Index |Subscribe mailing list | Help | E-mail us

 
 

ஹஜ் 2006 - மினா சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்?

அபூ உமர்

 

கடந்த 12-ந்தேதி மதியம் 12.30லிருந்து 1.30க்கு இடைப்பட்ட நேரத்தில் மினாவில் கூட்ட நெரிசலில் நசுங்கி இறந்த 363 பேர்களின் மரணம் பலரை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. இதுபோன்ற துயர சம்பவம் இனிமேலும் நடவாமல் இருக்க ஒரு துரும்பையாவது கிள்ளிபோடவேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன்.

பிறை 12 அன்று நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பும்போது குழந்தைகள் மற்றும் பெண்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் ஆண்கள் மட்டும் கிளம்பினோம். கல் எறியும் இடமான ஜமராத் பாலத்தை நெருங்கும்போதுதான் அது நடந்திருக்க வேண்டும். சம்பவம் நடந்த இடம் 5 நிமிட நடை தூரத்தில் இருக்கும்போது எங்களுடன் வந்தவர்கள் 6 பேர் மட்டுமே உடன் இருந்தார்கள். வலது புறத்தில் கூட்டத்தின் அடர்த்தி குறைவாக தெரிந்தமையால் அங்கு நகருவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இராணுவம் வந்து மனித பாதுகாப்பு வலையத்தை உருவாக்கி ஆம்புலஸிற்கு வழிவிட்டார்கள். 1, 2, 3 என்று தொடங்கி நிறைய ஆம்புலன்ஸ் வரத்தொடங்கிவிட்டது. வந்த ஆம்புலன்ஸின் உள்புறத்தில் ஆபத்து நிலையில் உள்ளவர்களையும் மேற்புறத்தில் காயம்பட்டவர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்படத் தொடங்கிவிட்டது. ஆம்புலன்ஸ் போவதற்கு வசதியாக இராணுவம் வசதி செய்து தந்தமையால் அந்த அடர்த்தியான கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் நகரத் தொடங்கியது. அப்போதுகூட இத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதில் யாராவது சற்று சறுக்கினால் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து ஜாக்கிரதையாக கால்வைத்து சென்றோம். முழங்கால் அளவு பொருட்கள் விழுந்துகிடந்தது. பாதுகாவலர்கள் ஹாஜிகளை ஜமராத் பாலத்தில் ஒரேடியாக போகவிடாமல் சிறிது சிறிதாக விட்டனர். ஜமராத்திற்கு கல் எறிவதற்கு பாலத்தின் மேற்புறம் எறிவது போல, பாலத்தின் கீழ்புறமும் எறிய முடியும். பாலத்தின் மேற்புறம் ஒருவழி பாதைதான். கல் எறிந்தவுடன் திரும்பிவர இயலாது. வலது, இடது என பிரியும் பாலத்தின் இரண்டு கிளைகளின் வழியே நாம் செல்லும் வழியை அடைந்துவிடலாம். ஆனால் கீழ் புறத்தில் எதிர்பார்க்காதபோது திடீர் திடீர் என்று மக்கள் கூட்டம் வருமாததால் அதனைத் தவிர்த்துவிட்டோம். மனிதவலையம், ஆம்புலன்ஸ் இவையெல்லாம் நகர ஆரம்பித்ததும் மெதுவாக நசுங்கி பிழியப்பட்டு ஜமராத் பாலத்தின் ஆரம்பத்தை அடைந்துவிட்டோம். பாலத்தில் நுழைந்தவுடன்தான் சற்று நெருக்கும் குறைந்திருந்தது.

போனவருடம்தான் (ஹஜ் 2005) தூண் போல இருந்த ஜம்ராத் உயிர் சேதத்தைத் தவிர்க்க சுவர் போன்று நீட்டி கட்டியிருந்தார்கள். (பார்க்க படம்) இரண்டு மாடி கட்டிடத்தின் உயரமும் 36 மீட்டர் அகலமும் உடைய அந்த புதிய ஜமராத்திலும் மக்கள் கூட்டம் வழிந்தது. நாங்கள் வலது புறமாக பாலத்தின் விழிம்பிற்கு ஓதுங்கி ஜமராத்தின் இறுதி வந்ததும் ஜமராத்தை நெருங்கினோம். மக்கள் ஜமராத்தை நெருங்கி கல்எறிந்துவிட்டு வி வடித்தில் பிறிந்து சென்றார்கள். ஜமராத்தின் முடிவில் கூட்டம் இல்லாததால் சாவகாசமாக இருந்து 'அல்லாஹ் அக்பர்' என்று சொல்லி பட்டாணி அளவில் இருக்கும் 7 கற்களை ஒவ்வொன்றாக எறிந்தேன். ஜமராத்தின் சுவரை நெருங்க முடியாதவாறும், எறிந்த கற்கல் நமது தலையில் விழாத வாறும் கட்டியிருந்தார்கள்.

இவ்வாறு 3 ஜமராத்திற்கும் கல் எறிந்துவிட்டு வலது புறத்தில் உள்ள கீழிறங்கும் வழியை அடைந்த போது இறந்தவர்களை குளிர்பதன வசதியுடைய லாரியில் அடுக்கிக்கொண்டிருந்தார்கள். உடன் வந்த நண்பர் ஹஸன் அதனை எண்ணி 21 இருப்பதாக சொன்னார். கீழே வரிசையாக போர்த்தப்பட்டு இருந்த உடல்களை சரியாக எண்ணும் அளவிற்கு தெரியவில்லை. ஆகவே கீழே இறங்க தொடங்கினோம். ஆம்புலன்ஸ் விரைந்து சென்றுக்கொண்டிருந்தது. இறந்தவர்களை அடுக்க புதிய குளிர்பதன வசதி லாரி வந்து நின்றது.

இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்க என்ன முன் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

1) சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜிகளின் கூடாரங்களில் நடந்த தீ விபத்து காரணமாக, ஹஜ் செய்ய வரும் பயணிகள் தீ பற்றாத கூடாரங்களை உடைய முதவ்விஃப் ஒழுங்குமுறை ஏற்பாட்டில் தங்குவதற்கு பணம் செலுத்தி வந்தால் மட்டுமே ஹஜ் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த புதிய கூடாரங்களை சவுதியில் உள்ள ஹஜ் அமைச்சகம் பல கோடி செலவில் ஏற்பாடு செய்தது. அதுவும் பற்றாததால் மினாவின் இடத்தையும் தாண்டி முஸ்தலிஃபாவின் ஒரு பகுதிவரை நீட்டினார்கள்.

2) ஜம்ராவில் நடக்கும் விபத்தை தவிர்க்க தூண் போன்ற அமைப்பை மாற்றி நீண்ட சுவர் போன்றதை உருவாக்கியது.

3) அருகருகே கூடாரங்களை தவர விட்டவர்களுக்கு சவுதி ஸ்கவுட் அமைப்பின் மூலம் வழிகாட்டுவது. இந்த அலுவலகத்தின் மேல் ஆங்கில எழுத்தின் ஐ போன்ற பெரிய வட்ட வடிவ போர்டு இருக்கும்.

4) மினா, முஸ்தலிஃபா, அரஃபா ஆகிய அனைத்து இடத்திலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிட்ட ஒரு இடைவெளிக்கு இடையே தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் நவீன டாய்லட் வசதிகள்.

5) கண்டெய்னரில் இலவச பாக்கெட் உணவுப்பொருட்கள் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டு அது முறையாக கண்காணிக்கப்படுகிறது.

6) மக்காவிலிருந்து மினா முஸ்தலிஃபா வரை நடை வழியாக செல்லும் ஹாஜிகளுக்கு நிழல்தரும் விதமாக பாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி தந்திருப்பது.

7) வாகனங்கள் செல்வதற்கு தனி தனியாக பல வழிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். ஹஜ் பயணிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தனியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

8) இதுவல்லாமல் குறைந்தது 3 ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டபடியே இந்த 6 நாட்களும் இருக்கும்.

9) போலீஸ், செக்யூரிட்டி, தீயணைப்பு, இராணுவம், தற்காலிக ஊடக இணைப்பாளர்கள் என சுமார் 60,000 பேர் உள்ளனர்.

10) ஹாஜிகள் தொத்து நோயால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தடுப்பூசியும் போட்டிருக்கவேண்டும். தடுப்பூசி போட்டதற்கான அத்தாட்சி இருந்தால்தான் ஹஜ் அனுமதி கிடைக்கும்.

தற்போது 4 அடுக்கு ஜமராத் பாலம் கட்டுவதற்காக 15 ந்தேதி பணியும் தொடங்கப்பட்டுவிட்டது.



இத்தனை வசதிகள் செய்தி இருந்தும் ஏன் இந்த மரணங்கள் நிகழ்கின்றன என்பதுதான் இங்கு கேட்கப்படும் முக்கிய கேள்வியே. இதற்கு நிர்வாகம் எத்தனை வழிகளில் முயற்சி செய்தாலும் ஹாஜிகளும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா? உள்நாட்டில் உள்ளவர்கள் 5 வருடத்திற்கு ஒரு முறைதான் ஹஜ் செல்ல அனுமதி கிடைக்கும். இது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கடைபிடிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. அதற்கான வாய்ப்பும் குறைவு. காரணம் வருபவர்கள் பலர் தற்காலிக ஹஜ் பாஸ்போர்ட் பெற்று வருகிறார்கள்.

(பார்க்க ரூட் மேப்)

துல்ஹஜ் பிறை 8-லிருந்து 13 வரை ஹஜ்ஜின் முக்கிய நாட்களாகும். மக்கா, மினா, முஸ்தலிஃபா, அரஃபா ஆகியவை ஹஜ் காரியங்கள் செய்யும் இடங்களாகும். பிறை 8 ல் ஹாஜிகள் மினாவை வந்தடைவார்கள். பிறை 9ல் அரஃபாவை அடைவார்கள். இதுதான் ஹஜ்ஜின் முக்கிய நாளாகும். இங்கு ஹாஜிகளுக்கு படைத்த ஒரு இறைவனிடத்தில் கையேந்தி பிரார்த்தனை செய்வதை;தவிர வேறு வேலை கிடையாது. அன்று மாலை சூரியன் மறையத்தொடங்கியதும் முஸ்தலிஃபாவை அடைந்து தங்கிவிட்டு பிறை 10-ல் மினாவை வந்தடைவார்கள். அங்குள்ள 3 ஜமராவில் கடைசியாக உள்ள பெரிய ஜமராவிற்கு கல் எறிந்துவிட்டு குர்பானி கொடுப்பது, தலைமுடியை மழிப்பது அல்லது குறைப்பது மற்றும் மக்காவிற்கு சென்று தவாஃப், ஸயி செய்யவேண்டும். 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஹாஜிகள் மக்காவை அடுத்துள்ள மினாவில் தங்க வேண்டும். (பிறை 13-ல் விரும்பினால் தங்கலாம் அல்லது 12-ல் மக்கா சென்றுவிடலாம்). ஹஜ் கடமைகளை விபரமாக தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும்).

இந்த நாட்களில் இதுபோன்ற துயர சம்பவம் பிறை 12-ல் மட்டுமே அதிகம் நிகழ்கிறது. அதற்கான காரணம், பிறை 12-ல் ஜமராவிற்கு கல்லெறிந்துவிட்டு அன்று மாலை சூரியன் மறைவதற்கு முன்பு மினாவில் இருந்து புறப்பட்டுவிட வேண்டும். இல்லையென்றால் 13-ம் பிறையும் தங்கி கல்லெறிந்துவிட்டுத்தான் புறப்பட வேண்டும். கல்லெறியும் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயத் தொடங்கியவுடன் ஆரம்பமாகிறது. சுமார் 12 மணியிலிருந்து அடுத்த 6 மணி நேரத்திற்குள் 90 சதவீத ஹாஜிகள் கல்லெறிந்துவிட போதுமான அவகாசம் கிடையாது. உள்நாட்டிலிருந்து வந்த ஹாஜிகளுக்கு பிறை 13, 14 தேதிகளில் வேலைக்கு செல்லவேண்டும் என்ற அவசரம். வெளிநாட்டு ஹாஜிகளுக்கு மக்காவில் உள்ள தங்குமிடத்திற்கு சென்று இளைப்பார வேண்டும். காரணம் தற்போது ஹஜ்ஜிற்கு வரும் பாதிக்கு மேற்பட்ட ஹாஜிகள் உடல் வலிமையற்றவர்களாக முதிய வயதில் வருகிறார்கள். ஹஜ் செய்வதற்கு பொருள் பலமும் உடல் பலமும் இருந்தால் மட்டுமே கடமை. ஆனால் உடல் பலம் இருக்கும்போது பலருக்கு ஹஜ் கடமை ஞாபகம் வருவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். உடல் பலகீனமானவர்கள் முக்கியமாக பிறை 12ல் காலையிலேயே கல்எறியலாம் என்று மார்க்க தீர்ப்பும் கொடுத்திருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.

ஹாஜிகள் சூழ்நிலையை உணர்ந்து அதற்கு தக்க தங்கள் நடவடிக்கைகளை வைத்துக்கொள்வதில்லை. பிறை 12 அன்று கல்லெறிய போகும்போது பேக் மற்றும் கூட எடுத்துவந்த பொருட்களை ஜம்ராவிற்கு எடுத்துச்செல்வது. இப்போது நடந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமும் இதுதான்.

இந்த தடவை 25 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை ஹாஜிகள் வந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஒருபகுதி முறையான அனுமதி இல்லாமல் நுழைந்தவர்களாகும். இவர்கள் ஹஜ்ஜின் 6 நாட்களும் குடியிருப்பது நடைபாதை மட்டுமே. அதுவும் ஜமராவின் இரண்டு பக்கமும் உள்ள வெருவெளியிலும் இவர்கள் தங்கிவிடுகிறார்கள். பல போர்ட்டபில் டெ;ன்ட்களை இங்கு காணமுடியும். இத்தகையவர்கள் மீது நிர்வாகம் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என்னைப்போன்றவர்களின் ஆர்வம். தற்போது இறந்ததாக கணக்கிடப்பட்ட 363 பேரில் 3ல் 1 பங்கு யார் என்று இதவரை அடையாளம் தெரியவில்லை. காரணம் இவர்கள் ஹஜ்ஜிற்கு முறையான அனுமதி பெறாமல் வந்திருக்கலாம். அனுமதியுடன் வந்தவர்களுக்கு கைகளில் கட்டப்படும் தங்குமிடம் அடையாத்துடன் கூடிய வளையம் கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒரு பிளாஸ்டிக் வளையமும், போட்டோவுடன் உள்ள கார்டும் கொடுக்கப்படும்.

தற்போது ஹஜ் பயணத்திற்கு வந்தவர்களில் பலர் முன்பே ஹஜ் செய்தவர்களும் உண்டு. இவர்கள் தற்காலத்தில் ஏற்படும் நெருக்கடி விபத்து போன்ற சூழ்நிலையை நினைத்து புதியவர்களுக்கு வழிவிடவேண்டும். வழிகாட்டியாகவோ அல்லது மனைவி மற்றும் வயதானவர்களுக்கு துணையாகவோ வரும் சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர ஏற்கனவே ஹஜ் செய்தவர்கள் மீண்டும் ஹஜ்ஜிற்கு வரக்கூடாது என்று தானே முடிவு எடுக்க வேண்டும். ஹஜ்ஜுடைய காலங்களில் நெருக்கடி காரணமாக ஒருவர் இறந்தால் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய வந்தவர் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை அவர் மறுப்பாரா?

நாங்கள் ஜமராத் பாலத்தில் இருந்தபோது முதியவர் ஒருவர் சப்தமாக, 'ஹாஜிகளை ஹாஜிகள் கொல்வார்களா' என்று சம்பவம் நடந்த திசைநோக்கி கைகாட்டி புலம்பிக்கொண்டிருந்ததை நினைத்தால் நெஞ்சம் கணக்கிறது.