Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-1)

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-1)

– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ
இஸ்லாத்தின் அடிப்படைகள் குர்ஆனும் ஹதீஸும், இவ்விரு அடிப்படைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்து வதும் அவற்றிலுள்ள செய்திகளைஅர்த்தமற்றவை யாக்குவதும் முஸ்லிம்களுக்குள் தோன்றிய வழி கேடர்களின் செயல். குறிப்பாக ஹதீஸ்கள் விஷயத் தில் இந்த வழிகேடர்கள்செய்யும் விஷமம் அதிகம்.

தற்காலத்தில் நமது தமிழகத்தில் தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கெல்லாம் தலைமை தாங்குவதாக சொல்லிக் கொள்ளும் சிலரும் ஹதீஸ்கள் விஷயத்தில் இத்தகைய விஷமத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குர்ஆனுக்கும் அறிவுக்கும் முரண்படுவதாக சித்தரித்து அவற்றை மறுப்பதும் கேலி கிண்டல் செய்வதும்இவர்களின் வழிகேட்டுக்கு தெளிவான ஆதாரமாகும்.

ஆனாலும் இவர்கள் இந்த வழிகேட்டுக்குச் செல்வதற்கு முன் தவ்ஹீத் கொள்கைப் பற்றி நல்ல முறையில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதை அதிகமாக வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். இதுவெல்லாம் இவர்களின் இந்த ஹதீஸ் மறுப்பு வழிகேட்டை மக்கள்சரியாக புரிந்துக் கொள்வதற்குத் தடையாக உள்ளது.

தவ்ஹீதை சிறப்பான முறையில் பேசி விளக்கினாலும், குர்ஆன் ஹதீஸை அழகாகப் பேசினாலும் இந்த வழிகேடு ஒரு பெரிய வழிகேடு என்பதைஅறிய வேண் டும். இதைச் சிலர் அறிந்தாலும் வேறு சிலர் அறியாமல் இவர்களின் தீய வலையில் விழுந்து விடுகின்றனர். இந்த ஹதீஸ் நிராகரிப்பு வழிகேடர்கள் தங்கள் கட்சிக்கு இஸ்லாத்தின் அடிப்படையான ”தவ்ஹீத்” எனும் வார்த்தையைப் பெயராக வைத்துக் கொண்டிருப்பது நன்மக்கள் பலர் இவர்களை சரியாகப் புரிய இயலாமல் போவதற்குக் காரணமாகும்.

அல்லாஹுத்தஆலா தனது வேதத்துக்கு விளக்கமளிக்கின்ற பணியை தனது தூதர்(ஸல்) அவர்கள் மீது சுமத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) மக்களுக்கு அவர்களுக்கு இறக்கப்பட்டதை நீர் தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்குஇவ்வேதத்தை நாம் இறக்கி வைத்தோம். அல்குர்ஆன் 16:44

இதன்படி நபிமொழி குர்ஆனுக்கு விளக்கமாகத்தான் இருக்கிறது. இப்படி நாம் சொல்லும் போது நாங்கள் எல்லா ஹதீஸ்களையும் நிராகரிக்கவில்லை. சில ஹதீஸ்களைத் தான் நிராகரிக்கிறோம் என்கிறார்கள்

உண்மையில் ஹதீஸ்களை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் வழிகேடர்களும் ஆரம்பத்தில் சில ஹதீஸ்களை மறுப்பவர்களாகத் தான் இருந்துள்ளார்கள். அப்படி ஆரம்பித்தது தான் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் நிலைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளது.

சில ஹதீஸ்களை மட்டும் நிராகரிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்களும் கூட நிராகரிக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்வதைப் பார்க்கிறோம். இவர்கள் இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்த ஹதீஸ்களில் அஜ்வா பேரீத்தப் பழம்பற்றிய (புகாரி 5445, 5768) ஹதீஸும்கண் திருஷ்டி பற்றிய (புகாரி 5740) ஹதீஸும் இருக்க வில்லை. இப்போது இந்த ஹதீஸ்களையும் மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல முஸ்லிமின் நிலைப்பாடு: இந்த ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் தங்களின் நிராகரிப்புக் கொள்கைக்கு காரணமாகச் சொல்வது குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதைத் தான். உண்மையில் இவர்களால் நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படவில்லை. அப்படியே முரண்படுவதாகத் தோன்றினாலும் ஒரு நல்ல முஸ்லிம் ”எனக்கு இந்த ஹதீஸின் கருத்து குர்ஆனுடன் முரண்படுவதாகத் தோன்றுகிறது. என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை” என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹதீஸ்கலை அறிஞர்கள் அவ்வாறு குர்ஆனுக்கு முரண்படுவதாக இடைக்காலத்தில் எழுந்த வாதங்களுக்கு விளக்க மளித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் அந்த ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்பாடில்லாமல் புரிந்து வருகிறார்கள். ஹதீஸ் அறிஞர்கள் குர்ஆனுக்கு முரண்படாமல் புரிந்திருந்தாலும் முரண்படுவதாக எழுந்த தவறான வாதங்களுக்கு அவர்கள் விளக்கமளித்திருந்தாலும் முஸ்லிம்களெல்லாம் குர்ஆனுக்கு முரண்படாமல் புரிந்திருந்தாலும் எனக்கு அவ்வாறு புரியாததை நான் ஹதீஸ் என்று ஏற்க மாட்டேன். என கூறுவது ஷைத்தானியத் தனத்தின் வெளிப்பாடு! உண்மையில் ஹதீஸ்களை குறித்து இவர்களிடம் முக் கியத்துவமும் இல்லை பேணுதலும் இல்லை. ஹதீஸை மறுக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் அந்த ஹதீஸிலேயே திரித்து, இடைச் செருகல் செய்கிற வேலையை இவர்கள் செய்வார்கள்.

ஹதீஸில் பித்தலாட்டம்
இந்த ஹதீஸ் நிராகரிப்பாளர் எழுதி வைத்திருப்பதைப் படித்தால் தவ்ஹீத் பிரச்சாரகர் என்று சொல்வதற்கு மட்டுமல்ல ஒரு சரியான முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதற்குக் கூட தகுதியற்றவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதோ தனது தவறான கொள்கையை நிலை நிறுத்துவதற்காக ஹதீஸிலேயே எப்படி பித்தலாட்டம் செய்கிறார் என்பதைப் பாருங்கள். பெரியவர் பால்குடிப்பது தொடர்பான ஹதீஸை மறுக்க வேண்டும் என்பதற்காக அந்த ஹதீஸிலேயே தனது கீழ்த்தரமான சிந்தனையை புகுத்தி எழுதுவது:

”ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபா(ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக்கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது…’ இது இந்த ஹதீஸ் நிராகரிப்பாளர் தனது திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பின் விளக்கப்பகுதியில் நபிகள் நாயகத்துக்கு சூனியம் எனும் தலைப்பில் 1309வது பக்கத்தில் எழுதியிருப்பதாகும். 7வது பதிப்பு.

இதே ஹதீஸை அடுத்த பதிப்பில் எழுதியிருப்பதைப் பாருங்கள்:

”அபூஹுதைபா(ரலி) அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபாவின் வீட்டுக்கள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது….”பக்கம் 1446 8-வது பதிப்பு இரண்டு பதிப்பிலும் உள்ள வித்தியாசத்தைப் கவனியுங்கள், தான் மறுக்கிற ஹதீஸை கொச்சைப் படுத்தி அறுவறுப்பாகக் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு இளைஞர் அபூஹுதைபா(ரலி) அவர்களின் மனைவியிடம் பழக்கம் வைத்து வந்து பேசிக்கொண்டிருந்ததாக முந்தைய பதிப்புக்களில் சித்தரித்துள்ளார். இந்த பித்தலாட்டம் சிலரால் வெளிப்படுத்தப்பட்ட பின் எட்டாவது பதிப்பில், அபூஹுதைபா(ரலி) அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட இளைஞர் தான் அவர் என்பதை குறிப்பிட்டுள்ளார் உண்மையில் அவர் அபூஹுதைபா(ரலி) அவர்களின் வளர்ப்பு மகன்தான். அபூஹுதைபாவின் மனைவியும் ஸாலிம்(ரலி) அவர்களை மகனாகக் கருதினார்கள். இவ்வாறுதான் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. இங்கே நாம் கவனிக்க வேண்டியது, தான் மறுக்கிற ஹதீஸை கொச்சைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக ஹதீஸில் உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் படிக்கும் போதே அந்த ஹதீஸை மறுக்கத் தோன்றும் விதத்தில் வார்த்தைகளை அமைத்திருப்பது.

ஹதீஸிலேயே இப்படித் தில்லுமுல்லு செய்பவர் மார்க்க விஷயத்தைப் பேசுவதில் நம்பகமானவர் அல்ல. ஹதீஸை மறுக்கத் துணிந்து விட்டால் ஹதீஸைத் திரிக்க ஆரம்பித்து விடுவர் என்பது தெளிவாகத்தெரிகிறது. இது ஸின்தீக்குகளின் (மார்க்கத்தின் பெயரால் குழப்பம் செய்பவர்களின்) செயல்பாடு மறுமை வெற்றியை விரும்பக்கூடியவர்கள் இத்தகையவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் உதவியால் இவரது குர்ஆன் தர்ஜுமாவில் விளக்கப் பகுதியில் குர்ஆனுக்கு முரண்படுவதாக சித்தரித்து நிராகரித்திருக்கும் ஹதீஸ்களின் விளக்கங்களை இந்தத்தொடரில்காண்போம் இன்ஷாஅல்லாஹ்.

இந்தத் தொடரில் முதலாவதாக பெரியவர் பால்குடித்தல் தொடர்பான ஹதீஸை எடுத்துக் கொள்வோம். அந்த நபிமொழி வருமாறு:

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) ஸாலிம்(ரலி) அவர் கள் அபூஹுதைஃபா மற்றும் அவருடைய மனைவியுடன் அவர்களது வீட்டில் இருந்து வந்தார். அப்போது (அபூஹுதைஃபாவின் மனைவி சஹ்லா) பின்த் சுஹைல்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாம் ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார். மற்ற ஆண்கள் அறிவதை அவரும் அறிகிறார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகிறார். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூ ஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் சஹ்லாவிடம் ”நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு, இதனால் அவருக்குச் செவிலித்தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூ ஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்து விடும்” என்று கூறினார்கள். அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் அவருக்குப் பால் கொடுத்து விட்டேன். இதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது” என்று கூறினார். நூல் : முஸ்லிம் 2878, 2879, 2880

இங்கு முக்கியமாக ஒன்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்த ஹதீஸ் ஒரு அறிவிப்பாளர் தொடரில் பதிவாகி இருந்திருந்தால் கூட மறுக்க முடியாது. ஆனால் இது பல அறிவிப்புக்களில் பதிவு செய்யப் பட்டுள்ள ஹதீஸாகும்.

மேற்கண்ட முஸ்லிமில் இடம் பெறும் 2878, 2879, 2880 ஆகிய மூன்று ஹதீஸ் களும் ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து அல்காஸிம் பின் முஹம்மது அவர்கள் கேட்டு அவர்களின் மாணவர்களுக்கு அறிவித்து அவர்கள் வாயிலாக பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து முஸ்லிமின் 2881, 2882 ஆகிய ஹதீஸ்கள், சஹ்லா(ரலி) அவர்களின் சம்பவம் தொடர்பாக ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் உம்மு சலமா(ரலி) அவர் களுக்கும் நடந்த உரையாடலைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீசலமா(ரலி) அவர்கள் ஹுமைத் பின் நாஃபிஉ அவர்களுக்கு அறிவித்ததாகும்.

அடுத்து முஸ்லிமின் 2883வது ஹதீஸ் சஹ்லா(ரலி) அவர்கள் சம்பவம் தொடர்பாக ஆயிஷா(ரலி) அவர்கள் தவிர்த்து நபியின் மற்ற மனைவி யரின் நிலைப்பாடு என்ன என்பதை உம்மு சலமா(ரலி) அவர்கள் கூறியதா கும். இதனை ஸைனப் பின்த் அபீசலமா(ரலி) அவர்கள் அபூஉபைதா பின் அப்துல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துள்ளார்கள்.

அடுத்து அபூதாவூத் 2063 நஸாயீ 322 4 ஆகிய ஹதீஸ்கள் ஆயிஷா(ரலி) உம்மு சலமா(ரலி) ஆகிய இருவரிடமிருந்தும் உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் இதே சம்பவத்தை அறிவிப்பதாக உள்ளன. இவ்வாறு இந்த ஹதீஸ் பல அறிவிப்புக்களில் வலுவான அறிவிப்பாளர் தொடர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே அறிவிப்பாளர் வரிசை வழியாக வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் கூடமறுக்க முடியாது எனும் போது இப்படி பல அறிவிப்பாளர் தொடர் மூலம் அறிவிக்கப் படும் ஹதீஸில்சந்தேகம் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. முதன்மையான ஹதீஸ் நூல்கள் பல வற்றில் இந்த ஹதீஸ் பதிவு செய் யப் பட்டிருப்பது இது பிரபலமான சம்பவம் என்பதற்கு ஆதாரமாகஉள்ளது.

நிராகரிப்பின் காரணம்: இந்த ஹதீஸ் நிராகரிப்பாளர் இந்த ஹதீஸை மறுப்பதற்கு எழுதியுள்ள காரணத்தைப் படியுங்கள்:

”அன்னிய இளைஞர் ஒருவக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம்(ஸல்) நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத்தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம்”(இது அவரது குர்ஆன் தர்ஜுமாவின் விளக்கவுரை பகுதியில் 1446ம் பக்கத்தில் உள்ளது, பதிப்பு: 8)

மறுப்பும் விளக்கமும்:
மேற்கண்ட அவரது எழுத்துக்களில் இந்த ஹதீஸை மறுப்பதற்கு இரண்டு வாதங்களை வைத்துள்ளார்: ஒன்று, அன்னிய இளைஞருக்கு ஒரு பெண் பாலூட்டுவது அருவருப்பானது, குர்ஆன் ஹதீஸ் படி கூடாதது. இரண்டு, பால்குடித்தல் இரண்டு வயதுக்குள் நடந்திருந்தால் தான் தாய்பிள்ளை உறவு ஏற்படும் இதுவும் குர்ஆன் ஹதீஸ் கூறும் சட்டம் தான். இந்த இரு வாதங்களுக்கும் தவ்ஹீத்வாதிகள் அளிக்கும் மறுப்பையும்விளக்கத்தையும் பார்ப்போம்.

முதல் வாதத்தில் சொல்லப்பட்டுள்ளதுபோல் நேரடியாக பால் கொடுக்கப்படவில்லை, பாத்திரத்தில் எடுத்துத் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் நடந்தது என்பதற்கு நம்மிடம் வலுவான ஆதாரம் உள்ளது. அதாவது மார்க்கத்தில் ஒரு விஷயம் சொல்லப்படும் போது அதை ஏற்கனவே மார்க்கம் தடை செய்துள்ள விதத்தில் செய்வதாக வும் புரிய முடிகிறது. மார்க்கம் அனுமதித்துள்ள விதத்தில் செய் வதாகவும் புரியமுடிகிறது. இப்படி இரு விதத்திலும் புரிந்து கொள்கிற விதத்தில் அமைந்திருந்தால் எப்படிஎடுத்துக்கொள்ள வேண்டும். அதை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்வதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்!

இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் காட்ட முடியும். லூத்(அலை) அவர்களிடம் வானவர் கள் மனிதவடிவத்தில் வந்த போது அசிங்கமான நோக்கத்துடன் அவர்களின் சமூகத்தவர் அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது லூத்(அலை) அவர்கள் அக்கூட்டத் தைப் பார்த்துக் கூறியதை அல்லாஹு தஆலா இவ்வாறு சொல்லிக் காட்டுகிறான்:

”என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள்” அல்குர்ஆன் 11:78, மற்றும் இதன் கருத்து 15:71)

இங்கு தவறான செயல் செய்யும் நோக்கத்துடன் வந்தவர்களிடம் வெறுமனே என் புதல்விகள் உங்களுக்குத் தூய்மையானவர்கள் என்று லூத் (அலை) கூறியுள்ளார்கள். இங்கு திருமணம் செய்து என்று கூறப்படாவிட்டாலும் திருமணம் செய்து முறைப்படி அணுகுவதைத் தான் சொன்னார்கள் என்று தான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் திருமணம் செய்யாது அணுகுவது தடை செய்யப்பட்டதாகும். அதனால்தான் சில திருக்குர்ஆன் மொழி பெயர்ப்புக்களில் திருமணத்திற்கு எனும் வார்த்தையை அடைப்புக் குறியில் எழுதியிருக்கிறார்கள். ஆகவே இந்த ஹதீஸில் பால் கொடுக்குமாறு சொல்லப்படுவது எடுத்துக்கொடுப்பதைத்தான் சொல்லப்படுகிறது. அப்படித்தான் நடந்துள்ளது.

இந்த ஹதீஸை இப்படித்தான் புரிய வேண்டும் என்று நாம் சொல்வது இந்த வழிகேடருக்கு நாம் மறுப்பளிக்க வேண்டுமென்பதற்காக நாமே சொல்வதல்ல. இதைப் பதிவு செய்துள்ள இமாம் அபூதாவூத் அவர்களே கூறியிருப்பது தான்.

ஸாலிம்(ரலி) அவர்கள் தொடர்பான இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு இமாம் அவர்கள் எழுதுவது:

”மார்க்கத்தைக் கற்றவர்களின் கருத்து, இங்கு பால்குடித்தல் என்பதன் மூலம் நாடப்படுவது என்னவெனில் சஹ்லா(ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தனது பாலை எடுத்து ஸாலிமுக்கு அவர் குடிப்பதற்காக அனுப்ப வேண்டும். இவ்வாறு ஐந்து தடவை தொடர்ந்து செய்வதால் அவர்கள் ஸாலிம்(ரலி) அவர்களுக்கு மஹ்ரமாக ஆவார்கள்” (பார்க்க : அபூதாவூத் ஹதீஸ் 2063)

அடுத்து இந்த ஹதீஸை நிராகரிப்பதற்கு இவர் வைக்கும் வாதம், ஒரு குழந்தைக்கு இரண்டு வயதுக்குள் பால் கொடுத்தால் தான் தாய் பிள்ளை என்ற உறவு ஏற்படும் என்பது. இந்த வாதத்திற்கும் தவ்ஹீத்வாதிகளிடம் விளக்கம் இருக்கிறது. அதாவது இரண்டு வயதுக்குள் பால்குடித்தால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்பது உண்மை என்றாலும்இது ஸாலிம்(ரலி) அவர்களுக்காக மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு உத்தரவாகும். ஆகையால் இந்த ஹதீஸை மறுக்கத் தேவையில்லை.

இப்படி நாம் சொல்லும் போது ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கைக்காரர், நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொன் னால் அதைப் பொதுவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி ஆட்சேபிக்கலாம். அப்படி ஆட்சேபித்தால் அதற்கு நமது விளக்கம், சம்பந்தப்பட்ட இந்த ஹதீஸிலேயே நமது கூற்றுக் கான ஆதாரம் இருக்கிறது என்பது தான், ஹதீஸை மறுத்து விடலாம் என்ற அலட்சியத்துடன் படிக்காமல் உண்மையைஅறிந்து கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் படியுங்கள்.

ஸாலிம்(ரலி) அவர்களுக்கு பால் கொடுக்கும்படி உத்தரவிடும் நாம் முன்னர் குறிப்பிட்ட அந்த ஹதீ ஸின் பிற்பகுதியை மீண்டும் படியுங்கள்:

அப்போது நபி(ஸல்) அவர்கள் சஹ்லாவிடம் நீ அவருக்குப் பால் கொடுத்து விடு. இதனால் அவருக் குச் செவிலித்தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூ ஹுதைஃபாவின் மனதில் நிலவும் அதிருப்தியும் மறைந்து விடும் என்று கூறினார்கள். அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் (நபி(ஸல்) அவர் களிடம்) வந்து, நான் அவருக்குப் பால் கொடுத்து விட்டேன். இதனால் என் கணவர் அபூ ஹுதைஃபாவின் மனதில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது என்று கூறினார். நூல் : முஸ்லிம் 2879

இங்கு சொல்லப்படும் வாசகங்கள் தெள்ளத்தெளிவாக இது ஸாலிம் (ரலி)அவர்களுக்கென தனிப்பட்ட முறையில் சொல்லப்பட்டது தான் என்பதற்கு ஆதாராமாக உள்ளன. இந்த ஹதீஸில் அபூஹுதைஃபா வின் மனதிலுள்ள அதிருப்தி மாறும் என்று நபி சொல்கிறார்கள். அதுபோலவே ஸாலிமுக்கு பால் கொடுத்த பின் அபூஹுதைஃபா வின் அந்த அதிருப்தி மறைந்து விட்டது என்று அவர்களின் மனைவி திரும்ப வந்து சொல்கிறார்கள்.

இப்படி மனதில் அதிருப்தி நிலவும் கணவர் எவருக்கும் இம்முறையில் பால் கொடுப்பதால் மட்டும் அந்த அதிருப்தி மாறிவிடாது. ஆனால் அபூஹுதைஃபா(ரலி) அவர்களுக்கு மாறியுள்ளது. எனவே இது இவர்களுக்கென குறிப்பாக சொல்லப்பட்டது தான் என்பது தெளிவாகிறது. இது ஸாலிமுக்கு மட்டுமே குறிப் பானது தான் என்பதை ஒரு ஹதீஸும் நமக்குக் கூறுகிறது அது வருமாறு:

ஸைனப் பின்த் அபீ சலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயாரும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான உம்மு சலமா(ரலி) அவர்கள் கூறுவார்கள்: (ஆயிஷா(ரலி) அவர்களைத் தவிர) நபி(ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் எவரும் பால் குடிப்பருவத்தைக் கடந்த ஒருவருக்குப் பால் கொடுத்து (‘செவிலித்தாய் மகன்’ என்ற) உறவை ஏற்படுத்தி அவரைத் தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்து விட்டனர். மேலும் நபி(ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ”அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஸாம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனுமதித்தார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். (பால்குடிப் பருவத்தைக் கடந்த பின்) பால்குடி உறவை ஏற்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்க ளது வீட்டிற்குள்வந்ததுமில்லை; எங்களை(த் திரையின்றிப் பார்த்ததுமில்லைஎன்று கூறினர்.நூல்: முஸ்லிம் 2883
ஆக நபி(ஸல்) அவர்களின் மனைவியர் எல்லாம் ஸாலிமுக்கு மட்டுமே உரிய அனுமதி என்று தான் கூறியுள்ளார்கள். இதில் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மட்டும் மாற்றுக் கருத்து இருந்துள்ளது.

சஹ்லா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) உத்தரவிட்டதை வைத்து மற்றவர்களும் அப்படிச் செய்யலாம் என்றுஆயிஷா(ரலி) அவர்கள் கூறும் தகவல் முஸ்லிமின் 2881, 2882 ஆகிய அறிவிப்பில் இடம் பெறுகிறது. அத்துடன் தன் வீட்டுக்கு வரும் ஒரு பருவ வயதை நெருங்கிய சிறுவன் விஷயத்தில் இவ்வாறு செயல்படுத்தியதாகவும் அந்த அறிவிப்புக்களில் இடம் பெற்றுள்ளது.

ஆனால் நபியின் ஏனைய மனைவியரின் கூற்றுத்தான் வலுவாக உள்ளது. ஏனென்றால் ஆயிஷா (ரலி) அவர்கள் தனது நிலைப்பாட்டுக்கு மேற் கோளாகக் காட்டுவது சஹ்லா (ரலி) அவர்களின் ஹதீஸைத்தான்.

அந்த ஹதீஸில் சஹ்லா(ரலி) அவர்கள், தனது கணவர் அபூஹுதைஃபா வின் மனதில் ஏற்பட்ட அதிருப்தியை நபியிடம் முறை யிடுகிறார்கள். அதுதான் பிரச்சனையே, அதற்குத்தான் நபி(ஸல்) அவர்கள் தீர்வு சொல்கிறார்கள்.

பெண்கள் தமது வீட்டுக்கு வேலைக்கு வரும் ஆண்களிடம் இவ்வாறு பால்குடி உறவை ஏற் படுத்திக் கொள்வது பொது வானது என்றால் நபி(ஸல்) அவர்கள் அந்த சமூகத்துக்குப் பொதுவாகச் சொல்லி யிருப்பார்கள். அந்த சஹாபாக்கள் சமுதாயத்தில் பலரும் அப்படிச் செய்திருப்பார்கள். நபியவர்களின் ஏனைய மனைவி மார்கள் ஸாலிமுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட சிறப்பு அனுமதி என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமுமே இருந்திருக்காது.

எனவே நபியின் மற்ற மனைவிய ரின் கூற்றே சரியானது என்பது புலனாகிறது. ஸாலிம்(ரலி) அவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று நாம் கேட்டு உறுதியான ஒரு சம்பவத்தை மறுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் இது நபியின் ஓர் அற்புதம் என்று சொல்லத்தக்க விதத்தில் அமைந்துள்ளது. அபூ ஹுதைஃபா(ரலி) அவர்களின் மனதில்அதிருப்தி ஏற்பட்டுள்ளதை சஹ்லா (ரலி) அவர்கள் நபியிடம் முறையிட்டதும் ஸாலிமுக்கு பால் கொடுத்து விடு அபூஹுதைஃபாவின் மனதில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மறைந்து விடும் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நபியவர்கள் சொன் னது போலவே அபூஹுதைஃபா வின் அதிருப்தி மறைந்தது. சஹ்லா (ரலி) அவர்கள் மீண்டும் நபியிடம் திரும்பி வந்து அபூஹுதைஃபா(ரலி) அவர்களின் மனதில் ஏற்பட்ட அதிருப்தி மறைந்து விட்டது என்று சொன்னார்கள்.

பொதுவாக இப்படி நடக்காது, ஆகவே இதை நபியவர்களின் அற்புதங்களில் ஒன்று என்று சொல்வதும் சரிதான்!

விநோதக் கேள்வி:
இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்தது உண்மை என்று கூறி ஹதீஸை நம்பும் மக்களை நோக்கி இந்த ஹதீஸ் நிராகரிப்பாளர், ”இதன் அடிப்படையில் நடக் கலாம் என்று ஃபத்வா வழங்குவார்களா? நிச்சயம் வழங்க மாட்டார் கள்” என்று கூறுகிறார்.

இது இவர் ஹதீஸ்களை ஒழுங்காக படிப்பதில்லை என்பதற்கு பெரிய ஆதாரம். ஏனென்றால் இவரே எடுத் தெழுதியுள்ள முஸ்லிம் நூலின் ஸாம் (ரலி) பால்குடி தொடர்பான பாடத்தின் இறுதி ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் மனைவியர் எல்லோரும் லி ஆயிஷா(ரலி) அவர் கள் தவிர ஸாலிம்(ரலி) அவர்களுக்கு மட்டுமே நபி(ஸல்) அவர் கள் கொடுத்த அனுமதி என்று கூறியது இடம் பெறுகிறது. நூல் : முஸ்லிம் 2883

அரிதான மிகச் சிலரைத் தவிர மார்க்கம் கற்ற எல்லோரும் அக்காலத்திலும் இக்காலத்திலும் இதனைத்தான் சொல்கிறார்கள் என்பது பிரபலம், இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் இந்தக் கேள்வியை கேட்கிறாரா? அல்லது பொதுமக்களை மிரட்சிஅடையச் செய்வதற்காக கேட்கிறாரா? அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இந்த ஹதீஸை மறுக்கவே முடியாது
ஏனென்றால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான பிரபல தாபிஈ இப்னு அபீமுலைகா இந்த ஹதீஸை மூத்த தாபிஈ காசிம் பின் முஹம்மதிடம் செவியுற்றபின் ஒரு வருட காலம் யாருக்கும் அறிவிக்காமல் அச்சத்துடன் இருந்துள்ளார். பிறகு காசிம் பின் முஹம்மதுவிடம் இதைச் சொன்ன போது, என்னிடம் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்து நான் உங்களுக்கு அறிவித்ததாக தாராளமாக அறிவியுங்கள் என்று சொன்ன செய்தி முஸ்லிமில் 2880 வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

ஆக இந்த ஹதீஸை அறிவிக்கும் தாபிஈயிடமே இதில் தோன்றும் கேள்வியானால் ஐயம் ஏற்பட்டு அவரிடம் இது உண்மை தான் என்று விளக்கிக் கூறப்பட்டு தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஹதீஸ் மிக வலுவானது. இதன் செய்தி குர்ஆனுக்கு முரண்பாடில்லாமல் முஸ்லிம்களால் புரியப்பட்டே வருகிறது. அனை வரும் உண்மையை அறிந்து கொள்ள அல்லாஹ் நல்லுதவி செய்வானாக!

தொடரும் இன்ஷாஅல்லாஹ்….

நன்றி அல்-ஜன்னத் மாத இதழ்

One comment

  1. Jazakallahu khair! we dont worry about PJ! what is the position of the people who go behind PJ! blindly follow him! majority of those people are not scholars! ordinary people who just read the translations of hadheeth books and watch the dvd’s of PJ! following pj without any verification and they also blame the great sahabas ! this kind of “thaghleedh” is very dangerous to the tamil muslims! Thanks to ALLAH that, HE bring the people of sunnah like “islam kalvi .com” to tear the fake mask of PJ and his ” PJmadhab”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *