Featured Posts
Home » சட்டங்கள் » உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம் » ஹஜ் எனும் புனித யாத்திரை

ஹஜ் எனும் புனித யாத்திரை

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்-
அல்லாஹுதஆலா இவ்வுலகில் தன் அடியார்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகள் ஒவ்வொன்றும் பல நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டமைந்தவை. இந்த வகையில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்றான ஹஜ் கடமையின் கிரியைகள் நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது. அது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

“மேலும் யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனித சினனங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக அது இதயங்களில் உள்ள இறையச்சத்தின் விளைவாகும்” (22-:32)

ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ஐந்து கண்டங்களிலிருந்தும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் வான் வழியாகவும் புனித மக்காவில் அமைந்துள்ள கஃபாவை நோக்கி ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பெரும் வேட்கையோடு வருகின்றனர். உண்மையில் இந்த கஃபா அந்தளவுக்கு கண்ணியமானதும் கண்ணியப்படுத்துவதற்குமுறிய ஒரு இடம். அதனை நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். அது சிலை வணக்கத்திற்கெதிரான போராட்டத்தின் பின் ஏகத்துவத்தின் கோட்டையாகவும் இறை வணக்கத்திற்கான இடமாகவும் அமைய வேண்டும் எனக் கட்டினார்கள். இப்றாஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவ வெற்றியை உறுதிப்படுத்தி நிராகரிப்பிற்கு முற்றுப் புள்ளியாக அவர்களும் அவரது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் கட்டினார்கள்.

இப்பூமியின் முதலாவது பள்ளிவாயல் இதுவாகும். இதற்குப் பிறகுதான் கிழக்கிலும் மேற்கிலும் பள்ளிவாயல்கள் கட்டப்பட்டன.

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கன்றார்கள்
உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட பள்ளிவாசல் எதுவென்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்றார்கள். அடுத்தது எதுவெனக் கேட்டேன். அதற்கவர்கள் (ஜெருஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா என பதிலளித்தார்கள். இவ்விரு பள்ளிவாயல்களுக்கும் இடையிலான கால இடைவெளி எவ்வளவு எனக்கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் என்றார்கள். (நஸயீ)

இந்த கண்ணியமிக்க பள்ளிவாயல் முஸ்லிம்களின் கிப்லாவாகக் காணப்படுகிறது.

“நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகத் திருப்புவீராக. உங்களுக்கு எதிராக மக்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை தொழுகையின் போது அதன் பக்கம் திருப்புங்கள். (2-150)

புவி கோளவடிவமாக அமைந்துள்ளதால் மக்கா நகரம் கண்டங்களின் மத்திய நிலையமாக உள்ளது. எனவேதான் உலகின் மையப் புள்ளியாக அமைந்துள்ள கஃபாவை நோக்கி எல்லாத் திசைகளிலும் உள்ள முஸ்லிம்களால் நோக்கப்பட்டு தொழப்பட்டு வருகின்றது. இது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“நபியே இவ்வாறே நாம் அறபி மொழியிலுள்ள இந்தக் குர்ஆனை உமக்கு வஹியாக அறிவித்துள்ளோம். மக்காவாகிய நகரங்களின் தாயையும் (உம்முல் குரா) அதனைச் சூழ இருப்பவர்களையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் மேலும் ஒன்று திரட்டப்படும் நாளினைப் பற்றியும் நீர் அச்சுறுத்தவும் வேண்டும் என்பதற்காக அந்நாள் வருவதில் எவ்வித ஐயமுமில்லை. (42:7)

நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) இறைவனிடத்தில் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்

“எமது இறைவனே! எங்களது இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும் இருக்கிறாய். எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்பபடிந்தவர்களாய் ஆக்கி வைப்பாயாக! மேலும் எங்கள் வழித்தோன்றலிலிருந்து முற்றிலும் உனக்கு கீழப்படிந்து வாழும் ஒரு சமூகத்தை தோற்றுவிப்பாயாக! நாங்கள் நிறைவேற்றவேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுளுக்கு காண்பிப்பாயாக! மேலும் எங்களது பாவமன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் பெரிதும் மன்னிப்பவனும் மிக்க கருனையுடையோனுமாய் இருக்கின்றாய். எங்கள் இறைவனே! மேலும் இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்க ஓதிக்காட்டுபவராகவும் வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பவராகவும் மேலும் அவர்களை தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும்.” (02-129)

இந்தப் பிரார்த்தனையில் அமைந்த அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து வாழும் சமுதாயம் நாங்கள். நபி (ஸல்) அவர்கள் எமக்கு இறுதித் தூதை சுமந்து கொண்டு வந்தவர். இவ்வாறு அவரது சமுதாயமாகிய எங்களை இலக்காகக் கொண்டு கட்டப்பட்ட இந்த கஃபாவை தன் வாழ் நாளில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டுமன்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இருக்கவேண்டும். எவ்வளவு மகத்தான ஞாபகச் சின்னம் இது. அதன் நன்மைகளையும் சிறப்புக்களையும் அடைந்துகொள்வதற்காக எவ்வளவு தூரத்திலிருந்தும் செல்வதற்கு பொருத்தமானவர்கள் நாங்கள்.

ஹஜ் என்பது ஓர் இபாதத். அதன் அடிப்படை அறபாவில் தரித்தல் கஃபாவை தவாப் செய்தல் இன்னும் சில கிரியைகளாகும். இது பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது.

“ஹஜ்ஜுடைய காலம் அனைவராலும் அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால் ஹஜ்ஜின் போது இச்சைகள் தூண்டக்கூடிய சொல் செயல் மற்றும் தீவினை சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது. மேலும் நீங்கள் ஏதேனும் நன்மை செய்தால் அதனை அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான். மேலும் நீங்கள் ஹஜ்ஜுக்காக வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில் வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். எனவே நல்லறிவுடையோரே எனக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்.” (02-197)

எனவே புனித பிரதேசத்தை நோக்கிய இந்த யாத்திரை மனித இயல்புகளை பண்படுத்தி உள்ளத்தை தூய்மை பெறச் செய்கிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் இச்சையைத் தூண்டும் பேச்சுக்கள் செயற்பாடுகள் மோசமான காரியங்களில் ஈடுபடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுகின்றார்களோ அவர்கள் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்பி வருகிறார்கள்” (புஹாரி)
ஒரு ஹஜ் யாத்திரிகர் அந்த கஃபாவை தவாப் செய்வதன் மூலமும் அங்கு தொழுகையை நிறைவேற்றுவதன் மூலமும் அதனை உயிர்ப்பிக்கிறார். முஸ்லிம்களின் ஏகத்துவ சிந்தனையின் வெளிப்பாடு அதற்கு ஈடாக இந்த உலகில் ஒன்றும் இல்லை. அவர்கள் ஹஜ் பயணம் ஆரம்பமானதிலிருந்து எழுப்பும் கோஷம் இதனை உறுதிப்படுத்துகின்றது.


لبيك اللهم لبيك, لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك

நிச்சயமாக உனக்கு அடிபணிந்து விட்டேன். உனது கட்டளையை ஏற்றுக்கொண்டேன். இறைவா! நிச்சயமாக உனக்கு அடிபணிந்து விட்டேன். நிச்சயமாக உனக்கு அடிபணிந்து விட்டேன். நிச்சயமாக புகழ் அருள் ஆட்சி அனைத்தும் உனக்கே சொந்தம். உனக்கு எந்த இணையும் கிடையாது.

ஒரு ஹஜ் பயணி மலை ஏறுகின்ற போதும் ஒரு பள்ளத்தாக்கை கடக்கின்ற போதும் ஒரு பயணக் கூட்டத்தை சந்திக்கின்ற போதும் இந்த தல்பியா என்ற ஏகத்துவ மந்திரத்தை உரக்கச் சொல்லும் போது அவரது ஈமான் அதிகரிக்கின்றது.

தவாபை தொடர்ந்து இடம்பெறும் ஸஈ என்ற கிரியை இஸ்மாஈல் (அலை) அவர்களின் தாய் அன்னை ஹாஜரா அவர்களதும் நபி இப்றாஹீம் அவர்களதும் உள்ளத்தில் நிலை கொண்டிருந்த தவக்குல் என்ற அல்லாஹ்வுடனான ஆழமான உறவை பிரிதிபலிப்பதாக அமைந்துள்ளது.

“நிச்சயமாக ஸபா மர்வா இரு குன்றுகளும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகையால் இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர் மீது அந்த இரண’டிற்குமிடையில் ஸஈ செய்வதில் குற்றமில்லை.மேலும் எவரேனும் தாமாக விரும்பி ஏதேனும் நன்மையை செய்தால் அல்லாஹ் அதை மதிப்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கிறான.” (02-158)

இப்றாஹீம் (அலை) தன் மகனையும் மனையியையும் விட்டுச் செல்கின்ற போது மினாவில் ஷைத்தான் இடைமறித்து நபியவரிடம் கூறுகிறான்:

யாராவது தனது குடும்பத்தை பசி தாகத்தினால் மரணித்துவிட இவ்வாறு செய்வார்களா? திருப்பிச் சென்று உனது குடும்பத்தை காப்பாற்றி விடுவீர் என்றான். அதற்கு இப்றாஹீம் (அலை) கற்களால் எரிந்து அவனை விரட்டி விட்டு பின்வருமாறு கூறிக் கொண்டு சென்றார்.

எங்கள் இறைவனே! நான் எங்கள் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உனது இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே! அவர்கள் இங்கு தொழுகையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தேன். அவர்கள் மீது அன்பு கொள்ளும் படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும் இவர்கக்கு உன் பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் திகழக்கூடும். (14:37)

அல்லாஹீதஆலா தூய்மையான அந்த பிரார்த்தனையை அங்கீகரித்து பதிலழித்தான். ஷைத்தானின் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட்டன. உறுதிமிக்க விசுவாசியின் உள்ளத்தில் ஷைத்தானால் எதனையிம் சாதிக்க முடியாமல் போனது. இதன் மூலமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஷைத்தானின் ஊசலாட்டங்கள் பொய்யானவை என்பதனை ஞாபகமூட்ட கல்லெறிவது ஒரு விதியாக ஆக்கப்பட்டுள்ளது.

அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் தனது தாகித்த குழந்தையை பார்க்கிறார்கள். பின் உதவி தேடி அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி நன்கறிந்திருந்தார்கள். அவர் இப்றாஹீம் (அலை) அவர்கள் இந்த வறண்ட நிலப் பகுதியில் விட்டுச் செல்கின்ற போது அல்லாஹ்வின் கட்டளையா? இதுவெனக் கேட்க இப்றாஹீம் (அலை) ஆம் என்று சொல்ல அன்னை அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள் “அல்லாஹ் கைவிடமாட்டான்” என்று இப்போது அவர்கள் சோதிக்கப்படுகின்றார்கள். வானலோகத்திலிருந்து உதவி வரும் என்று எண்ணினார்கள். அதன் விளைவு ஸம்ஸம் ஊற்று. அந்தப் பள்ளத்தாக்கே செழிப்பானது. அவ்வாறு சங்கடத்திற்குட்பட்ட குழந்தையயிலிருந்துதான் செழிப்பு மிக்க எமது சமூகம் தோன்றியது. இவ்வாறு ஹஜ் கடமையானது இறைவனின் பாதையில் பல சோதனைகளைக் கண்டு சாதனைகள் பல படைத்த ஒரு குடும்பத்தின் கதையை பரைசாற்றி நிற்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *