Featured Posts
Home » மீடியா » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 3

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 3

islamkalvi-banner
இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகாரம் இயேசு (ஈஸா) ஒரு இறைத் தூதராவார். அவர் பத்தினியான மர்யம்(ர) (மரியாள்) அவர்களுக்கு எவ்வித ஆண் தொடர்பும் இல்லாமல் அற்புதமான முறையில் பிறந்தவர். பிறந்தவுடன் தனது தீர்க்கதரிசனம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசியவர். இறையுதவியால் பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர்.

அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ அல்ல; அவர் சிலுவையில் அறையப்படவும் இல்லை; கொலை செய்யப்படவும் இல்லை. இன்று வரை உயிருடன் இருக்கிறார். உலக அழிவு நெருங்கும்போது அவர் மீண்டும் வருவார். நீதி நெறி தவறாத ஒரு நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவார் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.

அல்குர்ஆன் என்பது இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ச) அவர்கள் மூலமாக மக்களுக்குப் போதிக்கப்பட்ட இறைவேதமாகும். இது முஹம்மத் நபி மூலம் போதிக்கப்பட்டிருந்தாலும் இதில் இயேசு குறித்தும் அவரது தாயார் குறித்தும் அதிகமாகவே பேசப்பட்டுள்ளது.

முஹம்மத் எனும் பெயர் அல்குர்ஆனில் 4 இடங்களில்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஈஸா எனும் பெயர் 25 இடங்களிலும், மர்யம் எனும் இயேசுவின் தாயார் பெயர் 31 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. இயேசுவின் தாயாரின் பெயரில் தனி அத்தியாயமே அல்குர்ஆனில் உள்ளது. சூறா மர்யம் என்பது அல்குர்ஆனின் 19 ஆவது அத்தியாயமாகும். இயேசுவின் குடும்பத்தின் பெயரிலும் தனி அத்தியாயம் உள்ளது. சூறா ஆலஇம்றான் (இம்றானின் சந்ததியினர் என்பது திருக்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயமாகும்.)

எனவே, கிறிஸ்தவ நண்பர்கள் இஸ்லாம் கிறிஸ்தவத்திற்கு எதிரானது; என்ற வெறுப்புணர்வுடன் இஸ்லாத்தை நோக்காது இஸ்லாமும் கிறிஸ்தவமும் சகோதர மதங்கள் என்கின்ற நம்பிக்கையுடன் அல்குர்ஆனைப் படித்துப் பாருங்கள் உண்மை புரியும்.

அல்குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கிறிஸ்தவ நண்பர்களின் உள்ளங்களில் ஏற்படுத்துவதற்காக இயேசுவை இன்று மக்கள் மத்தியில் உள்ள பைபிள் எப்படி இழிவுபடுத்துகின்றது என்பதையும் அல்குர்ஆன் அவரை எப்படி கண்ணியப்படுத்துகிறது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முஹம்மத் இயேசு(ஈஸா)வை நேசிக்கிறார்
‘மற்ற அனைவரையும் விடவும் நானே இயேசு(ஈஸா)வுக்கு நெருக்கமானவனும், நேசத்திற்குரியவனுமாவேன்.’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அது எவ்வாறு என நபித்தோழர்கள் வினவியபோது,

”இறைத்தூதர்கள் அனைவரும் சகோதரர்கள். அவர்களின் தாய்மார்கள் தான் வேறு பட்டவர்கள். அத்தோடு எல்லா இறைத்தூதர்கள் போதித்த மார்க்கமும் ஒன்றுதான். அத்துடன் எனக்கும் இயேசுவுக்கும் இடையில் வேறு இறைத் தூதர்கள் எவரும் வந்ததில்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (வ)
ஆதாரம்: முஸ்லிம் (2365) 145

முஹம்மத் இயேசுவை நேசிக்கிறார். கிறிஸ்தவ அன்பர்களே நீங்கள் ஏன் முஹம்மதை நேசிக்கக் கூடாது. அவரது போதனையில் இயேசு எப்படி கண்ணியப் படுத்தப்பட்டுள்ளார் என்பதை அறிய ஏன் ஆவல் கொள்ளக் கூடாது. இயேசுவைப் பற்றி குர்ஆன் சொல்வதையும் பைபிள் சொல்வதையும் படித்துப் பார்த்து உண்மையில் இயேசுவை கண்ணியப் படுத்துவது குர்ஆனா? பைபிளா? என்பதை நீங்களே உறுதி செய்யுங்கள்.

இயேசு(ஈஸா)வின் பிறப்பு:
இயேசுவின் பிறப்பு உலக அதிசயங்களில் ஒன்றாகும். அதே வேளை பலத்த சர்ச்சையான ஒரு நிகழ்வாகும். கன்னிப் பெண்ணான மர்யம்(ர) அவர்களுக்கு ஆண் தொடர்பு இன்றியே இயேசு அற்புதமான முறையில் பிறந்தார்கள். இந்த அற்புதத்தை ஏற்றுக் கொள்ளாத யூத சமூகம் இயேசுவை விபச்சாரத்தில் பிறந்தவராகவும், இயேசுவின் தாயாரை ஒழுக்கம் கெட்டவராகவும் சித்தரித்தது. இஸ்லாம் இதை வன்மையாக மறுத்துரைக்கிறது.

‘மர்யமின் மகன் மஸீஹ்’ ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவரின் தாயோ உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவு படுத்துகின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர் இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? என்பதையும் கவனிப்பீராக!’ (5:75)

இந்த இறைவசனம் இயேசுவோ, அவரது தாயாரோ கடவுள்கள் இல்லை என்று சொல்லும் அதே வேளை, இயேசுவை இறைத்தூதர் என்றும் அவரது தாயார் (ஆண் தொடர்பு இல்லாமல் குழந்தை பெற்றெடுத்தேன் என்று சொல்லும் விடயத்தில்) உண்மையளர் என்றும் உத்தரவாதப் படுத்துகின்றது.

‘இன்னும் இம்ரானின் மகள் மர்யமையும் (உதாரணமாகக் கூறுகின்றான்.) அவள் தனது கற்பைக் காத்துக் கொண்டாள். எமது ‘ரூஹி’ல் இருந்து அதில் நாம் ஊதினோம். அவள் தனது இரட்சகனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். மேலும், அவள் வழிப்பட்டு நடப்போரில் ஒருவராகவும் இருந்தாள்.’
(66:12)

உண்மையான இறை விசுவாசிகளுக்கு பிர்அவ்னின் மனைவியையும் கன்னி மர்யத்தையும் இவ்வசனம் உதாரணமாகக் கூறுகின்றது. மர்யம்(ர) பற்றிக் கூறும் போது கற்பொழுக்கத்துடன் வாழ்ந்த மர்யம் என்றே புகழப்படுகின்றார். இது போன்ற வசனங்கள் மர்யம்(ர) அவர்களது கற்பொழுக்கத்தை சிறப்பித்துப் பேசியுள்ளது.

ஆசீர்வதிக்கப்பட்ட பெண்
இயேசுவின் தாயார் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணாவார். அவருக்கு அற்புதமான முறையில் இறைவன் உணவளித்தான் என அல்குர்ஆன் கூறுகின்றது.

‘எனவே, அவரது இரட்சகன் அதை அழகிய முறையில் ஏற்றுக்கொண்டு, அவரை அழகிய முறையில் வளர்த்தான். மேலும், அதற்கு ஸகரிய்யாவைப் பொறுப்பாளராக ஆக்கினான். அவள் இருக்கும் தொழுமிடத்திற்குள் ஸகரிய்யா நுழையும் போதெல்லாம் அவர் அவளிடத்தில் உணவைக் கண்டு, ‘மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது! என (ஆச்சரியமாக)க் கேட்டார்’. ‘இது அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்’ என்று அவள் கூறினாள்.’ (3:37)

இறைவன் மர்யமை ஏற்றுக் கொண்டான் என்பதும், ஸகரிய்யா எனும் இறைத் தூதரால் அவர் வளர்க்கப்பட்டார் என்பதும், அவருக்கு அற்புதமான முறையில் இறைவன் புறத்திலிருந்து உணவு அளிக்கப்பட்டது குறித்தும் இந்த வசனங்கள் பேசுகின்றன.

மர்யம் கருவுற்றார்:
ஒரு பெண் கருவுற வேண்டுமானால் ஆணின் விந்து அவர் கருவிற்குள் செலுத்தப்பட வேண்டும். ஆனால், இறைவன் தன் ஆற்றலை வெளிப்படுத்த ஒழுக்கமுள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். ஆண் துணை இல்லாமலும் தன்னால் மனிதனைப் படைக்கமுடியும் என்பதை இதன் மூலம் நிரூபித்தான். இது குறித்து குர்ஆன் இப்படி விபரிக்கிறது.

‘(நபியே!) இவ்வேதத்தில் மர்யம் குறித்தும் நினைவு கூர்வீராக! அவர் தனது குடும்பத்தை விட்டும் கிழக்குப் பக்கமுள்ள ஓரிடத்தில் தனித்தபோது. அவர் அவர்களை விட்டும் (தன்னை மறைத்துக் கொள்ள) ஒரு திரையை எடுத்துக் கொண்டார். அப்போது (ஜிப்ரீல் ஆகிய) நமது ரூஹை அவரிடம் அனுப்பினோம். அவர் அவளிடம் நேர்த்தியான ஒரு மனிதராகத் தோற்றமளித்தார்.

நீர் பயபக்தியாளராக இருந்தால் உம்மை விட்டும் அர்ரஹ்மானிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகின்றேன் என (மர்யம்) கூறினார்.

‘பரிசுத்தமான ஒரு மகனை உமக்கு நான் கொடையாக வழங்குவதற்காக (அனுப்பப்பட்ட) உமது இரட்சகனின் தூதராவேன்’, என்று அவர் கூறினார்.

‘எந்த ஆடவரும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எவ்வாறு எனக்கு ஒரு மகன் உண்டாக முடியும்?’ என (மர்யம்) கேட்டார்.

‘அது அவ்வாறுதான். அது எனக்கு இலகு வானதாகும் என உமது இரட்சகன் கூறுகின்றான். அவரை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், எம்மிடமிருந்துள்ள அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவுமே (இவ்வாறு செய்துள்ளோம்.) இது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு காரியமாகிவிட்டது’ என்று (ஜிப்ரீல்) கூறினார்.’
(19:16-21)

மர்யம் அவர்களுக்கு ஆண் துணையின்றி குழந்தை பிறக்கும் என்பது மட்டுமன்றி, அந்தக் குழந்தையின் பெயர், அவர் இறைத்தூதராக வருவார், மடியில் குழந்தையாக இருக்கும் போதே பேசுவார் என்பன போன்ற பல அம்சங்களும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளன.

”மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமை யிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)

மேலும் அவர் தொட்டிற் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் மக்களுடன் பேசுவார். இன்னும் (அவர்) நல்லவர்களில் உள்ளவருமாவார் (என்றும் கூறினர்.)

(அதற்கு மர்யம்) ‘என் இரட்சகனே! எந்த ஆடவரும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உண்டாகும்!’ என்று கேட்டார். ‘அவ்வாறே அது’ (நடக்கும்) என்று அவன் கூறினான். அல்லாஹ், தான் நாடுவதைப் படைப்பான். அவன் ஒரு விடயத்தைத் தீர்மானித்து விட்டால் அதற்கு ‘குன்’ (ஆகுக!) என்று கூறுவதுதான், உடனே அது ஆகிவிடும்.

மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக்கொடுப்பான்.’
(3:45-48)

இவ்வாறு தேவ தூதர் வந்து அனைத்து முன்னறிவிப்புக்களையும் செய்கிறார். இதன் பின்னர் மர்யம் கருவுற்று குழந்தையை ஈன்றெடுத்து சமூகத்துக்கு வந்தபோது நடந்ததை அல் குர்ஆன் இப்படி விபரிக்கிறது.

‘நீர் உண்டு, குடித்து, கண்குளிர்ச்சி அடைவீராக! எந்த ஒரு மனிதனை நீர் கண்டாலும் ‘நான் அர்ரஹ்மானுக்காக மௌனம் அனுஷ்டிக்க நேர்ச்சை வைத் திருக்கின்றேன். எனவே, இன்றைய தினம் எந்த மனிதனுடனும் நான் பேசமாட்டேன்’ என (சைகை மூலம்) கூறுவீராக! (என்றும் அவர் கூறினார்).’ (19:26)

மர்யம் (ர) மீது அவரது சமூகம் மாசுகற்பித்த போது குழந்தை இயேசுவை இறைவன் பேசச் செய்து அந்தக் களங்கத்தை நீக்கினான் என குர்ஆன் கூறுகின்றது. உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்தச் செய்திகள் அத்தனையையும் உறுதியாக நம்புகின்றனர். நான் அறிந்தவரையில் இயேசு (ஈஸா(ர)) குழந்தைப் பருவத்தில் பேசிய அற்புதச் செய்தியை பைபிளில் காண முடியவில்லை. அல்குர்ஆனின் எந்த இடத்திலும் இயேசுவின் தந்தை என்று எவரும் குறிப்பிடப்படவில்லை. அவர் தந்தையின்றி பிறந்தவர். எனவே, மர்யமின் மகன் ஈஸா என்றே அழைக்கப்படுகின்றார். அல் குர்ஆனில் 16 இடங்களில் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் காணலாம்.

யூதர்கள் சொல்வது போல் அவர் விபச்சாரத்தில் பிறந்தவரும் அல்ல. தல்மூத் எனும் யூத ஏடு ரோமானியப் படை வீரருடன் மர்யமுக்கு ஏற்பட்ட தகாத உறவால் பிறந்தவரே இயேசு என்ற கூறுகிறது. கிறிஸ்தவர்கள் கூறுவதுபோல் அவர் கடவுளுக்குப் பிறந்த கடவுளின் குமாரனும் அல்ல. அல்லது இவ்வற்புதத்தை நம்பாதவர்கள் கூறுவது போல் அவர் யோசேப்பின் குமாரனும் அல்ல. கடவுளின் சித்தப் பிரகாரம் அற்புதமாக கன்னி மர்யத்திற்குப் பிறந்த மர்யமின் குமாரராவார்.

இயேசுவின் தந்தை:
இயேசுவிற்குத் தந்தையில்லை; தாய் மட்டுமே உள்ளார் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகின்றது. அந்தக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் இயேசுவின் இந்த சிறப்பம்சத்தைச் சிதைக்க விரும்பினர். எனவே, அவரை விபச்சாரத்தில் பிறந்தவர் என்றனர். அல்லாஹ்வின் அற்புதமான படைப்பில் நம்பிக்கையில்லாதவர்கள் அவரை யோசேப்புக்குப் பிறந்தவர் என்றனர். பைபிளின் பல வாசகங்கள் அவர்களின் இந்த தவறான நம்பிக்கைக்கு இடம் கொடுக்கும் விதத்தில் இயேசுவை யோசேப்பின் மகனாக அறிமுகப்படுத்தகின்றது. இது அவர்களின் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துகின்றது. இதோ இயேசுவின் பரம்பரை பற்றிய பைபிளின் தகவல்களைப் பாருங்கள்.

‘யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்,அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.’
(மத்தேயூ: 1:-16)

‘அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்,’ (லூக்கா 3:23)

மத்தேயூ, லூக்கா இருவருமே யூதர்களாக இருந்து கிறிஸ்தவத்தை ஏற்றவர்கள். அவர்கள் இயேசுவின் அற்புதப் படைப்பை நம்பாததால் அவரை யோசப்பின் மகனாகக் காட்ட முயல்கின்றனர். மத்தேயுவைப் பொறுத்தவரையில் இதில் உறுதியாகவே இருந்தவராவார்.

இயேசுவின் சீடர்களா?
மத்தேயு, லூக்கா இருவரும் இயேசுவின் சீடர்கள் அல்லவா என நினைக்கலாம். இயேசுவிற்கு மத்தேயு என்றொரு சீடர் இருந்தது உண்மையே. இருப்பினும் மத்தேயு சுவிஷேத்தை எழுதிய வேறு ஒருவராவார். அல்லது எவரோ ஒருவர் ஒரு நூலை எழுதி அதை மத்தேயு என மத்தேயுவின் பெயரில் பிரபலப்படுத்தியுள்ளார் என்றே கூற வேண்டும்.

‘இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார், அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.’
(மத்தேயு 9:9)

இயேசுவின் சீடர் மத்தேயு இந்த சுவிசேகத்தை எழுதியிருந்தால் மத்தேயு என்னும் ஒரு மனுசனைக் கண்டு என்று இருக்காது மத்தேயு எனும் என்னைக் கண்டு என்று இடம் பெற்றிருக்க வேண்டும். அவன் எழுந்து அவருக்குப் பின் சென்றான் என்று இருக்காது நான் எழுந்து அவருக்குப் பின் சென்றேன் என்று வந்திருக்க வேண்டும். எனவே, மத்தேயு ஏற்பாடு என்பது இயேசுவின் சீடர் மத்தேயுவால் எழுதப்பட்டது அல்ல.

‘மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,’

‘ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,’

‘ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று,’

‘அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.’
(லூக்கா: 1: 1-4)

லூக்கா தன்னை இயேசுவின் சீடர் என அறிவிக்கவில்லை. கண்ணால் கண்டவர்கள் சொன்னவற்றை எழுதுகின்றேன் என்றே கூறியுள்ளார். எனவே, இயேசுவை யோசேப்பின் மகன் எனக் கூறும் மத்தேயுவும் லூக்காவும் உண்மையான இயேசுவின் சீடர்களே அல்ல. இருப்பினும் இயேசு அற்புதமாகப் பிறந்தவர் என குர்ஆன் உறுதியாகக் கூறுகின்றது. இருப்பினும் பைபில் அதேயளவு உறுதியுடன் இயேசுவின் அற்புதப் பிறப்புப் பற்றிக் கூறாது சந்தேகம் கலந்தே கூறுகின்றது.

இவ்வாறு நோக்கும் போது இயேசுவை அல்குர்ஆன் கண்ணியப்படுத்தும் அளவுக்கு பைபிள் கண்ணியப்படுத்தவில்லை என்பது மிகத் தெளிவாகின்றது.

One comment

  1. I am a born christian can you reply me how islam be a true religion and who is allah what are reson you say for christian that christanity is not a true religion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *