Index |Subscribe mailing list | Help | E-mail us

சிறந்த கைகள்

M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி

 

இறைவன் மனிதர்களை படைத்து அவர்களுக்காக பல வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளான். அதில் மிகுந்த செல்வத்தையும் நடுத்தரமான செல்வத்தையும் ஏழ்மையான செல்வத்தையும் மனிதர்களுக்கு மூன்று நிலைகளாக பிரித்துள்ளான்.

ஏழ்மை நிலையிலுள்ளவர்கள் தன் நிலையை எண்ணி நிலைகுலைந்து போகாமல் இருக்கதான் ஜகாத் மற்றும் தான தர்மங்களை வசதி படைத்தவர்களின் மீது கடமையாக்கி, அவர்களுக்கு நீங்கள் கொடுத்து உதவுங்கள் என்று இறைவன் கூறுகிறான். ஜகாத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:

 

தொழுகையை நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; ருகூவு செய்வோருடன் நீங்களும் ருகூவு செய்யுங்கள் (2.43)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இஸ்லாம் ஐந்து விசயங்கள் மீது கட்டப்பட்டுள்ளது.

1.அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுவது

2.தொழுகையை நிலை நாட்டுவது

3.ஜகாத் கொடுத்து வருவது

4.ரமளான் மாதம் நோம்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

5.ஹஜ்ஜு செய்வது

உபரியான தான தர்மத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:

நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின்தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (அல்லாஹ்வுக்காக) செலவு செய்யுங்கள். ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது. (57:7)

அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே எப்பொருளையும் காணவில்லையாயின் என்று வினவ அவன் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும் என்றார்கள். அதற்கும் இயலவில்லையெனில் என வினவ அதற்கும் இயலவில்லையெனில் என்று கேட்டபோது தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும் அதுவே தர்மமாகும் என்றார்கள். (ஆதாரம் :புகாரி, நஸாயி)

ஜகாத்தையும் உபரியான தான தர்மங்களையும் கொடுக்கச் சொன்ன இறைவன் அது எந்த வழியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறி இருக்கிறான். இன்று மக்களுக்கு சம்பாதிக்கும் வழியைப்பற்றி கவலை இல்லை. அது இறைவனால் தடுக்கப்பட்ட வழியாக இருந்தாலும் லாபம் இருந்தால் செய்யும் தொழிலே தெய்வம் என்று 24 மணி நேரமும் அதற்கு அடிமையாகி, இறைவன் கூறிய வழியை மறந்து தன் பொருளாதாரத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்கிறான்.

மனிதன் வளர வளர அவனுடைய இரண்டு ஆசைகளும் சேர்ந்தே வளர்கின்றன. ஒன்று பொருளாசை. இரண்டு நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த இரண்டு பேராசையின் காரணத்தால் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் மறந்து விடுகிறான்

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தை திருப்பி விட்டது. (102-1.2)

தூய்மையான சம்பாத்தியம் எது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எவ்வகை சம்பாத்தியம் மிகத் தூய்மையானது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அம்மனிதன் தன் கையினால் உழைத்து சம்பாதிக்கும் சம்பாத்தியமும் ஏமாற்றமில்லாமல் செய்யும் வியாபாரமும் என்று கூறினார்கள். (ஆதாரம்: அஹமத்)

ஆனால் இன்று வட்டி மோசடி லஞ்சம் போன்ற பல ஏமாற்று வழிகளின் அடிப்படையில்தான் வியாபாரங்கள் நடைபெறுகின்றன. இறைவன் மறுமையில் இதைபற்றி விசாரிப்பான்

ஆபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக:
செல்வத்தை எந்த வழியில் சம்பாதித்து எவ்வழியில் செலவு செய்தான் என்று மறுமையில் விசாரிக்கப்படாதவரை எந்த மனிதனின் பாதமும் தன் இறைவனிடம் இருந்து நகர முடியாது.

மனிதனின் அன்றாட மிக முக்கியத் தேவையான பணத்தை இறைவன் தூய்மையான வழியில் சென்று சம்பாதிக்கதான். இஸ்லாம் கூறுகிறது தூய்மையான முறையில் சம்பாதிக்கும் பணத்தினால் செய்யும் தர்மத்தைதான் இறைவன் ஏற்றுக்கொள்கிறான். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இறைவன் ஹலாலானதை (அனுமதிக்கப்பட்டதை) தவிர வேறு எதையும் ஏற்க மாட்டான் எவரேனும் அதிலிருந்து தர்மம் செய்தால் ரஹ்மான் தன் வலக்கரத்தால் இதை பெற்றுக் கொள்கிறான் அது ஒரு பேரித்தம் பழமாக இருப்பினும் சரியே. அது இறைவனிடம் மலையை விடப் பெரியதாக இருக்கிறது. ஒருவர் தன் ஒட்டகக் குட்டியை வளர்ப்பது போல் அதை அல்லாஹ் வளரச் செய்கிறான் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

தனக்கு தேவையான பணத்தை சேமித்த பின்பு அதற்கும் அதிகமாக இருந்தால்தான் பிறருக்கு தான தர்மங்களை செய்ய இறைவனும் நபி (ஸல்) அவர்களும் கூறுகிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, தேவைக்கு போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும் மேலும் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக. (ஆதாரம்: புகாரி)

இறைவன் தன் திருமறையில்
(நபியே ! தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக. (2-219)

இன்று தன் தேவைக்கு போக மீதம் இருப்பதை பிறருக்கு கொடுத்து உதவாமல் பிற்காலத்தில் நமக்கு இல்லாமல் போய் விடுமோ என்று பயந்து கஞ்சத்தனம் செய்கிறார்கள். இவர்களை பார்த்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபித்தனம் தெய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம். அவ்வாறன்று அது அவர்களுக்கு தீங்குதான் அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். (3-180)

நபி (ஸல்) அவர்களும் கஞ்சத்தனம் செய்பவர்களை ஒரு உதாரணத்துடன் கூறியிருக்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, (தர்மம் செய்யாது) கருமித்தனம் செய்பவர் மற்றும் தர்மம் செய்பவருக்கு உதாரணம் அவ்விருவரின் மீதும் இரும்பினால் ஆன கேடயம் (முழக்க அவ்விருவரையும் ழூடிக் கொண்டவாறு) உள்ளது. (அந்நிலையிலிருக்கும்) தர்மம் செய்து கொண்டிருந்தவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரானால் அது அவருக்கு விஸ்தீரணமாகிக் கொடுக்கும். முடிவாக அவரிலிருந்து ஏற்பட்ட தவறுகளின் அடிச்சுவடுகளை அது அழித்து விடும். கருமித்தனத்தை உடையவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரனால் (அவர் மீது இருக்கும்) கவசமானது அவரை நெருக்கும். அவருடைய இரு கைகளும் அவரது கழுத்தின்பால் இணைந்து கொள்ளும் (அதிலுள்ள) ஒவ்வொரு வளையமும் அவரை இருக்கிக் கொள்ளும். அதை அவர் விசாலமாக்கிக் கொள்ள அவர் பெரிதும் முயல்வார் ஆனால் அதற்கு சக்தி பெறமாட்டார். (ஆதாரம்: முஸ்லிம்)

பிறருக்கு கொடுத்து உதவுவதால் இறைவனின் அருட்கொடைகள் அவனுக்கு மென்மேலும் அதிகரிக்கும் வறுமை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுவது ஷைத்தானின் வேலையாகும் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

(தான தர்மங்கள் செய்வதினால் ) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான். ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும் (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடையவன்) யாவற்றையும் நன்கறிபவன். (2-268)

எங்கு நமக்கு இல்லாமல் போய்விடுமோ என்று பயப்படாமல் தூய்மையான உள்ளத்துடன் பிறருக்கு தரும்போது இம்மையில் அவர்களுக்கு மிக்க செல்வமும் மறுமையிலும் செல்வந்தனாகவே இறைவன் வைப்பான். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் கடிவாளமிடப்பட்ட குதிரையை தர்மம் செய்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் மறுமை நாளில் கடிவாளமிடப்பட்ட எழுநூறு குதிரைகளோடு வருவார் என்றார்கள். (ஆதாரம்: நஸாயீ)

மற்றொரு சாராரோ ஆடம்பரம் என்ற பெயரில் திருமணம் என்னும் எளிய ஒப்பந்தத்தை திருவிழாவாக மாற்றி பணத்தை தண்ணீராக வீண்விரயம் செய்கின்றனர். இன்று உலகில் ஒரு நேர சாப்பாட்டுக்கும், உடுத்த உடை இல்லாமல் அவதிப்படும் மக்கள் நம் சமுதாயத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு உதவிகள் செய்யலாமே என்று கூட எண்ணாமல் தன் வீட்டு விழாக்களில் பணக்காரர்களை அழைத்து தட்டு முதல் கொண்டு அனைத்திலும் ஆடம்பரத்தை வெளிப்படுத்திக் கொண்டு உள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்துதான் விருந்துகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அஹமது)

வீண் விரயம் செய்பவர்களை பார்த்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான். அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (7:31)

இன்னும் சிலபேர் பிறருக்கு உதவுவதில் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களை பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தர்மம் செய்ததின் அளவை கூறியபோது நபி (ஸல்) அவர்கள் நீ தர்மம் செய். அதை வரையறுத்து விடாதே அவ்வாறு கணக்கிட்டால் அல்லாஹ் உம்மீது வழங்கும் அருட்கொடையை கணக்கிட்டு விடுவான் என்றார்கள். ஆதாரம்: அபூதாவுத். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வளவுதான் என்று வரையறுத்து தர்மம் செய்யாதே. அல்லாஹ் உம்மீது பொழியும் அருளை வரையறுத்து விடுவான் என்றார்கள் .

இன்று யாருக்காவது உதவிகள் செய்து அதன் மூலம் அவன் முன்னேறிவிட்டால் நான்தான் அவனுக்கு செய்தேன். நான் இல்லை என்றால் அவன் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது என்று மற்றவரிடம் பெருமையாக கூறுவார்கள். இவர்களை பார்த்து அல்லாஹ் வழுக்குப்பாறைக்கு ஒப்பாக கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் நோவினைகள் செய்தும் உங்கள் ஸதகாவை (தான தர்மங்களை) பாழாக்கி விடாதீர்கள். (அப்படிச் செய்பவனுக்கு ) உவமையாவது ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த (தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். (2:264)

செய்த உதவியை சொல்லிக்காட்டுபவனை நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் இறைவன் அவர்களை பார்க்கவும் மாட்டான் தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவனே நஷ்டவாளி என்றார்கள். ஆதாரம்: முஸ்லிம். அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

செய்யும் தான தர்மங்களை பிறருக்கு தெரியாமல் இரகசியமாக வைத்திருந்தால் அதனின் நன்மையை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் ஏழு பேருக்கு நிழலே இல்லாத மஹ்ஷர் மைதானத்தில் தன்னுடைய நிழலான (அர்ஷின் நிழலை) அளிக்கிறான். அதில் ஒரு நபர் அவருடைய வலக்கை அவர் தர்மம் செய்ததை இடக்கை அறிந்து கொள்ளவில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

அவர்களுக்கு எவ்வித அச்சமும் துக்கமும் கிடையாது என்று இறைவன் கூறுகிறான்.

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:274)

இன்றைய இளைஞர்கள் மரணம் எந்த நிமிடமும் வரும் என்பதை மறந்து தன் வாழ்நாட்களை 90 வயது வரை வாழ்வதற்கு இறைவனிடம் ஒப்பந்தம் செய்திருப்பதைப் போன்று இளமையில் வசதி இருந்தும் தன் செல்வங்களை தேவையில்லாத காரியங்களுக்கும் தீய வழிகளிலும் செலவிடுகின்றனர். தன் வேர்வை சிந்தி உழைக்கும் பணத்தை நல்ல வழியில் பயன்னுள்ளதாக உபயோகிக்க வேண்டும் என்பதனை மறந்து விடுகின்றனர்.

தனக்கென்று ஒரு வேலைக் கிடைக்கும்வரை இறைவனிடம் அதற்காக பிரார்த்தனை செய்து அவனிடம் உதவி தேடுகின்றனர். இறைவன் தன் அருட்கொடைகளை அளித்த பின்பு பெரும்பாலானோர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.

இறைவன் தன் திருமறையில் 'நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்'. (100:6)

உதவி தேடும் போது இறைவனிடம் பல வாக்குறுதிகளை தருகின்றனர். செல்வம் குவிகின்ற போது மனிதனிடம் கஞ்சத்தனம் , கருமித்தனம், வாக்குறுதி மீறல், அலட்சியம் போன்ற அழுக்குகள் மனதில் வந்து விடுகிறது.

அவர்களில் சிலர் 'அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்குச் செல்வத்தை அளித்தால் மெய்யாகவே நாம் (தாராளமாக தான) தர்மங்கள் செய்து நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.


(அவ்வாறே) அவன் அவர்களுக்கு தன் அருட்கொடையிலிருந்து வழங்கிய போது அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கி விட்டனர். எனவே அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி ) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (9:75-77))

 

முடிந்த அளவு சிறிய உதவியானாலும் அதை இறைவழியில் செலவிட்டு நன்றி கூற வேண்டும். தர்மம் செய்வதால் அவர் ஏழ்மைநிலைக்கு ஆளாகமாட்டார் என்று இறைவன் பல வசனங்களில் கூறியுள்ளான்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும் தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும் யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையானது உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெருமழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும் அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது.அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கிறான். (2:265)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது எனக் கோட்டார். நீர் ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வறுமைக்கு பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே நன்மை என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

நடுத்தர சம்பாத்தியம் உள்ளவர்கள் தர்மம் செய்தால் அதுவே சிறந்த தர்மம் என்று நபி ஸல் அவர்கள் கூறி இருக்கும் போது செல்வந்தர்கள் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும். 11 மாதங்கள் பணக் குவியல்களை சேகரித்து விட்டு ரமலான் மாதம் வந்து விட்டால்தான் சிலருக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற நினைவு வரும். தன் வியாபாரத்தில் லாப, நஷ்ட கணக்குகளை துல்லியமாக கணக்கிடும் சிலர் தன் செல்வங்களின் ஜகாத் விஷயத்தில் அலட்சியமாக இருக்கும் இவர்கள் எவ்வாறு உபரியான தர்மங்கள் செய்ய போகிறார்கள்?

பெண்கள் தங்களின் தந்தை சகோதரர்கள் மற்றும் கணவனின் பொருளாதாரத்திற்குட்பட்டு தங்கள் தேவைகளை முடித்துக் கொள்வதில் அவர்களின் வருமானத்திற்கும் மீறிய ஆடம்பர செலவுகளும் வீண் செலவுகளுமே செய்கின்றனர். இவர்களது தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் அவர்கள் நிம்மதியாகவே இருக்க விடமாட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கு நரகம் காட்டப்பட்டது அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள் எனக் கேட்கப்பட்டது , அதற்கு நபி (ஸல் ) அவர்கள், கணவனை நிராகரிக்கிறார்கள், உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களின் ஒருத்திக்கு காலம் முழுவதும் நீ நன்மைகளை செய்து கொண்டேயிருந்து, பின்னர் ஒன்றை உன்னிடம் கண்டு விட்டாளானால் உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை என்று பேசி விடுவாள் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

பெண்களின் மனதை திருப்தி அடைய செய்வதற்காகவும், அவர்களின் மனதை சந்தோஷம் அடையச் செய்வதற்காகவும், ஆண்கள் இறைவன் தடுத்த பல வழிகளில் சென்று தங்கள் பொருளாதாரத்தை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். ஆண்கள் தவறான வழிக்கும் செல்வதற்குப் பெண்களே காரணமாக உள்ளார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த நபித் தோழியர்களோ, தான தர்மங்களை அள்ளித் தந்தார்கள்.

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் எழுந்து தொழுதார்கள். தொழுகையை முதலில் நடத்தி விட்டு பிறகு உரை நிகழ்த்தினார்கள். உரை முடித்து இறங்கி பெண்களிடம் சென்று பிலாலுடைய கையில் சாய்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். பிலால் (ரலி) தம்முடைய ஆடையை ஏந்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் (தங்களின்) தர்மத்தை அதில் போடலானார்கள். நான் (ஜாபிர் இப்னு அப்தில்லா அவர்கள்) அதாஃ (ரலி) இடம் பித்ரு (பெருநாள்) சதக்காவையா என்று கேட்டேன். அதற்கவர் இல்லை அப்போது அவர்களாக விரும்பிச் செய்த தர்மத்தையே போட்டனர். கால் விரவில் அணிந்து கொள்ளும் மெட்டிகளையும் அவர்கள் போட்டுள்ளார்கள் எனக் கூறினார். (ஆதாரம்: புகாரி)

இப்பெண்கள் அனைவரும் மிக வசதிபடைத்த செல்வந்தார்கள் இல்லை. ஒரு வேளை உணவுக்காக உழைத்துச் சாப்பிடக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த பெண்களுக்கு கொடுக்க கூடிய மணம் இருந்தது. இந்த பெண்களுக்கு கொடுக்க கூடிய மணம் இருந்ததால் தான் எந்த தடைகளும்மின்றி நபித் தோழர்களும் பிறருக்கு உதவி செய்யும் மனதை பெற்று இருந்தார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் உடனே எங்களில் ஒருவர் கடைதெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து இருகையளவு தானியம் சம்பாதித்து அதை தர்மம் வழங்கி விடுவார். ஆனால் இன்றோ எங்களில் சிலரிடம் ஒரு தினார் திர்ஹம் வரை உள்ளன என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் பெண்களை தனிப்பட்ட முறையில் எச்சரிக்கையாக நிங்கள் அதிகமான தானதர்மங்களை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) அவர்கள். ஹஜ்ஜிப் பெருநாள் அன்றோ நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திடலிற்கு நபி (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள் அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்றபோது 'பெண்கள் சமுகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள்தான் என எனக்குக் காட்டப்பட்டது. ஏன் என அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறர்கள் என்றார்கள். (ஆதாரம்:புகாரி)

பெண்களே! மேற்கூறப்பட்ட நபிமொழிகளை சிந்தித்துப் பாருங்கள். நபி தோழியர்களிடம் உள்ள பண்புகளை சிந்தித்து நீங்களும் தர்மம் செய்து, ஆண்களையும் தான தர்மங்களை செய்ய உற்சாகப்படுத்தி நன்மைகளை அடைய வேண்டாமா?

நபி (ஸல்) அவர்கள் மற்றொரு நபிமொழியில் மனிதர்களுக்கு செல்வத்தை தர்மம் செய்து நரகில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வழியை கூறி சென்றுள்ளர்கள்.

ஆதி இப்னு ஹாதம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது தர்மம் செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

யார், இறைவன் செல்வத்தை தனக்கு கொடுத்துள்ளான். அவன் வழியில் செலவிட்டால் தன் செல்வத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்வான் என்று தூய்மையான உள்ளத்துடன் வாரி வழங்குகிறார்களோ அவர்களுக்கு இம்மையில் அளவு கடந்த நற்பலன்களை தருகின்றான். இறைவன் தன் திருமறையில், தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம் அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன் (2:261)

மறுமையில் மிகப்பெரிய கூலியை பெறுகிறார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, எவன் இறைவனின் பாதையில் ஏதேனும் பொருளை செலவழித்தாரோ அவரை சொர்க்கவாயில்களின் காவலர்கள் ஒவ்வொருவரும் இன்னாரே இங்கே வாரும் என்று அழைப்பார். (ஆதாரம்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் தன்னால் முடிந்த அளவு போட்டி பிறருக்கு பொருளால் உதவி இருக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும் வரை சந்திப்பார்கள். அவ்வேளையில் மழைகாற்றை விட வேகமாகவும் அதிகமாகவும் வாரி வழங்குவார்கள். (ஆதாரம்:புகாரி)

பிநருக்கு பொருட்களால் உதவி செய்யக்கூடிய நிலையில் இல்லாத நபிதோழர்கள் அதனை எண்ணி வருத்தப்பட்டு எங்களால் அந்த நன்மைகளை பெறமுடியவில்லையே என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மிகுந்த செல்வம் படைத்தோர் நற்கூலியை கொண்டு சென்று விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்று அவர்கள் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு நோற்பது போன்று நோன்பும் நோற்கிறார்கள். அவர்களுடைய செல்வங்களில் மிச்சமானதை தர்மம் செய்கிறார்கள் என்று சில நபிதோழர்கள் முறையிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் தர்மம் செய்பவற்றை உங்களுக்கு அல்லாஹ் ஆக்கித் தரவில்லையா? நீங்கள் செய்யும் ஒவ்வொரு தஸ்பிஹ் லாஇலாஹ இல்லல்லாஹ்விற்கும் தர்மம் (தர்மத்தின் பலன்) உண்டு. நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் தர்மமாகும் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

பொருளாதரத்தால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் பிறருக்கு செய்யும் நற்செயல்களால் தர்மத்தின் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று பல நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள்

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நன்மையான காரியங்கள் அனைத்தும் தர்மமாகும். (ஆதாரம்: அபூதாவூத்)

மனிதன் தன் உழைப்பில் வேர்வை சிந்தி நிலத்தை உழுது விவசாயம் செய்கிறான். அதிலிருந்து ஒரு பறவை தானியத்தை உண்டால் அதற்கும் கூட தர்மம் செய்த நன்மையை இறைவன் தருகிறான்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து உள்ளார். அதனை ஒரு மனிதனோ அல்லது பிராணியோ உண்ட காரணத்தால் அவருக்கு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்கும். (ஆதாரம்: திர்மதி)

பெண்களை அதிகமான தர்மம்செய்ய எச்சரித்துள்ள நபி (ஸல்) அவர்கள் எளிய முறையில் அதனின் நன்மைகளை பெற வழிகாட்டியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, ஒரு பெண் தனது விட்டிலுள்ள உணவை விணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையை பெறுவாள் அதை சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும் அதுபோலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். (ஆதாரம்: புகாரி)

மனைவிக்கு மட்டும் இதை கூறாமல் கணவனுக்கும் இந்த நன்மைகளை கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நீ உணவு உண்ணும்போது உன் மனைவியின் வாயில் ஒரு கவள சோற்றை ஊட்டுவதும் தர்மம் தான் என்றார்கள். (ஆதாரம்:புகாரி)

இன்று மனிதர்கள் ஒருவரை கண்டு புன்னகை புரிவதைக்கூட மிக சிரமமாக கருதுகின்றனர். ஆனால் நம்முடைய இஸ்லாமிய சமுதாயமோ இதனை கூட அற்பமாக கருதவில்லை.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உம்முடைய சகோதரனை முகமலர்ச்சியோடு சந்திப்பதைக்கூட அற்பமாக கருத வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மனிதர்களின் (உடலில் உள்ள) ஒவ்வொரு முட்டுக்கும் சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்ய வேண்டியுள்ளது. இரு மனிதர்களுக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும். உன் சகோதரனின் முகத்தை பார்த்து நீ சிரிப்பதும் தர்மமாகும். ஒரு மனிதருக்கு அவரது வாகனத்தின் விஷயத்தில் உதவுவது, அவரை நீ வாகனத்தில் ஏற்றிவிடுவது அல்லது அவ்வாகனத்தின் மீது அவரது பொருட்களை ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல இனிய சொல் கூறுவது தர்மமாகும். தொழுகையின் பக்கம் வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மமாகும். பாதையில் கிடக்கும் (முள்-கள்)போன்ற பொருட்களை அகற்றுவதும் சதக்காதான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

மற்றொரு அறிவிப்பில்-பாதையில் வழிதவறிய ஒருவறுக்கு தூய்மையான உள்ளத்துடன் செய்யும் எல்லா நற்செயலுக்கும் இறைவன் கூலியை தருவான்

ஆணாயினும் பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் நற்செயல்களை செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (16-97)

நம் செயல்கள் அழகான முறையில் இருந்தால் அதற்கும் இறைவன் நன்மையை தருகின்றான். அதுவே தீயவழியில் இருந்தால் மறுமையில் இறைவனிடம் குற்றவாளியாக நிற்க நேரிடும் என்று இருக்கும் போது, பணவசதி படைத்தவர்கள் தர்மம் செய்யவில்லை என்றால் இறைவனின் கோபமும் மலக்குமார்களின் சாபமும் உலகில் தரப்படும்

அபூஹுரைராஅ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்)அவர்கள் கூறியதாக, இரண்டு வானவர்கள் ஒவ்வொரு நாள் காலையில் அடியார்களிடம் (மனிதர்களிடம்) இறங்குகிறார்கள் அவர்களில் ஒரு வானவர் இறைவா! தர்மம் செய்ய யார் செலவழிக்கிறார்களோ அவர்களுக்கு அதனை அதிகமாக்குவாயாக! மற்றொரு வானவர் இறைவா செலவழிக்காமல் மிச்சம் வைக்கிறவர்களுக்கு செல்வத்தை சுருக்கி விடுவாயாக! (ஆதாரம்: புகாரி)

இறைவன் கொடுத்த அருட்கொடைகளை பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் என்று பல நபிமொழியில் வந்துள்ளது. எவர் இறைபொருத்ததிற்காக செலவழிக்காமல் பிறர் பார்க்க வேண்டும் புகழ வேண்டும் என்று தர்மங்களை கொடுப்பவரின் நிலமை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமையில் மூன்று பேரை இறைவன் சந்திப்பான். அதில் ஒருவர் கொடையாளி (செல்வந்தர்கள்) இறைவன் இவரை பார்த்து உலகில் உனக்கு நான் செல்வத்தை தந்தேனே அதை எவ்வழியில் செவழித்தாய் என்பான். அந்நபர் இறைவா நான் உன் வழியில்தான் செலவிட்டேன் என்பான். இறைவன் எனக்காக நீ செலவிடவில்லை. பிறர் புகழ வேண்டும் என்று பெருமைக்காக செலவிட்டாய் என்று கூறி அவரை முகம் குப்புர நரகத்தில் இழுத்துச் சென்று போடுவான். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த நபிமொழியில் இருந்து செல்வத்தை தந்தவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் எதற்காக அவர்கள் செலவழித்தார்கள் (செல்வத்தை) என்றும் விசாரிக்கப்படுவார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

தர்மம் செய்யாமல் எவ்வளவுதான் பணத்தை சேமித்தும் ஆடம்பரமாகவும் இருந்தாலும் அவர்களால் மன அமைதியுடன் இவ்வுலகிலும் மறுமையிலும் வாழ முடியாது என்பதனை மேற்கண்ட நபிமொழிகளில் பார்த்தோம்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருக்கும் நிலையில் தர்மம் வழங்குவது பற்றி கூறினார்கள். தாழ்ந்த கரத்தை விட உயர்ந்த கரம் சிறந்தது. உயர்ந்த கரம் என்பது கொடுக்கும் கரம் தாழ்ந்த கரம் என்பது கேட்டுப் பெறும் கரம் என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இறைவன் கூறியது போல் நம் சமுதாய செல்வந்தர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வாரி வழங்கினால் அவர்களின் கைகளே சிறந்த கைகளாக திகழும் இறைவனும் அவர்களின் அருட்கொடைகளை மென்மேலும் அதிகப்படுத்துவான்.