Index |Subscribe mailing list | Help | E-mail us

இறையருட் செல்வங்கள்

கதீஜா மணாளன்

 

(குழந்தை நலம்: தொடர்-1)

 

இறைவன் நமக்கு அளித்த செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் 'குழந்தைகள்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக புதுமணத் தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத்தான். சிறிது காலதாமதம் ஆகிவிட்டால் கணவனும், மனைவியும் சோகத்தில் ஆழ்ந்து விடுவதையும், மாமியார் மற்றும் நாத்தனார் வட்டங்களின் குத்தல் பேச்சுக்களும், அண்டை வீட்டாரின் அறிவுரைகளும் சூழ்ந்துகொள்கின்றன. குழந்தைச் செல்வங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை அடுக்கடுக்காய் குழந்தைகளைப் பெற்றெடுத்து அலுத்துப் போனவர்களைவிட குழந்தைப் பேற்றிற்காக ஏங்கித் தவிப்பவர்கள்தான் நன்கு அறிவர்.

 

ஆண்குழந்தை வேண்டும் என்ற ஆசையில் வரிசையாக பெண்குழந்தைகளை பெற்று ஓய்ந்து போனவர்களும் உண்டு. இந்த முறையாவது பெண்குழந்தை பிறக்கட்டும் என்று ஏங்குபவர்களும் உண்டு.


ஆண்டுகள் பல ஆகியும் தனக்கென ஒரு வாரிசு கிடைக்காமல் ஏக்கங்களை சுமந்து நிற்கும் தம்பதிகளும் உண்டு. இது வல்லமை மிக்க இறைவனின் படைப்பாற்றல் ஆகும்.

 

அல்லாஹ் தன் அருள்மறையில் :


வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை அவன் படைக்கின்றான். அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கின்றான். அல்லது ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கு அறிந்தவன். மிக்க ஆற்றல் உடையவன்.
(அல்-குர்ஆன் 42 : 49,50)


மேலும் இவை நம் போன்ற சராசரி மக்களை மட்டுமல்லாது நபிமார்களது வாழ்விலும் அவர்கள் குழந்தைப் பேறுக்காக ஏங்கியமையை திருக்குர்ஆன் நமக்கு எடுத்தியம்புகிறது.


என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக எனது எலும்புகள் பலவீனமடைந்துவிட்டன. என் தலையும் நரை முடியால் இலங்குகிறது. என் இரட்சகனே! நான் உன்னிடத்தில் பிரார்த்தனை செய்து (கேட்டதில்) பாக்கியமில்லாதவனாக ஆக்கிவிடாதே! நிச்சயமாக நான் எனக்குப்பின் என் உறவினர்களை பயப்படுகின்றேன். என் மனைவியோ மலடாக ஆகிவிட்டாள்! ஆகவே உன் புறத்திலிருந்து ஒரு வாரிசை எனக்களிப்பாயாக!
(அல்-குர்ஆன் 20 : 4,5)


என்று ஜக்கரிய்யா(அலை) அவர்கள் பிரார்த்தித்ததையும், இறைவன் அவருக்கு 'யஹ்யா' என்ற மகனை அளித்ததையும் குர்ஆனில் காணமுடிகிறது. இன்னும் நபி இப்ராhஹிம்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் தோழராக இருந்தும் அவர்களுக்கு வயோதிக பருவத்திலேயே குழந்தைப் பேறு கிடைத்தது.
(என்னுடைய) வயோதிக காலத்தில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் எனக்கு அன்பளிப்பாக வழங்கினானே அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
(அல்-குர்ஆன் 14:39)


மேற்கண்ட வசனங்கள் நமக்கு சுட்டிக்காட்டுவதெல்லாம் குழந்தைப் பேறு என்பது இறைவன் தான் நாடியவர்களுக்கு வழங்கும் அன்பளிப்புதான். அதைத் தான் நாடியவர்களுக்கு மட்டுமே வழங்குவான்.
இன்னும் வாரிசுக்காக ஏங்குபவர் எவ்வளவு பெரிய பக்திமானாக நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரராக, ஏன் நபியாக இருந்தாலும் இறைவன் நாடினால் மட்டுமே வாரிசுகள் உருவாகும்.


இதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களில் பலர், திருமணமான சில மாதங்களிலேயே குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மேலிட்டு படைப்பாளனான வல்ல அல்லாஹுவை விடுத்து அவுலியாக்களிடம் படையெடுத்து மருத்துவத்தைப் புறக்கணித்து தர்ஹாக்களில் மண்டியிட்டு மன்னிக்க இயலாத பெரும் பாவங்களில் வீழ்ந்துவிடுகின்றனர்.


சிலருக்கு இறைவனின் கருணையால் குழந்தைப் பேறும் கிடைத்துவிடுகின்றது. ஆனால் கிடைத்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குகிறார்களா?


குழந்தை வளர்ப்பு என்பது அந்தக் குழந்தையை பாலூட்டி, சீராட்டி, நடை பயிலும் காலம்வரை கண்காணிப்பது மட்டுமல்ல. உண்மையிலேயே பால்குடிப் பருவம் முதல் நடை பயின்று பள்ளிப் பருவம் வரை அன்போடு வளர்ந்த எத்தனையோ குழந்தைகள் பெரியோர்கள் ஆனதும் ஒழுங்கீனத்தில் ஊற்றுக்கண்களாக நடப்பு சமுதாயத்தில் கெட்ட முன்மாதிரியாக உருவெடுப்பதைக் காணமுடிகின்றது. இன்னும் சிலர், பெற்றோர்களோ பெருமிதம் கொள்ளும் அளவிற்கு நன்நடைத்தைகளும், தொழுகை போன்ற வணக்கங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்க்கின்றோம்.


குழந்தைகள் நன்மக்களாவதும், கெட்டவர்களாக உருவெடுப்பதும் ஏன் என்று நம் உள்நெஞ்சம் கேட்கும் கேள்விற்கு பதில்தான் என்ன? மரபியல் பிரச்சினையா? மோசமான குடும்பச் சூழலா? டி.வி, கேபில் போன்ற நச்சு ஊடகங்களா? பளுவான பாடதிட்டங்களும், தரம் குறைந்த கல்விச் சூழலுமா? நண்பர்கள் வட்டம் சரியில்லையா? நாகரீகம்(?) ஓங்கிய நகர வாழ்க்கைத் தரம் காரணமா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.


ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடையைச் சொல்வார்கள் ஆனால் அடிப்படைக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு பள்ளிக்கூடம் தரமான கல்வியைத் தரலாம், ஒரு மருத்துவரை அல்லது பொறியியல் வல்லுனரைத் தரலாம், ஆனால் அவர் இறைவனுக்குப் பயந்து இறையச்சம் மிகுந்த மனிதநேயம் பொருந்திய சமூகப் பணியாளராக பெற்றோர்களை பேணுபவராக சமுதாயத் காவலராக, பிறர்நலம் நாடுபவராக, வரவேண்டுமென்றால் அதற்கு முதற்காரணம் பெற்றோர்கள்தான். அவர்களின் வளர்ப்பு முறையில்தான் அந்தக் குழந்தை, அந்த மாணவன், அந்த இளைஞன் புடம்போட்டு வார்க்கப்படுகின்றான்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
(அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி)


எனவே குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. எனவே குழந்தையை வளர்ப்பதில் மார்க்கம் கூறும் நல்லுபதேசங்கள், தெளிவான வழிமுறைகள், வரையரைகளைப் பற்றித் தொடராகத் தெரிந்து கொள்வோம்.

 

>> பாகம் -2