Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » [09] பித்அத் வாதிகளின் விஷயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

[09] பித்அத் வாதிகளின் விஷயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-9
1) பித்அத் வாதிகளின் விஷயத்தில் இஸ்லாமிய உம்மத்தின் நிலைப்பாடு
2) அவர்களுக்கு மறுப்புக் கொடுப்பதில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் போக்கு

பித்அத் வாதிகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடு:
அஹ்லுஸ் ஸுன்னத் வவ் ஜமாஅத்தினர் எல்லாக் காலங்களிலும் அவர்களின் செயல்களை நிராகரிப்பவர்களாகவும், அவர்களுக்கு மறுப்புக் கொடுப்பவர்களாவும், அவர்களின் செயல்களை தடுப்பவர்களாகவுமே இருந்து வந்துள்ளனர்.

சில உதாரணங்களை இங்கே தருகிறோம்:
1- உம்மு தர்தா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: ‘ஒரு முறை அபூ தர்தா என்னிடம் கோபமுற்றவர்களாக வந்தார்கள், நான் அவர்களிடம் ஏன் எனக்கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக ‘இவர்கள் அனைவரும்; தொழுகையை நிறைவேற்றுவதைத் தவிர அல்லாஹ்வின் தூதரின் வேறு எந்த விடயத்தையும் இவர்களிடம் நான் காணவில்லை’ (புஹாரி).

2- அம்ரிப்னு யஹ்யா தனது தந்தை அவரது தந்தையிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியை தந்தையிடமிருந்து அறிவிக்கின்றார்: ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீட்டில் ஸுப்ஹுத்தொழுகைக்கு முன்னர் அமர்ந்திருந்தோம். அவர் வெளியிறங்கினால் அவருடன் பள்ளிக்குச் செல்வதற்காக, அவ்வேளை அங்கு வந்த அபூ மூஸா அல் அஷ்அரி (றழி) அவர்கள், அபூ அப்துர் ரஹ்மான் இன்னும் உங்களிடம் வரவில்லையா? எனக் கேட்டார், நாங்கள் இல்லை என்று கூறினோம், அப்போது அவரும் எம்முடன் அமாந்தார் அபூ அப்துர் ரஹ்மான் வரும்வரை, அவர் வெளியே வந்த போது நாம் அனைவரும் அவரிடம் சென்றோம். அப்போது அபூ மூஸா (றழி) அவர்கள் கூறினார்கள்: அபூ அப்துர் ரஹ்மானே! நான் சிறிது நேரத்துக்கு முன்னர் பள்ளிவாயலில் நான் வெறுத்த ஒரு விடயத்தைக் கண்டேன், ஆனாலும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் நன்மையைத் தவிர வேறு எதுவும் அதில் இருப்பதாக நான் காணவில்லை.

அவர் என்ன எனக்கேட்ட போது, அவர் சொன்னார்: ‘நீர் போனால் அதனைக்காண்பீர்’ அல்லாஹ்வினுடைய ஆலயத்தில் தொழுகைகையை எதிர்பார்த்திருக்கும் பல கூட்டங்களைப் பார்த்தேன், அவர்கள் வட்டம் வட்டமாக அமர்ந்து, அவர்களின் கையில் கற்கள் காணப்பட்டன, அவ்வட்டத்தில் இருக்கும் ஒருவர் நூறு தடவை தக்பீர் சொல்லுங்கள் எனச் சொல்கிறார் ஏனையோர் நூறு தடவை தக்பீர் சொல்கின்றனர். நூறு தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்கள்; என்று அவர் சொல்லும் போது ஏனையோர் நூறு தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்கின்றனர், நூறு தடவை ஸுப்ஹானல்லாஹ் சொல்லுங்கள் என்று சொல்லும் போது ஏனையோர் நூறு தடவை ஸுப்ஹானல்லாஹ் சொல்கின்றனர்.

அதை செவியுற்ற அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நீர் அவர்களுக்கு அவர்களது பாவங்களை மட்டுப்படுத்துமாறு ஏவவில்லையா? அவர்களது நல்லறங்கள் வீணாகாமல் இருப்பதற்கு நீர் பொறுப்பாகவில்லையா? எனக் கேட்டுவிட்டு, அவர்கள் வட்டம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த இடத்திற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) சென்றார் அவருடன் நாமும் சென்றோம். அந்த கூட்டத்தாரிடம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்? எனக் கேட்டார் அதற்கு அவர்கள் அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே! தக்பீர், தஹ்லீல், தஹ்மீத், தஸ்பீஹ் செய்து கொண்டிருக்கின்றோம் என்றனர், நீங்கள் உங்கள் பாவங்களை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் நன்மைகள் வீணாகாமல் இருக்க நான் பொறுப்பாளன் எனக்கூறினார்.

முஹம்மதின் சமுதாயமே! உங்களுக்குக் கேடு ஏன் இவ்வளவு விரைவாக அழிவின் பக்கம் செல்கிறீர்கள்!! அன்னாரின் தோழர்களோ உயிருடன் இருக்கின்றனர், அன்னாரது ஆடைகள் கூட இன்னும் உக்கிப் போகவில்லை, அன்னாரது பாத்திரங்கள் இன்னும் உடைந்து விடவில்லை. எனது ஆத்மா எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒரு மார்க்கத்தில் இருக்கின்;;றீர் அது முஹம்மதின் மார்க்கத்தை விட நேர் வழி பெற்றதா? அல்லது வழி கேட்டின் வாயில்களை திறக்கின்றீர்களா?

அதற்கு அவர்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நாம் நன்மையைத் தவிர வேறெதெனையும் நாடவில்லை என்று கூறினர். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எத்தனையோ நன்மையை விரும்பக்கூடியவர்கள் அதை அடைந்து கொள்ளவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமக்குக்கூறினார்கள்: ‘நிச்சயமாக ஒரு கூட்டம் அல்குர்ஆனை ஓதும், ஆனால் அது அவர்களின் தொண்டைக்குழியை தாண்டாது’ அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்தக்கூட்டத்தில் அதிகமானவர்கள் உங்களிலிருந்தா என்பதை நான் அறியமாட்டேன் எனக்கூறிவட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். அம்ரிப்னு ஸலமா சொல்கின்றார்: நஹர்வானுடைய நாளில் அவர்கள் கவாரிஜ்களுடன் இணைந்து நமக்கெதிராக இருந்ததைப் பார்த்தோம்’ (திர்மிதி).

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து நான் எங்கிருந்து இஹ்ராம் அணிவது எனக்கேட்டார்? அதற்கு இமாமவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணியுமாறு பணித்தார்களோ அங்கிருந்து அணிவீராக! என்று சொன்னார். அதற்கு அவர் அதை விட தொலைவிலிருந்து நான் அணிந்தால் என்ன எனக்கேட்டார், நான் அதை சரியாகக்காண வில்லை என இமாம் கூறினார்.

அதற்கு அவர்: அதை நீஙகள் வெறுக்கின்றீரா? எனக்கேட்ட போது நீர் குழப்பத்தில் வீழ்வதை நான் வெறுக்கின்றேன் என இமாம் கூறினார். வந்தவர் நன்மையை அதிகப்படுத்துவதில் என்ன குழப்பம் இருக்கின்றது எனக்கேட்டார்? இமாவர்கள், அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: ‘எவர் அவருடைய (நபியுடைய) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித் துக்கொள்வதையோ அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்’ (அந்நூர் 24:63).

அல்லாஹ்வின் தூதர் குறிப்பாக்காத ஒன்றை சிறப்பெனக்கருதி நீர் குறிப்பாக்குவதை விட வேறு என்ன மிகப்பெரிய குழப்பம் இருக்கின்றது? எல்லாக்காலங்களிலும் அறிஞர்கள் பித்அத்வாதிகளின் பித்அத்துகளை தடுத்துள்ளனர் என்பதற்கு இவை மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
எல்லாப் புகழும அல்லாஹ்வுக்கே சொந்தம்.

பித்அத்வாதிகளுக்கு மறுப்புத் தெரிவிப்பதில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை என்ன?
இதில் அவர்களின் கொள்கை அல்குர்ஆனின், சுன்னாவின் அடிப்படையில் கட்டியெழுப் பப்பட்டதாகும். பித்அத் வாதிகளின் சந்தேகங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில், ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் பதில் அளிப்பது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கையாகும்.

அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் பற்றிப்பிடிப்பதற்கும், பித்அத்துகளையும், புதியவைகளையும் முற்றாக நிராகரிப்பதற்கும், அவர்கள் குர்ஆன் ஸுன்னாவிலிருந்து ஆதாரங்களை முன்வைப்பர். இந்தத் தலைப்புகளில் பல நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன, வழிகெட்ட ஷீயாக்களின், கவாரிஜ்களின், ஜஹ்மிய்யாக்களின், முஃதஸிலாக்களின், அஷாயிராக்களின்;, அடிப்படையான நம்பிக்கைகளில், கொள்கைளில் அவர்களது வழிகெட்ட பித்அத்தான சிந்தனைகளுக்கு மறுப்புக் கொடுக்கப் பட்டுள்ளன.

இந்தத் தலைப்புக்களில் குறிப்பாகவே நூற்கள் எழுதப்பட்டுள்ளன, இமாம் அஹ்மத் ஜஹ்மிய்யாக்களுக்கு மறுப்புக் கொடுத்து தொகுத்த நூலைப் போன்று, உஸ்மான் இப்னு ஸயீதுத் தாரமீயைப் போன்று, ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவிற்கு நூற்கள் இருப்பது போன்று அவரது மாணவர் இமாம் இப்னுல் கையூம், ஷைகு முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் ஏனைய அறிஞர்கள் இந்த வழிகெட்ட பிரிவினர்களுக்கு, கப்று வணங்கிகளுக்கு, ஸுபித்துவ வாதிகளுக்கு கொடுத்த மறுப்புகளை போல. வழி கெட்ட பித்அத் வாதிகளுக்கு மறுப்புக் கொடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட நூல்கள் ஏராளம். உதாரணத்திற்கு சில நூல்களை கீழே தருகிறோம்.


பழமையான தொகுப்புகளில்:

1- கிதாபுல் இஃதிஸாம், இமாம் ஷாதிபிக்குரியது.

2- கிதாப் (இக்திழாஉஸ் ஸிராதல் முஸ்தகீம்) ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவிற்குரியது. இதில் பெரும் பகுதியே பித்அத் வாதிகளுக்கு மறுப்புக் கொடுக்கப் படுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

3- கிதாப் (இன்காருல் ஹவாதிஸ் வல்பிதஃ) இப்னு வழ்ழாஹுக்குரியது.

4- கிதாப் (அல்ஹவாதிஸ் வல்பிதஃ) துர்தூஷிக்குரியது.

5- கிதாப் (அல்பாஇஸ் அலா இன்காரில் பிதஃ வல்ஹவாதிஸ்) அபூஷாமாவுக்குரியது.

6- கிதாப் (மின்ஹாஜுஸ் ஸுன்னதுன் நபவிய்யா பிஃர்ரத்தி அலர் ராபிழா வல்கதரிய்யா). ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவிற்குரியது.

நவீன காலத்து நூற்கள்:

1- கிதாப் (அல் இப்தாஃ பிஃ மழார்ரில் இப்திதாஃ) ஷைகு அலீ மஹ்பூலுக்குரியது.

2- கிதாப் (அஸ்ஸுனன் வல்முப்ததிஆதுல் முதஅல்லிகாத் பில்அத்காரி வஸ்ஸலவாத்). ஷைகு முஹம்மதிப்னு அஹ்மத் அஷ்ஷகீரி அல்ஹவாமிதிக்குரியது.

3- ரிஸாலா (அத்தஹ்தீரு மினல் பிதஃ) அப்துல் அஸீஸ் பின்பாஸுக்குரியது.

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் அறிஞர்கள் பித்அத்துகளை முற்றிலும் நிராகரிக்கக் கூடியவாகளாகவும், பித்அத்வாதிகளுக்கு பல வழிகளிலும் மறுப்புக்கொடுத்துக் கொண்டும் இருக்கின்றனர். பத்திரிகைகள் மூலமாக, சஞ்சிகைகள் மூலமாக, ஊடகங்களின் மூலமாக, ஜும்ஆ உரைகள், சொற் பொழிவுகள், ஒன்று கூடல்கள் மூலமாக இவ்வாறு பல வழிகளிலும் அவைகளுக்கு மறுப்புக் கொடுப்பது முஸ்லிம் உம்மத் பித்அத்துக்கு எதிராக தெளிவான ஒரு பார்வையை ஏற்படுத்திக் கொள்வதற்கும், பித்அத் வாதிகளின் தீமைகளைப் புரிந்து கொள்வதற்கும் மிகப் பெரும் உறுதுணையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *