Index

2. ரமளான் மாதத்தின் சிறப்புகள்


1) ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)


2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் "நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!" என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)


3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்ப்பவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)


4) நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். ஆகவே நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)


5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)


விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹதஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டது தான் ரமளான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி(ஸல்)அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது, நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது, அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான். "யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்" என ஜிப்ரயீல்(அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி(ஸல்)அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்