Index |Subscribe mailing list | Help | E-mail us

கிராஃபிக்ஸ் கலைஞர்களும் ஷைத்தானின் திருவிளையாடல்களும்

முஹம்மது மஸாஹிம்

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - 'அல்ஹம்துலில்லாஹ்'

இன்றய உலகில் - மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் துறைகளில், கம்ப்யூட்டர் துறையானது முதலிடத்தை வகிக்கின்றது. இறைவன் வடிவமைத்த மூளையைக் கொண்டு, மனிதன் அறிவியல் ரீதியாக பல அரிய சாதனைகளையும், மாபெரும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திட இந்த கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சியே காரணமென்றால் - அது மிகையாகாது.

அத்தகைய கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சியானது - ஆரோக்கியமான பல நல்ல விளைவுகளைக் கொடுத்த போதிலும், சில நேரங்களில் - மனிதனை தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லக்கூடிய எளிய பாதையாகவும், வரம்பு மீறச் செய்யும் ஷைத்தானின் நவீன ஆயுதமாகவும் அமைந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

எனவே, இன்றைய யுகத்தின் அவசியமறிந்து - நம் இளைய சந்ததியினரை கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளில் ஊக்கப்படுத்த வேண்டிய அதே நேரம், உலகின் பண்பாடுமிக்க நாகரீகத்துக்கு அஸ்திவாரமாய் திகழும், இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் நெறிப்படுத்த வேண்டியதும் அவசியமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்தக் கட்டுரையினை வரைகின்றேன்.

இந்தக் கட்டுரையினை வாசிக்கின்ற வாச நெஞ்சங்கள், நான் - இஸ்லாத்தை காரணம் காட்டி கிராஃபிக்ஸ் துறையின் வளர்ச்சியை கண்டிக்கும், ஒரு பிற்போக்கு சிந்தனையாளன் என கருதாது, இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்டதாக எமது கிராஃபிக்ஸ் காட்சிகள் அமையவேண்டுமென்ற எனது ஆதங்கத்திலுள்ள உண்மைகளைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

நான் சொல்ல வந்த கருத்துக்களை தெளிவாகவும், முழுமையாகவும் உங்களிடம் சமர்ப்பிக்க அல்லாஹ்வின் உதவியை வேண்டியவனாக என் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன்.

ஆம்.. இன்றய கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சியில், கட்டுப்பாடற்று வளர்ந்து வரும் ஒரு உப துறைதான் - கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் துறையாகும். கிராஃபிக்ஸ் துறையினைப் பயன்படுத்தி, மனித உயர்வுக்கு தேவையான எத்தனையோ நல்ல பல காரியங்களை ஆற்ற முடியும். இருந்தபோதிலும், இன்று இந்த கிராஃபிக்ஸ் துறையின் பயன்பாடுகள் அழைத்துச் செல்லும் பாதை - கண்களைத் திறந்து கொண்டே சாக்கடை குழியை நோக்கி நடப்பது போல அமைந்திருக்கிறது.


கிராஃபிக்ஸ் மூலம், கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, வக்கிரமான - ஆபாசமான சிந்தனைகளை வடிகட்டி - சினிமாக்கள் என்ற பெயரில் அரங்கேற்றிக் கொண்டிருப்பதையும், அனிமேஷன்கள் என்ற பெயரில் அசிங்கமான, அருவருக்கத்தக்க காட்சிகளையெல்லாம் இன்டர்நெட்டில் பிரபல்யப்படுத்திக் கொண்டிருப்பதையும் இன்று சர்வ சாதாரணமாக காணலாம்.

எந்தளவுக்கென்றால், மழலை மொழி பேசும் பிஞ்சு பாலகர்களின் உருவங்களைப் பயன்படுத்தி கூட சிகரட் குடிப்பது போல, தண்ணியடிப்பது போல, வேறுவிதமான விவஸ்தை கெட்ட காரியங்களில் ஈடுபடுவது போன்றெல்லாம் கிராஃபிக்ஸ் அமைக்கப்பட்டு இணைய தளம் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக ஜோக், ஃபன் என்ற பெயரில் தாராளமாகப் பரிமாறப்படுகின்றன.

 
அதேபோல், அரசியல்வாதிகள் தொடக்கம் - சாதாரண நபர்கள் வரை, விகாரப்படுத்தப்பட்ட தோற்றங்களிலும், நிர்வாண காட்சிகளாகவும் கம்ப்யூட்டர் மூலம் கிராஃபிக்ஸ் சில்மிஷங்கள் பண்ணி வெளியிடப்படுகின்றன.

இன்னும் சொல்லப் போனால் - நவீன யுகத்தின் சவால்களை எதிர் கொண்டு, அறிவு பூர்வமாக எதற்கும் விளக்கமளிக்கும், இஸ்லாத்தின் பிரமாண்டமான வளர்ச்சியைக் கண்டு மனம் சகிக்காத இஸ்லாத்திற்கு எதிரான நாசகார சக்திகள் கூட, இஸ்லாம் பற்றிய அவதூறுகளை பரப்பிடும் விதமாக கேலிக் கார்ட்டூன்களை அமைக்க, இந்த கிராஃபிக்ஸ் துறையினையே அதிகம் துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

இவ்வாறு சொல்லிக் கொண்டே போனால் - இந்த கிராஃபிக்ஸ் துறையினை பயன்படுத்தி பண்ணப்படுகின்ற அடாவடித்தனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இருந்தபோதிலும், நான் இங்கே பிரதானமாக - ஒரேயொரு உதாரணத்தை மட்டும் எடுத்து, அதில் ஷைத்தானின் ஊருடுவல் எவ்வாறு இருக்கிறது என்பதையே இந்தக் கட்டுரையில் அலச இருக்கிறேன்.

அதாவது, கணினி மூலமாக - இன்று வெகு சுலமாக செய்து கொள்ளக்கூடிய ஒரு கிராஃபிக்ஸ் வேலைதான், உருவங்களின் தலையினை மாற்றுவது. கடந்த காலங்களில், ஒல்லியான ஒரு மனிதனின் தலையை கட்டுமஸ்த்தான உடல்வாகுள்ள ஒரு மனிதனின் உடம்பில் பொருத்துவது, ஆண்களின் தலையினை பெண்ணுடலிலும் பெண்களுடைய தலையை ஆண் உடலிலும் பொருத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையில்லாத கிராஃபிக்ஸ் கலைஞர்கள் - இன்று கொஞ்சம் முன்னேறி (?) மாட்டின் தலையை பூனையில் பொருத்துவது, நாயின் தலையை கிளியில் பொருத்துவது, ஆரஞ்சு பழத்தை தவளை போன்று வடிவமைப்பதென தங்களது அட்டகாசங்களுக்கு - அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதனைப் பார்த்து ரசிக்கின்ற நம்மவர்களும் - ஷைத்தானின் சூழ்ச்சி தெரியாது, அடடே பிரமாதமா வந்திருக்கே.. என சபாஷ் போடுவதையும் நாம் காணலாம். ஏதோ பார்த்தார்கள் - கிறுக்குப் பயல்கள்.. என நினைச்சிக்கிட்டு அவங்கவங்க வேலையை பார்க்க போயிருந்தால் ஓ.கே.. ஏன் இத மாதிரி நாங்களும் கிராஃபிக்ஸ் பண்ணக் கூடாதென நினைத்து - இந்த தலைமாற்றுகின்ற விளையாட்டில இறங்கி, தங்களது பெயர்களையும் பிரபல்யம் செய்து கொள்ள சில முஸ்லிம் சகோதரர்களும் கூட ஆர்வம் காட்டுவதாலேயே - கிராஃபிக்ஸ் கலைஞர்களும் - ஷைத்தானின் திருவிளையாடல்களும் என்ற இந்தக் கட்டுரையும் அவசியமாகின்றது.

ஆம்.. அல்லாஹ் தனது அல்குர்ஆனில் ஷைத்தானின் இத்தகைய திருவிளையாடல்கள் பற்றி மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருப்பதோடு, ஷைத்தான் ஏற்படுத்தும் வீணான எண்ணங்களைப் பின்பற்றி அல்லாஹ்வுடைய படைப்புகளின் வடிவங்களை மாற்றுபவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான் என்றும் தெளிவுபடுத்தி இருப்பதைப் பாருங்கள்.

அல்லாஹ், அவனை (ஷைத்தானை) சபித்தான். 'உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்' என்றும்,


'இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன். அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன். (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்' என்றும் ஷைத்தான் கூறினான். எனவே, எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.


ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான். மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.


இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும். அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.
(அல்குர்ஆன் - 4:118-121)


ஷைத்தானைப் பொறுத்தவரை - மனிதனை எந்த எந்தக் கோணங்களில் இருந்தெல்லாம் வழிகெடுக்க முடியுமோ, அதற்குரிய அனைத்து வழிகளையும் கையாளுவதற்காக இறுதிநாள் வரை அவகாசம் அளிக்கப்பட்டவனாகவே உலகத்திற்கு விரட்டியடிக்கப்பட்டான். இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.


"(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக" என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.

(அதற்கு அல்லாஹ்) "நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்" என்று கூறினான்.

(அதற்கு இப்லீஸ்) "நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்" என்று கூறினான்.

"பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன். ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்" (என்றும் கூறினான்).

அதற்கு இறைவன், "நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 7:14-18)


மேலுமொரு இடத்தில்,


இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய். உன்னுடைய குதிரைப் படையையும் காலாட்படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள், அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!' (என்றும் அல்லாஹ் கூறினான்) ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.

நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை' (என்றும் அல்லாஹ் கூறினான்;; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.
(அல்குர்ஆன் : 17:64-65)

என்றும் குறிப்பிடுவதன் மூலமாக, ஷைத்தானைப் பற்றி - அவன் மனிதர்களை எவ்வாறெல்லாம் வழிகெடுக்கச் சக்தி பெற்றிருக்கிறான் என்பது பற்றி, அவ்வாறு வழிகெடுக்கப் படக் கூடியவர்கள் யார்..? அவனது வழிகேட்டிலிருந்து பாதுகாப்பு பெறக் கூடியவர்கள் யார்..? என்பது பற்றியெல்லாம் தெளிவாக அல்லாஹ் விளக்கிவிட்டான்.


படைத்தல் மற்றும் உருவமளித்தல் போன்ற செயற்பாடுகள் - அல்லாஹ்வுக்கு மாத்திரமே சொந்தமான அவனது அதிகாரத்தில் உள்ள விடயங்களாகும். அல்லாஹ்வுடைய பண்புகளைப் பற்றி தெளிவுபடுத்தும் அல்குர்ஆன் வசனமொன்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.


அவன்தான் அல்லாஹ் - படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன். ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன் : 59:24)

அதேபோல் இன்னுமொரு வசனத்தில் - வானம், பூமி போன்றவற்றை அதற்கேற்ற ஒழுங்குடன் படைத்திருப்பது பற்றியும், மனிதர்களை உருவாக்கி - அவர்களின் உருவங்களை அழகாக்கி இருப்பது பற்றியும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.

வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான். அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான். அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது. (அல்குர்ஆன் : 64:3)

மேலும், அல்லாஹ் - யாவரையும் மிகைத்த தனது பிரமாண்டமான அறிவு கொண்டு, ஒரு படைப்பு எந்த தோற்றத்தில் அமைந்திருப்பது மிகச் சிறந்ததென திட்டமிட்டு அவன் விரும்பிய தோற்றத்திலேயே ஒவ்வொரு படைப்புக்களையும் படைக்கிறான் என்பதற்கு மனிதனை படைக்கும் விதம் பற்றி சொல்கின்ற பின்வரும் வசனம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:6)

எனவே, ஒவ்வொரு பொருளும் - ஒவ்வொரு உயிரினமும் இவ்வாறு உருவம் கொண்டிருப்பதுதான் மிகப் பொருத்தமானதென - அல்லாஹ் அவனது சூழ்ந்த ஞானத்தைக் கொண்டு நிர்ணயித்திருக்கும் விதிகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை கிராஃபிக்ஸ் என்ற பெயரில் நம் கையில் எடுத்துக் கொள்வது - நிச்சயமாக அல்லாஹ்வின் கோபத்தை பெற்றுத் தரக் கூடிய ஒரு செயலே ஆகும்.

அதுமட்டுமன்றி - மனித மனங்களில், அல்லாஹ்வைப் போன்று எங்களாலும் அழகிய உருவங்களை வடிவமைக்க முடியுமென்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, படைப்பில் மாறுதல் செய்வதன் மூலம் படைத்தவனின் இயற்கை நியதிகளுக்கு மாற்றம் செய்ய வைத்து, எங்களையும் நரகத்திற்கு கொண்டு சேர்க்கும் ஷைத்தானின் நவீன யுக சூழ்ச்சிகளில் இந்த கிராஃபிக்ஸ் ஜிகினா வேலைகளும் ஒன்றாகும். இதனையே மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில், அல்லாஹ்வின் படைப்புகளுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன் என ஷைத்தான் கூறுவதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.


அதேநேரம் - வெறுமனே, கிராஃபிக்ஸ் வேலைகளால் மட்டும் அல்லாஹ்வின் படைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதை மாத்திரமல்லாது, ஆண் - பெண் பால்மாற்று சிகிச்சைகள் போன்ற இயற்கை அமைப்பின் யதார்த்த நிலைகளை மாற்றுகின்ற செயல்கள் அனைத்தையும், மேற்கண்ட வசனத்தின் துணை கொண்டு ஆராயும்போது - ஷைத்தானின் சாகசங்களே என்று புரிந்து கொள்ள முடியும்.



எதிர்பாராத விபத்தின் மூலம் அல்லது பிறவியிலேயே தாறுமாறாக இருக்கும் உறுப்பொன்றை சரி செய்வதற்கு இஸ்லாத்தில் எந்த தடையுமில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மேலும், அல்லாஹ் நாடினால் - தென்னை மரத்தில் மாங்காய் காக்க வைப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. அதேபோல், எல்லாவற்றையுமே ஒரு ஒழுங்கில் படைத்திருப்பதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

ஒரு உதாரணத்திற்கு, தென்னை மரம் - இஸ்ட்டப்பட்டா தேங்காயும், இஸ்ட்டப்பட்டா மாங்காயும், இஸ்ட்டப்பட்டா வாழைக்காயும் என ஒரு ஒழுங்கில்லாமல் காய்க்குது. அதேபோல், பாவக்காய் மரத்தை வைத்தால், ரெண்டு நாளைக்கு பாவக்காயும், மூணு நாளைக்கு மிளகாயும் காய்க்குது. அதேபோல், மாடு வாங்கி வந்து கட்டி வச்சா - நாய்க்குட்டி போடுது என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படியே எல்லாம் ஒரு ஒழுங்கின்றி நடந்தால், நிச்சயமாக - நமக்கெல்லாம் கிறுக்குப் பிடித்திடும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தபோதிலும், இந்த உலக மக்கள் அனைவருமே ஒருநாள் அந்த இறைவன் முன்னாடி சிரம்பணிந்து கட்டுப்பட்டு நிற்கும் நாளில் - அந்த இறைவனே சில வித்தியாசங்களை ஏற்படுத்திக் காட்டுவான். ஆம் அவற்றில் ஒன்றுதான், இதுவரை இந்த உலகில் - நாக்கு என்ற ஒரு வெறும் சதைத்துண்டுக்கு பேச்சு ஆற்றல் கொடுக்கப்பட்டிருந்ததை மாற்றி எமது கை, கால்களைப் பேச வைப்பான். இது பற்றி -

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;. அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும். அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (அல்குர்ஆன் - 36:65)

எனவே, அல்லாஹ் விரும்பினால், அவனால் நியதிகளை மாற்ற முடியும். ஆனால், மனிதன் வரம்பு மீறி - அல்லாஹ்வின் அதிகாரங்களில் விளையாடுவதை அவன் விரும்பமாட்டான்.

வெறுமனே கிராஃபிக்ஸ் மாயாஜாலங்களால் கற்பனை உருவங்களை காட்சிகளாக்கி வௌரம் தெரியாத சின்னக் குழந்தைகளுக்கு வேணும்ணா விளையாட்டுக் காட்டலாம். ஆனாலும், உலகின் அத்தனை அறிவுஜீவிகளையும் ஒன்று திரட்டினாலும் - மனிதனைப் போன்ற ஒரு பகுத்தறிவுள்ள ஜீவனை மாத்திரமல்ல ஆகக்குறைந்தது, சுயமாக சிந்தித்து இயங்கக் கூடிய ஒரேயொரு "" யினை கூட படைத்திட முடியவே முடியாதென்பது திண்ணம். அதையும் கூட அல்லாஹ் தனது அல்குர்ஆனில் - அல்லாஹ்வையன்றி கடவுளாக வணங்குபவைகளின் கையாலாகாத தனத்தை விளக்குகையில் தெளிவுபடுத்திவிட்டான்.

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து (ஒரு ஈ) ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால், அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பவஹீனர்களே. (அல்குர்ஆன் - 22:73)

இந்த கட்டுரையில், இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். அதாவது, நம் இளைஞர்களில் சிலர் தங்களது அறியாமையால், ஏதோ - இஸ்லாத்தின் பக்கம் மக்களை கவரப் போவதாக நினைத்துக் கொண்டு - மனித சாயலில் கழுதை போன்றோ, குரங்கைப் போன்றோ கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து, 'இவர் அல்லாஹ் விரும்பாத - இந்த கெட்ட காரியத்தில் ஈடுபட்டதால், இவரை அல்லாஹ் இப்படி உருமாற்றிவிட்டான்' என்று இணையத் தளங்களில் பிரசுரித்து மக்கள் மத்தியில் ஒரு புரளியைக் கிளப்பிவிடுகின்றார்கள்.

இத்தகைய வதந்திகள் மூலம் - உண்மை எது..? பொய் எது..? என மக்கள் குளம்பி போய்விடுகின்றார்கள். சில வேளை, இது பொய்யான தகவலே என நிறூபிக்கப்படும்போது, அது பற்றி மாற்றுமத சகோதரர்கள் - இஸ்லாத்தை கேலியும், கிண்டலும் செய்ய இந்த கிராஃபிக்ஸ் கிறுக்கனே காரணமாகிவிடுகின்றான்.

மனிதர்கள் வரம்புமீறும்போது - அவர்களுக்கு இவ்வுலகிலேயே தண்டணை கொடுத்து அதனை பின்தோன்றும் சமுதாயத்தினருக்கு படிப்பினையாக்கிட அவர்களை உருமாற்றுவது அல்லாஹ்வால் முடியாத காரியம் அல்ல. இவ்வாறு உருமாற்றப்பட்டவர்களின் வரலாறுகளை அல்குர்ஆனில் காணலாம்.

"அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்;; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் - 5:60)

ஆனாலும், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி - நாம் செய்யும் கிராஃபிக்ஸ்களை பிரபல்யப்படுத்துவது எந்த வகையில் நியாயம்..? இதற்காக, நாளை மறுமையில் அல்லாஹ்வின் கடுமையான கேள்விகணக்கின்போது, நாம் என்ன பதிலைச் சொல்ல முடியும்..?

அதேபோல் - இன்னும் சிலரோ அல்லாஹ், முஹம்மது, லாயிலாக இல்லல்லாஹ் போன்ற வசனங்கள் இலையிலோ மரத்திலோ, மேகத்திலோ - இயற்கையாகவே தோற்றமளிப்பது போல மிக நேர்த்தியாக கிராபிக்ஸ் பண்ணி இணையத் தளங்களில் வெளியிட்டு, 'பார்த்தீர்களா..? - இது கூட அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளின் வெளிப்பாடுதான்' எனக் கூறி, மக்களை ஏமாளிகளாக்குவதோடு மட்டுமன்றி - அல்லாஹ்வின் மீதும் பொய்க்கற்பனை புனைகின்ற மாபெரும் பாவத்தை செய்கின்றார்கள். இவ்வாறு அல்லாஹ் செய்யாத ஒன்றை - செய்ததாக பொய் சொல்பவனைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதைப் பாருங்கள்.

அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக் காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (அல்குர்ஆன் - 6:21)

இவ்வாறான சில அடையாளங்கள் - உண்மைகளாக கூட இருக்கலாம். ஆனாலும், நன்கு தெரிந்து கொண்டே நமது கற்பனையை கிராஃபிக்ஸ் ஆக்கி - அல்லாஹ் செய்ததாக சொல்லி மக்களை நம்பவைக்க வேண்டியதன் அவசியம் என்ன..?

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்;. உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:42)

இஸ்லாத்தை பரப்புவதற்காக, கிராஃபிக்ஸ் பண்ணுகிறோம் என்ற இதுபோன்ற காரியங்களால், நாம் பாவத்தை சம்பாதித்துக் கொள்வதற்கான எந்த அவசியமும் இல்லாமல் அல்லாஹ்வே மிகத் தெட்டத் தெளிவாக அவனது அத்தாட்சிகளை இப் பிரபஞ்சம் எங்கும் பரவச் செய்திருக்கிறான்.

அல்லாஹ் - எத்தனை அற்புதமான படைப்பாளன். அவனது ரம்மியமான படைப்பின் சௌந்தரியங்களை வாழ்நாள் முழுதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்..

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் - 95:4)

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை, நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். (அல்குர்ஆன் - 37:6)

வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன். (அல்குர்ஆன் - 25:61)

ஒரு திட்டமிட்ட அடிப்படையில், கட்டுக்கோப்பாக அனைத்தையும் மிக அழகாகவே படைத்திருக்கும் அந்த இறைவனின் அத்தாட்சிகளைப் பற்றி சிந்தனை செய்வோரால் தெளிவாகவே உணர முடியும் என்பதற்கு கீழ் வரும் இந்த வசனங்கள் நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும்.

அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அதை;துள்ளோம். மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.

(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
(அல்குர்ஆன் - 50:6-8)

அவனது படைப்புக்களில் அழகையும், அதிசயங்களையும்தான் பார்த்திட முடியுமே தவிர, எந்தவொரு கோணலையும் குறைகளையும் நாம் பார்க்கவே முடியாது. அப்படியானால், 'கைகால் இல்லாத, கண் பார்வையற்ற, வாய்பேசமுடியாத, இதுபோன்ற உடல் ஊனமுற்றவர்கள் பலர் நம் மத்தியில் இருக்கிறார்களே.. அவர்களைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்..? ' என என்னிடம் சிலர் கேட்கலாம்.

ஆம்.. அவர்கள் எல்லாம், எமக்கு உதாரணங்கள். அல்லாஹ்வினால், இப்படியும் மனிதர்களைப் படைக்க முடியும்.. அப்படிப் படைக்காமல், அழகிய முறையில் படைத்தமைக்காக மனிதன் நன்றி செலுத்துகின்றானா..? என பரீட்சிப்பதற்காகவும், இத்தகைய ஊனமுற்றவர்களுடன் - நாம் எந்தளவு அன்பாக நடந்துகொள்கின்றோம் என்பதை சோதிப்பதற்காகவும் இருக்கலாம்.

ஒரு சகோதரர் என்னிடம் கூறிய சம்பவத்தை - இந்த இடத்தில் நினைவுறுத்துவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

அவர் ஒரு மனிதரை சந்தித்து இருக்கிறார். அந்த மனிதரின் கைகால்கள் ஊனமுற்று, பார்க்கவே மிகவும் பரிதாபமாக தோன்றிய அந்த மனிதர் சொன்னாராம் - அல்லாஹ் எனக்குப் புரிந்த அருளுக்காக அவனுக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் நன்றி செலுத்தலாம் என்றாராம். இதைக் கேட்ட சகோதரருக்கு ஆச்சரியம். உடனே உங்களிடம்தான் அப்படி எதுவும் அருள்புரியப்பட்டதாக தோணவில்லையே எனக் கேட்க உடனே அம்மனிதர் சொன்னாராம் - எனக்கு மலஜலம் கழிப்பதில் எந்தக் கஸ்டமும் இல்லை. இன்றைக்கு எத்தனையோ பேர், இந்த வியாதியால் அவதிப்படுகின்றார்களே.. இது என்மீது அல்லாஹ் புரிந்த அருள் இல்லையா..? எனக்கேட்டாராமே பார்க்கலாம். (அவர் கூறிய சம்பவத்தை - எழுத்து நடையாக்கும்போது, எதாவது கூடுதல், குறைவு இருந்தால் அல்லாஹ் என்னை மன்னிக்கட்டும்)

நாம் இந்த இடத்திலே - மிக ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அல்லாஹ் எமக்கு எல்லாவற்றையுமே ஒழுங்காக தந்திருந்தும் - அவன் நம்மீது புரிந்த அருட்கொடைகளுக்காக, நம்மில் எத்தனைபேர் அவனுக்கு நன்றியுடையவர்களாக நடந்து கொள்கின்றோம்..?

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் - 16:18)

பிறந்தது முதல் புத்தி சரியில்லாதவனுக்கு - வணக்க வழிபாடுகள் கடமையல்ல. கேள்வி கணக்கும் கிடையாது. அதேபோன்று எமக்கு முன்னுதாரணங்களாக்கப்பட்ட ஊனமுற்றவர்களுக்கும், அவர்கள் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப மறுமைநாளில், அல்லாஹ்விடம் விஷேட கூலி இருக்கும் (அல்லாஹ் நன்கறிந்தவன்). ஏனெனில், அல்லாஹ் யாருக்கும் அநியாயம் செய்யாதவன்.

அதேநேரம், வெளித்தோற்றத்தில் தெரிகின்ற ஊனங்களை சுட்டிக்காட்டியோ அல்லது அலி என்பதற்காக கேலி பண்ணுவதையோ நாம் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். காரணம், அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பது மட்டுமன்றி, அல்லாஹ்வின் படைப்புக்களை குறை சொல்வது, அந்த படைப்பினை சிருஷ்டித்தவனை குறை சொல்வது போன்ற ஒரு செயலாகும்.

எது எப்படியோ, பொதுவான அடிப்படையில் - அல்லாஹ்வின் எந்தவொரு படைப்பும் மிக அற்புதமாகவும், ஆழ்ந்த திட்டமிடலுடனும் குறைகளின்றி படைக்கப்பட்டிருக்கின்றன என்பதே யதார்த்தமாகும்.

இறுதியாக, ஒரேயொரு விடயத்தை மட்டும் சுட்டிக்காட்டி - இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.

அதாவது, நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல - ஆயிரம்தான் கிராஃபிக்ஸ் வின்னாதி வின்னர்களாக இருந்தாலும், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு நிகராக எவராலும் எதையுமே உருவாக்கிட முடியவே முடியாதென்பதற்கு, மனித படைப்பிலிருந்தே ஒரு எளிதான உதாரணத்தை சொல்லலாம் என நினைக்கிறேன்.

ஆம்.. இன்றைக்கு, உலகின் சனத்தொகை சராசரியாக 600 கோடி ஆகும். இந்த 600 கோடி மக்களினதும் கைவிரல் ரேகை ஆளுக்காள் வித்தியாசப்படும். ஒருவருடைய கைவிரல் ரேகை போன்று மற்றவருடைய கைவிரல் ரேகை இருக்காது என்பது நாமறிந்த உண்மையாகும்.

என்னைப் பொறுத்தவரை, இது ஒன்றே போதிய ஆதாரமாகும் - உண்மையிலேயே அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கும், அத்தகைய அல்லாஹ்வின் படைப்பாற்றல் எத்தனை பிரமாண்டமானது என நிறூபிப்பதற்கும்.

அல்லாஹ் நம் விரல்களில் வரைந்த இத்தகைய நுணுக்கமான கிராஃபிக்ஸ்-ல் மிரண்டுபோன கம்ப்யூட்டர் விற்பன்னர்கள் - இன்று அதியுயர் பாதுகாப்பு பாஸ்வேர்ட் சிஸ்டமாக விரல்ரேகையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வை விட கிராஃபிக்ஸ் கலைஞர்கள் உண்டா என்ன..? உலகின் 600 கோடி மக்களுமே ஏதோ ஒரு வகையில் வித்தியாசமான முக சாயலைக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் ஒரு யூகத்தின் அடிப்படையில் - 'ஒரு மனிதரின் முக சாயலில் ஏழு பேர் உலகில் இருப்பார்கள்' என்று ஒரே தோற்றத்தைக் கொண்ட சில இரட்டையர்களைப் பார்க்கும்போது கூறுவார்கள். ஆனாலும், உண்மையில் நுணுக்கமாக அவதானித்தால் வித்தியாசங்களை காணலாம்.

சரி - ஒரு பேச்சுக்கு ஒரே சாயலில் 6 மனிதர்கள் (இலகுவாக கணக்கிட வசதி கருதி 6 என்று எடுக்கிறேன்) இருப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோமே. அப்பவும் இந்த 100 கோடி வித்தியாசமான முக சாயலை வடிவமைத்த கிராஃபிக்ஸ் கலைஞன் யார்..? உலகில் உள்ள எவ்வளவு பெரிய கொம்பு வச்ச - கிராஃபிக்ஸ் கலைஞனாக இருக்கட்டும். 100 கோடி வித்தியாசமான முக சாயலை வடிவமைத்துக் காட்டட்டுமே பார்க்கலாம்..

எனவே, ஆட்டின் தலையை மாட்டில் பொருத்துவது.. கழுதையை கரடியாக வடிவமைப்பது போன்ற செயல்களால், தாங்களும் ஏதோ படைப்பாளிகளைப் போல குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடற விளையாட்டையெல்லாம் - அல்லாஹ் யார்..? அவனது வல்லமை என்ன..? அவனது கட்டளைக்கு - நாம் எவ்வாறு அடிபணிய வேண்டுமென்பதையெல்லாம் அறியாதவர்கள் வேண்டுமானால் செய்துவிட்டுப் போகட்டும்.

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ் படிந்து, அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற வழியில் - நடக்க வேண்டிய முஸ்லிம்களாகிய நாம், வீணான கிராஃபிக்ஸ் வடிவமைப்புகளில் ஈடுபட்டு எமது கால நேரங்களையும் வீணடிக்காது, ஷைத்தானின் நவீன சூழ்ச்சிகளிலிருந்து விடுபட அல்லாஹ் எங்களுக்கு உதவி புரிவானாக.

கடந்த காலங்களில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறுகளுக்காக - அல்லாஹ் நம்மை மன்னித்து, பயன்தரும் கல்வியைக் கொண்டு நேரான வழியில் நடந்திட அருள்புரிந்து, ஈருல வாழ்க்கையையும் சிறப்பாக்கி வைப்பானாக.

- முஹம்மது மஸாஹிம்
     22.05.2006