Index | Subscribe mailing list | Help | E-mail us

முஸ்லிம்களும் கடன் விவகாரம் பற்றிய திருமறை வசனமும்

விசிந்தனம் மலையாள வாரஇதழை தழுவி - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

 

இறைவனது வழியில் பொருட்களைச் செலவிடுவதை இறைவனுக்குக் கொடுக்கும் கடனாகத் திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகின்றது.

அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான் (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான் அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:245)

மனிதர்களுக்கு மத்தியில் கடன் கொடுப்பதைக் குறிப்பிடும் வசனமல்ல இது எனினும் கடன் கொடுத்தல் என்ற நற்கருமத்தை ஊக்குவிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

தேவை என்ற சூழ்நிலையே மனிதனைக் கடன்வாங்கச் செய்கின்றது. பல்வேறு தேவைகளுக்காக நாம் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட போதிலும் அதனை எழுதி வைக்கும் பழக்கம் பலரிடம் இல்லை. அப்படியே எழுதினாலும் சாட்சிகளை வைத்துக்கொள்வதில்லை. அதிக பட்சமாக கடன் வாங்குபவருடைய அல்லது கொடுப்பவருடைய டைரிக் குறிப்புடன் அது நின்று விடுகின்றது. ஆனால் கடன் விவகாரங்களில் ஏதேனும் பிரச்சினைகள் உருவாகும் சமயத்தில் மட்டுமே இறை நம்பிக்கையாளர்களே! என்று அழைத்துக்கொண்டு திருக்குர்ஆன் கடன் சம்மந்தமாக உபதேசித்த வசனத்தைப் பலரும் நினைவு கூருகின்றனர்.

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும். அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும் மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும் தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும் அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள். இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும். எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (திருக்குர்ஆன் 2:282)

எழுத்து விவகாரத்திற்கு சிக்கலான பயணம் போன்ற சந்தர்ப்பங்களில் அடமானம் பெற்றுக் கொள்ளலாம் என்று அடுத்த வசனம் கூறக்கூடிய நிலையில் அவ்வாறு சிக்கல் இல்லாத சந்தர்ப்பங்களில் எழுத வேண்டியது அவசியம் என்பதை விளங்க முடிகின்றது. ஆனாலும் திருக்குர்ஆனில் மிகப் பெரிய வசனம் எது? என்பது போன்ற கேள்விகளுடன் கடன் விவகார வசனத்தின் நடைமுறையை நாம் இஸ்லாமிய வினாடி வினா கேள்விப் பட்டியலில் ஒதுக்குவதுடன் விட்டு விடுகின்றோம்.

முக்கிய தேவைகள் ஏற்பட்டாலும் அல்லாத சூழ்நிலையிலும் சிறிதோ பெரிதோ அளவிலான தொகைகளுக்கான கடன் விவகாரங்களில் நாம் ஈடுபடுவதுண்டு. எனினும் "ஒரு ஆயிரம் ரூபாய் கடனுக்காக இவ்வாறெல்லாம் எழுத வேண்டுமா?", "என் மீது அவ்வளவு நம்பிக்கையில்லையா?", "நான் எழுதும் படி கூறினால் அவர் என்ன நினைப்பார்?" என்பது போன்ற கேள்விகள் கடன் வாங்குபவருடையவும் கொடுப்பவருடையவும் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இஸ்லாமிய வழிமுறையைப் பின்பற்றி கடனை எழுதுவதற்குப் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

கடன் விவகாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் வசனமோ சிறிய விவகாரங்களைக் கூட எழுதுவதற்குத் தயக்கம் காட்டாதீர்கள் என்று கட்டளையிடுகின்றது. அதன் பிறகும் அலட்சியம் செய்ய முடியாத பெரும் தொகையை எழுதிப் பதிவு செய்வதில் கூட தயக்கம் காடடிவரும் முஸ்லிம் சமூகத்திற்கு அதை எழுதுவதன் அவசியத்தை எடுத்துக் கூறி அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியமாகும். இதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள முஸ்லிம் ஜமாஅத்தாருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் சில வழிமுறைகளைக் கையாளலாம். அதாவது கடன் விவகாரப் படிவங்கள் தயாராக்கியும் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுக்கும் ஏற்பாடுகள் செய்து கொண்டும் கடன் விவகாரத்தைப்பற்றிய வசனத்தில் தெளிவுபடுத்தப்பட்ட இஸ்லாமிய வழியிமுறையின்பால் முஸ்லிம் சமூகத்தைக் கொண்டுவர வழி வகை செய்யலாம்.

இஸ்லாமிய சமூகத்தின் நலப்பணியாளர்களும் திருக்குர்ஆனையும் நபிவழியையும் வாழ்வில் பின்பற்றியொழுக வேண்டும் என்ற எண்ணமுடையவர்களும் அத்தகைய விவகாரங்களில் சாட்சியாளர்களாகவும், எழுத்தர்களாகவும் ஈடுபட்டு கடனின் பால் தேவையுடையவர்களுக்கு உதவுவதன் மூலம் அதற்காக அல்லாஹ் வழங்கவிருக்கும் மகத்தான நற்கூலிக்கு தகுதியுடையவராகலாம்.


இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடன் மாதிரிப் படிவங்களோ அல்லது இதனை விடச் சிறந்த படிவங்களோ உருவாக்கலாம். கடன் பத்திரத்தில் கடன் குறித்த திருமறை வசனம் மற்றும் நபி மொழி இடம் பெறச் செய்தல் நன்று. முக்கியமாக சாட்சிகளுடைய பெயரும் ஒப்பமும் இடம் பெற வேண்டும்.

கடன் விவகாரத்தில் ஒரு ஆணுக்குப் பகரம் இரண்டு பெண்கள் சாட்சியாக வேண்டும் என்பது இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கூட அறிந்து கொண்ட விஷயமாகும். ஆண் ஆதிக்கத்தை திருக்குர்ஆன் நியாப்படுத்துவதாக அவர்கள் கூறினாலும், மாதவிடாய், பிரசவம் முதலிய பெண்களுக்கு சிரமமான சமயங்களில் மறதி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்பதை அறிவியல் மறுக்கவில்லை. கடன் விவகாரம் நடந்த தேதி, கடன் மீட்டுவதற்கான கால அவகாசம் முதலியவை படிவத்தில் இடம் பெற வேண்டும்.

கடன் விவகாரப் பத்திரங்கள் மூலம் இஸ்லாமிய வழிமுறையிலான கடன் எழுதிப் பதிவு செய்யும் நடைமுறையை நோக்கி முஸ்லிம் சமூகத்தை வழி நடத்துவதுடன் முக்கிய தேவைகளுக்கல்லாமல் கடன்வாங்கும் மனப்பான்மையிலிருந்து முஸ்லிம்களைத் தடுப்பதோடு அதன் மூலம் தேவையில்லாமல் கடன் சுமையில் மூழ்குவதிலிருந்தும் சமூகத்தை விடுபடச் செய்யலாம். அவசியத் தேவைகளுக்கன்றி கடன் வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக நபி மொழிகளிலிருந்து விளங்க முடிகின்றது.

கடன் சுமையின் பாரத்தைப் புரிந்து கொள்ள கடன் பட்ட நிலையில் மரணமடைந்த ஒருவரின் கடனுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள ஆளில்லாத நிலையில் அவருடைய ஜனாஸா தொழவைக்க நபி (ஸல்) அவர்கள் தயக்கம் காட்டினார்கள் என்ற என்ற சம்பவமே போதுமானதாகும்.

 

கடன் பத்திரம்

 - மாதிரிப் படிவம் 1 (PDF)

 - மாதிரிப் படிவம் 2 (PDF)