Index |Subscribe mailing list | Help | E-mail us

இணையத்தில் இஸ்லாம் - ஒரு பார்வை

முஹம்மது மஸாஹிம்

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - 'அல்ஹம்துலில்லாஹ்'

"இணையத்தில் இஸ்லாம் - ஒரு பார்வை" என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் இச் சிறிய நூலானது, இணையத்தில் உலா வரக்கூடிய - எமது முஸ்லிம் சகோதரர்கள், புதிய முஸ்லிம்கள், இஸ்லாத்தினை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள ஆர்வமுள்ள மாற்றுமத அன்பர்கள் போன்ற அனைவரும் அறிந்திருக்க வேண்டிய சில பயனுள்ள குறிப்புக்களை உள்ளடக்கியதாகும்.

உலகளாவிய தொடர்பு சாதனமாக வியாபித்துள்ள, இணைய வசதியானது அறிவியல் ரீதியாக பல நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், சில விஷமிகளால் துஷ்பிரயோகங்களும் செய்யப்படுகின்றன.

அவ்வாறான நாசகார வேலைகளில் ஈடுபடுவோர், இஸ்லாத்தை அதன் புனித தன்மையிலிருந்து திரிபுபடுத்த எவ்வாறெல்லாம் முயற்சிக்கின்றார்கள்..? அம் முயற்சிகள் நம்மைப் பாதிக்காதவாறு எவ்வாறு நாம் நடந்து கொள்ள முடியும்..? போன்றவற்றை ஆய்வு செய்வதே இச் சிறிய நூலின் நோக்கமாகும்.

எனவே - இந் நூலை நீங்கள், பிரத்யேக கவனமெடுத்துப் படிப்பதோடு, இங்கே சொல்லப்படுகின்ற விஷயங்கள் தொடர்பாக தாங்களும் விழிப்புணர்வுடன் இருந்து, அடுத்தவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உங்களை அன்புடன் வேண்டுகின்றேன்..

எனது குறைந்த அறிவினைக் கொண்டு, நான் தொகுத்த இச் சிறு நூலில் என்னையறியாமல் வசன அமைப்பு ரீதியாகவோ, கம்ப்யூட்டர் தட்டச்சு ரீதியாகவோ, இன்னும் பிற வகையிலோ ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருப்பின் அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்; என்னை மன்னிக்க வேண்டும்.

நான் சொல்லவந்த கருத்துக்களை தெளிவாகவும், முழுமையாகவும் உங்களிடம் சமர்ப்பிக்க அல்லாஹ்வின் உதவியை வேண்டியவனாக, இந்நூலாக்க முயற்சியில் உதவிய சகோதரர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். வஸ்ஸலாம்.

(குறையிருப்பின் எனக்கு எழுதுங்கள்..நிறைவிருப்பின் அல்லாஹ்வை புகழுங்கள்..)

இவன்,
முஹம்மது மஸாஹிம்



ஆம்..

இன்றய நவீன யுகத்தில் - மனிதனின் வாழ்க்கையில் மிகப் பிரதான இடத்தை தொடர்பு சாதனங்கள் வகிக்கின்றன. அந்த வகையில், இன்று மக்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொடர்பு சாதனங்களான தொலைக்காட்சி (T.V), ரேடியோ, பத்திரிகை, செல்போன் (Cell Phone), போன்றவற்றுடன் இணையடும் கூட அன்றாட வாழ்க்கையின் தொடர்பு சாதனங்களில் ஒன்றாகிவிட்டது.


இருந்தபோதிலும், இத்தகைய தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் தங்களது விஷயங்களைப் பரிமாறிக் கொள்பவர்கள் எல்லோருமே - நூற்றுக்கு நூறு சதவீதம், சரியானதும், உண்மையானதுமான தகவல்களை மாத்திரமே மக்களுக்கு வழங்குகின்றார்களா.. ? என்றால் நிச்சயமாக இல்லவே இல்லை.

எனவே, தொடர்பு சாதனங்கள் பொதுவாக நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற அதேநேரம், சில விஷமிகளின் கைப்பிடிக்குள் உட்பட்டு - மக்கள் மத்தியில் தவறான பல தகவல்களை வழங்குவதற்கும் துணை செய்யக் கூடியனவாக இருக்கின்றன என்பதே நிஜமாகும்.

அந்தவகையில், ஏனைய அனைத்துத் தொடர்பு சாதனங்களுடன் ஒப்பிடும்போது - இன்று வேகமாக வளர்ந்து வரக் கூடிய இணைய வசதியின் மூலமான துஷ்பிரயோகங்களே மிக, மிக அதிகமாக காணப்படுவதாக அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகின்றன.

காரணம், ஏனைய தொலைக்காட்சி - ரேடியோ, பத்திரிகைகள், செல்போன்கள் போன்றவற்றின் மூலமாக ஒரு தகவலினை அறிந்து கொள்கின்ற ஒருவர், (அத் தகவல் சரியா? தவறா? என்பதை அறியாவிட்டாலும் கூட) அவ் விஷயத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அதிகமான நேரத்தை செலவளித்து, அதிகமான முயற்சிகளையும் செய்யவேண்டி இருக்கின்றன. மேலும், அவ்வாறு பரப்பக் கூடிய விஷயங்கள் - மிகச் சொற்பமான நபர்களை மாத்திரம் அடைவதோடு நின்றுவிடுகின்றன.

ஆனால், இணையத்தைப் பொறுத்தவரை விஷயம் அவ்வாறல்ல..

ஒருவர் பெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்களை, ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே பல இலட்சக்கணக்கானவர்களுக்கு அனுப்பி வைக்க பல்வேறு இலகுவான வழிகளுண்டு.

அதேபோல், நாம் அனுப்பி வைக்கின்ற தகவல்களைப் பெற்றுக் கொண்ட அந்தப் பல லட்சம் ஆட்களும் - மீண்டும் அத்தகவல்களை, மென்மேலும் லட்சக்கணக்கானவர்களுக்கு குழு மின்னஞ்சல்களினூடாக (Groups mail) ஒரு சில நிமிடங்களுக்குள் அனுப்பி வைக்க முடியும்.


எனவே, இணையத்தின் மூலம், ஒரு தகவலை - அது சரியாக இருப்பினும் அல்லது பிழையாக இருப்பினும், ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே, கோடிக் கணக்கானவர்களுக்கு பரப்பிடச் செய்வது மிக எளிதாக இருப்பதனால், இணையத்தில் உலாவருகின்ற வாசக வட்டங்களாகிய நாம் - நமக்கு கிடைக்கின்ற தகவல்கள் குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இனி நாம் - எம் தலைப்பிற்கு வருவோம். அதாவது -

இன்றய யுகத்தில் - இஸ்லாத்தில் அடங்கி இருக்கும் அறிவுபூர்மான கருத்துக்களை, அது தெளிவுபடுத்தும் உண்மைத் தத்துவங்களை, மிக எளிதான வாழ்க்கை நெறிகளை உணர்ந்து, மேற்குலக நாடுகள் உட்பட உலகம் பூராவுமே, மக்கள் - கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தினை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் - இஸ்லாம் வளர்ந்து கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்துப் பிரமித்துப் போயுள்ள இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள், இஸ்லாத்தினை அதனது உண்மையான வடிவிலிருந்து திரிபு படுத்தி, மக்கள் மத்தியில் போலியான கருத்துக்களைத் திணிப்பதன் மூலம் - இஸ்லாம் பற்றியதொரு தவறான அபிப்பிராயத்தை வளர்த்துவிட சதி முயற்சிகள் பலதையும் மேற்கொள்கின்றன.

இந்த வகையில், அவ்விஷமிகளின் சதி முயற்சிகளை - அரங்கேற்றுவதில் நவீன தொடர்பு சாதனங்கள் பலதையும் பயன்படுத்தியபோதும், அவைகளிலெல்லாம் முதலிடத்தில் இணைய காணப்படுகின்றது.

ஆம்..

இவ்வாறு இணையடினூடாக இஸ்லாத்தின் மீதும், அதன் உண்மையான வடிவத்தின் மீதும் தொடுக்கப்படக் கூடிய தாக்குதல்களை பிரதானமாக 3 வகைக்குள் உள்ளடக்கலாம்.

1. இஸ்லாமியர்கள் அல்லாத - நாசகார சக்திகளின் தாக்குதல்கள்.

2. இஸ்லாத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் - முஸ்லிம் பெயர்தாங்கிகளின் தாக்குதல்கள்.

3. இஸ்லாத்தின் தூய வடிவத்தை தெரிந்து கொள்ளாத - பாமர முஸ்லிம்களின் தாக்குதல்கள்.



1. இஸ்லாமியர்கள் அல்லாத - நாசகார சக்திகளின் தாக்குதல்கள்.

இது, இஸ்லாத்தின் மீதும் அதனது வளர்ச்சியின் மீதும் - தீராத விரோதம் கொண்ட மாற்று மதத்தைச் சேர்ந்த அமைப்புக்களால், அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால், சிந்தனை ரீதியாக தொடுக்கப் படக் கூடிய தாக்குதல்களாகும்.


இவ்வாறான தாக்குதல்களுக்கு சில உதாரணங்களாக..

-  இஸ்லாத்துடன் தொடர்புடைய பெயர்களைக் கொண்டதாக, பல போலி இணையத்தளங்களை அமைத்து, அத் தளங்களினூடாக - இஸ்லாத்தை சொல்லித் தருவது போன்ற பாவனையில், இஸ்லாத்தைப் பற்றி - அல்லாஹ்வோ, அவனது தூதர்(ஸல்) அவர்களோ, தெரிவித்து இருக்காத தவறான தகவல்களை வழங்கி - மக்களை இஸ்லாத்தின் தூய வடிவத்திலிருந்து திசை திருப்புவது..

-  அல்குர்ஆனிலுள்ள விஷயங்களில், இடைச் செருகல்களைச் செய்து - அவற்றை இணையத்தளங்களில் பிரசுரிப்பதன் மூலம், மக்களை வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடிய சிந்தனைகளை தூண்டி அல்குர்ஆனின் புனிதத் தன்மையில் களங்கம் ஏற்படுத்த முனைவது..

-  நபி(ஸல்) அவர்களை குறித்து - 'முஹம்மது (ஸல்) இவர்தான்' என ஓவியமாகச் சித்தரிப்பது, வரலாற்று ஆவணமாக்குகிறோம் என்ற பெயரில் - நபி(ஸல்) அவர்கள், மற்றும் ஸஹாபாத் தோழர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை, போலியான கற்பனை நடிகர்களைக் கொண்டு நடிக்கச் செய்து, அவற்றை வீடியோக் காட்சிகளாக்கி; - மக்களிடம் தவறான எண்ணக்கருக்களை உண்டாக்குவது..

-  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிப்பது போல, இஸ்லாம் தனிமனித சுதந்திரத்தை முழுமையாகவே பறித்துவிடுவது போல, இஸ்லாமிய தண்டனைகள்; கொடூரமானவைகள் போல, இஸ்லாமிய திருமண மற்றும் விவாகரத்து முறைகள் குறைபாடுகள் உள்ளவை போல, இஸ்லாமிய சட்டங்கள் மனிதனின் வாழ்க்கைக்கும், தற்கால நடைமுறைக்கு ஒத்துவராத தீர்வுகளை முன்வைப்பது போல...

 

- ஆக மொத்தத்தில் இஸ்லாம் மனிதனுக்கேற்ற நெறியல்ல என்ற தோரணையில்

 

- தவறாக நிறுவக் கூடிய பொய்களை மக்கள் மத்தியில் திணிப்புச் செய்வது..

 

போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

2. இஸ்லாத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் - முஸ்லிம் பெயர்தாங்கிகளின் தாக்குதல்கள்.

இது, இஸ்லாத்தை அதன் தூய வடிவில் - மக்கள் மத்தியில் விளங்கவைப்பதாகக் கூறிக் கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தின் இனிமையான நெறிகளுக்கும், அதனது அறிவு பூர்வமான வழிகாட்டுதல்களுக்கும் - கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, முரண்பாடான விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்பி, இஸ்லாத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தக் கூடிய, பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருக்கக் கூடியவர்களால் - இஸ்லாத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் விதமாக தொடுக்கப்படக் கூடிய தாக்குதல்களாகும்.

இவ்வாறான தாக்குதல்களுக்கு சில உதாரணங்களாக..

-  இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி - தர்காக்களை உருவாக்கி அவ்லியாக்கள், நல்லடியார்களின் கப்றுகளை வணங்கவும், அவர்களிடம் தமது பிரார்த்தனைகளை முன்வைக்கவும் தூண்டி, அல்லாஹ் மன்னிப்பே வழங்காத ஷிர்க் எனப்படும் இணைவைப்பின் பால் மக்களை அழைத்து, வழிகெடுத்து - பணம் சம்பாதிப்பது..

-  இஸ்லாத்தில் இல்லாத - தாயத்து, மவ்லிது, கத்தம், பாத்திஹா போன்ற வீணான சடங்கு சம்பரதாயங்களை (பித்அத்) மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கி, அதன் மூலமாக சிரமமில்லாத வருவாயை, சொகுசான சாப்பாட்டு வசதிகளை, சமூக அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொள்வது..

-  யாரோ ஒரு கவிஞன், கற்பனையாளன் முட்டாள்தனமாக எழுதி வைத்த - கவிதைகளை, கட்டுக் கதைகளை, புராணங்களை - இஸ்லாத்தில் உள்ளவைகளென, மக்கள் மத்தியில் பரப்புவதோடு - அல்குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்கு தவறான விளக்கங்களை, திரிபு படுத்தப்பட்ட அர்த்தங்களை வழங்கி, மக்களின் இறை விசுவாசத்தில், மார்க்க நடவடிக்கைகளில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமில்லாத விஷக் கருத்துக்களை உட்புகுத்தி அதன் மூலம் ஆதாயம் தேடுவது..

-  அண்ணல் நபிகளாரையும், அவர் காட்டிய வழிமுறைகளையும் விட்டுவிட்டு - தாங்கள் பின்பற்றும், யாரோ ஒரு தலைவருக்கு அல்லாஹ்வின் தூதரை விட - அல்லாஹ்விடத்தில் மதிப்பு இருப்பதாகக் கூறி, அல்லது எங்களின் தலைவர் அண்ணலார் (ஸல்) அவர்களின் பிரத்யேக அன்பினைப் பெற்றிருந்த  ஏனைய இஸ்லாமிய ஆட்சித் தலைவர்கள், நன்மக்களை விட மதிப்பு வாய்ந்தவர் என வாத, பிரதிவாதங்களில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் புதிய குழப்பங்களை உண்டாக்கி அதன் மூலம் சுயநலம் தேடுவது..

-  'மத்ஹபுகள் தோன்ற அடிப்படையாய் அமைந்த நூல்களை எழுதிய இமாம்களே, தமது நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு மாற்றமாக, அல்லாஹ்வின் கட்டளை, ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இன்னதுதான் என்று தெளிவான ஆதாரம் கிடைத்து விட்டால் எமது நூல்களை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுக்கு கிடைத்த சரியானவற்றை பின்பற்றுங்கள்..' என்ற அர்த்தம்பட அழகாக சுட்டிக்காட்டி இருப்பதை கருத்தில் கொள்ளாது -

'மத்ஹப்கள் இல்லையென்றால் இஸ்லாமே கிடையாது. ஏதாவதோர் மத்ஹப் இனைப் பின்பற்றாவிட்டால் முஸ்லிமே கிடையாது..' என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, தங்களைப் போன்றே மற்ற மக்களும் ஆய்வுக் கண்ணோட்டமின்றி, எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டுமென விரும்புவது..

-  அதேபோல் - முஹம்மது (ஸல்) அவர்களுடன் தூதுத்துவம் நிறைவு பெறவில்லை, நாங்கள் பின்பற்றும் மகானும் தூதுவர்தான், அவருக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி (செய்தி) வருகின்றது.. மறைவானவைகளையும், எதிர்காலத்தையும் தீர்க்க தரிசனம் செய்யும் சக்தியுண்டு.. சில நேரங்களில் அல்லாஹ் நாடாவிட்டாலும் நாங்கள் பின்பற்றும் மகான் எங்கள் காரியங்களை வெற்றிகரமாக முடித்துத் தரப் போது மானவர் (நஊதுபில்லாஹ்) எனக் கூறி இறை அந்தஸ்த்தில் பிறருக்குப் பங்கு கொடுத்து நிரந்தர நரகத்துக்கு மக்களை அழைத்துச் செல்வது..

 

போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

3. இஸ்லாத்தின் தூய வடிவத்தை தெரிந்து கொள்ளாத - பாமர முஸ்லிம்களின் தாக்குதல்கள்.

இது இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை சரியான முறையில் அறிந்து கொள்ளாத, இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல் பெறாத, பாமர முஸ்லிம்கள் - இஸ்லாத்திற்காக தானும் எதையாவது செய்ய வேண்டுமே - என்ற அதிக ஆர்வத்தினால்,

தான் அறிந்து கொண்டுள்ள விஷயங்கள் - சரியா..? பிழையா..? என தெரியாமல் - அவைகளை மக்கள் மத்தியில் பரப்பி, (இஸ்லாத்தின் தூய வடிவத்தில் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இன்றி) தொடுக்கப்படக் கூடிய தாக்குதல்களாகும்.

இவ்வாறான தாக்குதல்களுக்கு சில உதாரணங்களாக..

-  மார்க்கத்தை சரியான முறையில் அறிந்து கொள்ளாத போலிகள், மார்க்கத்தின் உண்மையான வடிவத்தினை சிதைத்திட முயற்சிக்கும் நாசகார சக்திகள், மார்க்கத்தின் பெயரால் விடும் கட்டுக்கதைகளையும், நச்சுக் கருத்துக்களையும் வேதவாக்காக கருதி, உண்மையை தெரியாமலேயே அதனை மக்கள் மத்தியில் பரப்புவது..

-  இஸ்லாமியத் தகவல்கள் என்ற போர்வையில் - வெளிவரக் கூடிய வழிகெடுக்கும் பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், மின்னஞ்சல்கள், இணையத்தளங்களின் தகவல்கள் போன்றவற்றை ஆராய்ச்சிக் கண்ணோட்டமின்றி - மக்களிடையே பரப்புவது..

-  இசை பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை தெளிவாக தெரிந்து கொள்ளாமல், இஸ்லாமிய கீதங்கள் என்ற முத்திரையோடு அரங்கேறும் - இசையுடன் இணைந்த பாடல்கள் - பலவற்றில், அடங்கி இருக்கக் கூடிய ஷிர்க் - இணைவைப்பு, பித்அத் - மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதன செயல்கள் போன்றவைகளை இணங்கண்டு, அவைகளைப் புறக்கணிக்காமல் -

பாடகர்கள், புலவர்கள் ஏதோ இஸ்லாத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புச் செய்து, பொய்யான தகவல்களிலிருந்து, உண்மைகளை மாத்திரம் பிரித்தறிந்து - மார்க்கத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்காகவும், நிலைநாட்டுவதற்காகவும் மிகவும் சிரமம் எடுத்து, பாடல்கள் இயற்றி, இசையமைத்து இருப்பதாக நினைத்துக் கொண்டு - அப்பாடல்களை மக்களிடையே பரப்புவது.
- போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

எனவே, மேலே சுட்டிக் காட்டியிருக்கும் சில உதாரணங்களிலிருந்து, 'எவ்வாறெல்லாம் இஸ்லாத்தின் - உண்மையானதும், மிகச் சரியானதுமான தூய வடிவத்தின் மீது, தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன..' என்பது தொடர்பாக நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஆம்.. இன்றைய உலகில் - இணையடும், ஈமெயிலும், வெப் தளங்களும் - மனித வாழ்க்கையின் ஒரு சர்வசாதாரண நிகழ்வாகவும், குறைந்த கட்டணத்திலோ, அல்லது இலவசமாகவோ கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்பாகவும் ஆகிவிட்டதால், தெரிந்தோ - தெரியாமலோ, திட்டமிட்டோ - திட்டங்களின்றியோ மேற்குறிப்பிடப்பட்ட விதங்களிலான தாக்குதல்களுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் - இணைய மிகவும் எளிதான வழியாக இருக்கிறது என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

எனவே - இணையத்தில் உலா வரக் கூடிய நாம், இஸ்லாம் என்ற பெயரில், அல்லது இஸ்லாத்துடன் தொடர்புடைய தகவல்கள் என்ற போர்வையில் நடமாடும் போலிகளிலிருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே, அதற்காக பின்வருவன போன்ற சில வழிமுறைகளை நீங்கள் கையாளலாம்.

-  இஸ்லாத்துடன் தொடர்புடையதென ஏதாவது, இணையத்தளத்தை (வெப்சைட்) நீங்கள் பார்க்க நேரிட்டால் - முதலில் அந்த இணையத் தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மற்றும் மொழிநடை (உதாரணமாக : தமிழ், ஆங்கிலம்) உங்களால் தெளிவாக எதுவித குழப்பமோ, தடுமாற்றமோ இன்றி புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் அமைந்துள்ளதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

(அதே நேரம் இஸ்லாத்தினை - அதன் தூய வடிவில் எத்திவைக்க விரும்பி, புதிதாக இணையத்தளங்களை தொடங்குபவர்களும் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய, அனைவருக்கும் பரிச்சயமான மொழி நடையில் தங்களது தளங்களை அமைக்க வேண்டும்.)

-  இஸ்லாத்தினைப் பற்றி, அவ் இணையத்தளங்கள் வெளியிட்டிருக்கின்ற தகவல்களை - பொருத்தமான குர்ஆன் வசனங்கள், மற்றும் பலமான ஹதீஸ் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறார்களா? என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுங்கள்.

-  அவ் இணையத்தளங்களில் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பாக, மக்களுக்கேற்படும் சந்தேகங்களுக்கு - விளக்கமளிக்கக் கூடிய அளவுக்கு, நிபுணர் குழுவினரால் அத் தளமானது நிர்வகிக்கப் படுகின்றதா? என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட இணையத் தள நிர்வாகிகள் விடக் கூடிய சிறு சிறு பிழைகளை, உங்களுக்குத் தெரிந்த ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும்போது - அதற்குத் தகுந்த பொருத்தமான விளக்கமளித்து உண்மையைத் தெளிவு படுத்துகின்றார்களா..?, அல்லது நீங்கள் குறிப்பிட்ட சரியான கருத்தை பெருமனது கொண்டு அல்லாஹ்வுக்காக ஏற்றுக் கொள்ளாமல், தாங்கள் செய்யும் தவறுகளை (போலி கவுரவத்திற்காக) ஆதாரங்களின்றி நியாயப்படுத்த முயற்சிக்கிறார்களா? என்பதையும் பரீட்சித்துக் கொள்ளுங்கள்.

-  எந்தவொரு ஈ - மெயில், அல்லது இணையத் தளம் தொடர்பாக தங்களுக்குத் தெளிவான அறிவில்லையோ, அதனை அடுத்தவர்களுக்கு, Forward பண்ணுவதையோ (அனுப்புவதையோ), அத் தளம் பற்றி தகவல் தெரிவிப்பதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

-  இணையத்திலிருந்து - இஸ்லாம் தொடர்பான பயனுள்ள தகவல்களைத் தொகுத்து அடுத்தவர்களுக்கு அனுப்பும் போது, மிக எச்சரிக்கையாக நடந்து கொள்வதுடன் - அக் குறிப்பிட்ட தகவல்களை எந்த இணையத்திலிருந்து பெற்றுக் கொண்டீர்கள்..?, யார் எழுதிய ஆக்கம்..?, மேலதிக விபரங்களுக்கு எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும்..? போன்ற விபரங்களையும் அத் தொகுப்பில் கட்டாயம் குறிப்பிடுங்கள். அதேபோல், ஈ - மெயில் களை குழசறயசன பண்ணும் போதும் உங்களுக்குத் அக் குறிப்பிட்ட தகவலை அனுப்பி வைத்தவரின் தொடர்பு விபரங்களையும் உள்ளடக்கி அனுப்பி வையுங்கள்.

-  இஸ்லாம் என்ற பெயரில், ஏதாவதோர் தகவலை அறிந்து கொள்ளும் போது, அக் குறிப்பிட்ட தகவலின் உண்மையான நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் - அச் சந்தேகங்களை, தங்களுக்கு அறிமுகமான பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களிடமிடமிருந்து கேட்டுத் தெளிவு பெறுவதோடு - அறிஞர்களின் கருத்தும், அத் தளங்களின் கருத்தும் ஒன்றுதானா? என்பதையும் ஒப்பு நோக்கிப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

-  அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்து சுட்டிக் காட்டப்படும் விஷயங்கள் உண்மையிலேயே அப்படித்தான் அல்குர்ஆன், மற்றும் பலமான ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கின்றனவா..? என்பதை - நேரடியாக நீங்களே முடிந்தளவு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

எனவே - இஸ்லாமியர்களாக இருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, இஸ்லாம் என்ற பெயரில் நடமாடக் கூடிய போலிகளிலிருந்து எம்மையும் எம் சகோரதரர்களையும் பாதுகாக்க எம்மால் முடிந்தளவு முயற்சி எடுப்பதோடு - அதிக அக்கரையுடனும், விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும், ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் செயற்பட வேண்டும்.

எமது ஓய்வு நேரங்களை, வீண் பொழுது போக்குகளில் கழிக்காது, இஸ்லாம் பற்றிய விஷயங்களை, தகவல்களைத் தெளிவாக அறிந்து கொண்டு, இன்றய இஸ்லாமிய உலகம் எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கவும், உண்மையான இஸ்லாமிய நெறிகளுக்கேற்ப எமது வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளவும் நாம் தயாராக வேண்டும்.

அல்குர்ஆன், ஹதீஸ் கிரந்தங்களின் (மொழிபெயர்ப்புக்களை) அர்த்தம் உணர்ந்து படிப்பதிலும், மனப் பாடம் செய்வதிலும், இஸ்லாம் சார்ந்த நூல்களை, வீடீயோ காட்சிகளை, இணையத்தளங்களை அதிகமதிகம் பார்வையிடுவதிலும் எங்கள் கவனங்களைச் செலுத்தி இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தெளிவாக அறிந்து, அடுத்தவர்களுக்கும் எத்தி வைக்க வேண்டியது முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

மேலும், நாங்கள் பெற்றுக் கொள்கின்ற - இஸ்லாம் சார்ந்த எந்தவொரு விஷயத்தையும் அலசி ஆராயாமல், பொடுபோக்குடன், எவர் என்ன சொன்னாலும் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்று, அவ்விஷயத்தை சொன்னவரை தலைவராக்கி, அவரின் வார்த்தைகளை வேதவாக்காக கருதக் கூடாது.

ஏனெனில், அவர் நேர்வழியை அறியாமல் பிதற்றிக் கொண்டிருந்த விஷயங்கள் சரியானவை என்று நாம் நினைத்து, அவரது கருத்துக்களை அலட்சியமாகப் பின்பற்றினால் - இறுதியில், நாமும் அவரும் சேருமிடம் நரகமாகத்தான் இருக்கும். (அல்லாஹ் எங்களைப் பாதுகாக்க வேண்டும்) இது பற்றி அல்லாஹ் - தனது திருமறையில்..

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், 'ஆ.. கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே, இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!' என்று கூறுவார்கள்.

'எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்'என்றும் அவர்கள் கூறுவார்கள்.

'எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக' (என்பர்).
(அல்குர்ஆன் : 33:66-68)

மேலுமோர் இடத்தில் - அல்லாஹ், ஒரு பாவமான காரியம் பற்றி அதனைத் தவிர்ந்து கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டால், அப் பாவமான காரியத்தில் தொடர்ந்தும் கண்ணை மூடிக் கொண்டு ஈடுபட மாட்டார்கள்.. என்ற அர்த்தம்பட பின்வரும் வசனத்தைக் கூறுகின்றான்.

'இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)' (அல்குர்ஆன் : 25:73)

இவ் வசனத்திற்கு, சில அறிஞர்கள் : அல்லாஹ்வின் வசனங்களை ஆதாரமாக கொண்டு, யாராவது - எதையாவது கூறினால், அதனை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் - அவர்கள், அவ் வசனத்திற்கு கொடுக்கக் கூடிய விளக்கம் சரிதானா? என்ற சிந்தனையோடு நோக்க வேண்டும்.. என்ற அர்த்தத்திலும் கூட விரிவுரை செய்துள்ளார்கள்.

எனவே, எனது அறிவுக்கெட்டியவரை - இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட விரிவுரையின் அடிப்படையில் நோக்கினாலும் கூட - பொருத்தமாகவே இருப்பதாக உணர்வதால், 'அல்லாஹ்வுடைய மார்க்கம் என்ற பெயரில் உலாவும் விஷயங்களில் - நாம் மிக அக்கறையுடனும், ஆராய்ச்சி கண்ணோட்டத்துடனும் செயல்பட வேண்டுமென்பதற்கும், அவ்வாறு நடக்கத் தவறும் பட்சத்தில் அது ஒரு பெரிய குற்றமாகும்..' என்பதற்கும் மேற்குறித்த வசனங்கள் இரண்டுமே போதுமான சான்றுகளாகும் என நினைக்கின்றேன்.

எது எப்படி இருந்தாலும், எவர் என்ன சூழ்ச்சிகளைச் செய்தாலும் - இந்த இஸ்லாம் என்ற நேர்வழி அல்லாஹ்;விடமிருந்து வந்தது. அந்த அல்குர்ஆனும் அல்லாஹ்வினால் இறக்கி வைக்கப்பட்டது. அதனை அவன் இறுதிநாள் வரை பாதுகாத்திடச் சக்தியுள்ளவனாக இருக்கிறான். இது பற்றி..

'நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்;, நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்..' (அல்குர்ஆன் : 15:9)

மேலும், இன்னுமொரு இடத்தில்..

'எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்..'

'அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்;, ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்..' (அல்குர்ஆன் : 61:7-8)

எனவே - பாவத்தைப் பரப்புவதிலிருந்து பாதுகாப்பாக நடந்து கொள்வதன் மூலம், எமக்கு நாம்தான் நன்மை செய்கிறோமே தவிர - அல்லாஹ்வுக்கு உதவி செய்ய எங்களால் இயலாது. இது பற்றி, ரசூல் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

'யார் நேர்வழியின் பக்கம் அழைக்கின்றாரோ (அவரின் அழைப்பின் காரணமாக) அவரைப் பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்று அவருக்கும் (அழைத்தவருக்கும்) கிடைக்கும். (அதனால்) அவரின் நன்மையில் ஏதும் குறையாது..'

'யார் வழிகேட்டின் பக்கம் அழைக்கின்றாரோ (அவரின் அழைப்பின் காரணமாக) அவரைப் பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கும் தீமையைப் போன்று அவருக்கும் (அழைத்தவருக்கும்) கிடைக்கும். (அதனால்) அவரின் தீமையில் ஏதும் குறையாது..'

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : முஸ்லிம்

ஆம்.. இதுவரை நாம் - இஸ்லாமிய இணையத்தளங்களை, இஸ்லாம் தொடர்பான தகவல்களை, எவ்வாறு அணுக வேண்டுமென்பதைப் பற்றி அறிந்து கொண்டோம்.

அதேநேரம் - இஸ்லாத்தை அதன் தூய வடிவில், மக்கள் மத்தியில் எத்தி வைக்க ஆர்வங் கொண்டு, அப் பணியை இணையத்தளங்களினூடாகச் செய்து கொண்டிருக்கும் சகோதரர்கள், தாம் செய்கின்ற புனிதப் பணியில், வேறெந்த உள்நோக்கங்களுமின்றி - அல்லாஹ் ஒருவனின் திருப்தியை மட்டும் எதிர்பார்த்தவர்களாக - மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் - மார்க்க விஷயங்களில் தீர்ப்புச் சொல்கின்றபோது, மார்க்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கின்றபோது - எடுத்தேன்.. கவிழ்த்தேன்.. என்ற தோரணையில் தமது சொந்தக் கருத்துக்களை மக்கள் மத்தியில் அள்ளிவீசாது,

'அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு - ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.' (அல்குர்ஆன் 33:36)

என்ற எச்சரிக்கையை மனதில் கொண்டு, ஒவ்வொரு விஷயம் தொடர்பாகவும் மிகவும் நுணுக்கமான முறையில், அல்லாஹ்வின் கட்டளை, ரசூல் (ஸல்) அவர்களின் வாழ்க்கை - வழிகாட்டுதலை அலசி ஆராய்ந்து - மிகவும் பக்குவமாக, எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடிய மொழி நடையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

மேலும் - இணைய சுற்றுப்பயணிகளாகிய நாமும் கூட, இஸ்லாம் என்ற பெயரில், ஏற்கனவே இடைச் செருகல் செய்யப்பட்டவைகளை களைவதற்கு இடையில், புதிது புதிதாக தலையிடிகளை - அறிஞர் பெருமக்களுக்கு உருவாக்காமல், இதுதான் அல்லாஹ்வின் கட்டளை, ரசூல்(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதல் என்று தகுந்த ஆதாரங்களுடன் உறுதியாக அறிந்து கொண்ட விஷயங்களை மாத்திரமே மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்.

அதேபோல், இஸ்லாம் ஓர் அற்புதமான அறிவுபூர்வமான மார்க்கமாகும் - அது எமது ஈருல வெற்றிக்கும் வழிகாட்டுவதற்காக அன்றி வெறும் வீணுக்காகவும், விளையாட்டுக்காகவும் அல்லாஹ்வினால் அன்பளிப்புச் செய்யப்படவில்லை என்பதை உணர்ந்து - இனியும், இஸ்லாம் பற்றிய ஒரு ஆழமான, தெளிவான கண்ணோட்டமில்லாமல் - 'தங்களது பெயர்கள் பிரபல்யமானால் போதுமென்ற' எண்ணத்தில், தயவு செய்து, யாரும் - இணையத்தை சாதனமாகப் பயன்படுத்தி, இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் உங்களை அன்புடன் வேண்டிக் கொண்டவனாக,

என் அறிவுக்கு எட்டியவரை - நான் சுட்டிக் காட்டிய விஷயங்களில், ஏதாவது தவறிருந்தால் அதற்காக அல்லாஹ் என்னை மன்னிப்பதுடன் - அவனது நல்லருளைக் கொண்டு என்னையும் உங்களையும் அவன் நேரான வழியில் என்றென்றும் நிலை நிறுத்த வேண்டுமென்றும் அவனிடம் பிரார்த்தித்து - உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். வஸ்ஸலாம்.