Featured Posts
Home » இஸ்லாம் » சுவனம் » சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-07)

சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-07)

– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
சுவனத்தில் சில சுவையான நிகழ்வுகள்
சுவனமானது இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும, குதூகலித்தும் மனிதர்கள், ஜின்கள் வாழவிருக்கின்ற நிரந்த வாழ்விடமாகும். அங்கு உலகில் மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற, வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்ற நடைமுறை சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி எடுத்துக் கூறி அதன் இன்பங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தும் அங்கு தயார் செய்யப்பட்டுள்ள இன்பங்கள் உலகில் எந்தக் கண்ணாலும் யாராலும் பார்க்கப்படவில்லை, எந்த காது அது பற்றிய யதார்த்த நிலையைக் கேள்விப்பட்டதில்லை, மேலும் எந்த மனித இதயமும் அதை சிந்தித்ததே கிடையாது என்ற கருத்தினை விளக்கும் ஆதாரபூர்வமான நபி மொழிகள் இடம் பெற்றுள்ளன.

சுவனத்தில் காணப்படக்கூடிய சுவாரஸ்யங்கள் சுவனம் தொடர்பான செய்திகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான தகவல் இங்கு தரப்படுகின்றது. நாம் எடுத்தெழுதவிருக்கின்ற செய்திகள் ஒரு முஃமினைப் பொறுத்தவரை இதயத்திற்கும் இதமானவையாக இருக்கின்ற காரணத்தினால் ‘சுவனத்து சுவாரஸ்யங்கள் என தலைப்பிட்டோம்)

ஒரு கிராமவாசியின் ஜோக்கும், நபியின் சிரிப்பும்
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒருநாள் தினம் ஹதீஸ் கூறிக் கொண்டிருந்த போது அவர்களுடன் கிராமப்புற மனிதர் ஒருவரும் கூட அமர்ந்திருந்தார். அப்போது ‘சுவனத்தில் விவசாயம் செய்ய ஒரு மனிதன் தனது இரட்சகனிடம் அனுமதி கோருவார். அதற்குப் பதில் தரும் வகையில் அல்லாஹ் நீ விரும்பியது (இங்கு) உனக்கில்லையா எனக் கேட்பான். அவர் ஆம். என்பார், அப்படியானால் நான் விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என அவன் அல்லாஹ்விடம் கூறுவான் (அதில் அவன் ஈடுபட்டதும்) அது உடன் முளைத்து, அதன் தளைகள் கண்பார்வைக்கு கவர்ச்சியானதாகி, அது நன்றாக வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையையும் எட்டி, மலைகள் போன்று ஆகிவிடும். அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ், ஆதமின் மகனே உன்னை நான் விட்டுவிடுகின்றேன். உன்னை எதனாலும் மன நிரப்பம் அடையச் செய்ய முடியாது என்று கூறுவான். உடனே அக்கிராமவாசி:

فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – صحيح البخاري

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! விவசாயம் செய்ய விரும்பும் அந்த மனிதர் , ஒன்று குரைஷியராக அல்லது அன்ஸாரி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அவர்கள்தாம் விவசாயிகள், நாம் விவசாயிகள் அல்லவே! என்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் (புகாரி)

சுவனத்தில் விவசாயம் செய்தல், ஒருவர் தனது விருப்பிற்கு அமைவாக நடந்து கொள்ளுதல், உண்மையான அம்சங்களைக் கூறி ஜோக் செய்தல் மார்க்கம் அனுமதித்தமை போன்ற மற்றும் பல அம்சங்கள் இந்த ஹதீஸில் இருந்து நமக்கு விளங்கக் கிடைக்கின்றது.

மூதாட்டியுடன் நபி (ஸல்) அவர்கள் பண்ணிய உண்மையான தமாஸ்
அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு மூதாட்டி வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் அவன் என்னை சுவனத்தில் நுழைவிக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், இன்னாரின் தாயே என அழைத்து மூதாட்டிகள் (வயோதிபர்கள்) சுவனத்தில் நுழையமாட்டார்கள் எனக் கூறியதும் அப்பெண் அழுதவராக திரும்பினார். அவரிடம், சுவனத்தில் அம்மூதாட்டி (அவரது வயோதிக தோற்றத்தில்) நுழையமாட்டார் எனக் கூறிவிட்டு, அல்லாஹ் அல்குர்ஆனில் (சுவனவாதிகளான) அவர்களை நாம் புதுப்படைப்பாக்கி, கன்னியர்களாகவே ஆக்கியுள்ளோம் என்ற அல்வாகிஆ அத்தியாத்தில் இடம் பெறும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். இந்தச் செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த ஆதாரத்திற்கு கொள்ள முடியுமான செய்தியாகும். (ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா)

சுவனத்தில் நுழைவோரின் வயதெல்லை முப்பத்தி மூன்று என்று திர்மிதி, அஹ்மத் ஆகிய கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. சுவனத்தில் நுழைவோர் முப்பத்தி மூன்று வயதை உடையவர்களாகவும், (முறுக்கேறிய) இளைஞர்களாகவும், மேனியில் முடி அற்றவர்களாகவும், தாடி முளைக்காதவர்களாகவும் இருப்பார்கள் (திர்மிதி, அஹ்மத்)

ஆதமின் நபியின் உயர்த்தை உடையவர்களாக சுவனவாதிகள் இருப்பார்கள் என்று புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. ஆதமின் உயரம் பற்றி செய்தி விபரமாக முன்னர் தரப்பட்டுள்ளது.

நரகத்தில் இருந்து தப்பினேன் பிழைத்தேன் என்ற நிலையில் காணப்படும் ஒரு சுவனவாதி

சுவனத்தில் இறுதியாக நுழைந்த சுவனவாதிகளில் ஒருவர் நரகத்தை பார்த்து தப்பினேன் பிழைத்தேன் என்பதைப் பிரதிபலிப்பார். அது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

சுவனத்தில் இறுதியாக நுழையும் ஒரு மனிதன் அவன், -ஸிராத்- பாலத்தைக் கடந்து செல்லும் வேளை ஒரு தடவை நடந்தும், மற்றொரு தடவை தவழ்ந்தும் செல்லுவான். (வழியில்) நரகத்தின் தீச்சுவாலை அவனை சில போது தீண்டிவிடும். அவன் அந்தப் பாலத்தைக் கடந்ததும் நரகின் பக்கமாக திரும்பிப் பார்த்து

تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ

உன்னில் இருந்தும் என்னைப் பாதுகாத்தானே அவன் (அல்லாஹ்) மகத்துவம் நிறைந்தவன், அவன் முதல், மற்றும் இறுதியாக வந்தவர்கள் எவருக்கும் வழங்காத (பல வெகுமதிகளை) எனக்கு அவன் வழங்கியுள்ளான் எனக் கூறுவான். (முஸ்லிம்).

சுவனவாதி பற்றிய மற்றொரு செய்தியின் தொடரில் ….. ‘அப்போது அவன் முன்பாக (சுவனத்து) மரம் ஒன்று உயர்த்தப்படும், எனது இரட்சகனே! அதன் நிழலில் நிழல் பெறவும், அதன் கீழ் ஓடும் நீரைப்பருகவும் என்னை இந்த மரத்தின் பக்கம் நெருக்கி வைப்பாயாக என வேண்டுவான். ஆதமின் மகனே! நான் இதை உனக்கு வழங்கினால் வேறு எதையும் நீ என்னிடம் கேட்பாயா என அல்லாஹ் கேட்பான். அவன் இல்லை எனது இரட்சகனே! நான் அதைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என வாக்குறுதி செய்ததும் அல்லாஹ் அதை வழங்குவான். பின்னும் அதைவிட அழகான மரம் ஒன்று கொடுக்கப்படுவான். பின்னும் அவன் அதில் ஆசை வைத்து அதன் நீரை அருந்திட, நிழல் பெற மீண்டும் கேட்பான், அல்லாஹ் அவனிடம் ஆரம்ப வாக்குறுதியை நினைவுபடுத்திக் கூறும்போது இதன் பின் எதையும் கேட்கமாட்டேன் எனக் கூறுவான். அந்த மரத்தில் இருந்து ஆரம்பமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவனவாசல்வரை நெருக்கப்படுவான். ….. என்ற நீண்ட ஹதீஸின் தொடரில் மற்றொரு சுவாரஸ்யத்தைக் கேழுங்கள்.

அப்போது அவன் சுவனவாதிகளின் சப்தத்தை செவிமடுப்பான். எனது இரட்சகனே! என்னை அதில் நுழைவிப்பாயாக! எனக் கூறுவான். ஆதமின் மகனே நான் உனக்கு உலகையும், அதை போன்றதொரு மடங்கும் தருவேன். அதைக் கொண்டு நீ பொருந்திக் கொள்வாயா எனக் கேட்பான்,

قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ

அப்போது அந்த சுவனவாதி, நீ அகிலங்களின் அதிபதியாக இருந்து கொண்டு என்னைப் பரிகாசம் செய்கின்றாயா? எனக் கேட்பான் எனக் கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சிரித்தார்கள். இதை செவிமடுத்தோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறே சிரித்தார்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன அடிப்படையில் சிரித்தார்கள் எனக் கேட்டபோது அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் சிரிப்பின் மூலம் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

குறிப்பு: இங்கு அல்லாஹ்வின் சிரிப்பு என்று கருத்துச் சிதைவின்றி நேரடியாகவே மொழிபெயர்த்துள்ளோம். காரணம் சிரிப்புضحك என்ற அரபு சொல் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் வரும் இடங்களில் அதன் வடிவம், முறை பற்றிய எவ்வித வியாக்கியானமும் செய்யாது பொருள் சிதைவின்றி மொழி பெயர்ப்பதே அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடாகும். அல்லாஹ்வே அவற்றின் யதார்த்த நிலை பற்றி அறிந்தவன் என்பது நிலைப்பாடாகும்.

ஒவ்வொரு சுவனவாதிக்கும் தலா இரு மனைவியர்
இந்த உலகில் இரண்டாவது மறுமணம் முடிக்கப் படாதபாடு படும் ஆண்களுக்கு இது ஒரு ஆறுதலாக இருக்கலாம். சுவனத்திற்குரியவராக தன்னை தயார்படுத்திக் கொண்டு பூரண நம்பிக்கையுடன் வாழும்போது அல்லாஹ் நிச்சயம் அதற்காக அருள் புரிவான்.

وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ يُرَى مُخُّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنْ الْحُسْنِ

(சுவனவாதிகளான) அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரு மனைவியர் இருப்பர், அவர்கள் இருவரினதும் கெண்டைக்கால் மஜ்ஜை அழகின் காரணமாக எலும்பின் வெளிப்புறமாக தெரியும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). ஆகா இப்படி பிரமாதமான அழகா என்று அங்கு சென்று பார்த்து பிரமிப்பதற்கு முன்னரே அவர்களின் அழகு பற்றி இங்கு அறிவிக்கப்பட்டு விட்டது.

சுவனவாதிகளின் முதல் உணவு
சுவனத்தில் வகை தொகையான உணவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. பொரித்த பறவைகள், பழங்கள், மாமிசங்கள், நீரூற்றுக்கள், மதுபானங்கள், குடிபானங்கள் என எல்லாமே உண்டு. சுவனத்தில் முதலாவதாக வழங்கப்படும் உணவு பற்றியும் நபிமொழிகளில் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. அதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது. சுவையுங்கள் பார்க்கலாம்.

ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து)

وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ الْحُوتِ

சுவனவாதிகள் முதலவதாக உண்ணும் உணவு எது என்று வினவினார். அதற்குப் இறைத்தூதர் அவர்கள் மீனின் ஈரல் எனப் பதில் அளித்தார்கள். (புகாரி)

பறவைகளாகச் சுற்றித்திரியும் உயிர்த்தியாகிகள்
இறைமார்க்கத்திற்காக உயிர் நீர்த்த உத்தமர்களின் உயிர்கள் சுவனத்தில் பச்சைப் பறவையின் தோற்றத்தில் சுற்றித்திரிவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹத் ஸஹாபாக்களைக் கூறி விளக்கினார்கள்.

உங்களது சகோதரர்கள் உஹதில் வீரமரணம் அடைந்த போது அவர்களின் உயிர்களை அல்லாஹ் பச்சை நிறப்பறவைகளின் வயிறுகளில் ஆக்கிவிட்டான். அவை சுவனத்து நதிகளுக்கு (ப் பறந்து) வந்து அதன் கனிகளைப் புசிக்கும். அர்ஷின் நிழலில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கத்திலான ஒரு விளக்கின் பக்கம் ஒதுங்கிக் கொள்ளும். தமக்கு வழங்கப்படும் பரிசுத்த இந்த உணவு, மற்றும் பானம் பற்றி சிந்திக்கும். அவர்கள், சுவனத்தில் இவ்வாறு நாம் உணவளிக்கப்படுவது பற்றியும், ஜிஹாதில் சோர்வடையவேண்டாம் என்றும், போரில் வீரியமாக இருக்க வேண்டும் என்றும் நம்மைப் பற்றிய செய்தியை உலகில் வாழும் (எமது சகோதரர்களுக்கு) யார்தான் அறிவிப்பார் எனப் பேசிக் கொள்வதை அல்லாஹ் பெறுப்பேற்று நானே அறிவிக்கின்றேன் எனக் கூறுவான். எனக் குறிப்பிட்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள்’ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள் எனத் தொடரும் வசனத்தை ஓதிக் காண்பித்தாரகள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

சுவனத்தில் குதூகலிக்க அறுபது மைல் தூர அளவு கூடாரம்
முத்துக்கள் பதிக்கப்பட்ட கூடாரம் ஒன்று சுவர்க்கத்தில் உள்ளது. அதன் தூர அளவு அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு ஓரங்களிலும் ஒரு சாரார் இருப்பர். மற்றவர்கள் அவர்களைக் காணமாட்டார்கள். முஃமின்கள் அதைச் சுற்றிவலம் வருவார்கள். (புகாரி)

நூறாண்டுகள் நடந்தாலும் துண்டிக்காத தொடர் நிழல் மரம்
சுவனத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழலில் நடந்து செல்லும் மனிதர் நூறு ஆண்டுகள் நடந்து சென்றாலும் அது முடிவுறாதிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் விரும்பினால் நீண்ட நிழல்களும் இருக்கின்ற என்ற வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள் (புகாரி)

முஸ்லிமில் வரும் மற்றொரு அறிவிப்பில்: சுவனத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதில் பயிற்றப்பட்ட வேகமாக ஓடும் குதிரை நூறாண்டுகள் ஓடினாலும் அதன் நிழல் முடிவுறாது என்று இடம் பெற்றுள்ளது. (முஸ்லிம்)

ஹவ்ளுல் கவ்ஸர் நீர்த் தடாகத்தில் கிடைக்கும் இனிமையான நீர்
இது மறுமையில் முஃமின்களுக்கு வழங்கப்படும் அற்புத நீராகும். ஸம்ஸம் நீரை விட அற்புதத் தன்மை வாய்ந்தாகும்.

நீங்கள் என்னை மறுமையில் ஹவ்ளில் சந்திக்கின்றவரை பொறுமையாக இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது இந்த ஹவ்ளைத்தான்.

எனது -ஹவ்ள்- நீர்த்தடாகம் ஒரு மாதகால நடைதூர அளவைக் கொண்டது. அதன் அமைப்பு நாற் சதுரமானது. அதன் நீரின் நிறம் வெள்ளியை விடவும் வெண்மையானது, அதன் வாசைன கஸ்தூரியை விட மணமானது. அதன் குவழைகள் வானில் காணப்படும் நட்சத்திரங்களின் அளவைப் போன்றது. அதில் இருந்து யார் நீர் அருந்தி விட்டாரோ அவர் என்றும் தாகிக்கவே மாட்டார். (முஸ்லிம்)

அல்லாஹ்வே இவ்வாறான பாக்கியங்களில் இருந்து எம்மை விலக்கி விடாதே!

சுவனவாதிகள் முதல் உணவு
விருந்தினர் வீட்டில், வலீமா வைபவங்களில் விருந்தாளிகளை கௌரவிக்கும் முகமாக குளிர்பானங்கள் வழங்கப்படுவதை அவதானிக்கின்றோம். அதனால் நண்பர்களும், மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் மனம் குளிர்கின்றர். ஆகா! என்ன அழகான உபசரிப்பு என ஏங்கி விடுகின்றனர்.

மறுமையில் சுவனத்தில் நுழைவோரும் இப்படியான ஒரு கௌரவத்தைப் பெறுகின்றனர். சுவனத்தில் நுழைந்த பின்னால் அங்குள்ள கனிகள், பொரித்த பறவை மாமிசங்களை எல்லாம் உண்பதற்கு முன்னால் மீன் ஈரலில் காணப்படும் அதிகப்படியான ஒரு பாகம் வழங்கி உபசரிக்கப்படுகின்றனர். இது பற்றி பின்வரும் நபிமொழி தெளிவாக குறிப்பிடுகின்றது.

யூத அறிஞர்களில் ஒருவராக இருந்த பின்வரும் மூன்று கேள்விகள் கேட்டு சரியான பதில் கிடைத்த பின் இஸ்லாத்தில் இணைந்து கொண்ட அப்துல்லாஹ் பின் ஸலாம் இவ்வாறு கேட்டார்கள்.

முஹம்மத் அவர்களே! உம்மிடம் மூன்று கேள்விகள் நான் கேட்க விரும்புகின்றேன். அதை ஒரு நபியைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க (அறிவிக்க) முடியாது எனக் கூறி விட்டு, மறுமையின் முதலாவது அடையாளம் என்ன? சுவனவாதிகளின் முதல் உணவு யாது? ஒரு குழந்தை தனது தந்தை அல்லது தாயின் சாயலில் இருப்பதன் அளவீடு என்ன? இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று முன்னர்தான் இது பற்றி ஜிப்ரீல் எனக்கு அறிவித்து தந்தார் என்றது அவர் வானவர்களில் யூதர்களின் விரோதியாச்சே என்றார். நபி (ஸல்) அவர்கள் பதில் கூற ஆரம்பித்தார்கள்.

மறுமையின் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மனிதர்களை கிழக்கில் இருந்து மேற்கிற்கு விரட்டும், சுவனவாதிகள் முதலாவது உண்ணும் உணவு மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் சுவை நிரம்பிய ஒரு பாகமாகும். ஆணின் விந்து (கருவரையில்) முந்திச் சென்றால் குழந்தை தந்தையின் சாயலில் பிறக்கின்றது, தாயின் நீர் முந்திச் சென்றால் குழந்தை தாயைப் போன்று பிறக்கின்றது. இரண்டு சம நிலையில் சென்றால் உறவினர்களில் ஒருவரைப் போன்று குழந்தை பிறக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் தூய திருக்கலிமாவை மொழிந்தவர்களாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். (புகாரி).

நம்மில் பலர் மீனின் ஈரல் என்றே விளங்கி வைத்துள்ளோம். அவ்வாறல்ல, மீன் ஈரலில் அதிகப்படியாக தொங்கிக் கொண்டிருக்கும் சுவைமிகுந்த ஒரு பாகம் என்றே ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அறுபது மைல்கள் தூர அளவிலான கூடாரம்
சுவனத்தில் முத்துக்களால் தயார் செய்யப்பட்ட கூடாரம் இருக்கும். அதன் அகலம் அறுபது மைல்கள் (தூரமாகும்). அதன் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழுவினர் இருப்பர். அவர்கள் அங்கிருக்கும் மற்றவர்களைக் காணமாட்டார்கள். முஃமின்கள் அவர்களைச் சுற்றிவருவார்கள். இன்னும் வெள்ளியினாலான இரு சுவனங்களும் இருக்கும். அதன் பாத்திரங்கள், அவ்விரண்டிலும் உள்ள பொருட்களும் வெள்ளியிலானவையாகும். இன்னும் இருவேறு சுவர்கங்கள் அதன் வர்ணனைகள் இவ்வாறு இவ்வாறெல்லாம் காணப்படும். அங்குள்ள மக்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதற்கு பெருமை என்ற அவனது மேலாடைதான் திரையாக இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவ்வாறான இன்பங்களை இறையடியார்களான முஃமின்களுக்கு அவர்களின் இரட்சகனாகிய அல்லாஹ் தயார் படுத்தி இருக்கின்றான். நாமும் அவனது அடியார்கள். இன்ஷா அல்லாஹ் நமக்கும் இதை அவன் வழங்கி கௌரவிப்பான் என்றே நம்பிக்கை கொண்டுள்ளோம். அதில் உறுதியாக இருந்த மரணிப்பதற்கு அவனே நமக்கு அருள் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *