Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » ஏ.பீ.எம். இத்ரீஸின் குருட்டுப் பார்வை

ஏ.பீ.எம். இத்ரீஸின் குருட்டுப் பார்வை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
ரிஸானா நபீக் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் “ரிஸானா நபீக் மனச்சாட்சியின் படுகொலை” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் ரிஸானா விவகாரம் குறித்து அவர் எழுதும் செய்திகளை விட இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை பழங்குடி முறை என விமர்சிப்பது பலருக்கும் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இஜ்திஹாத் என்ற பெயரில் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் மாற்றுக் கருத்துக் கூறும் இவரது இந்த நடை முறை தெளிவான வழிகேடு என்பதை உணர்த்துவது அவசியமாகின்றது. இவர் ஒரு எழுத்தாளர் என்பதால் குப்ர் நிறைந்த இவரது குருட்டுவாதம் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் விழிப்புணர்வூட்ட வேண்டியுள்ளது. எனவே, இந்நூல் குறித்து சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நூலின் முன்னுரையில் அவர் இப்படிக் கூறுகின்றார்.

“விசுவாசிக்கும் இறையியல் விடயங் களையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளாமல் சிந்தித்துப் பார்த்தே ஏற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.”
(பக்கம்: 4)

ஈமான் சம்பந்தப்பட்ட விடயங்களில் சொல்லப்பட்டவற்றை அப்படியே நம்ப வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இப்படியிருக்க ஈமான் சம்பந்தப்பட்ட விடயங்களையும் சிந்தித்தே ஏற்றுக் கொள்ள வேண்டும் என தீவிர முஃதஸிலா வாதத்தை இஸ்லாமாகக் காட்டி மக்களை வழிகெடுக்க முனைகின்றார் சகோதரர் இத்ரீஸ் அவர்கள்.

இஜ்திஹாத் என்ற பெயரில் மரண தண்டனையைக் கொச்சைப் படுத்தும் இவரது ஆய்வுத்திறன் என்ன என்பதைப் புரிந்து கொண்டால்தான் இத்தகைய பொட்டப் பார்வை உள்ளவர்களெல்லாம் இஜ்திஹாத் செய்தால் அதன் இலட்சணம் எந்தத் தரத்தில் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதோ இவரது ஆய்வுத் திறமையைப் பாருங்கள்.

ரிஸானா சிறையில் இருக்கும் போது டாக்டர் கிபாயா இப்திகார் அவர்களிடம் “எதற்காக இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக் கிறேன்” என்று கேள்வி எழுப்பினாராம். இவ்வாறே மவ்லவி ஏ.ஜே.எம். மக்தூம் அவர்களிடம் “நான் எப்போது வீட்டுக்குப் பேவேன்” என்று கேட்டாராம். இதை வைத்து இவரது ஆய்வின் மூலம் அவர் எடுத்த முடிவைப் பாருங்கள்.

“இவர்களின் கூற்றுப்படி ரிஸானாவுக்கு இறுதி நேரம் வரை எதற்காகத் தான் சிறை வைக்கப்பட்டிருக்கின்றேன் என்றோ, எதற்காகத் தான் கழுத்து வெட்டப்படுகின்றேன் என்றோ தெரிந்திருக்கவில்லை.” (பக்கம்: 31)

ரிஸானாவின் கேள்வியை வைத்து இவர் கண்டு பிடித்த முடிவுதான், அவள் எதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறாள் என்பது அவளுக்கே தெரியாதாம். உலகுக்கே தெரியும் என்று ஊடகங்கள் சொல்ல, ரிஸானாவின் வார்த்தையை வைத்து இப்படியான சொத்தை வாதத்தைத் தெரிவிப்பவர் இஜ்திஹாத் செய்தால் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இப்படி ஆய்வு செய்து அதிரடியான முடிவை வெளியிட்ட சகோதரர் இத்ரீஸ் இந்நூலின் 6-7 ஆம் பக்கங்களில் “ரிஸானா நபீக் வாக்கு மூலம்” என்ற தலைப்பில் அவரது கடிதத்தைப் பிரசுரித்துள்ளார். அதில் ரிஸானா தனது நிலைப்பாட்டைத் தெளிவாக எழுதியுள்ளார். தனது நூலின் 6-7 ஆம் பக்கங்களை இவர் படித்தாலே இவரது வாதம் போலியானது, தனக்கு ஏற்பட்டது என்ன? ஏற்படப் போவது என்ன? என்பதை ரிஸானா புரிந்திருந்தாள். ஆனால் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது போல் அல்லது அதைவிட அதிகமாக அவளுக்கு இருந்திருக்கலாம். அந்த அடிப்படையில் தான் அந்தப் பெண் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ரிஸானாவின் எதிர்பார்ப்புக்காக வந்த இந்தக் கேள்வியை வைத்து என்ன நடந்தது என்பதே ரிஸானாவுக்குத் தெரியாது என்பது விளங்குகின்றது என்ற அபத்தமான முடிவை எடுத்தவர் ஷரீஆ சம்பந்தமாக விமர்சிக்கப் புகுந்தால் அது எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

சகோதரர் இத்ரீஸை நான் மிகப் பெரிய எழுத்தாளர் என எண்ணியிருந்தேன். இவர் வைக்கும் சொத்தை வாதங்களைப் பார்க்கும் போது அவரது அறிவுத் திறனில் இருந்த நம்பிக்கையும் அகன்றுவிட்டது.

ரிஸானா இங்கு கொல்வதற்காக விமானம் ஏறிச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையைப் போக்கத்தான் செல்கிறாள், (பக்கம்: 35)

ஏதோ இலங்கையிலிருந்து கொலை செய்வதற்காக ரிஸானா திட்டமிட்டு அனுப்பப் பட்டதாகத்தான் சவுதியின் நீதித்துறை நினைக்கின்றது போலும்.. (பக்கம்: 5)

ரிஸானா கொலை செய்யவா அங்கு போனாள் என்று கேட்கிறார். சவூதியும் ரிஸானாவின் எஜமான்களும் ரிஸானாவின் மீது கொலைப் பழி சுமத்துவதற்காகவா காசு கொடுத்து ரிஸானாவை வரவழைத்தார்கள்? என்று இவர் சிந்திக்காததன் மூலம் நியாயமான சிந்தனைப் போக்கும் இவரிடம் இல்லை என்பது புலப்படுகின்றது.

ஒருவர் தனக்குத்தானே முரண்படுவது தான் அவன் உச்சகட்ட மனக் குழப்பத்தில் இருக்கின்றான் என்பதற்கு ஆதாரமாகும்.

ஐரோப்பியர்கள் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் உள்நோக்கம் பற்றிப் பார்க்கக் கூடாது என இவர் கூறும் போது இப்படி எழுதுகின்றார்.

விமர்சனங்களை முன்வைப்பவர்களின் உள் நோக்கங்களைப் பற்றி நோன்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் இருந்தால் நமக்கென்ன?…….
(பக்கம்: 6)

இப்படிக் கூறி ஐரோப்பிய துதிபாடியவர் தனக்கு உடன்பாடில்லாத முஸ்லிம்களின் கருத்துக்கள், செயற்பாடுகள் அனைத்துக்கும் உள்நோக்கம் கற்பிக்கின்றார்.

பெண்கள் வெளிநாட்டுக்குப் பணிப் பெண்களாகத் தனியாகச் செல்வதைத் தகுந்த காரணங்களைக் காட்டி இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்க்கின்றனர். இவர் இத்தகையவர்களின் கருத்துக்குக் கற்பிக்கும் உள்நோக்கத்தைப் பாருங்கள்.

“…… பெண்களை ஐந்து நேரம் பள்ளிக்கு அனுப்பி அகபா அரசியல் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட வைத்து நபி(ச) அவர்கள் உருவாக்கிய முஸ்லிம் பெண்களை நோக்கி இவ்வாறு சொல்வது ஆணாதிக்க மனோபாவம் கொண்ட சமய வாதிகளின் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்தாகவே நாம் எடுக்க வேண்டும்.”
(பக்கம்: 38)

இவரது பொட்டப் பார்வைக்குப் பெண்கள் பள்ளிக்குப் போவதும் வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் அந்நிய வீட்டில் தங்குவதும் ஒன்றாகத் தெரிகின்றது என்றால் இவரது ஆய்வுப் பார்வை எவ்வளவு அதள பாதாளத்தில் இருக்கின்றது என்று புரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்று கூறுபவர்கள் ஆணாதிக்கவாதிகளாம். அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களாம். பெண்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஆணாதிக்க அரசியலில் உள்நோக்கம் கொண்ட நாங்கள் ஷரீஆவின் பெயரால் என்னவும் செய்வோம் என்று சொல்பவர்களாம் என்றெல்லாம் உளறுகின்றார். ஐரோப்பிய னுக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கும் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாதாம், அரபியனுக்கும் ஆலிம்களுக்கும் அவர் உள்நோக்கம் கற்பிப்பாராம்.

ரிஸானா விவகாரத்தில் பலரது மௌனத்துக்கு சகோதரர் இத்ரீஸ் அவர்கள் கற்பிக்கும் இழிவான உள்நோக்கத்தைப் பாருங்கள்.

“சவூதியின் குர்பானிகளுக்காக பிச்சைப் பாத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கும் நம் நாட்டு ஏஜென்ட்டுகளும் அவர்கள் கட்டிக் கொடுக்கும் பள்ளிவாயல்களில் தர்மகர்த்தாக்களாக மாறுவதற்கு துடியாத் துடித்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சார காவலாளிகளுக்கும் சவுதியின் இந்தப் பொட்டப் பக்கம் தெரிந்தாலும் தெரியாததைப் போல நடிக்கின்றார்கள். அவர்களுக்கு ஏழைத் தொழிலாளிப் பெண்ணான ரிஸானாவின் உயிர் குர்பான் காசுக்கு முன்னால் தூசு என்று நினைக்கின்றேன். அரபுலக உலமாக்களின் மஜ்லிசுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் மௌனம் காப்பதற்கான காரணிகளும் சவுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தூங்கி தமது துணைவியர்களுக்கு நகைகளை வாங்கிக் கொண்டு வழியில் உம்றாச் செய்வது தடைப்பட்டு விடும் என்ற பயம்தான்….”
(பக்கம்: 21)

உள்நோக்கம் பற்றி நோண்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றவர் இவ்வாறு நோண்டிக் கொண்டிருக்கின்றார் என்றால் இவர் தனக்குத் தானே முரண்படும் மனக் குழப்பத்தில் இருக்கின்றார் என்பது அர்த்தமாகும். இத்தகைய குழப்ப நிலையில் இருந்து கொண்டு குருட்டுப் பர்வையும் கோணல் புத்தியும் கொண்டு இவர் இஜ்திஹாத் செய்தால் குளறுபடிதான் பிறக்கும் என்று நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.

குர்பான், பள்ளி தர்மகர்த்தா, சவுதி ஹோட்டல், உம்றா, மனைவிக்கு நகை என்று புலம்புகின்றாரே இது ஏன் தெரியுமா? இது ஒரு மனநோய். இதை அவரே கூறுகின்றார் கேளுங்கள்.

“……. நான் செய்ய வேண்டியதை இன்னொருவர் திறம்பட செய்யும் போது அதைப் பெறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அவனது உள்நோக்கத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் நோயாகும்”
(பக்கம்: 34)

தன்னாலும் பள்ளி கட்ட முடியவில்லை, குர்பான் கொடுக்க முடியவில்லை என்ற ஆற்றாமையால் அவர் உள்நோக்கம் கற்பிக்கின்றார் என அவரே சான்று கொடுக்கின்றார். அவரது இந்த வாசகம் எனக்கு மனநோய் இருக்கின்றது. என அவரே, அவருக்கு அளித்துக் கொள்ளும் சான்றாக மாறியுள்ளது. இவர் இஜ்திஹாத் செய்யாமல் ஒர் நல்ல மனநல மருத்துவரை நாடுவதே நல்லதாகும்.

இவரது பொட்டப் பார்வைக்கும், புலம்பலுக்கும் மற்றுமொரு ஆதாரத்தைப் பாருங்கள்.

“சாதாரண மார்க்கத்தில் புகுந்த நூதன அனுஷ்டானங்களை மாபெரும் ஷிர்க்காக, குப்ராக (மார்க்க விரோதச் செயல்களாகக்) கருதும் அளவுக்கு சட்டமியற்றும் அதிகாரத்தை அல்லாஹ் அல்லாத சுஊத் மன்னர் பரம்பரைக்குக் கொடுப்பதை எந்த சவுதி ஏஜென்டுகளும் விமர்சிக்கமாட்டார்கள்.”
(பக்கம்: 28)

சஊத் பரம்பரைக்கு மார்க்க சட்டமியற்றும் அதிகாரத்தை யார் கொடுத்தது? நூதன அனுஷ;டானங்களை பித்அத் என்றுதான் கூறுவார்கள். குப்ர், ஷpர்க் என யார் கூறினர்?

பொதுவான சட்டமியற்றுவதை அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கூறும் இவர் அல்லாஹ் இயற்றிய சட்டத்திலேயே மாற்றம் வேண்டும் எனக் கூறி அல்லாஹ்வுக்கே பாடம் சொல்லிக் கொடுக்க முற்படுவதைப் பாருங்கள்.

“பழிக்குப் பழி என்பது 21 ஆம் நூற்றாண்டிலும் பழங்குடித் தன்மையிலும் காட்டு மிராண்டி மனோபாவமும் கொண்ட சவுதி சமூகத்திற்குச் சரியானதாகத் தென்படலாம். ஆனால் அதுதான் மிக உயர்ந்த நீதியோ, மிக உன்னதமான இஸ்லாத்தின் அறக் கோட்பாடோ அல்ல. ஆனால், நம் நாட்டு முல்லாக்களும் கலாசாரக் காவலாளிகளும் பழங்குடிப் பிற்போக்குவாத வழக்கங்களை இஸ்லாத்திpன் உன்னத இலட்சிய விதிகளாக இன்னும் கருதிக் கொண்டிருப்பதுதான் கவலையளிக்கின்றது.”
(பக்கம்: 17)

இதன் மூலம் மரண தண்டனையைப் பிற் போக்கு வாதமாகவும், பழங்குடி மரபாகவும், 21 ஆம் நூற்றாண்டிற்கு ஒத்துவராத சட்டமாகவும் சித்தரிக்க முற்படுகின்றார். உண்மையில் இவரின் நிலைதான் கவலைக்கிடமானதாகும்.

“அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நம் காலத்தில் எந்த முஸ்லிமும் மாற்றுக் கொண்டிருக்க முடியாது. அப்படியிருக்க குர்ஆனில் விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தண்டனை முறைகளை ஒழிப்பதை மட்டும் ஏன் ஒருவர் எதிர்க்க வேண்டும்…….”
(பக்கம்: 18)

மரண தண்டனை மட்டுமில்லாமல் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் பலவற்றையும் ஒழிக்க வேண்டும் என வாதிடும் இவர் ஐரோப்பியர்களின் அடிவருடியாகவும் இஸ்லாமிய எதிர்ப்புச் சக்திகளின் ஏஜென்டாகவும் செயற்படுகின்றார் என்றே எண்ண வேண்டியுள்ளது.

“பழிக்குப் பழி வாங்குவதில் வாழ்விருக்கின்றது” என்று குர்ஆன் கூறுவதைக் குறிப்பிட்டு இவர் எழுதுவதைப் பாருங்கள்.

“”பழிவாங்குதல் என்ற சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு இருக்கின்றது” (2:179) என்று குர்ஆன் கூறுகின்றது. பழிக்குப் பழி வாங்குவதே வாழ்வின் அறுதியும் இறுதியுமான குறிக்கோள் அல்ல. பழிக்குப் பழி எனும் ஒரு கருத்தாக்கம் ஒரு பழங்குடிச் சமூகத்தின் அக்கால சமூகவியல் கண்ணோட்டம் மட்டுமே அதைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது அவ்வளவுதான்…..”
(பக்கம்: 18)

இப்படி அப்பட்டமாக குர்ஆனின் கருத்தைத் திரிவுபடுத்தும் இவரது ஈமான் புதுப்பிக்கப்பட வேண்டியதாகும். ரிஸானா விவகாரத்தில் சவூதி அரசு மரண தண்டனையை மட்டும்தான் அறுதியான, இறுதியான தீர்வு என்று கூறவில்லை. பெற்றோர்களிடமிருந்து மன்னிப்பைப் பெற அரசு முயன்றது. நாயிப் முயன்றார். இளவரசர் ஸல்மான் முயன்றார். இழப்பீட்டைக் கூட அவர் வழங்க முயன்றார். இருந்தும் சட்டப்படி மன்னிக்க வேண்டிய தாய் மன்னிக்கவில்லை. இந்த நல்ல பக்கம் எல்லாம் பொட்டப்பக்கம் பார்த்துப் பழக்கப்பட்ட இத்ரீசுக்குப் புலப்படாதது புதினம் அல்ல.

இவர் போற்றும் ஒரு ஜனநாயக அரசாக இருந்தால் ஜனாதிபதி அந்த மன்னிப்பை வழங்கியிருப்பார் அல்லது வெள்ளை வேன் மூலம் கடத்தி மன்னிப்பை வாங்கியிருப்பார். மன்னர் ஆட்சியிலும் அங்கு சட்டம்தான் வேலை செய்தது என்பதற்கு ரிஸானா விவகாரம் நல்ல எடுத்துக்காட்டாகும்.

சவுதி மரண தண்டனை வழங்கியதை வைத்து சவூதி தலிபானிஸம், அடிப்படை வாதம் என்றெல்லம் இஸ்லாமிய எதிரிகள் போல் விமர்சிக்கும் இவர், மரண தண்டனையை அமுல்படுத்திய நபி(ச) அவர்களையும் நாற்பெரும் கலீபாக்களையும் இது பற்றி ஆதரித்து எழுதியுள்ள இஸ்லாமிய அறிஞர்களையும் தலிபான் அடிப்படைவாதிகள், கருத்துப் பயங்கரவாதிகள் என்று கூறத் துணிவாரா?

இவருக்கு சவுதி மீதுள்ள வெறுப்பை; பல இடங்களில் கக்கியுள்ளார். சவுதி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. இருப்பினும் பொட்டப்பக்கம் பார்த்து குருட்டுப் பார்வை பார்த்து விமர்சிக்கக் கூடாது. ஷரீஆ பற்றி இவர் கூறுவதைக் கவனியுங்கள்.

“ஷரீஆ என்பது பற்றி நம்மிடம் ஒரு தட்டையான புரிதல்தான் இருக்கின்றது. இறை வெளிப்பாடு ஊடாக நபிகளுக்குக் கிடைத்த அல்குர்ஆன் நபிகளின் ஹதீஸ்கள் மட்டுமல்ல ஷரீஆ என்பது. அவற்றுக்குக் காலத்துக்குக் காலம் இஸ்லாமிய புலமைத்துவவாதிகள், புத்துயிர்ப்பாளர் கள் வழங்கிய வியாக்கியானங்களும், சாராம்சப் படுத்தல்களும் நியாயவியல் விதிகளும் சேர்ந்ததுதான் ஷரீஆவாகும்.”
(பக்கம்: 25)

“சவூதியின் அறிஞர்கள் பற்றிக் கூறும் போது இமாம்களது கருத்துக்களையும் முடிவுகளையும் மறுப்பவர்களாகக் குறிப்பிடுகின்றார்.”
(பக்கம்: 32)

சவூதியைச் சேர்ந்த அறிஞர்களின் எந்த நூலை வாசித்தாரோ தெரியவில்லை. பொதுவாகவே இமாம்களது கருத்துக்களை மேற்கோள் காட்டி தமது முடிவுகளை முன்வைக்கும் மரபுகளைத்தான் சவுதி உலமாக்கள் கையாள்கின்றனர். மரண தண்டனை விடயத்தில் இவர் கூறும் எந்த இமாம் முடிவுடன் இருக்கின்றார் என்று எமக்குத் தெரியாது.

“முஹம்மத் பின் அப்துல் வஹாப் என்பவர்தான் இன்றைய சவூதி அரேபியாவின் இத்தகைய பிளவுண்ட இஸ்லாமிய அடிப்படை வாதத்தை தலிபானியத்தை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்து ஒழுகுவதற்கான காரணமாகும்” (பக்கம்: 20) என இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹாப் பற்றி விமர்சித்துள்ளர்.

இமாமவர்கள் மூடநம்பிக்கை, ஷpர்க், பித்அத் போன்றவற்றை ஒழித்து இஸ்லாமிய அரசு உருவாகக் கரணமாக இருந்தவர். குட்டிக் குட்டிக் குலங்களாக ஆட்சி செய்து வந்தவர்களைத் திரட்டி ஒரு நாடாக மாற்றியவர்கள் இந்தப் பகுதியெல்லாம் பொட்டப்பக்கம் பார்க்கும் கீழைத்தேய வாதிகளின் அடிவருடிகளுக்குப் புரியாமல் போகுமாம். ரிஸானா விடயத்தில் சவூதி நீதித்துறை தவறான தீர்ப்பை வழங்கியிருந்தால் அதற்கு அப்துல் வஹாப் எப்படிக் காரணமாவார்? அப்படியென்றால் இஸ்லாத்தின் பெயரில் முஸ்லிம்கள் விடும் பிழைகளுக்கு எல்லாம் முஹம்மது நபிதான் காரணம் என்று எதிரிகள் கூறுவதையும் ஏற்கலாமா?

ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால் இந்த நூலில் வரிக்கு வரி பதில் சொல்லப்பட வேண்டிய அளவுக்கு வரலாற்றுத் தவறுகள், வார்த்தைத் தவறுகள், தவறான வாதங்கள், தப்பான பார்வைகள், பொறாமையும் குரோதமும் நிறைந்த குற்றச்சாட்டுக்கள், நடுநிலைத் தன்மையற்ற வாதப்பிரதிவாதங்கள், குப்ர், ரித்தத், நிபாக் கலந்த கருத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக மரண தண்டனை பழமைவாத முறை, எனக்கு குர்ஆனை மறுக்கும் போக்கு உள்ளது. எனவே, இவர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்புப் படையின் ஒரு ஏஜென்டாகவே தென்படுகின்றார்.

ஐரோப்பியர்களை இவர் புகழ்வதையும், அறபிகளை இகழ்வதையும், இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தைக் குறை காண்பதையும் பார்க்கும் போது இது இன்னும் உறுதியாகின்றது.

“இன்றைய சவுதி தலிபானிஸத்தைப் பார்க்கும் போது கீழைத்தேயவாதிகளின் விமர்சனங்களின் மீதான கொதிப்பு எனக்குள் அடங்கிப் போகின்றது.” (பக்கம்: 19)

எனக் கூறி தனக்குக் கீழைத்தேய வாதிகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதை அவரே ஒப்புக் கொள்கின்றார்.

எனவே, இவர் குறித்தும் இவரது எழுத்துக்கள், செயற்பாடுகள் குறித்தும் விழிப்பாக இருக்குமாறு மக்களை வேண்டிக் கொள்கின்றோம். சகோதரர் இத்ரீஸ் அவர்களும் இஸ்லாமிய குற்றவியல் தொடர்பான தனது தவறான நிலைப்பாட்டை விட்டு விலகி தவ்பா செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்.

One comment

  1. சரியான பதிலடிகள் . இஸ்லாமிய சட்டங்களை குற்றம் பிடிக்கும் இவர் போன்ற நயவஞ்சகர்களுக்கு
    அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *