Featured Posts
Home » பொதுவானவை » இறை நம்பிக்கை

இறை நம்பிக்கை

– M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

அல்லாஹ் ஒருவனே கடவுள்.

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை விளக்கப்படுத்துவது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும். இதன் அர்த்தம் உண்மையாகவே வணங்கி வழிபடுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்பதாகும். (இக்கலிமா) இவ்வார்த்தைக்காகவே இந்த வானம் பூமி மற்றும் சகல வஸ்துகளும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும். அவனை அறிந்து கொள்ளும் வழிமுறை என்ன என்பதை அல்குர்ஆன் மூலமாகவும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகவும் அல்லாஹ் தெளிவாக விபரித்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்:

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

நிச்சயமாக வணங்கப்படத் தகுதியானவன் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நீதியை நிலைநாட்டியவனான அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும் வானவர்களும் அறிவுடையோரும் சாட்சி கூறுகின்றனர். வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாவான். (அல்குர்ஆன் 3:18)

அல்லாஹ், கடவுள் என்பதற்கான அத்தாட்சிகள்:

அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதை நிரூபிப்பதற்காக வானங்கள் பூமிகளில் அல்லாஹ் நிறையவே அத்தாட்சிகளை வைத்துள்ளான். தன்னுடைய படைப்பினங்கள் குறித்து சிந்திக்குமாறு கட்டளையிடுகிறான். ஒவ்வொரு அணுவும் அல்லாஹ்வின் வல்லமையினால் படைக்கப்பட்டுள்ளதே தவிர தானாக உருவானதல்ல என்பதை அல்லாஹ் மனிதனுக்கு பல்வேறு அத்தாட்சிகளுடன் காண்பித்துள்ளான்.

ஒரு துளி நீரிலிருந்து உருவாக்கும் மனிதனின் படைப்பைப் பற்றியும், தாயின் கருவரையில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்கு மத்தியில் வளர்ச்சிப் பெற்றுவரும் சிசுவைப்பற்றியும், மனிதனுக்கு அத்தாட்சியாக அல்லாஹ் குர்ஆனில் காண்பிக்கிறான். இத்தகைய அற்புதமான படைப்பு இயற்கையாக உருவாகின்றதா அல்லது உருவாக்கப்படுகின்றதா என்பதை சிந்திக்கச் சொல்கிறான்.

أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ [الطور

எப்பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டனரா அல்லது அவர்கள் படைக்கின்றனரா? (அல்குர்ஆன் 52:35) என்று அல்லாஹ் மக்களிடம் வினவுகிறான்.

பசித்ததும் குழந்தை தாயிடம் பாலை உருஞ்சுகிறது.
குழந்தை தவறியதும் தாய் பதறிப்போகிறாள்.
மேனியில் பட்ட காயம் முழு உடலையும் வறுத்துகிறது.
கவலை வந்ததும் கண்ணீர் சொட்டுகிறது.
குஞ்சுகள் நசுக்கப்படாமல் இருக்க கோழி தன் குஞ்சுகளை அரவணைக்கிறது. இவை இயற்கையானதா செயற்கையானதா?

நிச்சயமாக அனைத்தும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட இயற்கைகளே. இந்த இயற்கைகளே அல்லாஹ் ஒருவன் உண்டு என்பதற்கு சாட்சியாகும்.

إِنَّ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِلْمُؤْمِنِينَ , وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَابَّةٍ آيَاتٌ لِقَوْمٍ يُوقِنُونَ , وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ رِزْقٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيفِ الرِّيَاحِ آيَاتٌ لِقَوْمٍ يَعْقِلُونَ , تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَ اللَّهِ وَآيَاتِهِ يُؤْمِنُونَ [الجاثية:

நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியில் நம்பிக்கையாளர்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களைப் படைத்திருப்பதிலும், உயிரினங்களை பரவச் செய்திருப்பதிலும், உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமூகத்திற்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து மழையை அல்லாஹ் இறக்கி பூமி இறந்தபின் அதனை அவன் இதன் மூலம் உயிர்பிப்பதிலும், காற்றுக்களைத் (பல திசைகளில்) சுழலச் செய்வதிலும் விளங்கிக் கொள்ளும் சமூகத்திற்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.(45:2-6)

فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ } [الروم: 30

எனவே(நபியே) மார்க்கத்திற்காக உமது முகத்தை நேரிய வழியில் நிலை நிறுத்துவீராக. (இதுவே) அல்லாஹ் மனிதர்களைப் படைத்திருக்கும் அவனுடைய இயற்கையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமுமில்லை. இதுவே நிலையான மார்க்கமாகும். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

எந்த முன்மாதிரியுமின்றி வானம் பூமிகளைப் படைத்த அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலுள்ள அர்ஷின் மேலாக இருக்கிறான். அவன் எங்கும் நிறைந்தவனல்ல. எதிலும் சங்கமித்தவனுமல்ல. அவன் தனது ஆற்றலுக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு உலகை ஆளுகின்றான்.

அல்லாஹ் கூறுகிறான்:

الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى

அர்ரஹ்மான் அர்ஷின் மீதானான். (அல்குர்ஆன் 20:5)

நீங்கள் அல்லாஹ்விடம் (சுவர்க்கத்தைக்) கேட்டால் பிர்தவுஸ் எனும் சுவர்க்கத்தையே கேளுங்கள். ஏனெனில், அதுவே சுவர்க்கத்தின் மிக உயர்ந்த படித்தரமுமாகும். அதற்கு மேலே அர்ரஹ்மானின் அர்ஷ் இருக்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி-7423)

அல்லாஹவின் திருப்பெயர்கள்

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உண்டு. அத்திருநாமங்களை கொண்டு அடியார்கள் அழைப்பதையும் பிரார்த்திப்பதையும் அல்லாஹ் விரும்புகிறான்.

قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى

அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன என நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 17:110)

நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி-7392)

அல்லாஹ்வுக்கு குடும்பங்கள் இல்லை.

அல்லாஹ் தனித்தவன். இணை துணையற்றவன். அவனுக்கு மனைவி மக்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் எதுவும் கிடையாது. அவன் பல அவதாரங்கள் எடுப்பவனமல்ல. மனிதர்களை ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் படைத்தவனுமல்ல. தனக்கென்று யாரையும் பிள்ளைகளாக தேர்ந்தெடுத்தவனுமல்ல.

அல்லாஹ் கூறுகிறான்:

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ , اللَّهُ الصَّمَدُ , لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ , وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

நபியே நீர் கூறுவீராக அல்லாஹ் ஒருவன் தான்.
அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன்.
அவன் எவரையும் பெறவுமில்லை. அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை.
அவனுக்கு நிகராக எவருமில்லை.(112:1-4)

بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ} [الأنعام: 101

(அல்லாஹ்) வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவியே இல்லாதிருக்க அவனுக்கு பிள்ளை எப்படி இருக்க முடியும்? அவனே யாவற்றையும் படைத்தவன். யாவற்றையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:101)

அல்லாஹ்வை இம்மையில் பார்க்க முடியாது. ஏக வல்லமையுடைய அல்லாஹ்வை பார்க்க விரும்புகின்றவர்களுக்கு மறுமையில் அப்பாக்கியத்தை அல்லாஹ் வழங்குகிறான். அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழ்ந்தவர்கள் அவனை அஞ்சி நடந்தவர்கள் (முஃமின்கள்) மறுமையில் அல்லாஹ்வை பார்க்க முடியும். உலகில் அல்லாஹ்வைப் பார்த்த ஒருவரும் இல்லை. எவரும் உலகில் அல்லாஹ்வை பார்க்கவும் முடியாது. அல்லாஹ் கூறுகிறான்:

لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ} [الأنعام: 103

பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகளை அடைந்து கொள்கிறான். இன்னும் அவனே நுட்பமானவன். நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:103)

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ , إِلَى رَبِّهَا نَاظِرَةٌ } [القيامة: 22، 23

அந்நாளில் சில முகங்கள் தமது இரட்சகனைப் பார்த்து மகிழ்ச்சியுற்றிருக்கும். (அல்குர்ஆன் 75: 22-23)

அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இரட்சகனை காண்போமா? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா என்று கேட்டார்கள். மக்கள் இல்லை அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே என மக்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் உங்கள் இரட்சகனை நீங்கள் (மறுமையில்) காண்பீர்கள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி-7437)

அல்லாஹ் அழிந்து விடக் கூடியவனல்ல.

உலகத்தைப் படைத்த அல்லாஹ் அதனை ஒருநாளில் அழித்து விடுவதாகவும் அதன் பின் மறுமை நாளை உண்டாக்குவதாகவும் அந்நாளில் மனிதர்களின் செயற்பாடுகளுக்கு விசாரணை நடத்தி கூலி வழங்குவதாகவும் குர்ஆனில் கூறுகிறான். இந்த பிரபஞ்சம் அழிந்துவிடக் கூடியது என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் நித்திய ஜீவனான அல்லாஹ் அழிந்து விடக் கூடியவனல்ல.

மேலும் அல்லாஹ் நித்திய ஜீவன். அவனைத் தவிர அனைத்தும் அழியக் கூடியதே என்றும் கூறுகிறான்.

وَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا إِلَهَ إِلَّا هُوَ كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ

அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் அழைக்க வேண்டாம். வணங்கப்படத் தகுதியானவன் (அல்லாஹ்) அவனைத் தவிர வேறு யாருமில்லை. (அல்லாஹ்வாகிய) அவனது (சங்கையான) முகத்தைத் தவிர அனைத்தும் அழியக் கூடியவையே. அதிகாரம் அவனுக்கே உரித்தானது. மேலும் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 28:88)

… யா அல்லாஹ்! நீயே முதலாமானவன். உனக்கு முன் எதுவும் இல்லை. நீயே பிந்தியவன். (இறுதியானவன்) உனக்கு பின் எதுவும் இல்லை… என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். (நூல்: முஸ்லிம்)

One comment

  1. Allah is great

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *