Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

பிள்ளைகளோ அல்லது நேசத்திற்குரியவரோ மரணித்துவிட்டால்

பொறுமையை கடைபிடிக்க வேண்டும்

 

(يَقُولُ اللَّهُ تَعَالَى مَا لِعَبْدِي الْمُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ إِلَّا الْجَنَّةُ )

முஃமினான என்னுடைய அடியான் உலகத்தாரில் மிகஅதிகமாக நேசிக்கும் ஒருவரை நான் கைப்பற்றிய பிறகும் அவன் பொறுமையைக் கடைபிடித்தால் என்னிடத்தில் அதற்குரிய கூலி சொர்க்கத்தைத் தவிர வேறில்லை என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 5944)

 


( مَا مِنَ النَّاسِ مُسْلِمٌ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ )

முஸ்லிம்களில் எவருக்கேனும் பருவமடையாத மூன்று குழந்தைகள் மரணித்து விட்டால் அக்குழந்தைகளுக்கு வழங்கும் அருட்கொடைகளால் அல்லாஹ் அவரையும் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூற்கள் : புகாரீ 1292)

 


( مَنِ احْتَسَبَ ثَلَاثَةً مِنْ صُلْبِهِ دَخَلَ الْجَنَّةَ فَقَامَتِ امْرَأَةٌ فَقَالَتْ أَوِ اثْنَانِ قَالَ أَوِ اثْنَانِ قَالَتِ الْمَرْأَةُ يَا لَيْتَنِي قُلْتُ وَاحِدًا )

மூன்று குழந்தைகளை இழந்தும் பொறுமையை கடைபிடிப்பவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, இரண்டு குழந்தைகளை இழந்தவர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு குழந்தைகளை இழந்தவரும்தான்! என்று கூறினார்கள். நான் ஒரு குழந்தையைப் பற்றிக் கேட்டிருக்கக் கூடாதா? என்று அப்பெண் கூறினார்!
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நஸாயீ : 1849)

 


(أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِنِسْوَةٍ مِنَ الْأَنْصَارِ لَا يَمُوتُ لِإِحْدَاكُنَّ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَتَحْتَسِبَهُ إِلَّا دَخَلَتِ الْجَنَّةَ فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ أَوِ اثْنَيْنِ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَوِ اثْنَيْنِ )

மூன்று பிள்ளைகள் மரணித்த பிறகும் பொறுமையைக் கடைபிடித்தவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று அன்ஸாரிப் பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களில் ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பிள்ளைகள் மரணித்திருந்தால்? என்று கேட்டார். இரண்டு பிள்ளைகள் மரணித்திருந்தாலும்தான்! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 4767)

 


( لَا يَمُوتُ لِمُسْلِمٍ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَيَلِجَ النَّارَ إِلَّا تَحِلَّةَ الْقَسَمِ قَالَ أَبو عَبْد اللَّهِ ( وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا ) )

ஒரு முஸ்லிமுக்கு மூன்று பிள்ளைகள் மரணித்து விட்டால் (நீங்கள் நரகத்தை கடந்தே தீரவேண்டும் என்ற அல்குர்ஆன் 19:71 வசனத்தின்) சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக நரகத்தின் மீது கடந்து செல்வதைத் தவிர அவர் ஒரு போதும் நரகில் நுழைந்து விடமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 1173, முஸ்லிம்)

 


(عَنْ أَبِي حَسَّانَ قَالَ قُلْتُ لِأَبِي هُرَيْرَةَ إِنَّهُ قَدْ مَاتَ لِيَ ابْنَانِ فَمَا أَنْتَ مُحَدِّثِي عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِحَدِيثٍ تُطَيِّبُ بِهِ أَنْفُسَنَا عَنْ مَوْتَانَا قَالَ قَالَ نَعَمْ صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يَتَلَقَّى أَحَدُهُمْ أَبَاهُ أَوْ قَالَ أَبَوَيْهِ فَيَأْخُذُ بِثَوْبِهِ أَوْ قَالَ بِيَدِهِ كَمَا آخُذُ أَنَا بِصَنِفَةِ ثَوْبِكَ هَذَا فَلَا يَتَنَاهَى أَوْ قَالَ فَلَا يَنْتَهِي حَتَّى يُدْخِلَهُ اللَّهُ وَأَبَاهُ الْجَنَّةَ )

அபூஹஸ்ஸான் அவர்கள் கூறுகின்றார்கள் :
எனது இரண்டு மகன்கள் மரணித்து விட்டார்கள். மரணித்தவர்கள் பற்றி எங்களுடைய உள்ளங்கள் அமைதி பெறும் விதமாக நபி (ஸல்) அவர்களிடம் நீர் கேட்ட செய்திகளை எங்களுக்கு அறிவிக்கமாட்டீரா? என்று நான் அபூஹுரைராவிடம் கேட்டேன். அதற்கவர், ஆம்! அறிவிக்கின்றேன், மரணித்துவிட்ட உங்களுடைய சிறுவர்கள் சொர்க்கத்திலும் உங்களுடனே இருப்பார்கள். அச்சிறுவர்கள் தம் பெற்றோர்களை சந்தித்து -நான் உமது ஆடையை இப்போது பிடித்திருப்பதைப் போன்று- அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டு அவர்களையும் அவர்களின் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யும் வரை அதனை விடமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.
(நூல் : முஸ்லிம் 4769)

 


( مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ عَنْ أَبِيهِ رَضِي اللَّهم عَنْهم أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ابْنٌ لَهُ فَقَالَ لَهُ أَتُحِبُّهُ فَقَالَ أَحَبَّكَ اللَّهُ كَمَا أُحِبُّهُ فَمَاتَ فَفَقَدَهُ فَسَأَلَ عَنْهُ فَقَالَ مَا يَسُرُّكَ أَنْ لَا تَأْتِيَ بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلَّا وَجَدْتَهُ عِنْدَهُ يَسْعَى يَفْتَحُ لَكَ )

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்தார். அவருடன் அவருடைய மகனும் இருந்தான். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் நீர் இவனை நேசிக்கின்றீரா? என்று கேட்டார்கள். அதற்கவர், நான் இவனை நேசிப்பதைப் போன்று அல்லாஹ் உங்களை நேசிக்கட்டுமாக! என்று கூறினார். அச்சிறுவன் மரணித்து விட்டான். அச்சிறுவனை இழந்துவிட்ட அவர், அவனைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ சொர்க்க வாயில்களில் எந்த வாயிலுக்குச் சென்றாலும் அதனை உமக்காகத் திறந்துவிட அவன் ஓடிவந்து நிற்பான் என்பது உமக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா! என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு குர்ராஹ் -ரலி, நூல் : நஸாயீ 1847)

 


( مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا تَلَقَّوْهُ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ مِنْ أَيِّهَا شَاءَ دَخَلَ )

ஒரு முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று பிள்ளைகள் மரணித்துவிட்டால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களிலும் அவர்களை சந்தித்து, அவர் விரும்பிய வாயில் வழியாக சொர்க்கத்தில் நுழைந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உத்பா இப்னு அப்த் அஸ்ஸுலமீ -ரலி, நூல் : இப்னுமாஜா 1593)

 


( إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ قَالَ اللَّهُ لِمَلَائِكَتِهِ قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي فَيَقُولُونَ نَعَمْ فَيَقُولُ قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ فَيَقُولُونَ نَعَمْ فَيَقُولُ مَاذَا قَالَ عَبْدِي فَيَقُولُونَ حَمِدَكَ وَاسْتَرْجَعَ فَيَقُولُ اللَّهُ ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ )

ஒரு அடியானின் குழந்தை மரணித்துவிட்டால், அல்லாஹ் மலக்குமார்களிடம் என்னுடைய அடியானின் குழந்தையைக் கைப்பற்றிவிட்டீர்களா? என்று கேட்கின்றான். மலக்குகள் ஆம்! என்று கூறுகின்றார்கள். என்னுடைய அடியானின் உள்ளக் கனியை கைப்பற்றிவிட்டீர்களா? என்று கேட்கின்றான். அதற்கு அவர்கள், ஆம் என்று கூறுகின்றார்கள். என்னுடைய அடியான் -அப்போது- என்ன கூறினான்? என்று அல்லாஹ் கேட்கிறான். அதற்கவர்கள், அவன் உன்னைப் புகழ்ந்தான், மேலும் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்றும் கூறினான் என்பார்கள். அப்போது அல்லாஹ், என்னுடைய அடியானுக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுங்கள்! அதற்கு பைத்துல் ஹம்த் (புகழுக்குரிய வீடு) என்று பெயரிடுங்கள்! என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ -ரலி, நூல் : திர்மிதீ 942)

 

சோதனையின் ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையை மேற்கொள்ள வேண்டும்