Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » திருக்குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா?
image courtesy: aljazeera.com Aluthgama, Sri Lanka - Riots by Sinhala Buddhist mobs targeting the Muslim population have swept through Sri Lanka's southern coastal towns of Beruwala and Aluthgama.

திருக்குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா?

இலங்கை சிங்களவர்களைப் பெரும்பான்மையாக் கொண்ட ஒரு நாடாகும். இந்த நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். இந்த அடிப்படையில் இந்த நாட்டு அரசு பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டால் அதை யாரும் குறை காண முடியாது. இதே போன்று இந்நாட்டு மதகுருமார் தத்தமது மார்க்கத்தைப் போதனை செய்து பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிப்பதையும் யாரும் குறை காணமாட்டார்கள். குறை காணவும் முடியாது. இந்த வகையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கென BBS முற்பட்டால் அது அவர்களது உரிமையும் கடமையுமாகும்.

பௌத்த மக்களை பௌத்தத்தின் அடிப்படையில் வாழத்தூண்டுவதும் ஏனைய மக்களுக்கு பௌத்தம் ஒரு சிறந்த மதம் என்ற சிந்தனையைப் போதித்து அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அதன் மூலம் பௌத்தத்தைப் பரப்பவும் முடியும். ஆனால், யாரும் அடுத்த மதங்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச முடியாது.

BBS பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான நியாயமான வழிமுறையை விட்டுவிட்டு இஸ்லாத்தின் மீது அவதூறு கூறும் வழிமுறையைக் கைக்கொண்டுள்ளது.

28.09.2014 அன்று கொழும்பில் இடம் பெற்ற ‘ஒரே இனம்… ஒரே நாடு.. ஒரே சட்டம்’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற BBS மாநாட்டில் அதன் செயலாளர் அரசியல் யாப்புக்கு எதிராக இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை உண்டுபண்ணும் விதத்தில் உரை நிகழ்த்தியுள்ளார். இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உண்டாக்கும் விதத்தில் பேசியது மட்டுமல்லாமல் குர்ஆன் தீவிரவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் போதிப்பதாகக் குற்றம் சுமத்தும் விதத்தில் இவரது உரை அமைந்திருந்தது.

அளுத்கம வன்முறைக்கு அடிவகுத்த இவரது உரையில், ‘நாம் அடிப்படைவாதிகள்தான்’ என சுய வாக்குமூலம் அளித்தவர் எப்படி அடிப்படை வாதத்தை எதிர்க்க முடியும்? மாற்று மதத்தவர்களுக்கு உணவு கொடுக்கும் போது அதில் மூன்று முறை துப்பிவிட்டுக் கொடுக்கும் படி குர்ஆன் கூறுகின்றது எனப் பொய் சொன்னவர் அதற்காக வழக்கு உள்ள நிலையிலேயே திருக்குர்ஆன் மீது மீண்டும் அவதூறு கூறியுள்ளார்.

இதற்காக அவர் விவாதத்திற்குக் கூட அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை அவர் பேசிய இனவாதம் போதிய வெற்றியை அளிக்காததால் இஸ்லாத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் ஒரு விவாதத்தின் மூலம் வெறுப்பை வளர்த்து சாதாரண பௌத்தர்களைத் தன்பக்கம் ஈர்ப்பதற்காகவே இந்த விவாத அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் விடுத்துள்ள இந்த விவாத அறைகூவல் புறக்கணிக்கப்படுவதுடன், அவர் கூறிய குற்றச்சாட்டுகு;களுக்கு விளக்கமளித்து இவரின் போலித் தன்மையை நல்லுள்ளம் கொண்ட பௌத்த மக்களுக்கும் புரிய வைப்பது எமது கடமையாகும். இந்த வகையில், அவர் குர்ஆன் விடயத்தில் மீண்டும் ஒரு முறை எப்படி விளையாடியுள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

அல்குர்ஆன் ஒரேயடியாகத் தனிப் புத்தகமாக அருளப்பட்ட வேதம் அல்ல. 23 வருடங்களாக தேவைக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப சிறுக சிறுக அருளப்பட்ட வேதமாகும். அல்குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்வதென்றால் அது எந்த சந்தர்ப்பத்தில், யார் குறித்து அருளப்பட்டது என்ற விபரம் தேவை. அத்துடன் ஒரு இடத்தில் இருக்கும் திருக்குர்ஆன் வசனத்தை அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் என்பவற்றை ஒன்றிணைத்தே புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் குர்ஆனை அணுகுவது தவறாகும். அடுத்து குர்ஆனில் சொல்லப்பட்டவற்றை நபியவர்கள் தமது வாழ்நாளில் கடைப்பிடித்துள்ளார்கள். இந்த அடிப்டையில் நபியவர்களின் செயற்பாடுகள் குர்ஆனுக்கான விளக்கமாகும் என்பதையும் புரிய வேண்டும்.

‘குழப்பம் நீங்கி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள். ஆனால், அவர்கள் (போரி லிருந்து) விலகிக் கொள்வார்களானால் அநியாயக்காரர்கள் மீதே தவிர எந்த வரம்பு மீறுதலும் கூடாது.’ (2:193)

மேற்கூறிய வசனத்தை எடுத்துக்காட்டி மற்ற மதங்கள் இல்லாமல் போகும் வரை கலவரங்களை உண்டு பண்ணிப் போராடும் படி இஸ்லாம் கூறுகின்றது என்ற தொணியில் பேசியுள்ளார். வேண்டுமென்றே முஸ்லிம்கள் மீது சந்தேகத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணுவதற்காகவே இந்தக் குற்றத்தை ஞானசூனியத் தேரர் முன்வைத்துள்ளார். பொய் கூறுவதும், இப்படி அவதூறு பரப்புவதும் பௌத்த மதத்தின் போதனைக்கு முரணானது என்பது இவருக்குத் தெரியாதா? ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள் முன்னிலையில் பௌத்தத்திற்கு எதிரான பொய்யைப் பிரகடணப்படுத்தியவர் எப்படி பௌத்த மதத்தை வளர்க்க முடியும்?

இவர் குறிப்பிடும் இந்த வசனத்திலேயே ‘அவர்கள் நிறுத்திக் கொண்டால் நீங்களும் நிறுத்திவிடுங்கள்’ என்று போதிக்கப்படுகின்றது. இஸ்லாத்தின் மீது யாராவது போர் தொடுத்தால் நீங்கள் போரிடுங்கள். அவர்கள் நிறுத்திவிட்டால் நீங்களும் நிறுத்திவிடுங்கள் என்று போதிப்பது எப்படிக் குற்றமாகும்?

இந்த வசனத்திற்கு முன்னைய வசனங்கள் இப்படிக் கூறுகின்றன.

‘எவர்கள் உங்களுடன் போரிடுகின்றார்களோ அவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிக்கமாட்டான்.’
(2:190)

எவர்கள் உங்களை எதிர்த்துப் போர் புரிகின்றார்களோ அவர்களுடன் போர் புரியுங்கள் என்று கூறுவதோடு வரம்பு மீறக் கூடாது என்று கூறும் திருக்குர்ஆன், தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? இந்த வசனம் தற்காப்புப் போர் பற்றித்தான் பேசுகின்றது. ஆனால், அடுத்தவர்களை மதம் மாற்றம் செய்ய இஸ்லாம் கூறுவதாகப் பொய்யும் அவதூறும் பரப்பப்பட்டுள்ளது.

கண்ட இடங்களில் கொல்லுங்கள்.

‘(போர் செய்வது விலக்கப்பட்ட) புனித மாதங்கள் கழிந்து விட்டால் இவ்விணை வைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொலை செய்யுங்கள். அவர்களை(சிறை)ப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால், அவர்கள் (இணைவைப்பிலிருந்து) மீண்டு, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வந்தால் அவர்களது வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.’ (9:5)

இந்த வசனத்தை எடுத்துக்காட்டி மாற்று மதத்தவர்களுக்குத் தொல்லை கொடுங்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் விட்டுவிடுங்கள். இல்லையென்றால் படுகொலை செய்யுங்கள் என்ற தோரணையில் பேசியுள்ளார். இதற்கு அடுத்த வசனத்தை இவர்கள் பார்க்காத அளவுக்கு இனவாதம் இவர்களது கண்களைக் குருடாக்கியுள்ளது.

‘இணைவைப்பாளர்களில் எவரேனும் உம்மிடம் புகலிடம் கோரினால், அவர் அல்லாஹ்வின் வார்த்தையைச் செவியேற்கும் வரை அவருக்கு புகலிடம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! நிச்சயமாக அவர்கள் அறியாத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணமாகும்.’ (9:6)

சிலை வணக்கம் புரியும் ஒருவர் உங்களிடம் பாதுகாப்புக் கேட்டால் அவருக்குப் பாதுகாப்பளிப்பதுடன் அவரை உரிய இடத்தில் சேர்த்துவிடுங்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. அப்படியென்றால், மாற்றுமதத்தவரைக் கொல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனையல்ல. மாறாக பாதுக்காக்க வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகின்றது. நபியவர்களும் அப்படித்தான் நடந்து கொண்டார்கள். ஆனால், 9:5 வசனம் கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று சொல்வது பொதுவான மாற்றுமதத்தவரை அல்ல. இந்த வசனத்திற்கு முந்திய வசனங்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

முஸ்லிம்களைக் கொன்று குவித்த, முஸ்லிம்களுக்குப் பல தொல்லைகளைக் கொடுத்த மக்கத்துச் சிலை வணங்கிகள் இஸ்லாம் வளர்ச்சியடைந்த போதும் முஸ்லிம்களுடன் பத்து வருட யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்திருந்தனர். பின்னர் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறி முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாகச் செயற்பட்டனர். அவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை போர் செய்வது தடுக்கப்பட்ட மாதங்களில் மீறினர். எனவே, போர் செய்வது தடுக்கப்பட்ட மாதங்கள் முடிந்துவிட்டால் ஒப்பந்தத்ததை மீறி உங்கள் மீது போரைத் திணித்தவர்களுடன் போரிடுங்கள் என்றே இந்த வசனம் கூறுகின்றது.

உதாரணமாக, இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த யுத்த நிறுத்த காலம் முடிந்த அடுத்த நொடியே புலிகளாலும் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவத் தளபதி புலிகளைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்; கைது செய்யுங்கள் என்றுதான் கூறுவார். மக்கத்து இணை வைப்பாளர்கள் யுத்த நிறுத்த காலத்திற்குள்ளேயே ஒப்பந்தத்தை மீறினர். அவர்களைக் கொல்லுமாறுதான் இந்த வசனம் கூறியுள்ளது.

இதனை முன்னைய வசங்களைப் பார்க்கும் எவருக்கும் புரிந்து கொள்ளலாம்.

‘இணைவைப்பாளர்களில் யாருடன் நீங்கள் உடன்படிக்கை செய்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் விலகிக்கொள்ளும் (அறிவிப்பாகும்.)’

‘எனவே நீங்கள் நான்கு மாதங்கள் இப்பூமியில் சுற்றித் திரியுங்கள். நிச்சயமாக உங்களால் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் இந்நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’

‘நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக் கொண்டனர் என இம் மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்துமுள்ள அறிவிப்பாகும். நீங்கள் (இணைவைப்பிலிருந்து) மீண்டுவிட்டால் அது உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக உங்களால் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிராகரித்தோருக்கு நோவினை தரும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக’

‘எனினும், இணைவைப்பாளர்களில் எவர் களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்து, பின்னர் அவர்கள் உங்களுக்கு எவ்விதக் குறையும் வைக்காமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களது உடன்படிக்கையை அவர்களது தவணை வரை பூரணப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களை நேசிக்கின்றான்.’
(9:1-4)

இந்த அத்தியாயத்தின் முதல் 6 வசனங்களையும் படித்தால் முக்கியமான மூன்று விடயங்களைப் புரிந்து கொள்ளலாம்.

1. முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து அந்த ஒப்பந்தத்தை முறித்தவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான்.

2. உடன்படிக்கை செய்து அதை மீறாது வாழும் மாற்று மத்தவர்களுடன் நீங்கள் செய்த ஒப்பந்தத்தை நீங்களும் பேணிக் கொள்ளுங்கள்.

3. பொதுவான மாற்று மதத்தவர் அவருக்கு ஆபத்து என்ற நிலையில் இருந்தால் அவருக்குப் பாகாப்புக் கொடுங்கள். அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் போது குர்ஆனை நீங்கள் அவர்களது காது கேட்க ஓதுங்கள். சில போது அது அவர்களைக் கவரலாம். இல்லையென்றால் அவர் எந்த இடத்தில் தனக்குப் பாதுகாப்பு இருப்பதாகக் கருதுகின்றாரோ அந்த இடத்திற்கு அவரைக் கொண்டு சென்று விடுங்கள்.

இப்படி மாற்றுமத்தவரது உயிரைக் காக்க உதவச் சொல்லும் திருக்குர்ஆன்தான் காபிர்களைக் கொல்லச் சொல்கின்றது என்று பொய் சொல்கின்றார். ஒப்பந்தத்தை மீறி முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்களுடன்தான் போர் செய்யுமாறு நபியவர்கள் ஏவப்பட்டார்கள். இதைத்தான் நபியவர்களும் போர் செய்யுமாறு நான் ஏவப்பட்டேன் என்றும் கூறினார்கள். ஆனால், முஸ்லிம்கள் பத்தாயிரம் வீரர்களுடன் மக்காவுக்குள் நுழைந்து ஆயுதம் ஏந்தாத அனைவருக்கும் பொது மன்னிப்பு என்று அறிவித்ததுடன் தனது உறவினர்களைக் கொலை செய்தவர்களுக்கும் பொது மன்னிப்பு அறிவித்தர்ர்கள். அவர்களுக்கு எதிராக எவரும் ஆயுதம் ஏந்தாததால் அந்தப் போர் நடக்கவில்லை. இருபது வருடங்களாகத் தொல்லை கொடுத்த தம்மை ஒரே நொடியில் மன்னித்ததால் மனம் மாறிய மக்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். இதுதான் வரலாறாகும். தமது எதிரிகளையும் மன்னித்து மனமாற்றம் காணச் செய்த இந்தப் புனித வலாற்றைத்தான் தேரர் பொய்களால் களங்கப்படுத்த முற்படுகின்றார்.

இஸ்லாத்தை ஏற்காதவர்களைக் கொல்ல வேண்டுமா?

‘அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் புரிந்து, இன்னும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்குரிய தண்டனையாவது அவர்கள் கொல்லப்படுவதும், அல்லது சிலுவையில் அறையப்படுவதும், அல்லது அவர்களுடைய மாறு கைகள், அவர்களது மாறு கால்கள் வெட்டப்படுவதும், அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுவதுமாகும். இது இவ்வுலகில் அவர்களுக்குரிய இழிவாகும். மறுமையிலோ அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு!’ (5:33)

இந்த வசனத்தை எடுத்துக்காட்டி இஸ்லாத்தைத் தவிர வேறு சமயத்தையோ கடவுளையோ அனுஷ;டிப்பது பாவச் செயலாகும். அவர்களைக் கொல்ல வேண்டும் அல்லது சிலுவையில் அறைய வேண்டும் அல்லது மாறு கை மாறு கால் வெட்ட வேண்டும் எனக் குர்ஆன் கூறுவதாகத் தேரர் கூறுகின்றார்.

இந்த வசனத்தில் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் பற்றி பேசப்படவில்லை. அல்லாஹ்வுடனும் நபியுடனும் போர் புரிபவர்கள், பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள் (இவர்கள் முஸ்லிம்களாகக் கூட இருக்கலாம்) ஆகியோருக்குரிய சட்டமே இங்கு பேசப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதன் விளைவிக்கும் குழப்பத்தால் பல உயிர்கள் பலியாகலாம். அதைத் தடுப்பதற்காகக் குழப்பம் விளைவிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது பற்றி இந்த வசனம் பேசுகின்றது. பொதுவாக முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லுவது பற்றி இந்த வசனம் பேசவில்லை. நபியவர்கள் ஆட்சி செய்த மதீனாவில் யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் சிலை வணக்கம் புரிந்த நிலையில் சுதந்திரமாக வாழ்ந்துள்ளனர் என்ற வலாற்றை யாரும் மறுக்க முடியாது.

இவர் எடுத்து வைத்த வசனத்திற்கு முன்னைய வசனம் அநியாயமாக ஒரு உயிரைக் கொலை செய்வது முழு மனித சமூகத்தையும் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். ஒரு உயிரை வாழ வைப்பது முழு மனித சமுதாயத்தையும் வாழ வைப்பதற்கு ஒப்பானதாகும் என்று கூறப்படுகின்றது.

‘இதன் காரணமாகவே, ‘நிச்சயமாக எவன் கொலைக்குப் பகரமாகவோ அல்லது பூமியில் குழப்பம் விளைவித்ததற்காகவோ அன்றி மற்றொரு ஆன்மாவைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போன்றாவான்’ என்றும், ‘எவன் ஒருவன் அதை வாழவைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்’ என்றும் இஸ்ராஈலின் சந்ததிகள் மீது நாம் விதித்தோம். நிச்சயமாக அவர்களிடம் நமது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். பின்னர் நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் இதன் பின்பும் பூமியில் வரம்பு மீறுவோர்களாகவே உள்ளனர்.’ (5:32)

இதையும் இஸ்லாத்தின் மீது அவதூறு கூறுவோர் கவனிக்கப் போவதில்லை.

இவ்வாறு நோக்கும் போது குர்ஆன் தீவிரவாதத்தைப் பரப்புகின்றது என்ற தேரரின் குற்றச்சாட்டு போலியானதாகிவிடும் என்பதை எளிதில் புரியலாம். இது போன்ற இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளைத் தடை செய்வது நாட்டின் நலனுக்கு உகந்ததாகும் என்பதை ஆளும் வர்க்கம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இனங்களுக்கும் மதங்களுக்குமிடையில் நல்லிணக்கத்திற்காக முயற்சிக்க வேண்டிய இத்தருணத்தில் மீண்டும் இலங்கைத் திருநாட்டை இனவாத, மதவாத சகதிக்குள் தள்ளிவிடும் இது போன்ற செயற்பாடுகள் எவ்விதத்திலும் நாட்டிற்கு நன்மை பயக்காது. நாட்டு நலனில் அக்கறையுள்ள எவரும் இது போன்ற இனவாத, மதவாத செயற்பாடுகளுக்குத் துணை நிற்க மாட்டார்கள்.

எனவே, இனாவத, மதவாதத்திற்கு எதிராக நல்லுள்ளங்கள் கொண்ட இன, மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் பாடுபடுதல் காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

One comment

  1. Ellarum elithaaka purinthu kolluum vakaiyil thealivu patuththi ullirkal Allah..ungalukku narkuuli valanguvaanaka….Ameen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *