Index |Subscribe mailing list | Help | E-mail us

மேற்குலகுதான் முன்னோடியா?

பாத்திமா ஜஹ்ரிமா இம்தியாஸ் (ஜோர்டான்)

 

(சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)

 

'எவர் ஒரு கூட்டத்தாரைப் போன்று ஒப்பாகிறாரோ அவர் அந்த கூட்டத்தினரையே சாருவார்' – நபிமொழி


மேற்குலகம், மேற்குலகம், மேற்குலகம் எங்கு பார்த்தாலும் மேற்குலகிற்கு பொன்னாடைப் போர்த்தும் காலமாக இன்றைய 21ஆம் நூற்றாண்டு மேற்குலகெனும் வான் கோலத்தில் மோகங்கொண்டு மிதந்து செல்கிறது. உண்மையாதெனில் இன்றைய சரித்திரத்திற்கு தரித்திரம் பிடித்துவிட்டது. அதனால்தான் மேற்குலகெனும் சிறைக்குள் சிக்கி சின்னாபின்னப் படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகிறது. அப்படி அது எதற்கு போற்றப்படுகிறது என்றால் பண்பாட்டு செழிப்பு, கலை அனுபவம், விஞ்ஞானம், கலாச்சாரம், நாகரிகம், பொருளாதாரம் இவற்றின் முன்னேற்றம் அந்நாடுகளின் அடிமையாம். அதனால்தான் பொன் கம்பங்களில் மேற்குலம் வெற்றிக் கொடியாய் கட்டி பறக்க விடப்பட்டுள்ளது.


இன்று உலக டயரிகளில் ஆயிரம் பக்கம் கடந்து சென்றாலும் மேற்குலகின் புகழாரம் இல்லாமலில்லை உலக வானொலியில் எல்லா அலைவரிசைகளிலும் மேற்குலகின் புரட்சிகரமான வித்தைகள் ஜனரஞ்சகப் படுத்தப்படுகின்றன. தொலைகாட்சியா? கணினியா? அவற்றிலும் தம் கை வண்ணம் காட்டாமலில்லை. அந்தளவு மேற்குலகின் மோகன வித்தைகள், விளையாட்டுகள் மக்களை வியக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. எல்லோரும் மேற்குலகை கட்டாயத் திருமணம் செய்துள்ளார்கள், அதனால்தான் இத்தனை மதிப்பு.

ஆனால், இவற்றையெல்லாம் மீறி இவற்றிற்கும் மேலாக "இஸ்லாம்" சிறந்த முன்மாதிரியை, சிறந்த முன்னோடிகளை நமக்களித்துள்ளது. அது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகவும், தன்னிகரில்லா தன்மை கொண்டு விளங்கும் அல்-குர்ஆன் மூலமாகவும் என்றால் மிகையல்ல. ஊசி முனைக் காது வழியே ஒரு யானை நுழைய முடியுமா? அப்படி ஓர் அதிசயம் எப்படி நிகழும்! அப்படித்தான் அல்-குர்ஆன் என்ற இறைவேதம் மோசடி செய்யும் மேற்குலகிற்கு ஒரு முன்னோடியாக உள்ளது.

இதைவிடுத்து எதற்கெடுத்தாலும் மேற்கத்தியர்கள் இப்படி செய்கிறார்கள், அப்படி செய்கிறார்கள், இன்று இது தான் நாகரிகம்
(Fashion) என்று சொல்லும் சில மேற்குல பித்து பிடித்தவர்கள் இன்றளவும் இல்லாமலில்லை. இருப்பினும் இஸ்லாம் நல்ல முன்னோடிகளை என்றோ விதைத்துவிட்டது. அது இன்று மரமாகி, வேர் விட்டு, கிளைவிட்டு, விருட்சமாகி எல்லாத் திக்கு திசைகளிலும் பரவிவிட்டது. மேற்குலகின் பொருளாதாரமானாலும் நாகரிகமானாலும், பண்பாடானாலும் எல்லாமே வெறும் வெங்காயம் மாதிரிதான். அப்படியிருக்க எப்படி இஸ்லாத்தின் முன்மாதிரிகளை ஏற்று நடக்க, எதிர்க்க முற்படுகின்றனர் என்பதுதான் புரியாத புதிர்.

மேற்குலக நாகரிகம் என்று அவர்களின் நடை, உடை, பாவனைகளை பின்பற்றுகின்றனர் மெல்லிய ஆடைகள், நிர்வாண உடைகள், தம் அமைப்பு தெரியும் அளவிற்கு இறுகிய ஆடைகள் இவை தாம் இவர்கள் கூறும் நாகரிகம். ஆனால் இஸ்லாம் அழகாக, தெளிவாக ஆடை அணிவதின் நோக்கம், அதன் பிரயோசனம் போன்றவற்றை சொல்லித்தந்து இருக்கிறது, நம்மிடமே முன்னோடி இருக்கையில் மேற்குலகில் போய் தேட அவசியமே இல்லை. "இக்கரை மாட்டுக்கு அக்கரைதான் பச்சையாம்". வெட்கம், நாணம், ஒழுக்கம் மற்றும் உடலைப் பேணல் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் நாகரிகத்தையும், அழகையும் கொடுக்கத்தான் இந்த ஆடை என இஸ்லாம் ஆடையின் யதார்த்த நிலையை எமக்கு விளக்கி முன்னோடியாய் அளித்துள்ளது.

'ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக' (அல்-குர்ஆன் 7: 26)

தக்வா எனும் ஆடையே மிக சிறந்த ஆடை என குர்ஆன் கூறுகிறது, ஆனால் மேற்குலகை முன்னோடியாக் கொண்டால், தக்வா என்ற இறையச்சம் கடுகளவேனும் நம்மை நெருங்காது என்பதில் ஐயமில்லை, மற்றும் பெண்கள் ஆண்களைப் போன்றும் அதற்கு மாறாகவும் அணிவது தான் நாகரிகம் என்கிறார்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள், பெண்களைப் போல் ஆடை அணியும் ஆண்களையும், ஆண்களைப் போல் ஆடை அணியும் பெண்களையும் இறைவன் சபிக்கின்றான் எனக் கூறினார்கள் (புகாரி)

இன்னும் எம்மவர்கள் மேற்குலகின் அலங்கார முறைகளை முன்னோடியாக எடுத்துள்ளனர். அதாவது உதட்டுக்குச் சாயம், முகத்திற்கு பவுடர், நகத்திற்கு பாலிஷ், இதுதான் மேற்குலகு கூறும் அலங்காரமும், சுகாதாரமும். இவற்றிற்கு பெயரா சுத்தம்? இல்லவே இல்லை. இஸ்லாம் அழகான முறையில் ஒழு, குளிப்பு போன்றவற்றின் மூலமாக எமக்கு கற்றுத்தருகின்றது.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே கண்ணுக்கு (அஞ்சனம்) சுர்மா இட்டுக் கொள்ளுங்கள், ஏனெனில் அது கண்களை தூய்மையாக வைக்கிறது இன்னும் இமை முடிகளை வளர்க்கிறது. இதுதான் இஸ்லாம் கூறும் சுத்தம் மற்றும் சுகாதாரம்.

நிச்சயமாக அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் (தடுத்துள்ளான்) (குர்ஆன் 2: 275)

பொருளாதாரத் துறையின் வளர்ச்சிக்கு காரணம் வட்டி, இலஞ்சம் இவைகள்தான் என்று அவற்றிற்கு மதிப்பளித்து மேற்குலகுத்தார் தம் பொருளாதாரத்தை வளப்படுத்துகிறார்கள். இதை எம்மவர்கள் முன்னோடியாக ஏற்றதினால்தான் இன்னும் வாழ்வில் பின்னோடியாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். பொருளாதாரத்தின் வளர்ச்சி வட்டியில் இல்லையென இஸ்லாம் என்றோ முத்திரைக் குத்தி விட்டது. மாறாக ஜக்காத் எனும் தான-தர்மங்களையும், சிறந்த வியாபார முறைகளான பங்கீட்டு வியாபாரம், கூட்டு வியாபாரம் போன்றவற்றைக் கற்றுத் தந்து முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறான இந்த முறையினால் ஒரு நாடே வளர்ச்சியடைகிறது. ஆனால் மேற்குலகின் வட்டி முறையினால் ஒரு நாடே வறுமையடைகிறது.

அதே போன்றுதான் விஞ்ஞான மோகம். இவர்களை அளப்பறிய விசித்திரங்களை ஆற்ற வைத்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய விசித்திரங்களை வானிலும், மண்ணிலும் நிகழ்த்தி வருகிறது, நீரிலும் கூட.

சில ஆண்டுகளுக்கு முன் மத்தியத்தரைக் கடல் பகுதியில் 'கப்தான் ளாக் குஸ்ஸோ' என்ற ஆழ்கடல் ஆய்வாளர் ஆய்வுக்கு சென்றபோது, அவரின் முகமூடி சற்று விலகி கடல்நீர் வாய்க்குள் புக அது, உப்பு கரிக்காது மதுரமாய் இருக்கவே வியப்போடு கரை சேர்ந்தார். பின் அது பற்றி தகவல் தெரிய முற்பட்டார் டாக்டர் மாரிஸ் புகைல் என்ற மருத்துவ ஆய்வாளரிடம் சென்று கேட்டபோது உங்களுக்கு இப்போது தானே தெரியும் ஆனால் அல்-குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னரே இது பற்றி தெளிவு படுத்தியுள்ளது என்று கூறி பின்வருகின்ற வசனங்கள் மூலம் விளக்கினார்.

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (அல்-குல்ஆன் 25: 53)

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா, ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. (அல்-குல்ஆன் 35: 12)

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (குல்ஆன் 55: 19)

தன் புலனுக்கு புலப்படுவதையும் தெளிவாக தெரிவதைத்தான் விந்தையாய் அவர்களின் அறிவுக்கு சான்றாய் காட்டுகின்றனர். ஆனால் மண்ணிலும், விண்ணிலும் ஏராளமான அற்புதங்கள் அவர்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை. மேற்குலகத்தார் குர்ஆன் தான் முன்னோடி என்பதை விளங்கி அதை வெளிப்படுத்த மறுக்கின்றனர். அப்படியானால் நாம் ஏன் மேற்குலகை முன்னோடியாக எடுக்க வேண்டும்? இவர்களின் கண்கட்டி வித்தையை கண்டு எத்தனையோ பேர் தம் கண்களையே தொலைத்து விட்டு வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள். இதுதான் மேற்குலகு முன்னோடி என்று நம்பியவர்களுக்கு கூலியாக கிடைத்தவை.


இவ்வாறே மேற்குலக பண்பாடுதான் எம் முன்னோடி என்று பறைசாட்டும் கூட்டமும் இல்லாமல் இல்லை. இவர்கள் இன்னும் விளங்கவில்லை. இன்னும் சில பெற்றோர் அதனடிப்படையில் தம் பிள்ளைகளை வளர்க்க முற்பட்டுள்ளனர். மேற்குலகங்களில் 18 வயதிற்குப் பின் பிள்ளைகள், பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை.


ஒரு மனிதன் தன்னை ஒரு பூரணமான ஒழுக்கம் நிறைந்தவனாக அமைய வேண்டிய வயதே பதினெட்டு. ஆனால் அதுவே அவர்களுக்கு சுதந்திரமாக அமைந்து விட்டது. இவைகளை கண்மூடித்தனத்தில் முன்னோடியாய் கொள்வதினால் தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் சீரழிந்து கெட்டு குட்டிச் சுவராகி நிற்பதை தவிர வேறில்லை. அவற்றை விடுத்து இஸ்லாம் பிள்ளை வளர்ப்பில் தனக்கென ஒரு பாகத்தை எடுத்துரைத்து முன்னோடியாக விளங்குகிறது. சமூக ஒழுக்கம், சிறந்த பயிற்சி பண்பாட்டு விருத்தி, உளவிருத்தி, நாகரிக வளர்ச்சி, சிறந்த கல்வி இவற்றை ஒருங்கிணைத்து இஸ்லாம் எமக்கு முன்னோடியை என்றோ வழங்கிவிட்டது.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தந்தை தனது பிள்ளைகளுக்கு வழங்குபவற்றில் மிகவும் சிறந்த அன்பளிப்பு, அவர்களுக்களிக்கும் நல்ல கல்வியும் பயிற்சியுமேயாகும். ஆதாரம் - மிஷ்காத்

மனிதனுக்கு கவலை, துக்கம், துன்பம், துயரம் ஏற்படுவது இறை நியதியே. அதே மேற்குலகத்தாருக்கு ஏற்பட்டால் மது, மாது, சூது போன்றவற்றில் ஈடுபட்டு தம் கவலைகளை போக்கி கொள்ளலாம் என்ற மனப்பாங்கில் அதை சுவைக்கின்றனர். இன்னும் சிலர் தற்கொலையே செய்து கொள்கிறார்கள். இந்த நிலையை எப்படி நாங்கள் முன்னோடியாக எடுப்பது? அதற்காக இஸ்லாத்தில் இவ்வாறான விடயங்களுக்கு வழிகாட்டி இல்லாமல் இல்லை. எத்தனை துஆக்களை நம் பெருமானார்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

விசுவாசிகளே! பொறுமையை கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். (அல்-குர்ஆன் 2: 153)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கையாளரின் விவகாரம் எத்தனை அழகானது! எந்த ஒரு நிலையிலும் அவன் நன்மைகளை ஈட்டிக் கொண்டே இருக்கிறானே! அவனுக்கு துக்கம், நோய், வறுமை ஏற்பட்டால் அவன் அமைதியுடன் அவற்றை பொறுக்கிறான். ஆதாரம் - முஸ்லிம்

இவற்றையெல்லாம் தெரிந்த பின்னும் மேற்குலகு தான் முன்னோடி என்பது வியப்பே! அத்தோடு இவர்களின் தோழமையும் ஒரு பிற்போக்கான நிலையே! அதில் எத்தனை அட்டகாசம், அப்பப்பா! எண்ணிலடங்கா!!! இதனால் உலகெங்கும் ஒரு கொடூர நோய் (எய்ட்ஸ்) எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கு பெயர் தான் நாகரிகமா?

இத்தனை சமூக சீர்கேடுகளும், மோசமான பண்பாட்டு விஷயங்களும் நாகரிகம் என்ற பெயரில் நல்லவர்களை கொல்லும் தீய சில செயற்பாடுகளும் பண்பாடு என்ற பெயரில் பாமரர்களை பரிதவிக்கச் செய்யும் நிலைகள் கொண்ட உலகம் தான் முன்னோடி என்று பின்னால் வால் பிடிக்கப் போனால் அழிவு நிச்சயம்.

எனவே இவற்றை உணர்ந்து செயற்பட வல்ல நாயன் நமக்கு அருள் புரியும் நாள் வரட்டும். அன்றாவது எம் சமூகம் மேற்குலகு, மேற்குலகு என்று அலையும் அவசியம் ஒழியட்டும்.
 

படியுங்கள் பரப்புங்கள் : "சுவனப்பாதை" மாதஇதழ், - வெளியீடு: ஜித்தா, ஸனாயிய்யா, சவுதி அரேபியா