Index | Subscribe mailing list | Help | E-mail us

4.வாரிசுரிமை பெறுவோர்

 

ஆண்களில் வாரிசுரிமை பெறக்கூடியவர்கள் பத்துப் பேர் ஆவர். விரிவாகச் சொன்னால் அவர்கள் பதினைந்து பேராக இருப்பார்கள். அவர்கள்,

1. மகன்
2. மகனின் மகன்
3. தந்தை
4. தந்தை வழிப் பாட்டன்
5. தாய் வழிச் சகோதரன்
6. தந்தை வழிச் சகோதரன்
7. தாய் தந்தை வழிச் சகோதரன்
8. தந்தை வழிச் சகோதரனின் மகன்
9. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரனின் மகன்
10. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தகப்பனார்
11. தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை
12. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன்
13. தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன்
14. கணவன்
15. அடிமையாயிருந்து விடுதலை பெற்றவன்

இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து வாரிசுதாரர்களாக வந்தால் இவர்களில் மூவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர்.

1. மகன்
2. தந்தை
3. கணவன்

இவர்கள் தவிர ஏனையோர் மகன் அல்லது தந்தை இருப்பதால் வாரிசுரிமையை விட்டும் தடுக்கப்படுவர். சொத்துரிமை பெறக்கூடியவர்களில் தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தை, தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை என்று குறிப்பிடப்படுகிறது.

பெண்களில் வாரிசுரிமை பெறுவோர் எழுவர் ஆவர். விரிவாகச் சொன்னால் பத்துப் பேர் வாரிசுரிமை பெறுவர். அவர்கள்,

1. மகள்
2. மகனின் மகள்
3. தாய்
4. தாய் வழிப் பாட்டி
5. தந்தை வழிப் பாட்டி
6. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரி
7. தந்தை வழிச் சகோதரி
8. தாய் வழிச் சகோதரி
9. மனைவி
10. அடிமையாயிருந்து விடுதலை பெற்ற பெண்

வாரிசுரிமை பெறும் பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இருந்தால் இவர்களில் ஐவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர். அவர்கள்,

1. மகள்
2. மகனின் மகள்
3. தாய்
4. மனைவி
5. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரி

ஏனையோர் இவர்களால் வாரிசுரிமை பெறத் தடை செய்யப்படுவர். மேற்கூறப்பட்டவர்களில் ஆண்களும், பெண்களும் ஆகிய அனைவரும் வாரிசுரிமை பெறுவோரில் இடம் பெற்றால், மொத்தத்தில் ஐவர் மட்டுமே வாரிசுரிமைப் பங்கீடு பெறுவர். அவர்கள்,

1. தந்தை
2. தாய்
3. மகன்
4. மகள்
5. கணவன் அல்லது மனைவி

ஏனையோர் இவர்களால் வாரிசுரிமை இழப்பர்.
சொத்துரிமை கணக்குகளில் பெரும்பாலும் ஆண்களில் 4 பேரும், பெண்களில் 8 பேரும் மட்டுமே வாரிசுகளாக வருவர்.


பெண் பங்குதாரர்கள்
1. மனைவி
2. தாய்
3. பாட்டி
4. மகள்
5. மகனின் மகள்
6. தாய் வழிச் சகோதரி
7. உடன் பிறந்த சகோதரி
8. தந்தை வழிச் சகோதரி

 

ஆண் பங்குதாரர்கள்

1. கணவன்

2. தந்தை

3. பாட்டன்

4. தாய் வழிச் சகோதரன்

இவர்கள் தவிர மகன், மகனின் மகன், சிறிய தந்தை, உரிமை விடப்பட்ட அடிமை போன்றோர் அஸபாக்களாக வருவர்.

வாரிசுரிமை ஏற்படுவதற்கான காரணங்கள் மூன்று ஆகும்.
1. வம்சா வழித் தொடர்பு
2. திருமணத் தொடர்பு
3. ஒப்பந்த அடிப்படையான தொடர்பு (அடிமை-எஜமான் என்ற தொடர்பு)

3 வது வகையான ஒப்பந்த அடிப்படையிலான தொடர்பு இரு வகைப்படும்.

1. நண்பர்கள், கூட்டாக வியாபாரம் செய்வோர் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உடன்படிக்கை
2. அடிமை உரிமை விடப்பட்டதால் ஏற்படும் தொடர்பு

வாரிசுரிமையைத் தடுப்பவை மூன்று நிலைகள் ஆகும். அவை,

1. அடிமைத்தனம்
2. கொலை செய்தல்:- கொன்றவன் கொல்லப்பட்டவனிடமிருந்து எதையும் வாரிசாகப் பெற மாட்டான்.
3. மதமாற்றம் – முஸ்லிமுக்கு காஃபிர் (இறை நிராகரிப்பாளன்) வாரிசாக மாட்டான். அதுபோல, காஃபிருக்கு (இறை நிராகரிப்பாளனுக்கு) ஒரு முஸ்லிம் வாரிசுரிமை பெற மாட்டான்.

 

பயிற்சி வினாக்கள்:

(1) ஆண்களில் வாரிசுரிமை பெறுவோர் எத்தனை பேர்? அவர்கள் யார் யார்?
(2) பெண்களில் வாரிசுரிமை பெறுவோர் யார் யார்?
(3) ஆண்களும் பெண்களும் ஆகிய அனைத்து வாரிசுகளும் வாரிசுரிமை பெறக்கூடியவர்களாக இருக்கும் நிலை தோன்றினால் அப்போது வாரிசுரிமை பெறுவோர் யார் யார்?
(4) வாரிசுரிமை எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?
(5) வாரிசுரிமையத் தடுக்கும் காரணங்கள் யாவை?

 

தொடரும்..