Featured Posts
Home » நூல்கள் » வழிகெட்ட பிரிவுகள் » பிரிவுகளின் தோற்றம் பற்றிய சுருக்கம்

பிரிவுகளின் தோற்றம் பற்றிய சுருக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹதீஸாகக் கூறப்பட்டதை ஒட்டு மொத்த நபித்தோழர்களும் முழுமனதுடன் அங்கீகரித்ததோடு, தெளிவு தேவைப்பட்ட இடங்களில் விளக்கம் கேட்டு அவற்றை அமுல் செய்தனர்.

சுன்னாவில் இடம் பெறும் ஆதாரபூர்வமான சட்டங்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போன்று தெரிவதையும் தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் அமுல் செய்தனர்.

பிற்காலத்தில் உமர் (ரழி) அவர்களின் கொலையோடு ஃபித்னாவின் வாசல் திறக்கப்பட்டது. வரலாற்றில் ஃபித்னா நிகழ்வு என்றழைக்கப்படும் உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்களின் கொடூர கொலை சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு இஸ்லாமிய ஐக்கியத்தில் பிளவுகள் ஏற்படக் காரணமானது.

அலி (ரழி) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் இரு அணியாகப் பிரிந்தாலும் அகீதாவைப் பாதிக்கின்ற சிந்தனைப் பிரிவாக அது இருக்கவில்லை. ஜமல், ஸிஃப்பீன் போர்கள் நடந்தேறின.

அலி (ரழி) அவர்களின் ஆட்சியின் மத்திய காலப் பகுதியில் கவாரிஜ் கோஷ்டிகள் தோற்றம் பெற்றனர்.

  • ஹதீஸ்கள் அல்குர்ஆனிய வசனங்களுக்கு முரண்படுகின்றன,
  • சிறுதவறு செய்கின்ற முஸ்லிம் கலீஃபா காபிர்,
  • அல்லாஹ் அனுமதிக்கின்ற சமரஸம் தொடர்பான மனித சட்டங்கள் குஃப்ர்,
  • தஹ்கீம் சமாதான நிகழ்வில் கலந்து கொண்ட அபூமூஸா, அம்றுபின் ஆஸ் (ரழி) ஆகியோர், மற்றும் மூத்த ஸஹாக்கள் அனைவரும் காபிர்கள்,
  • பெரும்பாவம் செய்த முஸ்லிம் காஃபிர் போன்ற அம்சங்களில் அதிகமதிகம் தெளிவில்லாது அலட்டிக் கொண்ட கவாரிஜ்களுடன் விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், கலந்துரையாடல் நடத்தப்பட்டன. அவை பயனளிக்கவும் செய்தன.

இதனைத் தொடர்ந்து:

ராஃபிழாக்கள், (அலி (ரழி) அவர்களை எல்லை மீறி நேசிப்போர்) நவாஸிப்கள், அலி (ரழி) அவர்களை எல்லை மீறி தூசிப்போர்) ஆகிய இரு பெரும் பிரிவுகள் தோன்றின.

  • கவாரஜ்களின் கடும்போக்கினால் ஈமானுடன் பாவம் செய்வது குற்றமில்லை என்ற வாதத்தை முன்வைக்கும் முர்ஜிஆ,
  • அவர்களைத் தொடர்ந்து அடியார்கள் தமது செய்லகளைத் தாமே படைத்துக் கொள்கின்றனர்,
  • அல்லாஹ்வுக்கு பண்புகள் அற்ற பெயர்கள் உண்டு பண்புகள் இல்லை,
  • பெரும்பாவம் செய்தோர் மறுமையில் நிரந்தர நரகில் இருப்பர் போன்ற சிந்தனைகளைக் கொண்ட முஃதஸிலா,
  • அவர்களுக்கு நேர் எதிரான ஜப்ரிய்யா போன்ற புதிய சிந்தனைப் பிரிவுகள் தோற்றம் பெற்றன.

இவ்வாறான வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளில் இருந்து தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முஸ்லிம் ஜமாத்தினர் ‘அஹ்லுஸ்ஸுன்னா’ என்று தம்மை அழைத்தனர்.

தமது கொள்கை, கோட்பாடுகளுக்கு மாறான சிந்தனை வாதிகளை அவர்கள் பிரதிபலித்த அந்தந்த சிந்தனைகளைக் கொண்டு அழைத்தனர்.

ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டளவில் சுன்னாவின் அறிவுப் பாரம்பரியம் பரவியதோடு தாபியீன்களில் மத்திய காலப்பகுதியில் குராஸானில் முஜஸ்ஸிமா, (அல்லாஹ்வை உருவகப்படுத்தியோர்), போன்ற பிரிவுகள் தோன்றின.

அப்பாஸிய கலீஃபா மஃமூன் என்பவரும் இக்காலத்தில் ஆட்சியில் இருந்தார். இவர் தர்க்கவியலில் ஆர்வம்காட்டினார். சிறந்த மதிநுட்பம் உடையவராகவும், பகுத்தறிவிற்கு முன்னுரிமை வழங்குபவராகவும் இருந்தார்.

இவர் ஆரம்பகால கிரேக்க நூல்களை பக்தாதிற்கு வரவழைத்து கிரேக்க தத்துவ நூல்களை அரபு மொழிக்கு மொழியாக்கம் செய்தார். இவர் இதற்காக அயராது பாடுபட்டார்.

இதனால் முஸ்லிம் சமூகத்தில் கிரேக்க தத்துவங்கள் உயிர்ப்பிக்கப்பட்டன. கிரேக்க நாகரீகத்திற்கு பாரிய பங்களிப்புச் செய்தவர் என்ற கிரேக்கர்களின் நிரந்தர புகழுக்கு மஃமூனின் இந்த மொழியாக்கச் சேவை காணப்பட்டது.

இதனால், இஸ்லாமிய அறிவுப்பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, கிரேக்க நாகரீத்தின் செல்வாக்கு முஸ்லிம்களுக்குள் ஊடுருவியது. இவ்வளவு காலமும் தலைமறைவாகிக் கிடந்த ஜஹ்மிய்யாக்கள், முஃதஸிலாக்கள், மற்றும் ராஃபிழாக்கள் தமது தலைகளை உயர்த்தத் தொடங்கினர்.

அவர் ‘அல்குர்ஆன் படைக்கப்பட்டது’ என்ற முஃதஸிலாக்களின் புதிய சிந்தனையில் உறுதியாக இருந்ததோடு, அதற்கு உரமூட்டி வளர்த்தானர். இந்த வழிகேட்டினை அங்கீகரிக்காத இமாம்களை தயவு தாட்சண்யம் இன்றிப் பாரிய சோதனைக்குள் தள்ளினார். அவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்.

இதுவரை காலமும் முஸ்லிம் சமூகம் அல்குர்ஆன், ‘அல்லாஹ்வின் யதார்த்தமான பேச்சு என்பதில் ஏகோபித்த நிலையில் இருந்து கொண்டிருந்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
அல்லஹ்வின் கண்ணியத்தைக் குறிக்க அல்லாஹ்வுடன் இணைத்து இடம் பெறும் (ناقة الله)’அல்லாஹ்வின் ஒட்டகம்’ (بيت الله) ‘அல்லாஹ்வின் இல்லம்’ போன்ற சொற்றொடர்கள் எவ்வாறு அவற்றின் கண்ணியத்தைக் குறிக்க குறிப்பிடுவோமா அவ்வாறுதான் كلام الله ‘அல்லாஹ்வின் பேச்சு’ என்பதும் எனம் விளக்கம் தந்தனர்.

அது மாத்திரமின்றி, هذه آيات الإضافات لا آيات الصفات ‘இவை, அல்லாஹ்வுடன் அவனது கண்ணியத்தை வெளிக்காட்ட வந்துள்ள வசனங்களே அன்றி, அவை அவனது பண்புகளைக் குறிக்க வந்தவை அல்ல’ என்றும் வாதித்தனர்.

அல்லாஹ் தவிர்ந்த அனைத்துப் படைப்புக்களும் படைக்கப்பட்டவைகளாக இருப்பின், அல்குர்ஆன் மாத்திரம் எவ்வாறு படைக்கப்பட்டதாக இருக்க முடியும் என்றும் வாதித்தனர்.

முஃதஸிலாக்களின் இந்த விளக்கத்ததை மஃமூன் அங்கீகரித்த்தது மட்டுமின்றி சுன்னா அறிஞர்களையும், மக்களையும் கடுமையாக நடத்தினார். ‘அல்குர்ஆன் படைக்கப்பட்டது’ என்ற முஃதஸிலாக்களின் புதிய சிந்தனையில் மஃமூன் உறுதியாக இருந்ததோடு அந்த வழிகேட்டினுள் மக்களையும் தள்ளினார்.

சுன்னா அறிஞர்கள் ‘ அல்லாஹ்வின் பண்புகளாக இடம் பெறும் வசனங்கள் அவனது யதார்த்தமான பண்பைக் குறிக்கின்றன ‘ என்று வாதிட்டு ‘முஃதஸிலாக்களின் விளக்கம் குர்ஆனுக்கும், நபி (ஸல்) அவர்களின் விளக்கத்திற்கும் முரணானது’ என்றும் விளக்கமளித்தனர்.

இந்த வழிகேட்டை தைரியமாக எதிர்த்துப் போராடிய அறிஞர்கள் மஃமூனால் சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் முக்கியமானவராகும்.

மஃமூன் வழிகெட்ட சிந்தனைகளை உள்வாங்கி பாரியதொரு சோதனையை முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவித்த நிலையில் ஹி: 218ல் மரணிக்கின்றார்.
((இந்தக் குறிப்புக்களில் பெரும்பாலானவைகள் இமாம் தஹபி (ரஹ்) அவர்களின் سير أعلام النبلاء – (11 ஃ 236) என்ற கிரந்தத்தைத் தளுவியதாகும்)

இந்த வரலாற்றுப் பின்னணியைப் அவதானமாக நோக்கின்ற போது சிறந்த வஹியின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள், சிறந்த நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் போன்றவர்களின் வழிமுறையை விட்டும் தூரமானதும்,
மார்க்கத்தில் புதிதாகப் புகுந்த, புகுத்தப்பட்ட மல்டி சிந்தனைகளின் வெளிப்பாடுகளுமே இவ்வாறான வழிகேடுகள் தோற்றம் பெற்றுள்ளன என்பது புலப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *