடுத்துவதற்கான கேள்வியாகும்.
 
2.            மற்றும் சிலர் இதனை இப்படி விளக்குகின்றனர். மறுமையில் பல கட்ட நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் விசாரிக்கப்படுவர், சிலவற்றில் விசாரிக்கப்படமாட்டார். எனவே, இதில் முரண்பாடு இல்லை என்று கூறுகின்றனர்.
 
03. கேள்வி உண்டு என்று கூறப்படுவது அடிப்படையான அம்சங்கள் தொடர்பானவை. கேள்வி இல்லையென்று கூறப்படுவது மேலோட்டமான சாதாரணமான அம்சங்களுடன் தொடர்புபட்டவை என்று மற்றும் சில அறிஞர்கள் பிரித்து நோக்குகின்றனர். இவ்வாறு நோக்கும் போது முரண்பாடு நீங்கிவிடுவதைக் காணலாம்.
 
                இந்த இணக்கம் காணும் வழியை ஒருவர் அடைந்தாலும், அடையாவிட்டாலும் குர்ஆனின் வசனத்தை மறுக்க முடியாது! இவ்வாறே குர்ஆனுக்கு ஸஹீஹான ஹதீஸ் முரண்படுவது போல் தென்பட்டாலும் இணக்கம் காண முயல வேண்டும் முடியாவிட்டால் இரண்டுமே வஹி என்பதால் இரண்டையும் ஏற்கின்றேன் என ஈமான் கொள்ள வேண்டும். இந்த ஆக்கத்தில் முரண்பாடு போல் தோன்றும் ஆனால் முரண்பாடு இல்லாத சுமார் பத்து அம்சங்களை குர்ஆனிலிருந்து முன்வைப்பதாக நான் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இஸ்லாமிய அறிஞர்கள் இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்களை முன்வைத்துள்ளனர். இது ஆழம் காண முடியாத கடல் போன்ற ஓர் அம்சம். சாதாரண பொது மக்கள் தமக்கு அறிவோ, ஆற்றலோ, விபரமோ இல்லாத இது போன்ற அம்சங்கள் விடயத்தில் நிதானமான போக்கைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இவற்றைக் கூறுகின்றேன். மற்றும் சில உதாரணங்கள் தொடர்ந்து வரும்…
இன்ஷா அல்லாஹ்!

One comment

  1. i like to ask u even sayyad kutub also refused that prophet mohamed sal peace be upon him was done suniam what is ur view please comment me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *