Index |Subscribe mailing list | Help | E-mail us

அழைப்பாளர்களின் பண்புகள்

மவ்லவி கே.எல்.எம்.இப்ராஹீம் மதனீ M.A.

 

 

ல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதென்பது இறைத்தூதர்களின் பணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அழைப்பாளர்களில் மிகக்சிறந்த அழைப்பாளர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆகவே அவர்களைப் பின்பற்றக்கூடிய நாம் அனைவரும் மற்றவர்களை அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைக்க வேண்டும்.


அழைப்புப்பணி என்பது ஆலிம்களுக்குரிய பொறுப்பு மாத்திரம் அல்ல! முஸ்லிம்கள் அனைவரின் பொறுப்பாகும். நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது இவைகளை எல்லோரும் செய்தே ஆகவேண்டும். ஆனால் சிலர் சிலரை விட பொறுப்பில் கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆலிம்கள் சட்டதிட்டங்களை ஆழமாக விவரித்துக் கூறுவார்கள். பொதுமக்கள் அவர்களுக்கு தெரிந்த அளவு கூறவேண்டும். அழைப்புப்பணி என்பது மேடையில் பேசுவது, ஜும்மாவில் உரை நிகழ்த்துவது மாத்திரம் அல்ல. ஒருவர் தவறு செய்வதைப் பார்த்தால் அதைத் தடுப்பதும் நல்லதை ஒருவருக்கு ஏவுவதும் அழைப்புப்பணிதான். இதை எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் அழைப்புப்பணியில் ஈடுபடக்கூடியவர்கள் சில பண்புகளை மேற்கொள்வது மிக மிக அவசியமாகும்.

 
1. தூய எண்ணம்


எல்லா அமல்களும் எண்ணங்களைக் கொண்டே தூய்மை அடைகின்றது. அல்லாஹுக்கென்று செய்யும் அமல்களுக்கு அல்லாஹுத்தஆலா அளவின்றி நன்மைகளை அள்ளி வழங்குகின்றான். முகஸ்துதிக்காக செய்யப்படும் அமல்கள் அதிகமாக இருந்தாலும் அதற்கு எந்தக் கூலியும் வழங்கப்படாமலிருப்பது மட்டுமல்லாமல் மறுமையில் தண்டனையும் வழங்குகிறான். ஆகவே நாம் செய்யும் எல்லா அமல்களையும் அல்லாஹுக்காக செய்ய வேண்டும். குறிப்பாக அழைப்புப்பணி முழுமை பெறுவதற்கு தூய எண்ணம் மிகவும் முக்கியமாகும். தூய எண்ணத்துடன் அழைப்பாளியின் உள்ளத்திலிருந்து வெளியாகும் வார்த்தைகள்தான் மக்களின் உள்ளத்தில் சென்றடையும் என்பதை மறந்து விட வேண்டாம்.


2. மார்க்கக் கல்வியை அறிந்திருத்தல்


மார்க்கக் கல்வியைத் தெரிந்தவராகவும், தான் சொல்லும் செய்திகளை நன்கு அறிந்தவராகவும் இருக்க வேண்டும் மேலும், அதனை ஆதாரத்தின் அடிப்படையிலும் கூற வேண்டும்.
(நபியே!) நீர் சொல்வீராக! "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும் நான் அல்லாஹ்வின்பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன். ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்." (அல்குர்ஆன் 12: 108)


தான் கூற விரும்பும் செய்திகளை குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் சேகரித்து அதில் தெளிவு பெற்ற பின்புதான் மக்கள் மத்தியில் கூற வேண்டும். அவர் கூறினார், இவர் கூறினார், அப்படிக் கூறப்படுகின்றது, இப்படிச் சொல்லப்பட்டது என்பதையெல்லாம் கைவிட வேண்டும். தெளிவின்றி அதிகம் பேசுவதைவிட தெளிவுடன் குறைவாகப் பேசுவதே சரியான முறையாகும்.
சுஃப்யானுத் தவ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், நன்மையைக் கொண்டு ஏவி தீமையைத் தடுப்பவர்களுக்கு மூன்று பண்புகள் அவசியமாகும்.


(அ) ஏவுவதை தெரிந்திருக்க வேண்டும்.
(ஆ) தடுப்பவைகளை தவறு என்று தெரிந்திருக்க வேண்டும்
(இ) ஏவும் போதும் தடுக்கும்போதும் நீதமாகவும், மிருதுவாகவும் சொல்ல வேண்டும்.


3. அழைப்பாளியின் வழிகாட்டி


குர்ஆனும், ஹதீஸும் அழைப்பாளியின் வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆகவே அழைப்பாளி குர்ஆனை நன்கு படிக்கத் தெரிந்தவராகவும் அதனின் கருத்துக்களை ஆழமாக விளங்கி அடிக்கடி படித்து அதைத் தன் வாழ்க்கையில் பிரதிபலிக்க வைக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறே நபி (ஸல்) அவர்களின் சுன்னாவையும் அதிகம் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

 

சுன்னாவானது, குர்ஆனுக்கு விரிவுரையாக விளங்குகின்றது. நவவி (ரஹ்) அவர்கள் தொகுத்த ரியாளுஸ்ஸாலிஹீன் (நல்லடியார்களின் பூங்கா) என்று அழைக்கப்படும் நபிவழித் தொகுப்பை குறைந்தளவு ஒவ்வொரு அழைப்பாளியும் படிக்கலாம்.


இன்னும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தெரிந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்கு திர்மிதி (ரஹ்) அவர்கள் எழுதிய ஷமாயிலுத்திர்மிதி (நபி(ஸல்) அவர்களின் நேர்முக வர்ணனை) என்னும் கிதாபையும் நபி(ஸல்) அவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஸஃபிய்யுர்ரஹ்மான் முபாரக் பூரி அவர்கள் எழுதிய ரஹீக்குல் மக்தூம் என்னும் புத்தகத்தையும் (அது தமிழில் வெளிவந்து விட்டது) படிக்கலாம். உதாரணத்திற்கு மட்டுமே இவைகள். இதுபோன்ற புத்தகங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றது.


மேலும், முன் சென்ற நல்லோர்களான நபித்தோழர்கள், தாபியீன்கள், இமாம்கள், அறிஞர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் இபாதத், கொடுக்கல், வாங்கல் போன்ற மார்க்க சட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதைத் தெரிந்து கொள்வதற்காக சட்டம் சம்மந்தப்பட்ட புத்தகங்களையும் அறிஞர்களின் அறிவுச்சபைகளையும் நாட வேண்டும். இன்னும் அறிஞர்களிடம் கேட்டு தெரிந்தும் கொள்ள வேண்டும். புலூகுல் மராம் போன்ற சட்டக்கலை சம்மத்தப்பட்ட ஹதீஸ் தொகுப்பை படிக்கலாம். அதுவும் தமிழில் வந்துவிட்டது. அல்லாஹுவுக்கே எல்லாப் புகழும்.


பயனுள்ள புத்தகங்கள், இஸ்லாமிய கேசட்டுக்கள் போன்றவற்றின் மூலம் தனது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக தனது நேரத்தில் குறிப்பிட்ட அளவு ஒவ்வொரு நாளும் ஒதுக்க வேண்டும். குறிப்பாக குர்ஆன் ஹதீஸுடன் தனது தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.


4. அழைக்கப்படுபவர்களின் நிலைகளை அறிந்து கொள்வது மிக அவசியம்


அழைப்புப்பணியில் முழுமையான வெற்றி பெற அழைக்கப்படுபவர்களின் நிலைகள் பற்றித் தெரிந்து கொள்வது (அவர்களின் பழக்கங்கள், கொள்கைகள் போன்றவை) மிக முக்கியமாகும். இதைத் தெரிந்து கொள்வதினால் அவர்களுடன் எப்படிப் பேச வேண்டும், எதை பேச வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.


நாம் அழைப்பவர்களின் நிலைகளைத் தெரிந்து அதற்கேற்ப அவர்களை அழைக்க வேண்டும். அவர்களின் அறிவின் தரத்தைத் தெரிந்து அவர்களுடன் பேசவேண்டும். அவர்களுடன் மென்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.


5. சொல்வதை செய்யவேண்டும்


அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்:


எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?) (அல்குர்ஆன் 41: 33)


நீங்கள் செய்யாததை(ப்பிறருக்கு)க் கூறுவது அல்லாஹ் இடத்தில் வெறுப்பால் மிகப் பெரியதாகி விட்டது. (அல்குர்ஆன் 61:3)


தான் சொல்வதை முதலில் அமல்செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு அழைப்பாளரின் பண்பு என்பதை இவ்விரு வசனங்களும் வலியுறுத்துகின்றது.


இக்லாஸுடன் செயல்படும் உண்மையான அழைப்பாளி முதலில் தன் வாழ்க்கையை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். தான் சொல்வதை முதலில் தன் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். தான் தடுப்பவைகளை முதலில் தன் வாழ்வில் தடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஐங்காலத் தொழுகைகளை அதனதன் நேரங்களில் ஜமாஅத்துடன் யார் தொழுகின்றாரோ அவர் தொழுகையின் பக்கம் மக்களை அழைக்கும்போது அந்தப் பேச்சு மிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தொழுகையில் பொடுபோக்குச் செய்யும் ஒருவர் தொழுகையைப் பற்றிப் பேசினால் அந்தப் பேச்சில் பயனிருக்காது.


சொல்லும், செயலும் மாறுபட்டிருந்த யூத மதத்தின் தலைவர்களைப்பற்றி அல்லாஹுத்தஆலா குர்ஆனிலே இழிவுபடுத்திக் கூறுகின்றான்.


நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ளவேண்டாமா?
(அல்குர்ஆன் 2: 44)


6. ஹிக்மத் என்னும் சாதுரியம்


அழைப்புப் பணியின் போது மற்றவர்களோடு ஹிக்மத்தாகவும் (சாதுரியமாகவும்) மென்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.


அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:


(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ அதைக் கொண்டு அவர்களுடம் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன் அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன், இன்னும் நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன். (அல்குர்ஆன் 16: 125)


மற்றவர்களுடன் விவாதிக்கும் போது மென்மையைக் கையாள வேண்டும். மற்றவர்களை ஏசுவது, தூற்றுவது, கடினமான வார்த்தைகளைப் பேசுவது போன்றவைகளை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும். மென்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம்தான் வெற்றியைப் பெற முடியும். இன்னும் நாம் எடுத்துச் சொல்லும் செய்தியை மிகத்தெளிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் எடுத்து வைக்கும் போது உண்மை எது தவறு எது என்பதை மக்கள் எளிதாக விளங்கிக் கொள்வார்கள்.

 
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:


(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமங்கள் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17: 53)


அதாவது தவறான வழியில் நடப்பவர்களிடம் விவாதம் செய்ய நேரிட்டால் அவர்களுடனும் நல்ல வார்த்தைகளைப் பேசி விவாதிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். மற்ற மதத்தவர்களுடன் விவாதிக்கும் போதும் அழகிய முறையில் விவாதிக்க வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.


இன்னும், நீங்கள் வேதத்துடையவர்களுடன் அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்;


"எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக. (அல்குர்ஆன் 29: 46)


இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்:


அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்தி விடுவீராக அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பு ஏற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பு ஏற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3: 159)


மனிதர்களின் அறிவுக்கு ஏற்றவாறு பேசுங்கள் அல்லாஹ்வும் அவனின் தூதரும் பொய்ப்படுத்தப் படுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? என அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


7. விமர்சனங்களை பொருட்படுத்தலாகாது


நாங்கள் எங்கிருந்த போதும் உண்மையைக் கூறுவோம் என்றும் அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கூறும் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பை பொருட்படுத்த மாட்டோம் என்றும் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் பைஅத்து (உடன்படிக்கை) செய்திருக்கின்றோம், என உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


ஆகவே மார்க்கப்பணியில் ஈடுபடும் போதும், உண்மையை எடுத்துரைக்கும் போதும் பலர் நம்மைப்பற்றி பலவாறாகவும் விமர்சிக்கலாம். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் நமது பணியைத் தொடர வேண்டும். அழைப்பாளர் என்பவர் ஒரு மருத்துவரைப் போன்றவர், மருத்துவர் நோயாளியின் நிலையை அறிந்து அதற்கேற்றவாறு மருந்தைக் கொடுப்பார். அவ்வாறே அழைப்பாளரும் மக்களின் நிலைகளை அறிந்து அவர்கள் செய்யும் தவறுகளை திருத்துவதற்கு முன்வர வேண்டும்.


8. மக்கள் சடைவடையும் அளவுக்கு பேசக்கூடாது


நாங்கள் சடைவடைந்து விடுவோமோ என்பதைப்பயந்து சில நாட்கள் விட்டு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள். (நஸாயி)


அபூவாயில் என்னும் நபித்தோழர் கூறுகின்றார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரலி) அவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் எங்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். நாங்கள் கூறினோம், அல்லது அவர்களுக்கு கூறப்பட்டது. அபூஅப்துர் ரஹ்மான் அவர்களே! உங்களின் சொற்பொழிவைக் கேட்க எங்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கின்றது. ஆகவே ஒவ்வொரு நாளும் எங்களுக்கு நீங்கள் சொற்பொழிவு செய்ய நாங்கள் விரும்புகின்றோம் எனக் கூறினோம். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது(ரலி) அவர்கள் கூறினார்கள், நீங்கள் சடைவடைந்து விடுவீர்கள் என்றுதான் நான் அவ்வாறு செய்யவில்லை, நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு விட்டு விட்டு உபதேசம் செய்தது போல் நானும் உங்களுக்கு விட்டு விட்டு உபதேசம் செய்கின்றேன் எனக் கூறினார்கள். (அஹ்மத்)


9. தவறைக் காணும் போது மூன்று முறைகளில் ஒன்றை கையாள வேண்டும்
 

(அ) கையால் தடுப்பது. இது குறிப்பிட்டவர்களுக்கே பொருந்தும். தந்தை தன் பிள்ளையை கட்டுப்படுத்துவது, அரசர் தன் பிரஜைகளை, இவ்வாறு....)

(ஆ) நாவால் தடுப்பது
(இ) மனதால் வெறுப்பது


உங்களில் யார் தவறைக் காணுகின்றார்களோ அதை கையால் தடுக்கட்டும், அதற்கு முடியவில்லையென்றால் நாவால் தடுக்கட்டும், அதற்கும் முடியவில்லையென்றால் மனதால் வெறுக்கட்டும் அதுதான் ஈமானின் குறைந்த அளவு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)


10. அழைப்பாளர் நல்லொழுக்கம் உள்ளவராக இருக்க வேண்டும்


உண்மை உரைத்தல், நம்பிக்கை, மற்றவர்களுக்கு உபகாரம் செய்தல், இறையச்சம், பொறுமை, அன்பாகப் பழகுதல், மென்மை, வாக்குறுதியை நிறைவேற்றல் போன்ற நற்குணமுள்ளவராக இருக்க வேண்டும்.


(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர். மேலும் சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிப்புக் கோருவீராக (அல்குல்ஆன் 3: 159)


(நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்; (அல்குர்ஆன் 68: 4)


11. அழைப்பாளர்களின் பொதுவான தகுதிகள்

  • பணிவு, தான் குறைவுள்ளவன் என்று எண்ணுவது, தற்பெருமை அடிக்காமல் இருப்பது. (இப்பண்புகள் இல்லாதவராக அழைப்பாளர் இருந்தால் அவரை விட்டும் மக்கள் ஒதுங்கி விடுவார்கள்.)

  • தான் கற்ற அறிவை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டக் கூடாது. யார் கற்ற அறிவை மறைக்கின்றாரோ மறுமையில் நெருப்பினால் அவருக்கு கடிவாளம் இடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்."

  • கண்ணியமாக இருக்க வேண்டும், வீண் விளையாட்டுக்களிலும் தேவையில்லாத பேச்சுக்களிலும் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் வீணர்களுடன் பழகுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

  • தூய்மையான ஆடையை அணிவதுடன் நல்ல தோற்றத்திலும் மக்கள் மத்தியில் தோற்றமளிக்க வேண்டும்.

  • ஹராமான செயல்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். சந்தேகத்திற்கு உரியவைகளை விட்டும் தூரமாகிக் கொள்ள வேண்டும்.

  • உள்ளும், வெளியும் ஒன்று போல் இருக்க வேண்டும். தக்வா என்னும் இறையச்சம் குடிகொண்டவராக இருக்க வேண்டும். அல்லாஹுவை அதிகம் அஞ்சக்கூடியவராக இருக்க வேண்டும்.

  • கெட்ட பழக்கங்களிலிருந்து முற்றாக தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

  • பொறுமை என்ற பண்பு அவரின் தனி வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் பிரியாத ஒன்றாக இருக்க வேண்டும்.


(நபியே!) நம் தூதர்களில் திட சித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! (அல்குர்ஆன் 46: 35)


காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களை சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கின்றார்களே அத்தகையோரைத்தவிர. (அல்குர்ஆன் 103: 1-3)


ஆகவே, இந்தப் பண்புகளை நாமும் பெற்று உண்மையான அழைப்பாளர்களாக மாறுவோம். அல்லாஹ் அதற்கு வாய்ப்பளிப்பானாக!