Index |Subscribe mailing list | Help | E-mail us

சுவனத்தில் நபிகளாருடன்..

எம். முஜீபுர் ரஹ்மான் உமரி

 


'நேர்வழியில் நடந்திடவும் வழிகேட்டைத் தவிர்ந்திடவும்' தினமும் நாம் குறைந்தது 17 தடவைகள் தொழுகையில் துஆச் செய்து கொண்டிருக்கின்றோம்.


اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ- صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ


நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. (சூரத்துல் ஃபாத்திஹா)

'நேர்வழி பெற்று, முஸ்லிம்களாக இருக்கும் நாம் எதற்காக மீண்டும் மீண்டும் நேர்வழிக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றோம்?! என என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?! சில நொடித் துளிகள் சிந்தியுங்களேன்! அதில் உங்கள் வாழ்க்கை மாற்றத்தின் காரணியைக் காண்பீர்கள்!

நேர்வழியை அல்லாஹ் இரண்டாகப் பிரித்துள்ளான்.

1- நேர்வழியைக் காண்பித்தல்.
2- நேர்வழியில் நடந்திட வாய்ப்பளித்தல். அதில் உறுதியாக நிலைத்திருக்கச் செய்தல்.

அல்குர்ஆனின் மூலமும் இறைத் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலாகவும் அல்லாஹ் மக்களுக்கு நேர்வழியைக் காண்பித்தான். சத்தியத்தையும் அசத்தியத்தையும் மிகத் தெளிவாக பிரித்தறிவிப்பதுடன் இறைத்தூதர்களின் பணி நிறைவு பெற்றுவிடுகிறது. இதுதான் முதலாம் வகை நேர்வழி!. ஆனால் அந்த நேர்வழியில் நுழைந்திடும் வாய்ப்பையும் இஸ்லாத்தினுள் நுழைந்தவர்கள் அவர்களின் மரணம் வரை சத்தியத்தில் நிலைத்து நிற்கும் பாக்கியத்தையும் அல்லாஹ் தான் நாடியவருக்கு மட்டுமே வழங்குகிறான். இதுதான் இரண்டாம் வகை நேர்வழி!.


إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ


(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது. ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான். (அல்குர்ஆன் 28:56)

இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்த பலர் இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்துவிடுவதும், இஸ்லாத்தில் இணைந்த பிறகு மீண்டும் வழிகேட்டிற்கு திரும்பி விடுவதும், வாழ்நாள் முழுக்க நல்லறங்கள் புரிந்து வருபவர் தன் இறுதி நாட்களில் தீமைகளுடன் மரணிப்பதும் இதன் காரணத்தினால்தான்!
எனவே அல்லாஹ் நமக்கு வழங்கிய நேர்வழியில் நமது மரணம் வரை நிலைத்து நின்றிடவும் மரணிக்கும் வரை தொடர்ந்து அவனைத் தொழுது, அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பாக்கியத்தைப் பெற்றிடவும்தான் மீண்டும் மீண்டும் நாள் ஒன்றுக்கு 17 தடவை துஆச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த நேர்வழியின் மூலமாக நாம் இவ்வுலகில் இறைப் பொறுத்தத்துடன் வாழவும் மறுமையில் நபிமார்களுடனும் நல்லோர்களுடனும் இணையும் பாக்கியத்தைப் பெறவும் அல்லாஹ் வாய்ப்பளிக்கிறான்.


وَمَنْ يُطِعْ اللَّهَ وَالرَّسُولَ فَأُوْلَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُوْلَئِكَ رَفِيقًا


யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள். இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 4:69)

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதின் மூலமாக மட்டுமே நபி (ஸல்) அவர்களுடனும் நல்லோர்களுடனும் சுவனத்தில் இணையும் பாக்கியம் கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக இந்த ஆயத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.


مَنْ يُطِعْ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا


எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் கண்காணிப்பாளராக அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4:80)

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவது என்பது அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டுப்படுதின் மூலமாக மட்டுமே சாத்தியமாகும் என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாக உணர்த்துகிறது. எனவே நம்முடைய பாதை நபி (ஸல்) அவர்கள் சென்ற பாதையாக இருக்கவேண்டும். அந்தப் பாதையில் சென்று அவர்களுடன் சுவனத்தில் இணையும் வாய்ப்பை பெற ஆசைப்பட வேண்டும். அதற்காக முயற்சிக்க வேண்டும்.


(رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ قَالَ كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي سَلْ فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ قَالَ أَوْ غَيْرَ ذَلِكَ قُلْتُ هُوَ ذَاكَ قَالَ فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ )


ரபீஆ இப்னு கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுடன் இரவில் தங்கி, உளுச் செய்யும் தண்ணீரைக் கொண்டுவது மற்றும் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி பணிவிடை செய்துவந்தேன். (ஒருநாள்) என்னிடம் எதையேனும் கேள்! என்றார்கள். நான் உங்களுடன் சுவனத்தில் இருக்கவேண்டும்! என்றேன். இது தவிர வேறு ஏதேனும் உண்டா? என்றார்கள். அதுமட்டும்தான்! என்றேன். (நீ விரும்புவதை பெறவேண்டுமானால்) நீ (அல்லாஹ்வுக்கு) அதிகமாக ஸஜ்தா செய்து (அவனைத் தொழுது) எனக்கு உதவி செய்வீராக! என்றார்கள். (நூல்: முஸ்லிம் 754)

அதிகமான தொழுகைகளுடனும் நல்லறங்களுடனும் சென்றால்தான் நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் இணைய முடியும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிகிறோம். அல்லாஹ்வின் பெருங்கருணையால் நன்மைகளை அளவின்றி பெற்றுத் தரும் புனித ரமளான் மாதம் நம்மை வந்தடைந்து விட்டது. மறுமை அறுவடைக்கு பயிரிடும் காலம் கனிந்துவிட்டது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! என்பார்கள். அல்லாஹ்வுக்கு முன் நமது அடிமைத் துவத்தையும் இயலாமையையும் நிரூபிக்கும் மாதம் வந்துவிட்டது. ரமளானில் ஒவ்வொரு இரவும் நரகவிடுதலை அளிக்கப்படுகிறது! பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன! அளவற்ற கூலியை அல்லாஹ் வழங்குகிறான். அதனை பெற்றுக் கொள்ள நாம் முயல்வதுதான் ரமளானில் நாம் செய்யவேண்டிய மிக முக்கியப்பணி! அதிகமான நல்லறங்களுடன் அல்லாஹ்விடம் சென்றால் -இன்ஷா அல்லாஹ்- நபிகளாருடன் சுவனத்தில், ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் இருக்கும் பாக்கியத்தைத் தருவான். முயற்சிப்போம்! அல்லாஹ் அருள் புரிவானாக!.

ரமளானின் நல்லறங்கள்:

நோன்பு, இரவுத் தொழுகை, அல்குர்ஆன் ஓதுதல், உம்ரா செய்தல், தர்மம் செய்தல், நோன்பு திறக்க ஏற்பாடுகள் செய்தல், துஆ, லைலத்துல் கத்ர் (இறுதிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகள்), இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல், ஸதகத்துல் ஃபித்ர், பெருநாள் தொழுகை, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள் இன்னும் ஏனைய நல்லறங்கள்!

 

நன்றி: "அல்இர்ஷாத்" வெளியீடூ-2, இஸ்லாமிய அழைப்பகம், ஷாரஃ ஸப்யீன், ஜித்தா

இவ்வெளியீடு பற்றி தங்களின் கருத்துகளை alershad@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவும்