Featured Posts
Home » பொதுவானவை » விழிப்புணர்வு » புகை மரணத்தின் நுழைவாயில்

புகை மரணத்தின் நுழைவாயில்

– காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி
புகையிலை இல்லா ஆரோக்கிய சமூகத்தை உருவாக்கவும், மத்திய மாநில அரசுகள் அவற்றை தடை செய்யவும், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களில் சிக்கித் தவிக்கும் சமூகத்தை எச்சரிக்கவும், அவர்களை மீட்டெடுக்கவும் வேண்டி எழுதப்பட்ட ஆக்கம்.

ஆண்டு தோறும் மே 31 அன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புகையிலை ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால் ஏற்படும் விளைவுகளையும், பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புகையிலையையும், அதுசார்ந்த பொருட்களையும் தடை செய்திருக்கிறது. அத்தோடு பொது இடங்களில் புகை பிடிப்பதையும் தடை செய்திருக்கிறது.

உலகம் முழுவதிலும் 71 நாடுகளில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை உள்ளது. மீறிப் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்படுவதுண்டு.

அயர்லாந்தில் 3 ஆயிரம் டாலர் யூரோ அபராதம், ஜாம்பியாவில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, இஸ்ரேலில் 1400 டாலர் அபராதம், இந்தியாவிலும் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டு முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

பல அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள்:

நானூறு ஆண்டுகளுக்கு முன் போர்த்துக்கீஸியரால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புகையிலையின் கோரப்பிடியில் 11 கோடி இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள் என்பது வேதனையிலும் வேதனை.

ஆண்டு தோறும் சிகரெட்டுகளைச் சாம்பலாக்குகிறவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் கோடியைத் தாண்டி விட்டது.

சிகரெட் மனிதனைச் சாம்பலாக்குகிற கொள்ளிக்கட்டை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் தங்களின் வாழ்வையும், பணத்தையும், உடல் ஆரேக்கியத்தையும் இழந்து வருகிறார்கள் சிகரெட் பிரியர்கள்.

உலக சுகாதார அமைப்பு உலகில் உள்ள ஆண்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், இருபதாம் நூற்றாண்டில் இந்த புகையிலை பத்து கோடி பேரின்; உயிரை பறித்திருக்கிறது என்றும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் நூறு கோடி பேரின் உயிரை பறிக்க இருக்கிறது என்ற தகவலையும் தந்து நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

ஆண்டு தோறும் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாரடைப்பினால் இறக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புகைபிடிப்பதனால் இறக்கின்றனர் என்கிறது இன்னொரு அதிர்ச்சித்தகவல்.

மேலை நாட்டினர் சிகரெட்டை சவப்பெட்டிகளின் ஆணி என்று வர்ணிக்கின்றனர்.

நாள் தோறும் 80 ஆயிரம் இளைஞர்கள் அது தான் நாகரீகம் FASHION, STYLE, என்று நினைத்து பயன்படுத்துகின்றனர்.

இதனால் 8 வினாடிக்கு ஒருவர் இறக்கிறார்.

உலகில் 10 ல் ஒருவரது வாழ்க்கை முடிய புகையிலையே காரணம்.

உலக அளவில் புகையிலையின் விற்பனை ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம். தினசரி விற்பனை 1500 கோடியாகும்.

புகையிலைப் பொருட்களில் அடங்கியுள்ள நச்சுப்பொருட்கள்

நிக்கோட்டின், எத்தனால், நெப்திலோமின், ஹைட்ரஜன் சயனைடு, பைரின், கார்பன் மோனாக்ஸைடு, அமோனியா, கேட்மியம், பெரோனியம் 2-10, வினைல் குளோரைடு, தார்,க ரியமில வாயு போன்ற பல வேதிப்பொருட்கள் புகையிலைப் பொருட்களில் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பறிக்கக்கூடிய அவன் உயிரோடு விளையாடக்கூடிய ஏன் அவன் உயிரையே பறிக்கக் கூடிய நச்சுப்பொருட்களாகும்.

புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளும் பாதிப்புகளும்

புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானவை மாரடைப்பு,காசநோய், ஆஸ்துமா, புற்றுநோய், முடி உதிர்தல், கண் பார்வைக் கோளாறு, தோலில் சுருக்கம் விழுந்து முதிய தோற்றம் ஏற்படுதல், தோல் புற்று நோய், காது கேளாமை, பல் சொத்தை, நெஞ்சில் சளி, எலும்பு முறிவு நோய், இதயக் கோளாறு, வயிற்றுப்புண், விரல்களில் நிறம் மாறுதல், சோரியாஸிஸ் என்னும் தோல் நோய், விந்தணுக்கள் குறைந்து குழந்தைப் பேற்றின்மை போன்ற பல ஆபத்தான நோய்கள் எற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வகையான நோய்கள் புகைப்பவருக்கு மட்டுமல்ல அவர் வெளியிடும் புகையை சுவாசிக்கும் எல்லோருக்கும் ஏற்படுகிறது என்பது தான் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்.

புகையிலை கம்பெனிகளின் உரிமங்களை ரத்து செய்து அரசே தடை செய்யவேண்டும்

இப்படிப்பட்ட நச்சுக்கொல்லியாக இருக்கின்ற, மெல்லக்கொல்லும் விஷமாக (SLOW POISON) இருக்கின்ற, பல ஆபத்துக்களை விளைவிக்கின்ற, உடல் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கின்ற புகையிலையை ஒட்டு மொத்தமாக அரசாங்கம் தடை செய்தால் மட்டுமே புகையிலையை ஒழிக்க முடியும். ஆரோக்கிமான தலைமுறையை உருவாக்கமுடியும்.

மேலும் உற்பத்தியாகும் இடங்களைக்கண்டறிந்து அவற்றை அழிக்கமுயல வேண்டும். அவர்களுக்கு தரப்பட்ட உரிமங்களை ரத்து செய்யவேண்டும்.

வேடிக்கை என்னவெனில் அரசாங்கமே சிகரெட் கம்பெனிகளுக்கு லைசென்சு கொடுத்து (டாஸ்மார்க், விபச்சாரம் போன்று) விற்பனையில் ஒரு பங்கை வாங்கிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது தான் வேதனைக்குறிய விஷயமாக இருக்கிறது.

இதனால் அரசுக்கு எவ்வகையிலும் இலாபம் ஏற்படப்போவதில்லை மாறாக நஷ்டம் தான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

நஷ்டம் அரசுக்குத் தான்

2004 ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் புகையிலைப் பொருட்களால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்த செலவு 8300 கோடி. ஆனால் புகையிலைப் பொருட்களால் கிடைத்த வரி வருமானம் 7150 கோடி. வருவாயை விட நோய்களின் சிகிச்சை செலவு 16சதவீதம் அதிகம்.

புகை பிடித்தலால் ஏற்படும் நோய்களுக்கு 4416 கோடியும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதால் ஏற்படும் நோய்களுக்கு 1387 கோடியும் செலவிடப்படுவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நோய்களுக்கான செலவு தான் அதிகரிக்கிறதே தவிர புகையிலை வருமானம் என்னவோ குறைவு தான். இதனால் அரசுக்குத் தான் நட்டம் ஏற்படுகிறது. எனவே அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு புகையிலையை ஒழித்தால் மனித சமுதாயாத்தை ஆரோக்கியமானதாக மாற்றமுடியும்.

புகையிலை விஷயத்தில் இஸ்லாத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது? இஸ்லாத்தின் தீர்வுகள் என்னென்ன?

உடலுக்குக் கேடு விளைவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை உண்ணச் சொல்கிறது இஸ்லாம்.

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
அல்குர்ஆன் 2:172

புகைபிடிப்பதென்பது மேற்கூறப்பட்ட வசனத்திற்கு முற்றிலும் முரணான செயல் என்பதை விளங்கவேண்டும்.

புகையிலையினால் மனிதன் தன்னையே அழித்துக்கொள்கிறான். தன்னையே அழித்துக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

… இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள், இன்னும் நன்மை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை – நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் 2:195

ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப்
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 5:105

புகைப்பதனால் வீண்விரயம் ஏற்படுகிறது. வீண் விரயத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதுமில்லை.

… உண்ணுங்கள் பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
அல்குர்ஆன் 7:31

மதுவைப்போல போதை தரும் ஒரு பொருள் தான் புகையிலை என்பது. எனவே போதை தரும் அனைத்தையும் இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல்பித்உ, அல் மிஸ்ர்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள் என்று அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவிக்கிறார்.
(புகாரி: 4343)

எவனொருவன் போதை தரும் பானத்தை அருந்துகிறானோ அவனுக்கு அல்லாஹ் தீனத்துல் ஹபாலை அருந்தக் கொடுப்பான் என்று நபியவர்கள் கூறும்போது அது என்ன என்று நபித்தோழர்கள் வினவ அது நரக வாதிகளின் வியர்வை அல்லது அவர்களின் சீழ் என்றார்கள் நபியவர்கள்.
(முஸ்லிம்: 5335)

புகையிலையினால் ஒருவன் தன்னையே அழித்துக் கொள்கிறான் என்பது நாம் கேள்விப்பட்ட செய்தி. ஆனால் அவன் விடும் புகையை யாரெல்லாம் சுவாசிக்கிறார்களோ அவர்களெல்லாம் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். புகையிலையினால் சம்பந்தப்பட்டவர் பாதிக்கப்படுவதை விட அவர் விடும் புகையை சுவாசிப்பவர் அதிகம் பாதிக்கப்படுகிறார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு முஸ்லிம் என்றைக்கும் மற்றவர்களுக்கு நலம் நாடக்கூடியனாக இருப்பானே தவிர பாதிப்பு ஏற்படுத்துகின்றவனாக இருக்கமாட்டான்.

மார்க்கம் என்பதே நன்மையை நாடுவதுதான் என்று நபியவர்கள் கூற யாருக்கு? என்று நபித்தோழர்கள் வினவ “அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர் களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்: 205, புகாரி)

“இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்றும் முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்றும் நபித்தோழர்கள் கேட்டதற்கு “எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற மனிதர்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது” என்றும் அவரே சிறந்தவர் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 11, முஸ்லிம்: 170, அஹ்மத்: 8918)

மனிதனுக்கு ஆரோக்கியம் தருகின்ற பல மருத்துவ குணங்கள் கொண்டது தான் வெங்காயமும், பூண்டும். அதையே சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வரக்கூடாது என்கிற போது கேடுவிளைவிக்கின்ற ஆரோக்கியத்தை கெடுக்கின்ற மற்றவர்களுக்கு நோவினை தருகின்ற புகையிலையை மென்று விட்டும், பீடி, சிகரெட் குடித்துவிட்டும் பள்ளிக்கு வருவதை இஸ்லாம் எவ்வாறு அனுமதிக்கும் என்பதை புகைப்பழக்கத்திற்கு ஆளான முஸ்லிம்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

“பசியின் காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ யாரேனும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உண்டால் நம்முடைய பள்ளிவாசலை அவர் நெருங்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 853, 854, 855, 856)

“பசியின் காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ யாரேனும் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உண்டால் நம்முடைய பள்ளிவாசலை அவர் நெருங்க வேண்டாம் மனிதர்கள் எதனால் நோவினை அடைவார்களோ அதனால் வானவர்களும் நோவினை அடைகிறார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்: 1270,1272)

மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்

ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லாத வரை ஒரு மனிதன் தான் நிற்கும் இடத்தை விட்டும் நகர முடியாது.

1) உன்ஆயுளை எவ்வாறு கழித்தாய்?
2) உன் இளமையை எவ்வழியில் பயன்படுத்தினாய்?
3) செல்வத்தை எவ்வழியில் ஈட்டினாய்?
4) செல்வத்தை எவ்வழியில் செலவு செய்தாய்?
5) கொடுக்கப்பட்ட அறிவை எவ்வழியில் பயன்படுத்தினாய்? என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதீ:2399, தாரிமீ)
இளமையில் சிகரெட் பயன்படுத்துவது, அதற்காக செலவழிப்பது,அதை விற்பனை செய்து பொருள் ஈட்டுவது சரியான செயலா? என்பதை புகையிலையை பயன்படுத்தும் சமூகமே, அதைத் தயாரிக்கும் சமூகமே, அதை விற்பனை செய்யும் சமூகமே சிந்திப்பீர். இறைவனுக்கு அஞ்சி, அவன் விசாரனைக்கு அஞ்சி நடப்பீர்.

ஒவ்வோர் உறுப்பிற்கும் அதற்குரிய உரிமைகளை வழங்கிட வேண்டும். இல்லையேல் அவை நமக்கெதிராக மறுமையில் வாதாடும் எனபதை மறவாதீர்.

உறுப்புகள் பலவீனம் அடையும் அளவிற்கு வணக்க வழிபாடுகளில் கழிக்கக்கூடாது எனும் போது புகையிலைப் பொருட்களினால் உறுப்புக்கள் அனைத்தும் செயலிழந்து போகுமே! என்பதை சிந்திந்துப்பார்க்க வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) ஆகிய என்னிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் , “அப்துல்லாஹ்வே! நீ பகல் எல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவதாகக் கேள்விப்பட்டேனே! (உண்மைதானா?)”என்று கேட்டார்கள். நான், “ஆம் (உண்மைதான்) இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதே! (சில நாள்) நோன்பு நோற்றுக்கொள். (சில நாள்) நோன்பைவிட்டு விடு! (இரவில் சிறிது நேரம்) நின்று வணங்கு! (சிறிது நேரம்) உறங்கு! உன் உடலுக்கென (நீ செய்ய வேண்டிய) கடமைகள் உனக்கு உண்டு. உன்னுடைய கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு. உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு” என்று நபி(ஸல்)கூறினார்கள்.
(புகாரி: 1975, 5199)

மற்றோர் அறிவிப்பில “நீர் இவ்வாறு செய்தால் உம்முடைய கண்கள் பலவீனப்படும். உடல் நலியும்” என்று நபியவர்கள் சொன்னதாகக் காணப்படுகிறது.
(புகாரி: 1153)

வணக்க வழிபாடுகள் செய்யும் போதே உடலும், கண்களும் பலவீனப்படகக் கூடாது என்றிருக்கும் போது புகையிலை என்னும் உயிர்க்கொல்லியினால் உடலும், உடல் உறுப்புக்களும் முழுவதுமாக பாதிக்கப்படுகிறதே இப்படிப்பட்ட புகையிலை என்னும் உயிர்க்கொல்லியை இஸ்லாம் எவ்வாறு அனுமதிக்கும்?

முன்னெச்சரிக்கையாக இருக்கச்சொல்கிறது இஸ்லாம்.

ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன் பேணிக்கொள்ளுங்கள்.
1) முதுமைக்கு முன் இளமை
2) நோய்க்கு முன் ஆரோக்கியம்.
3) வறுமைக்கு முன் செல்வம்.
4) வேலைக்கு முன் ஓய்வு.
5) மரணத்திற்கு முன் வாழ்வு.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(ஹாகிம்: 7846, நஸாயீ: 11832)

எவ்வளவு அருமையான நபிமொழி. புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களால் ஆபத்தான நோய்கள் ஏற்படுகிறதே! அவற்றைத் தடுத்து ஆரோக்கியமாகவும், நோயற்ற வாழ்வும் வாழச் சொல்கிறது இஸ்லாம்.

மனிதன் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டுகிறான். அவனுக்கு எவ்வளவோ அருட்கொடைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று உடல் நலம்.

உடல் நலத்தில் மனிதர்களில் பெரும்பாலோர் அலட்சியமாகவே இருக்கின்றனர். உடல் நலத்தைப் பேணாமல் நோய்கள் வந்ததற்குப் பிறகு பல முயற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுகின்றவர்கள் நம்மில் ஏராளம்! எராளம்!

மனிதர்களில் பெரும்பான்மையினர் மிகப்பெரிய இரண்டு அருட் செல்வங்க ளின் விஷயத்தில் பொடுபோக்காகவே இருக்கின்றனர்.

1. ஆரோக்கியம் (உடல் நலம்) 2. ஓய்வு
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 6412)

புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது கோதுமையை வாயில் போட்டு மெல்லலாம், அல்லது சூரிய காந்தி விதைகளை மெல்லலாம், அல்லது சூயிங்கம் போன்ற மாற்று ஏற்பாடுகளை கையாளும் போது புகையிலையை விட்டும் முற்றிலுமாக நம்மால் ஒதுங்க முடியும்.

புகையிலையும், அது சார்ந்த பொருட்களும் மனித சமூகத்திற்கு எவ்விதத்திலும் பயன்களைத் தருகின்ற பொருட்களல்ல. மாறாக மனித சமூகத்தை அழிக்கவல்லது என்பதும் அவற்றை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதும் மேற்கூறப்பட்ட தகவல்களிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

எனவே மத்திய, மாநில அரசுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு புகையிலையையும், அதுசார்ந்த பொருட்களையும் முற்றிலுமாகத் தடை செய்யவேண்டும்.

ஆக்கம்:
காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA,
பேராசிரியர்: JFA கல்லூரி (Al- Jamiathul Firdhousiya Arabic College),
இமாம்: IRGT பள்ளிவாசல்.

One comment

  1. LULU HIPER MARKET WONER YOUSF ALI CIGARET VIRPATHILLAI QATARIL ,,MUSLIM VIYABARIGAL SINTHIKATTUM ,,YOUSF ALI MIGA MUNEARI VITTAR,,SINTHIYNGAL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *