Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

சார்லி ஹெப்டோ – இஸ்லாமோபோபியாவின் மறு வடிவம்

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்தரிகை அலுவலகத்திற்குள் கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி ஆகிய சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பத்திரிகை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள் (Cartoonist) உற்பட 12 பேர் கொல்லப்பட்டனர். நபி (ஸல்) அவர்களை கிண்டல் செய்து கேலிச்சித்திரத்தை வெளியிட்டதால் இப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தாக்குதல் நடாத்தியவர்கள் அல்ஜீரிய வம்சாவளிகளான இரு முஸ்லிம்களே என அறிக்கைகள் வெளிவந்தன. ‘அல்லாஹூ அக்பர்’ என்ற முழக்கத்துடன் நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாய் பிரசுரித்தமைக்காகவே இத்தாக்குதலை தொடுப்பதாக கூறிக்கொண்டே தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூட்டினை முன்னெடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்குப் பிந்தைய முதல் பதிப்பில் நபி (ஸல்) அவர்களை சித்தரிக்கும் கேலிச் சித்திரம் இடம்பெற்ற அட்டைப் படத்துடன் பிரான்ஸின் பிரபல கார்டூன் பத்திரிகையான சார்லி ஹெப்டோ மீண்டும் வெளியானது.

இந்தப் பத்திரிகையின் சிறப்புப் பதிப்பு மற்ற மொழிகளிலும் அச்சிடப்படப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் சார்லி ஹெப்டோவின் முதல் பதிப்பை வெளியிட பிரான்ஸின் ‘விடுதலைப் பத்திரிகை’ இயக்கமும் உதவிபுரிந்துள்ளது.

சார்லி ஹெப்டோவின் அட்டைப் படத்தில் நபி (ஸல்) அவர்களை சித்தரித்து அவரது கையில் ‘Je suis Charlie’ (நான்தான் சார்லி) என்ற வாசகம் கொண்ட பதாகை இருக்கும்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கேலிச் சித்திரத்தின் தலைப்பில் ‘Tout est Pardonne’ (எல்லாம் மன்னித்தாகவிட்டது) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகையின் சட்ட நிபுணர் ரிச்சர்ட் மால்கா கூறும்போது, “சார்லி ஹெப்டோவில் இன்று நபி (ஸல்) அவர்களின் கருத்துச் சித்திரம் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. இது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டதுதான்” என்றார்.

பாரீஸ் நகரில் 3 நாட்களாக துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நபி (ஸல்) அவர்களைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டதாக இதே பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

1960ல் பெர்னியர் மற்றும் ப்ரன்கோஸ் ஆகியோரோல் ஆரம்பிக்கப்பட்ட மாதாந்த பத்திரிகையான ஹரா கிரி பத்திரிகை 1961லும் 1966லும் இரு முறை சிறிது காலம் தடை செய்யப்பட்டது. 1969ல் ஹர கிரி ஹெப்டோ எனும் பெயரில் வாராந்த பத்திரிகையாக புதிதாக வெளிவந்தது.

1970ல் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்லஸ் டீ கல்லே இறந்ததை கிண்டல் செய்ததை தொடர்ந்து அப்பத்திரிகை தடை செய்யப்பட்டது. தடையிலிருந்து தப்பிக்கும் முகமாக சார்லீ ஹெப்டோ என பெயர் மாற்றம் செய்து மீண்டும் வெளியானது. காமிக்ஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சார்லி ப்ரெளனை அடிப்படையாக கொண்டே இப்பெயர் சூட்டப்பட்டது.

‘ஷார்ளி ஹெப்டோ’ எனும் இப்பத்திரிகை மத சர்ச்சையைத் தூண்டும் கேலிச் சித்திர அட்டைகளுக்கு பிரபல்யம் வாய்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மையே! எல்லாவற்றுக்கும் மேலாக அதன் உதயமே பிறரைக் கிண்டல் செய்வதில்தான் பிரசவமாகியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

கண்டனத்திற்குரிய சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய முக்கியமாக நபி (ஸல்) அவர்களை கிண்டலாக சித்தரித்து உலக முஸ்லிம்களின் உணர்வுகளோடு சீன்டிப்பார்க்க எத்தனிக்கும் பத்திரிகை என்பது யாவரும் அறிந்ததே!

2006 பெப்ரவரி-9 அன்று அடிப்படைவாதிகளால் ஆட்கொள்ளப்பட்ட முஹம்மது என்று தலைப்பிட்டு வந்த இதழில் டென்மார்க் பத்திரிகையில் வெளிவந்த சர்ச்சைக்குரிய 12 கார்டூன்களை மறுபதிப்பு செய்ததோடு வேறு சில கார்டூன்களையும் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி வரைந்தது.

வழக்கமாக 1 இலட்சம் பிரதிகள் விற்கும் சார்லி ஹெப்டோ நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி கார்டூன் வரைந்த காரணத்தால் 3 இலட்சத்துக்கும் மேல் விற்பனையானது. அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜாக்கூஸ் சிராக் மத உணர்வுகளை புண்படுத்தும் இப்போக்கை கடுமையாக கண்டித்தார். மேலும் உலகெங்கும் உள்ள பல்வேறு இஸ்லாமிய குழுக்களும் இப்போக்கை கண்டித்தன.

இக்கார்டூன்களை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இப்பத்திரிகைக்கு ஆதரவாக பிரான்ஸ் பின்னால் அதிபர்களான நிக்கோலஸ் சர்கோசியும் பிரான்கோஸ் ஹாலந்தேவும் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் நீதிமன்றத்தில் படித்தும் காட்டப்பட்டது விசித்திரமானது. 2007லும் இப்பத்திரிகை இறுதி தூதரை குண்டை கட்டியவராக நிறவெறியை அப்பட்டமாக பிரதிபலிக்கும் கார்டூனையும் வெளியிட்டது.

2011 நவம்பர் 3ல் நபி (ஸல்) அவர்களை சிறப்பு ஆசிரியர் என குறிப்பிட்டு வெளி வந்த இதழில் சிரிக்காமல் இறந்தால் சவுக்கால் 100 அடிகள் கொடுக்கப்படும் என இறை தூதர் சொன்னதாக அப்பத்திரிகை நையாண்டி செய்திருந்தது. அச்சூழலில் சார்லி ஹெப்டோவின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டதோடு அலுவலகம் மீதும் கைக் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது.

2012 செப்டம்பரில் மீண்டும் சார்லி ஹெப்டோ பத்திரிகை உலக மக்களுக்கு அருளாக வந்த உத்தம தூதர் நிர்வாணமாக இருப்பதை போன்ற கார்டூன்களை பிரசுரித்து முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது innocent of muslims படம் வெளியாகி பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்களை குறிவைத்து இத்தனை முன்னெடுப்புகளை இப்பத்திரிகை ஏன் எடுக்க வேண்டும்? என்ற வினா இந்த இடத்திலே எழுவது தவிர்க்க முடியாதது.

இன்று இஸ்லாமிய உலகிலும் மேற்கிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக மக்களை அதனை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக மேற்குலகில் மிக வேகமாக மனித உள்ளங்களை வசீகரித்து வரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பது அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும் விரோதப் போக்காளர்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.

இதன் விளைவாக கிறிஸ்தவப் பாதிரிகளும் மேற்குலகின் சில அறிஞர்களும் (?) இஸ்லாம் குறித்து போலியான கருத்தியல்களை முன்வைப்பதோடு முஸ்லிம்களை கொடூரமானவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் காட்ட முனைகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் Islamophobia எனப்படும் கருத்தியல் மேற்குலகால் கட்டமைக்கப்பட்டுள்ளது

மேற்குலகில் பரவிவருகின்ற அல்லது கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமியப் பீதியின் பரிபாஷைக் கருத்தாகவே இது காணப்படுகின்றது. Islamophobia என்ற சொல் பீதி அச்சம் நோய் பயம் போன்ற கருத்துக்களைக் கொண்ட ஒரு கிரேக்க சொல்லாகும். 2011/09/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் மேற்குலகில் உருப்பெற்ற கருத்தியலாகவும் இதனை அடையாளப்படுத்தலாம்.

கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வருடத்திற்கு 4000 நபர்கள் இஸ்லாத்தை தழுவிக்கொள்கின்றனர். பிரித்தானியாவில் வருடத்திற்கு 5200 நபர்கள் இஸ்லாத்தை அரவணைக்கின்றனர்.

இந்நாடுகளின் இரண்டாவது பெரும்பான்மை மதமாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது. இஸ்லாத்தின் அபரிவிதமான இவ்வளர்ச்சியை சகிக்க முடியாமல், அதை தடுத்து நிறுத்த வேண்டுமானால் அதன் போதகர் இறைதூதர் (ஸல்) அவர்களை களங்கப்படுத்த வேண்டும். அவர்கள் மீது சேறு பூச வேண்டும். அவர்களது கொள்கைகள் பயங்கரமானவை என்ற மனப்பதிவை விதைத்தாக வேண்டும். இதற்காக இவர்கள் தேர்வு செய்த வழிமுறைகளில் ஒன்று தான் ‘கேலிச்சித்திர நையாண்டி’.

என்ன தான் கேலிச்சித்திரம் வரைந்து இழுக்கை ஏற்படுத்த முனைந்தாலும் இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பியர்களை இவர்களால் தக்க வைக்க இயலவில்லை. இதை தடுப்பதற்காக எடுத்த அடுத்த எத்தனம் தான் தீவிரவாத தாக்குதல் நாடகம் நடைபெற்றுள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்துவிட்டால் இஸ்லாத்தை நோக்கி வருவோரை தடுக்கலாம் என்று இவர்கள் தப்புக் கணக்குப் போட்டுள்ளனர்.

எதிர்காலம் இஸ்லாத்திற்கே!
இஸ்லாத்தை அழிப்பதற்கு அதன் எதிரிகள் என்னதான் முயற்சித்தாலும் அதன் வளர்ச்சியையும் எழுச்சியையும் எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. இது ஏக இறைவனின் வாக்காகவும் உள்ளது. மோசி ஸாபிச் என்ற ராஞ தந்திரி தனது Europe and Islam எனும் நூலில் growing cresent and decline of civilization (வளரும் பிறையும் நாகரிகத்தின் வீழ்ச்சியும்) எனும் தலைப்பின் கீழ் கூறும் பொழுது 21ம் நுற்றாண்டின் அரை இறுதிப் பகுதிக்குள் இஸ்லாம் ஐரோப்பாவின் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் சாத்தியம் உள்ளது என்கிறார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சி அலைகளினால் மேற்குலகடமும் ஐரோப்பியாவும் நடுநடுங்கிப் போயுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குறித்த பிழையான கருத்துக்களை அவர்கள் கட்டமைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் மேற்குலக மற்றும் ஐரோப்பிய மக்கள் இஸ்லாத்தை தெரிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதான் இன்றைய அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் நிலை. மேற்கத்தேயவாதிகள் ஏற்படுத்திவிட்ட இஸ்லாம் பற்றிய பீதி அங்குள்ள மக்களை இஸ்லாம் பற்றி தேடவும் அறியவும் வழி சமைத்துள்ளது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் (அவர்களுக்கு எதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்க மேலானவன்.’ (08-30)

One comment

  1. அல்ஹம்துலில்லாஹ! அருமை, தக்க நேரத்தில் அவர்களை தோலுரித்து காட்டிமைக்கு மிகவும் நன்றி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *