Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » ஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்

ஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – ஆசிரியர், சத்தியக் குரல், இலங்கை –
தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையாகும். அதாவது அல்லாஹ்வுடைய கட்டளை என்றால் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை என்றால் ஹதீஸ் ஆகும். குர்ஆனும் ஹதீ ஸும்தான் நமது வழிகாட்டிகள் என்பதை உலக மக்கள் ஏற்று அமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த அமலாக இருப்பினும், அது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்ததாக இருக்க வேண்டும். நாமாக அமல்களைச் செய்யக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அந்த அடிப்படையில் ஸஹர் முடிவு என்று இன்று எல்லாப் பள்ளி களிலும் நோன்புதான் அட்டவணையிலும் போடப்பட்டுள்ளதைக் காணலாம். இது சரியா? அல்லது பிழையா? என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பஜ்ரு தொழுகைக்கான அதான் (பாங்கு) 4.30 மணிக்கு என்றால், கிட்டத் தட்ட 4.15 ஸஹர் முடிவு என்று விளம்பரப் படுத்தியுள்ளதைக் காணலாம். அதாவது பஜ்ரு நேர பாங்கிற்கு முன் பதினைந்து நிமிடம் அல்லது இருபது நிமிடம் முன்னதாகவே ஸஹர் நேரம் முடிவடைந்து விடுகிறது. அதன் பின் சாப்பிட்டாலும் குடித்தாலும் நோன்பு முறிந்து விடும் என்று பேசக் கூடிய நிலையைக் காண்கிறோம்.

வானொலியிலும் கூட ஸஹர் நேரத்தில் அடிக்கடி இன்றைய சுப்ஹு தொழுகைக்கான அதான் சொல்லும் நேரம் இது, ஸஹர் முடிவு இது என்று சொல்லக் கூடிய நிலையை அனைவரும் கேட்கிறோம். பள்ளிவாசல் விளம்பரப் பலகையிலாக இருக்கலாம் அல்லது நோன்பு தாளிலாக இருக்கலாம் அல்லது வானொலி விஷேட ஸஹர் நேர நிகழ்ச்சியிலாக இருக்கலாம். எல்லோரும் மார்க்கத்தை மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டி போட்டுக் கொண்டு செயல் படுவதைக் காணலாம்.

இது வரவேற்கக் கூடிய விடயமாகும். அதே நேரம் மார்க்கம் சொல்லித் தந்துள்ள வழிமுறையை விட்டு விட்டு, நாமாக தன் இச்சையாக எதையும் முடிவு செய்யும் அதிகாரம் நமக்குக் கிடையாது. தொடர்ந்து படியுங்கள்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனு மதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்விற்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று, உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது முதல் அவர்களுடன் கூடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடுங்கள். வைகறை எனும் கயிறு (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். (2:187)

இந்த வசனத்தில் முதலாவதாக நோன்பு கால இரவு நேரங்களில் தனது மனைவியுடன் சேரலாம் என்ற சட்டத்தையும், இரண்டாவதாக ஸஹர் முடிவைப் பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதில் கருப்புக் கயிறிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை உண்ணலாம், பருகலாம் என்றால், கருப்புக் கயிறு என்பது இரவு வெள்ளைக் கயிறு என்பது சுப்ஹு நேர வெளிச்சம் என்பதை இந்த வசனம் சம்பந்தமான ஹதீஸ்கள் தெளிவுபடுத்து வதை அவதானிக்கலாம்.

இந்த வசனம் இறங்கியவுடன் சில நபித் தோழர்கள் கருப்புக் கயிறை தனது தலையணைக்கு கீழாக வைத்து காலையில் மாறுகிறதா? இல்லையா என்று பார்த்தனர். இன்னும் சில நபித்தோழர்கள் தனது கை கால்களில் கருப்புக் கயிறை கட்டிக்கொண்டு காலையை எதிர்பார்த்து, இறுதியில் இந்த வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

கறுப்பு கயிறிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) அருளப்பட்டபோது, நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் வெள்ளை நிறத்தில் ஒரு கயிறு, கறுப்பு நிறத்தில் மற்றொரு கயிறு என இரு கயிறுகளை என் தலையணையின் கீழ் வைத்து பகலில் இருந்து இரவை பிரித்து அறிய முயன்றேன். ஆயினும், என்னால் பிரித்து அறிய முடியவில்லை என்று சொன்னேன். வெள்ளைக் கயிறு, கறுப்புக் கயிறு என்பன அவற்றின் உண்மையான பொருளில் கூறப்படவில்லை. மாறாக இது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமே ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-1916, முஸ்லிம்-1988)

அதேபோல மற்றொரு ஹதீஸ்,
ஸஹாபாக்கள் இரு கால்களிலும் கறுப்பு வெள்ளை கயிறுகளை கட்டிக் கொண்டு விளக்கம் கேட்ட ஹதீஸை புகாரி-1917, முஸ்லிம்-1990 இல் காணலாம்.

மேற்சென்ற குர்ஆன் வசனத்திற்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கமாக பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்.

பிலால் (ரழி) அவர்கள் (பின்) இரவில் தொழுவதை அறிவிப்புச் செய்வார். எனவே (பஜ்ர் தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூம் செய்யும் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். (முஸ்லிம்-1991)

இதுபோல பல ஹதீஸ்களை புகாரி யிலும் முஸ்லிமிலும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களிலும் பார்க்கலாம். பிலால் (ரழி) தஹஜ்ஜுத்துக்கும் இப்னு உம்மி மக்தூம் (ரழி) சுப்ஹுக்கும் பாங்கு சொல்வார்கள். ஸஹர் முடிவை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு ஆழமாக சொல்லித் தருகிறார்கள்.

சுப்ஹ் அதான் சொல்ல ஆரம்பமாவதே ஸஹர் முடிவாகும். உதாரணத்திற்கு ரமழான் கால சுப்ஹு அதான் 4.30 என்றால், சரியாக 4.29 உடன் ஸஹர் முடிவடைந்து 4.30 சுப்ஹு அதான் ஆரம்பமாகிறது. அதன் பின் ஸஹர் உணவு உண்ண முடியாது. அது இல்லாமல் ரமழான் கால சுப்ஹு அதான் நேரம் 4.30 மணி என்றால் 4.15க்கே ஸஹர் முடிவடைந்து விட்டது என்றால் பொறுப்புதாரிகள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் தெளிவாகக் கூறப்பட்ட ஒன்றுக்கு மாற்றமாக நமது செயல்பாடு இருக்கும் என்றால், அவர்களை விட இறை வெறுப்புக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

இந்த ஸஹர் முடிவின் அடிப்படையில் ஒருவர் 4.15க்கு எழும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் இந்த நோன்புத் தாளில் உள்ள அல்லது வானொலி ஸஹர் முடிவை நம்பி அல்லது பள்ளிவாசல் விளம்பர பலகையில் உள்ள ஸஹர் முடிவை நம்பி ஸஹர் செய்யவில்லையானால் இதற்கு யார் பொறுப்பு?

பொறுப்புதாரிகளே! சிந்தியுங்கள். பள்ளி நிர்வாகிகளே சிந்தியுங்கள்! உலமாக்களே சிந்தியுங்கள்! மார்க்கத்தில் உள்ளதை சரியாகக் கூறுவோம். மார்க்கத்தில் இல்லாததை விட்டு விடுவோம். இல்லாத ஒன்றை இருக்கிறது என்றோ, இருக்கிற ஒன்றை இல்லை என்று கூறி, நாம் ஏன் பாவத்திற்கு ஆளாக வேண்டும்?

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்ன ஒன்றை நாம் நடைமுறைப் படுத்துவதா? அல்லது நாம் பரம்பரை பரம்பரையாக செய்து வருவதை எப்படி விடுவது என்று அல்லாஹ் மற்றும் ரஸூலுக்கு மாற்றமாக நடப்பதா? என்பதை எல்லா பொறுப்புதாரிகளும் சற்று ஆழமாக சிந்தியுங்கள்.

அல்லாஹ் குர்ஆனில்,
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்த பின்னர், அதற்கு மாற்றம் செய்வதற்கு முஃமினான ஆணுக் கும் அதிகாரம் கிடையாது. முஃமினான பெண்ணும் அதிகாரம் கிடையாது. எவர்கள் மீறி செயல்படுகிறார்களோ அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள். (33:36)

இந்த வசனத்தின்படி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் தீர்மானித்த ஒன்றை மாற்றியமைக்க எவருக்கும் உரிமை கிடையாது. அப்படி மீறுவோர் வழிகேடர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன்படி ஸஹர் நேர முடிவை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் தீர்மானித்த பின் நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை விளங்கி நடந்து கொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் எந்தக் கட்டாயமும் கிடை யாது. எவர் வந்து சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் என்றாலும் நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள் என்ற அடிப்படையில் தரப்பட்ட ஆதாரங்கள் எங்கி ருந்து தரப்பட்டுள்ளது என்பதைக் கவனி யுங்கள். விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது தெளிவு கிடைத்த பின்னரும் முரண்டு பிடித்தால் நீங்களும் அல்லாஹ்வும் பார்த்துக் கொள்ளுங்கள்.

நோன்பின் நிய்யத்து
நிய்யத் என்று சொல்லும்போது உள்ளத் தால் எண்ணிக் கொள்வதாகும். ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத் வைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு அமலை யும் செய்துவிட்டு, அதை இப்படித்தான் செய்ய வேண்டும் என நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள். இதனால்தான் அல்லாஹ் வும் குர்ஆனில் “அந்தத் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது” என்று சுட்டிக் காட்டுகிறான்.

இதன்படி நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறு எந்த அமலுக்கும் வாயால் நிய்யத்தை சப்தமாக மொழியவில்லை. உள்ளத்தால் நினைத்துக் கொள்வார்கள். எனவே, நிய்யத்தை உள்ளத்தால் எண்ணிக் கொள்வது ஸுன்னத் ஆகும்.

என்றாலும் நோன்பிற்காக இரவு தராவீஹ் எனும் தொழுகை தொழுது வித்ரெல்லாம் தொழுது முடிந்த பிறகு நிய்யத்தை இமாம் சொல்லிக் கொடுக்க பின்னால் உள்ள மஃமூம்கள் சப்தமாக சொல்வதை பரம்பரை பரம்பரையாக காணப்படுகின்றன. அதுவும் மூன்று முறை திருப்பித் திருப்பி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இந்த நிய்யத்தைப் பற்றியும், இதை நபி (ஸல்) அவர்கள்தான் கற்றுத் தந்தார்களா என்பதை குர்ஆன் ஹதீஸின் வழியில் சற்று பார்ப்போம்.

அந்த நிய்யத்தைப் பொறுத்தவரை இந்த வருடத்தின் ரமழான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் அல்லாஹ்வுக்காக என்று அரபியிலும் தமிழிலும் மூன்று முறை சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

முதலில் இந்த நிய்யத்திலுள்ள தவறுகளை கவனியுங்கள். தராவீஹ் தொழுகை முடிந்த உடன் இந்த நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதில் நாளை பிடிக்க என்று கூறுகிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் நாளை என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது இன்ஷா அல்லாஹ் என்று கூறவேண்டும். எந்தளவிற்கு என்றால், நபி (ஸல்) அவர்களுக்குக் கூட அல்லாஹ் நபியே! நாளை ஒரு செயலை செய்வேன் என்று கூறாதீர்கள். அல்லாஹ் நாடினாலே தவிர என்று சேர்க்காமல்” (18:24) என்று நினைவுபடுத்துகிறான்.

அப்படியானால் நாளை என்று அல்லது எதிர்கால சொல்லைப் பயன்படுத்தும்போது இன்ஷா அல்லாஹ் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். அதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் நடந்த சில சம்வங்களின் விபரீதத்தையும் நாம் காணலாம்.

சுலைமான் நபி, தனது எல்லா மனைவி மார்களிடம் இன்று சேர்ந்து அதன் மூலம் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் நூறு குதிரை வீரர்களை பெற்றெடுப்பேன் என்று கூறினார்கள். ஆனால், அல்லாஹ் அப்படி யான எந்தக் குழந்தையையும் கொடுக்க வில்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ் கூறியிருந்தால் அவர்கள் சொன்னது போல நடந்திருக்கும் என்றார்கள். இந்த ஹதீஸை புஹாரியில் காணலாம்.

எனவே அன்பிற்குரிய உலமாக்களே! மதிப்பிற்குரிய பெரியவர்களே தாய்மார்களே! சற்று நிதானமாகச் சிந்தித்து சரிதானா? பிழைதானா என்று ஒரு முடிவுக்கு வாருங்கள். இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் சொல்ல முடியுமா? பேச முடியுமா? என்பதையும் சன்று ஆழமாக சிந்தித்து செயல்படுங்கள்.

இந்த நிய்யத்தில் இரண்டாவது பிழை என்னவென்றால், நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படும் நேரம் இரவு சுமார் 9.30 மணி. அப்படியானால் முஸ்லிம்களுக்கு பிறை கணக்குதான் நாள் கணக்காகும். எனவே அன்று மஃரிபி லிருந்து அடுத்த மஃரிப் வரை ஒரு நாள்தான். அதாவது அதே நாளில் தான் இருக்கிறோம். அதே நாளில் தான் நோன்பு பிடிக்கிறோம். அப்படியானால் அதேநாளில் இருந்து கொண்டு எப்படி நாளை பிடிப்பேன் என்று கூறமுடியும்?

சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இந்த நிய்யத்தின் மூன்றாவது பிழை மீண்டும் இரவின் கடைசிப் பகுதியான அந்த ஸஹர் நேரத்திலும் உணவை உட்கொண்ட பிறகு அவரவர் தனித் தனியாக சொல்லிக் கொள்வார்கள். அந்த நிச்சயத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றும் வீடுகளில் நினைவூட்டப்படும்.

அப்படியானால் சூரிய கணக்குப் படியும் தவறாகும். ஏன் என்றால் இரவு 12.00 மணியிலிருந்து மறுநாள் இரவு 12.00 மணிவரை ஒரு நாளாகும். அதிகாலை நோன்பு பிடித்த நாம் மஃரிபுடன் நோன்பை திறக்கிறோம் என்றால் அதேநாளில் இருந்து கொண்டு எப்படி நாளை பிடிப்பேன் என்று கூற முடியும்?

எனவே பிறை கணக்கான சந்திரக் கணக்கின் அடிப்படையிலும் பிழைதான். சூரிய கணக்கின் அடிப்படையிலும் பிழை தான். ஷரீஅத் படியும் பிழைதான்.

இந்த நிய்யத்தின் மற்றொரு தவறு என்ன வென்றால் ஒருவர் சொல்லிக் கொடுக்க பின்னால் உள்ளவர்கள் சொல்லும் வழமையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தரவில்லை.

அதேபோல் இந்த நிய்யத்தின் அடுத்த பிழை என்னவென்றால் திரும்பத் திரும்ப மூன்று முறை சொல்லிக் கொடுப்பது. நபி (ஸல்) அவர்கள் எந்த அமல்களுடைய நிய்யத்தையும் இப்படி மூன்று முறை சொன்னதாகவோ சொல்லும்படியோ கூறவில்லை.

இப்படி பல கோணத்தில் இந்த நோன்பு நிய்யத் பிழை என்பதையும், இந்த நிய்யத்தை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை என்பதையும் விளங்கிக் கொள்வதோடு, நோன்பு நிய்யத்தைப் பொறுத்த வரை அல்லாஹ்வுக்காக நோன்பு பிடிக்கிறேன் என்று உள்ளத்தில் அவரவர் நினைத்துக் கொள்ள வேண்டும்.

One comment

  1. I have doubts.

    நோன்பு த் தாளில் உள்ள
    அல்லது வானொலி ஸஹர்
    முடிவை நம்பி அல்லது பள்ளிவாசல்
    விளம்பர பலகையில் உள்ள ஸஹர்
    முடிவை நம்பி ஸஹர்
    செய்யவில்லையானால்
    இதற்கு யார் பொறுப்பு? endru kooruhireerhal

    1. subah athan sollumpodu oruvar elumpinal awar sahar seiyalama?
    2. pahalai iravilirundu pirippadu subah athan a? illai subah thola anumathilkkap patta nerama?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *