Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » குழப்பங்களின் போது ஒரு முஃமின்

குழப்பங்களின் போது ஒரு முஃமின்

– அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி –

முன்னுரை:

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் அருளும் அவனது இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழி நடந்தோர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக!

குழப்பங்கள் பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அது பற்றி முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவை ஏற்படுகின்றபோது அதற்கான தீர்வையும் வழிகாட்டலையும் இஸ்லாமிய ஷரீஆ தெளிவாக்கியுள்ளது.

  • மனிதப் படுகொலைகள்,
  • இஸ்லாமியர்கள் மீதான விரோதிகளின் ஆதிக்கம்,
  • முஸ்லிம் சமூகம் அல்லோலகலப்படும் அமைதி அற்ற சூழ்நிலை,
  • முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்கள் அழிக்கப்படுதல், (காட்டிக் கொடுப்பு, அதிகாரப் போட்டி)
  • தஜ்ஜாலின் குழப்பம்,
  • மனிதர்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்கள்,
  • தீய ஆட்சியாளர்கள்,
  • போர்கள்,
  • வரட்சி,
  • எண்ணற்ற மரணங்கள்,
  • கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதி,
  • வட்டி, மது, பொய், விபச்சாரம் போன்ற அநாச்சாரங்கள் பெருகுதல்,
  • அறியாமை அதிகரித்தல்,
  • அறிவற்றோரை தலைவர்களாக எடுத்தல்,
  • குடும்பம் அண்டை அயலவர் சண்டை போன்ற இன்னோரென்ன முன்னறவிப்புக்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அவற்றில் காலத்திற்கு தேவையானது என நாம் கண்டதை இங்கு சுருக்கமாகப் பதிவு செய்கின்றோம்.

குழப்பங்களை எதிர்கொள்ளும் ஒரு முஃமின் அதைக் காணும்போது எனது கதை இத்தோடு முடிவடைந்து விட்டது என்று எண்ணும் அளவும், சமூகத்தை விட்டும் ஒதுங்கி துறவறத்தைக் கடைப்பிடிக்கும் அளவும் பிரச்சினைகளை சந்தித்தபோது அதற்கு தற்கொலை தீர்வல்ல என்பதை உணர வேண்டும்.

தனது சகோதரன் ஒருவனின் மண்ணறையில் புரண்டு கொண்டு இவனது மண்ணறையில் நான் இருக்கக் கூடாதா? என ஏங்கி தவிக்கும் காலத்தையும் முஸ்லிம் சமூகம் சந்திக்க இருக்கின்றது. அதிலும் மன உறுதியோடு வாழ வேண்டும்.

பஹ்ரைனில் இருந்து கிடைக்கப்பெற்ற பொருட்களை வழங்குவதற்காக அன்ஸாரிகளை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் செல்வத்தில் இருந்து ஏதாவது வழங்குகின்றபோது குரைஷியர்களான எமது சகோதரர்களுக்கும் அவ்வாறு கொடுங்கள் என்றார்கள். அவர்களுக்கு வழங்குவதற்கென நபி (ஸல்) அவர்களிடம் எதுவும் இருக்கவில்லை. நீங்கள் எனக்குப் பின்னால் தகுதி இன்றி தராதரம் உரிமை வழங்கப்படும் நிலைகளைக் காண்பீர்கள். நீங்கள் என்னை சந்திக்கின்றவரை பொறுமையாக இருங்கள் எனக் கூறினார்கள். (புகாரி)

புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் வேறு அறிவிப்புக்களில் என்னை நீங்கள் ஹவ்ள் தடாகத்தின் அருகில் சந்திக்கின்ற வரைக்கும் பொறுமையாக இருங்கள் என இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம்.

குழப்பங்கள் பற்றிய முன்னறிவிப்புக்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ – صحيح البخاري

அறிவு கைப்பற்றப்படும். நில அதிர்வுகள் அதிகரிக்கும், காலம் நெருங்கும் (சுருங்கும்), குழப்பங்கள் அதிகரிக்கும், கொலைக் காலசாரம் அதிகரிக்கும், செல்வம் பெருகிவழியும் நிலை வராமல் மறுமைநாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இந்த நிலையை மனிதர்கள் உணரவே செய்கின்றனர். 1500 வருடங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட முன்னறிவிப்புக்கள் நபித்துவத்தின் உண்மையை உலகுக்கு பறைசாட்டும் முக்கிய செய்திகள் என்பதை நாம் அறிவோம்.

நபியின் அந்தரங்க செயலாளர் என அறியப்பட்ட ஹுதைபா இப்னுல் யமான் (ரழி) அவர்களிடம் இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் குழப்பங்கள் பற்றி நபிகள் நாயகம் அவர்கள் கூறியது பற்றி அறிக்குமாறு கேட்டபோது ஹுதைபா அவர்கள்:
فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلَاةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ وَالْأَمْرُ وَالنَّهْيُ
((صحيح البخاري))

ஒரு மனிதருக்கு அவரது குடும்பத்தில் ஏற்படும் (சாதாரண) குழப்பம், அதற்கு தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை ஏவி, தீமையைத் தடுத்தல் ஆகிய காரியங்கள் பாரிகாரமாக அமையும் என்றார்கள். (புகாரி)

இதனை அறிவித்ததும் கலீஃபா அவர்கள் இது பற்றி நான் உங்களிடம் வினவில்லை. மாற்றமாக கடல் அலைபோன்று வீசுகின்ற குழப்பங்கள் பற்றித்தான் வினவுகின்றேன் என்றார்கள். அதற்கு ஹுதைபா (ரழி) அவர்கள் அமீறுல் முஃமனீன் அவர்களே! உங்களுக்கும் அதற்கும் இடையில் மூடப்பட்ட வாயில் ஒன்று உள்ளது. அது பற்றி நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டாம் எனக் கூறினார்கள். (புகாரி).

குழப்பங்களின் வாயில்களை அடைப்பவராக உமர் (ரழி) அவர்கள் காணப்பட்டார்கள். அவர்களின் கொலை முஸ்லிம் சமூகத்தில் பெரிய பெரிய குழப்பங்கள் ஏற்படக் காரணமானது.

மூன்றாம் கலீஃபா உஸ்மான் பின் அப்ஃபான் அவர்களின் கொலையை அறிஞர்கள் கொலை நிகழ்வு என அறிவிக்காமல் குழப்பம் என்றே அறிவிப்பார்கள். அந்த அளவு பாரிய நிகழ்வாக அது கொள்ளப்படுகின்றது.

முஸ்லிம்களை அழிக்கும் செல்வம்:

முஸ்லிம்கள் மத்தியில் செல்வம் பெருகுவதும் அவர்கள் மத்தியில் குழப்பங்கள் பெருகுவதும், அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொள்வதும், அவர்கள் தமக்குள் சண்டையிட்டு அழியவும் காரணமாகும் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அபூ உபைதா (ரழி) அவர்கள் பஹ்ரைனில் இருந்து கொண்டு வந்த சொத்துக்கள், பொருட்கள் பற்றி அறிந்த அன்ஸாரிகள் சுபஹ் தொழுகையில் மதீனாப் பள்ளியில் திரண்டார்கள். இதுபற்றி அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அபூ உபைதாவின் வருகை பற்றி அறிந்துதானே நீங்கள் வந்தீர்கள் எனக் கேட்டார்கள். அவர்கள் ஆமாம் எனப் பதிலளித்தார்கள். சந்தோஷமான செய்தி உங்களுக்குக் காத்திருக்கின்றது எனக் கூறிவிட்டு:
…فَوَاللَّهِ مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ الدُّنْيَا عَلَيْكُمْ كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ
(متفق عليه)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் மீது வறுமை பற்றி நான் அஞ்சவில்லை. அதற்கு மாற்றமாக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது உலகம் தாராளமாகத் தரப்பட்டது போன்று உங்களுக்கும் தாராளமாக்கப்பட்டு, அதனால் நீங்கள் போட்டிபோட்டுக் கொண்டு அவர்களும் அழிந்தது போன்று நீங்களும் அழிந்து விடுவது பற்றித்தான் அச்சப்படுகின்றேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேற்படி நபி மொழியானது உலகைக் காரணமாகக் கொண்டு எழுகின்ற குழப்பங்கள் மனித சமூகத்தின் அழிவில் பாரிய பங்கு வகிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

இன்று உலகின் செல்வத்தின் பெரும் பகுதியை அரபு நாடுகளும், ஏனைய முஸ்லிம் நாடுகளும் கொண்டிருக்கின்றன. சகோதர நாடுகளாக தம்மைப் பற்றிக் கூறிக் கொண்டாலும் அவைகளுக்குள் போட்டி பொறாமையுடன் இருப்பதை மறுக்க முடியாது.

ஈராக் அரபு தேசங்களில் ஒரு தேசமாகும். அதனை அழிவின் விழிம்பிற்கு கொண்டு சென்றவர்கள் யார்? அரேபியர்கள்தானே! எகிப்து அரபு நாடாகும். அதன் அழிவுக்கும், வீழ்ச்சிக்கும் உள்நாட்டுக் கலவரங்களுக்கும் அரேபியர்களே காரணமாக இருக்கின்றனர்.

குழப்பங்கள் நிகழ்ந்தே தீரும்

குழப்பங்கள் நிகழ்ந்தே தீரும். அவை உலகில் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது. அவை நிகழும்போது எவராலும் அவற்றை தடுத்து நிறத்தவும் முடியாது. அவை நிகழ்ந்தே முடியும் நிகழ்வுகளாகும்.
عَنْ أُسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَشْرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُطُمٍ مِنْ الْآطَامِ فَقَالَ هَلْ تَرَوْنَ مَا أَرَى إِنِّي أَرَى الْفِتَنَ تَقَعُ خِلَالَ بُيُوتِكُمْ مَوَاقِعَ الْقَطْرِ صحيح البخاري

மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டை மீது ஏறிய நபி (ஸல்) அவர்கள் நான் பார்ப்பவைகளை எல்லாம் நீங்கள் பார்க்கின்றீர்களா? எனக் கேட்டுவிட்டு: மழைத்துளிகள் போன்று (அடுக்கடுக்கான) குழப்பங்கள் உங்கள் வீடுகளின் மத்தியில் நெகிழ்வதை நான் பார்க்கின்றேன் எனக் கூறினார்கள். (புகாரி).

இன்று வீடுகளில் தொலைத்தொடர்பு சாதனங்களான முகநூல் மற்றும் சமூக இணையத் தளங்கள் ஊடாக ஏற்படுகின்ற குழப்பங்கள், பிரச்சனைகள் சாதாரணமானவை அல்ல.

பல குடும்பங்கள் மத்தியில் சர்ச்சை, இன்னும் தாகத ஆண் பெண் உறவு, தலாக் என விரிந்து கொண்டே செல்கின்றது. இதில் எத்துணை உண்மைகள் உள்ளன என்று சிந்தித்துப் பாருங்கள்.

குழப்பங்கள் இறை நியதியின் அடிப்படையில் ஏற்படுகின்றவைகளாகும். அவைகள் வானில் இருந்து காலத்திற்கு காலம் பூமிக்கு இறக்கப்படுவது உங்களுக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்.
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللَهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَقَالَ سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنْ الْفِتَنِ وَمَاذَا فُتِحَ مِنْ الْخَزَائِنِ أَيْقِظُوا صَوَاحِبَاتِ الْحُجَرِ فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الْآخِرَةِ- صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு திடீரென விழித்தெழுந்து, சுப்ஹானல்லாஹ்! இவ்விரவு என்ன குழப்பங்கள்தாம் இறக்கப்பட்டுள்ளதோ! என்ன பொக்கிஷங்கள்தாம் திறக்கப்பட்டுள்ளதோ! அறைவாசிகளை (நபியின் மனைவியரை) உறக்கத்தில் இருந்து (தொழுகைக்காக) எழுப்பி விடுங்கள். உலகில் ஆடை அணிந்த எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணிகளாக இருக்கப் போகின்றனரே! எனக் கூறினார்கள் (புகாரி).

சில ஹதீஸ்களில் பொக்கிஷங்கள் முதன்மைப்படுத்தப்பட்டுக் கூறப்பட்டுள்ளது. செல்வத்தினால் ஆடை, அணிகலன்களால் அலங்காரங்களும், பகட்டுகளும் பிறக்கின்றன.

பிற்காலத்தில் வெற்றிகொள்ளப்படும் பிரதேசங்களில் பெறப்படும் வளங்களால் குழப்பங்கள் உருவெடுக்கவும் வாய்ப்பிருப்பதைக் கருத்தில் கொண்டும் இதைக் குறிப்பிட்டிருக்கலாம் என்பது சில அறிஞர்களின் பார்வையாகும்.

பொதுவாக பெண்கள் மென்மையான ஆடைகள் அணிவதை விரும்புவோராக இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் அவ்வாறானோரின் நிலை மறுமையில் இப்படியாகலாம் என்பது பற்றி உணர்த்திடவும் இவ்வாறு கூறி இருக்கலாம்.

உலகில் எத்துணை செல்வங்கள் மனிதர்களை வந்தடைந்தாலும் மறுமையில் இவ்வாறானதொரு நிர்க்கதியான நிலையை அனைத்து மனிதர்களும் சந்திப்பார்கள் என்பதையே இது உணர்த்துகின்றது. (அல்லாஹ் மிக அறிந்தவன்)

குழப்பங்கள் நிறைந்த பிரதேசம்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ إِلَى الْمَشْرِقِ فَقَالَ هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ
((صحيح البخاري))

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவின்) கிழக்குத் திசையை நோக்கி (ஈராக்கை நோக்கி) சைகை செய்து, இதோ இங்கிருந்தான் குழப்பங்கள் தோன்றும். இதோ இங்கிருந்துதான் ஷைத்தானின் கொம்பு வெளிப்படும் என்று கூறியதைக் கணடேன் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

யுஸைர் பின் அம்று (ரழி) அவர்கள் ஸஹ்ல் பின் ஹனீஃப் (ரழி) அவர்களிடம் கவாரிஜ்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் ஏதாவது கூறியது பற்றி நீங்கள் செவிமடுத்தீர்களா எனக் கேட்டார்கள். அவர்கள் ஈராக் நகர் பக்கமாக கையைக் காட்டி இஙகிருந்து ஒரு கூட்டம் வெளிப்படும். குர்ஆனை அவர்கள் நன்கு திறம்பட ஓதுவார்கள். அவர்களின் தொண்டைக் குழியை அது கடக்காது. ஈட்டியில் இருந்து அம்பு வெளியேறுவது போன்று அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் செல்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறினார்கள். (புகாரி)

இது பற்றி விளக்கமளிக்கும் இமாம்களான கத்தாபி, மற்றும் இப்னு ஹஜர் போன்ற அறிஞர்கள் இஸ்லாமிய சிந்தனைக்கு முரணான சிந்தனாரீதியான இயக்கங்களான, கவாரிஜ், முஃதஸிலா, மற்றும் ஜஹ்மிய்யா, கத்ரிய்யா, ஷீஆ போன்ற நம்பிக்கை கோட்பாடுகளில் வழிதவறிய குழுக்களை அடையாளம் காட்டுவதைப் பாரக்கின்றோம். (பார்க்க: மஆலிமுஸ்ஸுன்ன, ஃபத்ஹுல் பாரி)

இந்த நபிமொழியின் அடிப்படையில் பார்க்கின்ற போது ஈராக் பிரதேசமானது குழப்பங்கள் அதிகமதிகம் நிறைந்து காணப்படுவதோடு, பல்வேறுபட்ட குழுக்களையும், வழிகேட்டு சிந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு தேசமாக மறுமைவரை காணப்படும் என்பதும் இங்கு தெளிவாகின்றது. இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன

ஈராக்கிலுள்ள ‘யூப்பிரட்டீஸ்’ நதியானது தங்க மலையை வெளிப்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது. மக்கள் அது பற்றிக் கேள்விப்பட்டதும் அங்கு செல்வார்கள். அதன் பக்கமாக வசிப்போர் மக்கள் அதில் இருந்து எடுக்க நாம் அனுமதித்தால் அவை அனைத்தையும் அவர்கள் எடுத்துச் சென்று விடுவார்கள் எனக் கூறி அதற்காக சண்டயிட்டுக் கொள்வார்கள். அவர்கள் நூறுபேரில் ஒருவர் மாத்திரமே மீதமாக இருப்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிம் கிரந்தத்தின் மற்றொரு அறிவிப்பில் فَمَنْ حَضَرَهُ فَلَا يَأْخُذْ مِنْهُ شَيْئًا ‘அங்கு செல்பவர் அதில் எதையும் எடுக்க வேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக இடம் பெற்றுள்ளது.

குழப்பங்களின் போது ஒதுங்கி வாழுதல் என்பது நபி (ஸல்) அவர்களின் முக்கிய வழிகாட்டல்களில் ஒன்றாக இடம் பெறுவதை இங்கு கவனிக்க முடிகின்றது.

1980- 1988 வரையான ஈராக், ஈரான் போரின்போது பத்து லட்சம் பேர் உயிரிந்துள்ளனர்.

எட்டு வருடகால யுத்தத்தின்போது 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.

2004ல் ஈராக்கை ஆக்கிரிமித்த அமெரிக்கப்படையினரில் மட்டும் 2013 காலப்குதி வரை (73.000) எழுபத்தி மூவாயிரம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். காயப்பட்டவர்கனின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் தாண்டி இருந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க ராணுவத்தில் உடல் ஊனமுற்றவர்கள் எண்ணிக்கை 1,620.906 (பதினாறு லட்சத்தி இருபதாயிரத்தி, தொள்ளாயிரத்து ஆறுபேர் என
செய்திகள் வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் 2013 மாத்திரம் 714 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிரியாவில் மூன்று ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற போரில் இதுவரை 1.62.000 பேர் உயிரழந்துள்ளனர்.

இன்றும் ஈராக்கிலும் சிரியாவிலும் போர் நடந்து கொண்டே இருக்கின்றது. வஹியின் அடிப்படையில் வெளிப்பட்ட நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்களில் எவ்வளவு பெரும் உண்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

குழப்பங்களை சாதாரணமாக எடைபோட முடியுமா?

உலகில் நிகழும் குழப்பங்களை சாதாரணமாக எடை போட முடியாது. அவை சிலபோது படுபயங்கரமானதாகவும், சிலபோது சாதாரணமானவையாகவும் இருப்பது குழப்பங்களின் இயல்பாகும்.

தஜ்ஜாலின் குழப்பம், மண்ணறையில் வானவர்களால் ஏற்படும் கேள்வி தொடர்பான குழப்பங்கள், ஈராக், சிரியா போன்ற நாடுகள் பற்றி முன்னறிவிப்புச் செய்யப்பட்ட குழப்பங்கள் மிகப் பயங்கரமானவையாகவே இருக்கப்போகின்றது.

அதே வேளை, குடும்பங்கள், அண்டை அயலவர், உறவினர்களோடு ஏற்படும் குழப்பங்களை நோக்கினால் அவை சாதாணமானவைகளாகும். இவை அனைத்திற்குமான தீர்வு பற்றி அல்லாஹ்வின் தூதரால் வழிகாட்டப்பட்டுள்ளது. அவற்றில் முன் சென்ற சமூகத்தின் வழிகாட்டலும், நடைமுறையும் ஒன்றாகும். அது பற்றி சுருக்கமாக பின்வருமாறு நோக்கலாம்.
… وَإِنَّ أُمَّتَكُمْ هَذِهِ جُعِلَ عَافِيَتُهَا فِي أَوَّلِهَا وَسَيُصِيبُ آخِرَهَا بَلَاءٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا وَتَجِيءُ فِتْنَةٌ فَيُرَقِّقُ بَعْضُهَا بَعْضًا وَتَجِيءُ الْفِتْنَةُ فَيَقُولُ الْمُؤْمِنُ هَذِهِ مُهْلِكَتِي ثُمَّ تَنْكَشِفُ وَتَجِيءُ الْفِتْنَةُ فَيَقُولُ الْمُؤْمِنُ هَذِهِ هَذِهِ فَمَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنْ النَّارِ وَيُدْخَلَ الْجَنَّةَ فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ – صحيح مسلم

உங்களது இந்த சமூத்தின் ஆரோக்கியம் (ஈடேற்றம்) அதன் ஆரம் சமூகத்தில் ஆக்கப்பட்டிருந்தது. அதன் இறுதிக்கட்டத்தில் பல சோதனைகள், மற்றும் நீங்கள் வெறுக்கின்ற விவகாரங்கள் (குழப்பங்கள்) நடந்தே தீரும். ஒரு குழப்பமான நிலை வரும். ஒரு குழப்பம் முந்திய மற்ற குழப்பத்தை எளிதாக்கிக் காட்டும். ஒரு குழப்பம் வரும். அப்போது இறை விசுவாசியானவன் இதுவே எனது அழிவு என முடிவு செய்வான். பின்னர் அது அகன்று விடும். பிறிதொரு குழப்பம் வரும். அப்போது இறை விசுவாசியானவன் இதுவே எனது அழிவு. இதுவேதான் என முடிவு செய்வான். யார் நரகில் இருந்து காப்பற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப்பட விரும்புகின்றாரோ அவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவராக இருக்கும் நிலை அவரது மரணம் அவரை வந்தடையட்டும். மனிதர்களில் யாரிடம் வர அவர் விரும்புகின்றாரோ அவரிடமே அவர் வரவும். (அதாவது குழப்பவாதிகளிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

குழப்பங்கள் நிகழ்வது பற்றியும், அவற்றின் தன்மைகள் பற்றியும், அது பற்றிய வழிகாட்டல்களும் இதில் தெளிவாக இடம் பெற்றுள்ளன.

மண்ணயிறைல் ஏற்படும் குழப்பம்

மண்ணறை வாழ்வை மனிதர்கள் அனைவரும் சந்தித்தே தீரவேண்டும். அதில் ஏற்படவிருக்கும் குழப்பங்கள் பாரியதாகவே இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர்களின் பின்வரும் அறிவுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.
… فَأُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي قُبُورِكُمْ مِثْلَ أَوْ قَرِيبَ لَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ صحيح البخاري

தஜ்ஜாலின் குழப்பத்திற்கு ஒத்த குழப்பம் போன்று நீங்கள் உங்கள் மண்ணறைகளில் சோதிக்கப்பட இருக்கின்றீர்கள் என ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்கள். (புகாரி).

நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியவைகளில் மண்ணறையின் வேதனை என்று தனியாகவும், மண்ணறையின் குழப்பமான நிலை என்று வேறாகவும் பிரார்த்தித்திருப்பது இதன் பாரதூரத்தை விளக்கிடும் ஒரு வழிமுறையாகக் கொள்ள வேண்டி உள்ளது.

குழப்பங்களின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

இஸ்லாமிய மார்க்கம் அனைத்திற்கும் வழிகாட்டி இருப்பது போன்று குழப்பங்களின் போதும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் போதித்திருக்கின்றது. அந்த வகையில் பின்வரும் நடைமுறைகள் பதிவு செய்யப்படுகின்றன.

நிதானமாக நடந்து கொள்ளல்:

குழப்பங்களின் போது ஒரு முஃமின் தனது மன உறுதியை இழந்துவிடக் கூடாது. குழப்பமான சூழ்நிலைகள் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் எச்சரிக்கையாவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانْفِرُوا ثُبَاتٍ أَوِ انْفِرُوا جَمِيعًا
النساء : 71
 

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். (எச்சரிக்கையாக இருங்கள்), பிரிந்தவர்களாகவோ, சேர்ந்தோ போருக்குப் புறப்படுங்கள். (அந்நிஸா: 71)

எதிரிகளின் சூழ்ச்சிகள், தாக்குதல்களில் இருந்து எச்சரிக்கின்ற வசனமாக இவ்வசனம் அமைந்துள்ளது. குழப்பமான நிலைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதும் அவ்வாறே!

தொழுது அல்லாஹ்வின் பக்கம் நெருங்குதல்:

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குழப்பங்கள் இறக்கப்படுவது பற்றிய ஹதீஸை விளக்குகின்றபோது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
…وَفِي الْحَدِيث النَّدْب إِلَى الدُّعَاء ، وَالتَّضَرُّع عِنْدَ نُزُول الْفِتْنَة وَلَا سِيَّمَا فِي اللَّيْل لِرَجَاءِ وَقْت الْإِجَابَة لِتُكْشَف أَوْ يَسْلَم الدَّاعِي وَمَنْ دَعَا لَهُ وَبِاَللَّهِ التَّوْفِيق . فتح الباري لابن حجر
– (20 / 72)
 

மேற்படி ஹதீஸில் துஆவின் பக்கம் அதிரடியாக நெருங்குவதும், குழப்பங்களின் போது அல்லாஹ்வை இறைஞ்சி வழிபடுவதும் உள்ளடங்கி இருக்கின்றது. குறிப்பாக இரவில் விடையளிக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொண்டு குழப்பங்கள் நீங்கிடவும், அல்லாஹ்வை அழைப்பவரும், யாருக்காக அவர் பிரார்த்திக்கின்றாரோ அவரும் அதில் இருந்து ஈடேற்றம் பெறவும் (பிரார்த்தனை செய்தல்) இந்த ஹதீஸில் காணப்படுகின்றது என்றும் மற்றொரு இடத்தில் விரிவுரை செய்கின்றபோது
… وَفِي الْحَدِيث اِسْتِحْبَاب الْإِسْرَاع إِلَى الصَّلَاة عِنْد خَشْيَة الشَّرّ كَمَا قَالَ تَعَالَى : ( وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاة ) وَكَانَ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْر فَزِعَ إِلَى الصَّلَاة ، وَأَمَرَ مَنْ رَأَى فِي مَنَامه مَا يَكْرَه أَنْ يُصَلِّيَ ، وَسَيَأْتِي ذَلِكَ فِي مَوَاضِعه . وَفِيهِ التَّسْبِيح عِنْد رُؤْيَة الْأَشْيَاء الْمَهُولَة ، ((فتح الباري لابن حجر
– (1 / 184)
 

பொறுமையக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி வேண்டுங்கள் என்று அல்குர்ஆன் குறிப்பிடுவது போன்று தீமைகள் ஏற்படுவதை அஞ்சுகின்றபோது தொழுகையின் பக்கம் விரைதல் நபிவழியாகும் என்பது இந்த ஹதீஸில் உள்ளடங்கி இருக்கின்றது. திகில் கொள்ளும்படியான ஏதாவது நிகழ்வுகள் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் பக்கம் விரைவார்கள். கனவில் மனவெறுப்பான காட்சிகளைக் காண்போரை தொழும்படி கட்டளை இடுவார்கள். பாதகமான, திடுக்கிடும் நிகழ்வுகளின் போது ‘சுப்ஹானல்லாஹ்’ எனக் கூறுவதும் இதில் உள்ளடங்கி இருக்கின்றது.

‘சுப்ஹானல்லாஹ்’ ‘லாயிலாஹ இல்லலாஹ்’ ‘அல்லாஹு அக்பர்’ எனக் கூறுதல்

சில நேரங்களில் நிகழக்கூடாத குழப்பங்கள் நிகழ்கின்ற ஆபத்தான ஒரு நிலையை அவதானிக்கின்றபோது நபி (ஸல்) அவர்கள் ‘லாயிலாஹ இல்லலாஹ்’ என்று கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம்).

சில நேரங்களில் ‘சுப்ஹானல்லாஹ்’ எனக் கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம்). சிலவேளைகளில் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம்).

أَعُوذُ بِاللَّهِ مِنْ الْفِتَنِ என்றோ குழப்பங்களில் இருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன் என்றோ,
அல்லது, نَعُوذُ بِاللَّهِ مِنْ الْفِتَنِ குழப்பங்களில் இருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றோம். (புகாரி, முஸ்லிம்)

இணைவைத்த நிலையில் மரணித்த மனிதர்கள் மண்ணறையில் வேதனை செய்யப்படுவது பற்றியும் மண்ணறையில் ஏற்படவிருக்கும் சோதனை பற்றி நபித்தோழர்களுக்கு விளக்கிய நபி (ஸல்) அவர்கள் வெளிப்படையான, மற்றும் மறைவான குழப்பங்களில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் எனக் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள்:
نَعُوذُ بِاللَّهِ مِنْ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
(صحيح مسلم)
 

வெளிப்படையான, மற்றும் மறைவான குழப்பங்களில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

எவைகள் பற்றி எல்லாம் குழப்பங்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதோ அவை அனைத்தில் இருந்தும் பாதுகாப்புத் தேடுவது கடமையாகும் என்பதை மேற்படி ஹதீஸை முழுமையாகப் படிக்கின்றபோது புரிந்து கொள்ள முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் குழப்பங்களில் இருந்து பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிக்கின்றார்கள்.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ وَمِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْفَقْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ صحيح البخاري وَفِتْنَةِ الدَّجَّالِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

அல்லாஹ்வே உன்னிடம் சோம்பேறித்தனம், முதுமை, பாவம் செய்வது, கடன் தொல்லை, (கப்ரின்) மண்ணறையின் ஃபித்னா, மண்ணறையின் வேதனை, நரகத்தின் சோதனை, நரக வேதனை ஆகியவற்றில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் உன்னிடம் வறுமையின் சோதனை, தஜ்ஜால் மஸீஹின் குழப்பம் என்பவற்றில் இருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றேன். (பகாரி)

குடும்பத்தில் ஏற்படும் குழப்பமும் பரிகாரமும்

ஆரம்ப காலங்களில் குடுங்கள் மத்தியில் காணப்பட்ட ஐக்கியம், சகவாழ்வு இன்று இல்லாது போய் விட்டது. ஒரு குடும்பம் பல குழுக்களாக சிற்றரசுகள் போன்று பிரிந்து சின்னாபின்னமாக வாழ்வதை இன்றும் தாராளமாக அவதானிக்கின்றோம்.

எந்த குடும்பமும் விதி விலக்கில்லை என்று குறிப்பிடும் அளவு நிலைமை மோசமடைந்திருக்கின்றது. குடும்பங்கள் மத்தியில் வாழ்கின்றபோது நடக்கின்ற பிரச்சினைகள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

நபியின் அந்தரங்க செயலாளர் என அறியப்பட்ட ஹுதைபா இப்னுல் யமான் (ரழி) அவர்களிடம் இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் குழப்பங்கள் பற்றி நபிகள் நாயகம் அவர்கள் கூறியது பற்றி அறிக்குமாறு கேட்டபோது ஹுதைபா அவர்கள்:
فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِه وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلَاةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ وَالْأَمْرُ وَالنَّهْيُ
((صحيح البخاري))
 

ஒரு மனிதருக்கு அவரது குடும்பத்தில் ஏற்படும் குழப்பம், அதற்கு தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை ஏவி, தீமையைத் தடுத்தல் ஆகிய காரியங்கள் பரிகாரமாக அமையும் என்றார்கள். (புகாரி)

ஓதுங்கி வாழுதல்:

குழப்பங்களில் இருந்து ஒரு முஃமின் ஈடேற்றம் பெற இது இறுதிக்கட்ட வழிமுறையாகும். முஸ்லிம்கள் மத்தியில் பல குழுக்கள், இயக்கங்கள் தோற்றம் பெற்று அவை தலைமைத்துவம் இன்றி சிதறிக் காணப்படும்போது ஒரு முஃமின் தன்னை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய இறுதிக்கட்ட நடவடிக்கையாகும்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكَ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الرَّجُلِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ يَفِرُّ بِدِينِهِ مِنْ الْفِتَنِ صحيح البخاري

ஒரு மனிதனது செல்வம் ஆட்டு மந்தையாக இருப்பது சிறந்ததாகும் என்றதொரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. குழப்பங்களில் இருந்து தனது மார்க்கத்தை பாதுகாத்துக்கொள்ள அவன் அவற்றுடன் மலையடிவாரங்களையும், மழை நீர் தொட்டிகளையும் தேடி ஒதுங்குவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இப்டியும் ஒரு வழிமுறை

குழப்பங்கள் ஏற்படும் அறிந்து கொள்ளுங்கள்! குழப்பங்கள் நடந்தே தீரும். அப்போது அமர்ந்திருப்பவர் நடப்பவரை விட சிறந்தவராவார். அதன் பக்கம் நடப்பவர் அதன் அளவில் சென்றுவிட்டவரை விட சிறந்தவராவார். அறிந்து கொள்ளுங்கள் குழப்பங்கள் இறங்கினால் அல்லது நிகழ்ந்தால் யாரிடம் ஒட்டகம் இருக்கின்றதோ அவர் அவரது ஒட்டகத்துடன் சேர்ந்து கொள்ளவும். யாரிடம் ஆட்டு மந்தைகள் இருக்கின்றதோ அவர் தனது ஆடுகளுடன் சேர்ந்து கொள்ளவும். யாரிடம் சொந்தமான காணிகள் இருக்கின்றதோ அவர் தனது காணியில் ஒதுங்கி வாழ்ந்து கொள்ளவும். ஒருவர் பாதுகாப்பை விரும்பினால் அவரது வாளின் கூரை நிலத்தில் தட்டி உடைத்துவிட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும். அல்லாஹ்வே! நான் எத்தி வைத்துவிட்டேன்; அல்லாஹ்வே! நான் எத்தி வைத்துவிட்டேன், அல்லாஹ்வே! நான் எத்தி வைத்துவிட்டேன் என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! நான் விரும்பாமல் வற்புறுத்தப்பட்டவனாக ஒரு அணியில் சேர்ந்து போராட நான் பணிக்கப்பட்டிருக்க யாரோ ஒரு மனிதன் என்னை அவனது ஈட்டியினால் அல்லது அம்பினால் என்னைத் தாக்கிவிட்டால் எனது நிலை என்ன? எனக் கேட்டார்கள் அதற்கு
قَالَ يَبُوءُ بِإِثْمِهِ وَإِثْمِكَ وَيَكُونُ مِنْ أَصْحَابِ النَّارِ صحيح مسلم

அவனது பாவத்தையும் உனது பாவத்தையும் சுமந்து கொண்டு நரகில் நுழைவான் எனப் பதில் அளித்தார்கள். (முஸ்லிம்)

முடிவுரை:

முஃமினாகப் பிறக்கின்ற ஒவ்வொருவரும் சோதிக்கப்படுவது இறை நியதியாகும். நபிமார்கள், நல்லடியார்கள் அனைவரும் சோதிக்கப்பட்டனர். அதில் அவர்கள் பொறுமையாகவும் சமயோசிதமாகவும் இறுதி வரை நடந்து வெற்றி பெற்றனர்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ
صحيح مسلم) 142/13)

பலசாலியான இறை நம்பிக்கையாளன் பலவீனமான இறை நம்பிக்கையாளனை விட சிறந்தவன், அல்லாஹ்விடம் நேசத்திற்குரியன். (இருப்பினும்) அனைவரிலும் நன்மை உண்டு. உனக்கு பயன் தரும் விஷயத்தில் நீ ஆசைகொள். (அதற்காக) அல்லாஹ்விடம் உதவி தேடிக் கொள். மனவலிமையை இழக்காதே! ஏதாவது உனக்கு நேர்ந்து விட்டால் நான் இவ்வாறு இவ்வாறு செய்திருந்தால் என்ன என்று பேசிக் கொள்ளாதே! மாறாக, அல்லாஹ்வின் (கத்ர்) முன்னேற்பாடு அவன் விரும்பியதை செய்பவன் என்று கூறிக் கொள். ஏனெனில் அப்படி, இப்படி செய்தால் என்பது ஷைத்தானின் செயற்பாட்டை திறந்துவிடும் என நபி (ஸல்) அவர்ள் கூறினார்கள் (முஸ்லிம்)

உங்கள் சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

இவண்:
எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *