Index |Subscribe mailing list | Help | E-mail us

வளைகுடா உழைப்பும், ஊதியமும் - ஓர் கண்ணோட்டம்!

- அபூ சல்மா B.E., M.B.A.

 

துபாய் மற்றும் யு.ஏ.இ - காஸ்ட் ஆஃப் லிவிங்

வளைகுடா நாடுகளில் அதிக ஊதியம் மற்றும் சுதந்திரமான சமுதாய வாழ்க்கை நிலை போன்ற காரணங்களுக்காக இங்கு வேலைபார்க்க ஆசிய மக்கள் விரும்புகிறார்கள். இஸ்லாமியக் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் பொருளாதாரம் மற்றும் சமுதாயச் சூழல் மாறிக்கொண்டிருக்கின்றது. இதுபோன்ற நிலையில் வளைகுடா நாடுகளில் நம்முடைய உழைப்பு, ஊதியம் மற்றும் வசிப்பதற்காக ஆகும் செலவுகள் ஆகியவற்றை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

துபாய் ஐக்கிய அரபு குடியரசு நாளுக்கு நாள் வாழிடச் செலவுகள் (
cost of living) அதிகரித்து வருவதால், அதிக சம்பளம் வாங்கியும் பயன் இல்லை என்ற அலுப்புணர்வு வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்போரிடம் நிலவ ஆரம்பித்துள்ளது.

வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சிலின், மனித ஆற்றல் குறித்த ஆய்வறிக்கையில் கீழ்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் காஸ்ட் ஆப் லிவிங் 28 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு 15 சதவீதமாகத்தான் உள்ளது.

இதுகுறித்து வேலை வாய்ப்பு மார்க்கெட் ஆய்வாளர் யோகவ் சிராஜ் கூறுகையில், நாளுக்கு நாள் வாங்கும் சம்பளத்தை விட தேவைப்படும் செலவுகளின் தொகை அதிகமாகி வருகிறது. சம்பளத்தை விட காஸ்ட் ஆப் லிவிங் 13 சதவீதம் அதிகமாக உள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை பார்ப்போரிடம் அதிருப்தியும், ஏமாற்றமும் நிலவுகிறது என்றார்.

மொத்தம் 20 நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. குவைத் மற்றும் கத்தாரில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு 17 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.


அதே சமயம் சவூதியில் 12 சதவீத ஊதிய உயர்வே அளிக்கப்பட்டது. ஆனால் சவூதியில் மற்ற வளைகுடா நாடுகளை ஒப்பிடும் போது காஸ்ட் ஆப் லிவிங் குறைவாகவே உள்ளது. அதே சமயம் வளைகுடா நாடுகளிலேயே சவூதியில்தான் குறைந்த ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், ஊதிய உயர்வு அதிகமாக இருந்தாலும் கூட ஐக்கிய அரபு எமிரேட்டில் அது குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினை காரணமாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினரில் 10 சதவீதம் பேர் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்புகின்றனர். 16 சதவீதம் பேர் வேறு நாடுகளுக்கு இடம் பெயருவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்டில் சாதாரண வேலை பார்க்கும் தொழிலாளர்கள்தான் தங்களது நிறுவனங்களுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம், இவர்கள்தான் மிகக் குறைந்த அளவிலான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்களாவும் இருக்கிறார்கள்.

தொழில்துறையில், வங்கி மற்றும் நிதித்துறையில் பணிபுரிபவர்களுக்குத்தான் ஊதியம் ஓரளவு சிறப்பாக உள்ளது. இங்கு கடந்த 12 மாதங்களில் 19.5 சதவீத ஊதிய உயர்வு தரப்பட்டுள்ளது. அடுத்த இடத்தை தகவல் தொழில்நுட்பத்துறை
(Information Technology)
(18.01)
பெறுகிறது. சட்டம் மற்றும் மருத்துவ சேவைப் பிரிவில் முறையே 10.91, 11.12 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

பணம் அதிகமாகக் கிடைக்கின்றது என்ற ஓரே எண்ணத்தில் ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக வருகிறார்கள். பொருளாதார முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்வு, மாறிவரும் சமுதாயநிலை இவையெல்லாம் பார்க்கும் பொழுது இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுக்கங்களை ஒட்டி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பது சிரமமான ஒன்றாகிவிட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் வாழ்க்கையில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுக்கங்களை கடைபிடித்து நடக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!.
 

படியுங்கள் பரப்புங்கள் : "சுவனப்பாதை" மாதஇதழ், - வெளியீடு: ஜித்தா, ஸனாயிய்யா, சவுதி அரேபியா