Index | Subscribe mailing list | Help | E-mail us

 
பாடம் - 6

உளுவை முறிக்கும் காரியங்கள்

1. முன் பின் துவாரத்தினால் ஏதாவது வெளியாகுதல்.
அதாவது மலம், ஜலம், பின் துவாரத்திலிருந்து காற்று மற்றும் மணி, மதி, வதி இவைகள் வெளியாகுவது உளுவை முறிக்கும்.

உங்களில் ஒருவர் சிறு தொடக்காகி விட்டால் அவர் உளு செய்யும் வரைக்கும் அல்லாஹ் அவரின் தொழுகையை ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)


நீங்கள் குளிக்கக் கடமைப்பட்டோராக இருந்தால் குளித்துப் பரிசுத்தமாகிக் கொள்ளுங்கள், இன்னும் நீங்கள் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மலஜலம் கழிக்கச் சென்று வந்திருந்தாலும், அல்லது நீங்கள் பெண்களை (உடலுறவின் மூலமும்) தீண்டியிருந்தாலும் அப்பொழுது (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை நீங்கள் பெறாவிடில் பரிசுத்தமான மண்ணை நாடுங்கள், பின்னர் அதிலிருந்து உங்களுடைய முகங்களையும், உங்களது கைகளையும் தடவி (தயம்மும் செய்து)க் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:6)

உங்கள் ஒருவரின் வயிற்றில் குழப்பம் ஏற்பட்டு வயிற்றிலிருந்து ஏதாவது வெளியானதா? இல்லையா? என சந்தேகித்தால் (வயிற்றிலிருந்து வெளியாகிய காற்றின்) சத்தத்தை கேட்காமலோ அல்லது வாடையை நுகராமலோ பள்ளியை விட்டும் வெளியாக வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மணி என்பது:- இந்திரியம், இது ஆசையோடு வெளியானால் குளிப்பு கடமையாகும், உளுவும் முறிந்துவிடும். ஆசையில்லாமல் நோயின் காரணத்தினால் வெளியானால் குளிப்பு கடமையாகாது உளு செய்வது அவசியம்.

வதி என்பது:- சிறுநீர் கழித்த பின் வெளியாகும் கனமான வெள்ளை நிறமுள்ள நீர், இது அசுத்தமான நீர், இந்நீர் படும் இடத்தை கழுவ வேண்டும்.


வதி வெளியாவதினால் ஆண் உறுப்பையும் அதன் பகுதியையும் கழுவிக்கொண்டு தொழுகைக்கு உளு செய்வதைப்போல் உளு செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - பைஹகி)

மதி என்பது:- காம உணர்வுகள் ஏற்படும் போது, கணவன் மனைவி உறவின் போது வெளியாகும் வழுவழுப்பான நீர், இந்த நீர் வெளியாகும் போது சில நேரம் மனிதன் அதை உணராமல் இருக்கலாம், இதுவும் அசுத்தமான நீர்தான், இந்நீர் படும் இடத்தையும் கழுவ வேண்டும்.

நான் அதிகம் மதி வெளியாகும் மனிதனாக இருந்தேன், நபி (ஸல்) அவர்களின் மகளை நான் திருமணம் முடித்திருந்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்களிடம் இதைப்பற்றி கேட்க வெட்கப்பட்டேன், இதனால் இன்னும் ஒருவரிடம் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கும் படி கூறினேன், அவர் நபி (ஸல்) அவர்களிடம் (அதைப்பற்றி) கேட்டார், உளு செய்து உமது ஆண் உறுப்பை கழுவிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் என அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி)

2. ஆழ்ந்த தூக்கம்.
நபித்தோழர்கள் இஷாத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக தங்களின் தலை சாயும் அளவுக்கு தூங்கிக்கொண்டிருப்பார்கள், பின்பு உளு செய்யாமலே தொழவும் செய்வார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)


ஆழ்ந்த நிலையில் தூங்காமல் உட்கார்ந்து கொண்டு தூங்குவதினால் உளு முறியாது, சாய்ந்த நிலையில் ஆழ்ந்து தூங்கினால் உளு முறிந்து விடும்.

3. புத்தி நீங்குவது.

அதாவது பைத்தியம், மயக்கம், போதை போன்ற காரணங்களால் புத்தி நீங்குவதினால் உளு முறியும்.

4. அபத்தை திரையின்றி இச்சையின் காரணமாக தொட்டால்.
தன் ஆண் உறுப்பை யார் தொடுகின்றாரோ அவர் உளு செய்யாமல் தொழக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - திர்மதி)

ஒரு ஆண் தன் அபத்தை தொடுவதினால் அவருடைய உளு முறிந்து விடுமா? என ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார், அது அவருடைய உடம்பிலுள்ள மற்ற உறுப்பகளைப் போன்ற ஒரு உறுப்புத்தான், அதனால் அவருடைய உளு முறியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத், திர்மிதி)

அதாவது அபத்தை தொடுவதினால் உளு முறியும் என்று சொல்லக்கூடிய ஹதீஸுக்கு இச்சையோடு தொடும்போது என்றும், அபத்தை தொடுவதினால் உளு முறியாது என்று வரக்கூடிய ஹதீஸுக்கு இச்சையில்லாமல் தெரியாமல் படும்போது என்றும் விளங்கிக் கொள்ளலாம்.


5. ஒட்டக இறைச்சி சாப்பிடுவது.
ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நாங்கள் உளு செய்ய வேண்டுமா? என ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார், நீங்கள் விரும்பினால் உளு செய்து கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் உளு செய்யத் தேவையில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒட்டகை இறைச்சி சாப்பிட்டால் உளு செய்ய வேண்டுமா? என அம்மனிதர் கேட்டார், ஆம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அஹ்மத், அபூதாவூத்)

அன்னிய பெண்ணின் உடலில் படுதலினால் உளு முறியாது
- நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது ஆயிஷா (ரலி) அவர்களை முத்தமிட்டார்கள், முத்தமிடுவதினால் நோன்பும் முறியாது, உளுவும் முறியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)


- நபி (ஸல்) அவர்கள், அவர்களின் சில மனைவியரை முத்தமிட்டுவிட்டு உளு செய்யாமலேயே தொழச் சென்றார்கள். (அஹ்மத், திர்மிதி)


- நபி (ஸல்) அவர்கள் தொழும் பக்கம் நான் தூங்கிக் கொண்டிருப்பேன், அவர்கள் சுஜுது செய்ய நாடினால் என் காலை சுரண்டுவார்கள் நான் என் காலை மடக்கிக் கொள்வேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)


- ஒரு இரவு நபி (ஸல்) அவர்களை அவர்களின் படுக்கை விரிப்பில் நான் காணவில்லை. அவர்களை நான் தேடினேன் (அவர்கள் பள்ளியில் சுஜுது செய்து கொண்டிருந்ததினால்) அவர்களின் இரு கால் பாதங்களும் நாட்டப்பட்ட நிலையில் இருந்தது. அவர்களின் இரு கால் பாதங்களில் என் கை பட்டது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)


இதே போல் சூரத்துல் மாயிதாவின் ஆறாவது ஆயத்தில் பெண்ணைத் தொட்டு தண்ணீர் இல்லையென்றால் தயம்மும் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆயத்தின் கருத்து, பெண்ணோடு உடலுறவு கொண்டு தண்ணீர் இல்லையென்றால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்பதாகும், இங்கே தொட்டால் என்பதின் கருத்து உடலுறவு என்பதுதான், வெறும் தொடுதல் என்பதல்ல. பெண்ணை தொட்டால் உளு முறியாது என்பதினால் அன்னிய பெண்ணை தொடலாம் என்பதல்ல. தெரியாமல் ஒரு அன்னிய பெண்ணின் உடம்பில் ஒரு அன்னிய ஆணின் உடல் பட்டுவிட்டால் உளு முறியாது. அல்லாஹ் மிகவும் நன்கறிந்தவன்.
 

தொடரும்...