Index |Subscribe mailing list | Help | E-mail us

ஜித்தா துறைமுக GCT கேம்ப்-ல் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சியின் நேரடி ரிப்போர்ட்

தொகுப்பு: நெல்லை இப்னு கலாம்ரசூல்

 

To Play video/audio without any trouble please Download Latest RealOne player

 

கடந்த 25-08-2006 (ஷஃபான் முதல்நாள் ஹிஜ்ரி 1427) வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின் "ஜித்தா துறைமுக தஃவா அழைப்பு மையத்தின்" சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாலை அமர்வு நிகழ்ச்சி ஜித்தா துறைமுகம் GCT பள்ளிவாசலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நானூறுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்க உரை நிகழ்த்திய சகோ. யூஸூஃப் மதனீ அவர்கள் ஹதீஸ்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கலந்து கொண்டோரின் கவனத்துக்கு சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தார். அவைகளில் சில.
 

 

ஹதீஸ்களின் முக்கியத்துவம்


ஸஹீஹான ஹதீஸ்களை செயல்படுத்த முடியாது, குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்ற காரணங்களைக் கூறி நிராகரித்து விடும்படி ஒருசாரார் பிரச்சாரம் செய்து வரும் இக்கால கட்டத்தில் இத்தலைப்பு மிக அத்தியாவசியமானது. தங்களின் இக்கருத்துக்களை பேசியும் ஆக்கங்களாக எழுதியும் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் இக்கூட்டத்தினர் குர்ஆன் மொழிபெயர்ப்பில் ஹதீஸ்களை அவை ஆதாரப் பூர்வமாகயிருந்தும் ஏன் நிராகரிக் கிறோம்? என்ற மேலதிக விளக்கங்களுடன் தங்கள் வாதங்களை முன்னிறுத்துகின்றனர். அருள்மறைக் குர்ஆனுக்குப் பின் அடுத்த ஆதார நிலையிலுள்ள இரு கிரந்தங்கள் ஸஹீஹ் புஹாரியும் ஸஹீஹ் முஸ்லீமும் ஆகும். குர்ஆனை அடுத்த நம்பகத்தன்மை வாய்ந்த இக்கிரந்தங்களில் இடம்பெறும் ஹதீஸ்கள் மீது இவர்களின் இப்பிரச்சாரங்களால் அவை நம்பத் தகுந்தவைகளா? ஏற்றுக்கொள்ளவேண்டுமா? என்பது போன்ற சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதுடன் அவைகளை நிராகரிப்பதில் என்ன தவறு? என்ற கருத்தை நிறுவி வருகின்றனர். இந்த ஹதீஸ்களை நிராகரிக்க இவர்கள் கூறும் காரணங்களில் ஒன்று ஹதீஸ்களை சேகரித்த இமாம்கள் அறிவித்த அறிவிப்பாளர்களை முழுமையாக நம்பியதில் தவறு ஏற்பட்டு விட்டது எனக் கூறுகின்றனர். ஆனால் ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஹதீஸ்களை எப்படித் தொகுத்தார்கள்?. நபி(ஸல்) அவர்கள் முதல் அதன் பின்னர் அறிவிப்பைத் தரும் நபித்தோழர்களில் இருந்து அடுத்தடுத்து வரும் அத்தனை அறிவிப்பாளர்களின் நிலையையும் ஆராய்ந்த பின்னரே ஸஹீஹான ஹதீஸ்களாக தங்கள் கிரந்தங்களில் பதிவு செய்தனர். ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களா, நினைவாற்றலில் சிறந்தவர்களா, ஒழுக்கசீலர்களா என்பதையெல்லாம் நன்றாகப் பரிசோதித்துவிட்டுத்தான் ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானவை எனமுடிவெடுத்தனர்.

அறிவிப்பாளர்களிடம் காணப்பட்ட குறை நிறைகள் பற்றிய விவரங்களைமுஹத்திஸீன்களா கிய ஹதீஸ்கலை வல்லுனர்கள் முதலில் தொகுத்தனர். இவ்வாறு வடிகட்டிப்பரிசோதித்து சரியான அறிவிப்பாளர்கள்தான் என்ற நிலையை உறுதிசெய்து கொண்ட பின்னர்தான் ஸஹீஹான ஹதீஸ்கள் என்ற தரத்தைப்பெற்றன. இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ஏறத்தாழ 14000 அறிவிப்பாளர்கள் பற்றிய தொகுப்புகளை அறிந்தபின்னரே ஸஹீஹ் புஹாரி என்னும் ஹதீஸ் கிரந்தத்தைத் தொகுத்தார்கள். பல்லாயிரக்கணக்கான அறிவிப்பாளர்களின் தரம் பற்றிய நூல்தான் அஸ்மாவுர் ரிஜால். ஹதீஸ்கலை வல்லுனர்கள் ஹதீஸ்களைத் தரம் பிரிப்பதில் அதனை ஸஹீஹ், ஹஸன், ளயீஃப் போன்ற தரங்களைத்தேர்வுசெய்வதில் மிக்க நேர்மையுடன் திகழ்ந்தனர்.

அருள்மறை வசனம் 38:20-25 சம்மந்தமாக விளக்கவுரை நல்கிய இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள், ஹதீஸ்கலை வல்லுனர்கள் நேர்மையாளர்களாகத் திகழ்ந்ததைக் குறிப்பிட்டார்கள். இப்னு அபீ ஹாத்திம் தம் நூலில் இச்சம்பவம் பற்றி வரும் அறிவிப்புகளில் உள்ள அறிவிப்பாளர்கள் வரிசை முரணானது என்பதுடன் குர்ஆனில் இச்சம்பவம் பற்றி எப்படி கூறப்படுகிறதோ அதை அப்படியே நம்புவதும் அதற்கு நம்முடைய சுய விளக்கங்களை கூறாதிருத்தலும் சிறந்தது என உணர்த்தினார்கள். குர்ஆன் சத்தியத்ததைக் கொண்டுள்ள வேதம். நேர்வழிகாட்டும் அதன் வசனங்கள் உண்மையானவை. அதில் கூறப்பட்ட விஷயங்களைநாவினால்மொழிந்து அமுல்படுத்துவது நம் மீது கடமையாக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்கள்.

ஹதீஸை விட்டு விட்டு குர்ஆனை விளங்க முடியும் என்பது விபரீத விளைவில் சேர்க்கும். திருமறையின் விளக்கம்தான் ஹதீஸ்கள் ஆகும். நபித் தோழர் இம்ரான் பின் ஹூஸைன் (ரலி) அவர்கள் செய்த போதனையைத் தம் உரையில் குறிப்பிட்டார்கள். குர்ஆனைத்தவிர வேறு எதனையும் நீ கூறாதே. குர்ஆனின் பக்கம் உன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள். நீயும் உன் தோழர்களும் குர்ஆனின்பால் சாட்டப்பட்டிருக்கிறீர்கள். குர்ஆனில் தொழுகையை நிலைநாட்டு என்ற கட்டளை இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அத்தொழுகையை நிறைவேற்றுவது எப்படி? எத்தனை ரக்அத்துக்கள்? எப்பொழுது நிறைவேற்றுவது? என்பது போன்ற விளக்கங்கள் ஹதீஸில்தான் தெளிவு படுத்தப் பட்டுள்ளன. ஆகவே ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆனை விளங்கமுடியும் என்ற வாதமும் குர்ஆனில் கூறியபடி செயல்பட முடியும் என்ற நிலையும் முழுக்க முழுக்க தவறு எனக் கூறி சகோ. யூஸூஃப் மதனீ அவர்கள் தம் உரையை நிறைவுசெய்தார்கள்.
 

 

மாறிவரும் காலச்சக்கரம்


அதனையடுத்து உரைநிகழ்த்திய சகோ. முஜீபுர் ரஹ்மான் உமரீ அவர்கள் மாறிவரும் காலச்சக்கரம் என்ற தலைப்பில் பேசினார்கள். அவர்கள் நிகழ்த்திய உரையிலிருந்து சில:

வெற்றி தோல்வி உயர்வு தாழ்வு இவை மாறி மாறி வரும் என்பதை அல்லாஹ் அருள்மறையில் (3:140) முஸ்லீம்களுக்கு பத்ரில் வெற்றியும் உஹதில் இஸ்லாமிய எதிரிகளாகிய முஷ்ரிக்குகளுக்கு வெற்றியும் வழங்கினான். இவ்வசனத்தை மேற்கோள்காட்டி இஸ்லாமியர்களுக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்படுத்துவோர் இஸ்லாத்தை அழித்து விட்டதாக அதற்குப் பங்கம் விளைவித்து விட்டதாக எண்ணுவது தவறு. அது போல பாதிப்புக்குள்ளானோர் பிறரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாக எண்ணி தாழ்வுமனப் பான்மை கொள்ளவேண்டாம். ஏனெனில் இஸ்லாம் இதுபோன்ற மிகப்பெரிய ஏராளமான சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. உலக அளவில் இன்று நிலவக்கூடிய போர்களில் இஸ்லாமியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி போர்களுக்கு மேல் போர் என்ற நிலையில் இச்சமுதாயம் குறி வைத்துத் தாக்கப்பட்டு சீரழிவுக்குள்ளாகும் நிலை இன்று நிலவினாலும் கூட சிரமத்துக்குப்பின் எளிமை, வீழ்ச்சிக்குப் பின் எழுச்சி என்பது இஸ்லாமியர்களுக்கு அல்லாஹ் கூறும் படிப்பினை என்பதை அருள்மறை வசனம் 94:5 உணர்த்துகிறது.

இஸ்லாமியர்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளால் இஸ்லாத்தை ஒழித்துவிட்டோம் என்று எண்ணுவது முற்றிலும் தவறு. இஸ்லாம் இப்பூவுலகில் அறிமுகமானதே அது தன்னகத்தே கொண்ட சிறப்புகளால்தான். உலகிலுள்ள பிற மத கலாச்சாரங்கள் தத்துவங்கள் இஸங்கள் ஆகியவற்றின் ஆளுமையை அகற்றி விட்டு இஸ்லாம் மக்களின் மனங்களில் மிளிர்ந்தது. அல்லாஹ் அருள்மறையில் கூறியது 9:33 இங்கு நினைவு கூறத் தக்கது. இஸ்லாத்தின் அடிப்படைகளைச் சந்தேகிக்கும் நிலை இன்று உள்ளது. ஆனால் இணைவைப்பாளர்கள் நிறைந்திருந்த அன்றைய அரபுலகத்தில் தனிமனிதராக இருந்த உத்தம திருநபி (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துக்கூறி இஸ்லாம் சிறுகச் சிறுகப் பெருகி இன்று உலக வரைபடத்தில் பெரும்பான்மையினர் பின்பற்றும் மார்க்கமாக இஸ்லாம் திகழும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் வழங்கியதைக் காண்கிறோம். இப்புவியில் இஸ்லாத்துக்கு எவராலும் எந்த தீங்குமிழைத்து விடமுடியாது. இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் வீட்டில் அவன் பராமரிப்பிலேயே வளர்ந்து வாலிபமானது, உத்தம திருநபி (ஸல்) அவர்கள் இணைவைப்போர்களில் ஒருவராகிய அபூதாலிப்பால் வளர்க்கப்பட்டது, முன்பு இஸ்லாத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கணம்கட்டியோர் இன்று பிற மத மக்களிடம் இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறி அழைப்புப்பணி செய்யும் அற்புதம் இவையாவும் அல்லாஹ் ஒருபாவியை வைத்துக்கூட இஸ்லாத்துக்கு வலுசேர்ப்பான் என்பதற்குறிய சான்றுகள்.

உலக வாழ்வின் உயர்வு தாழ்வு பற்றி பெருமை இழிவு பற்றி சிந்திக்காதீர்கள். இவ்வுலக வாழ்வு நிரந்தரமில்லாதது. நம் சமுதாயம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கவேண்டும் என எண்ணுவதும் தவறு. சமுதாயம் நிம்மதியின்றித் தவிக்கிறது. ஆகவே இஸ்லாத்துக்கு இதனால் சரிவு என கருதுவதும் தவறு. ஆரம்ப கால அழைப்புப் பணியில் அன்றைய நபித்தோழர்கள் பட்ட சிரமத்தை உற்று நோக்கினால் நாம் சந்தித்து வரும் சிரமங்கள் மிக அற்பமானதே. அன்றைய மக்கள் இஸ்லாத்தை ஏற்று முஸ்லீம்களாக வாழ்ந்தார்கள். எனவே இஸ்லாம் வளர்ந்தது வாழ்ந்தது. பெயரளவில் மட்டும் முஸ்லீம்களாக வாழ்வது நிச்சயம் பலவீனமே.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் எனக்கு 5 சிறப்புகளை அல்லாஹ் வழங்கியுள்ளான் அவைகளில் ஒன்று ஒருமாதகால பயண தூரத்திலிருக்கும் இஸ்லாத்தின் எதிரிகளின் உள்ளத்தில் என்னைப்பற்றிய பயமும் திகிலையும் ஏற்படுத்தி அல்லாஹ் எனக்கு உதவுகிறான். (புஹாரி)

மற்றொரு ஹதீஸில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் இருந்தும் எதிரிகள் உள்ளத்தில் முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தை அல்லாஹ் நீக்கிவிடுவான். ஏனென்றால் அப்பொழுது வாழும் முஸ்லீம்கள் உள்ளத்தில் உலகாசை மிகுந்து மறுமை பயம் இல்லாது போகும் (வஹ்ன்). அன்றைய இஸ்லாமியர்கள் எவ்வளவு சிரமத்தில் இருந்தனர் என்பதை அல்லாஹ் அருள்மறையில் 2:214 ல் கூறுகிறான். தம் வாழ்வை மார்க்கத்துக்கு அர்ப்பணித்து அதிகமதிகம் சிரமத்துக் குள்ளானோர் நபிமார்களே. அல்லாஹ் யாருக்கு நல்லதை நாடுகிறானோ அவரைச் சோதனைக்குள்ளாக்குகிறான். மூமினுக்கு ஏற்படும் சோதனைகள் பாவத்திற்கான பரிகாரமாகும் என்ற நபிமொழிகள் இக்கூற்றுக்கு சான்றுகள். மேலும் ஒருமூமின் பிரச்சினைகளுக்கு, சோதனைகளுக்குத் தூரமானவனல்ல. நபி(ஸல்) அவர்கள், "எதிரிகளைப் போர்க்களத்தில் சந்திக்க நாடாதே! அப்படி சந்திக்க நேரிட்டால் புறமுதுகு காட்டாதே" எனக்கூறினார்கள்.

முஅத்தா போரில் ஷஹீதான ஜாஃபர் (ரலி) அவர்கள் 70க்கும் அதிகமான இடங்களில் வெட்டப்பட்டிருந்தார்கள். அவையனைத்தும் நெஞ்சிலும் உடலின் முன்பகுதியிலும் பெற்ற விழுப்புண்களே என்பது குறிப்பிடத்தக்கது. சுவனம் வாளின் நிழலில் உள்ளது என்பது நபிமொழியாகும். நபித்தோழர் ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி)அவர்கள் மார்க்கத்துக்காக மகத்தான தியாகங்கள் புரிந்து விட்ட மனநிலையில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும், மார்க்கத்தை வைத்துதான் நமது வாழ்க்கை. செல்வம் அந்தஸ்து பதவி போன்றவற்றைப் பொறுத்து நமது வாழ்வல்ல. நாம் உதவி செய்யப்படுவதும் ரிஸ்க் தாராளமான செல்வம் வழங்கப்படுவதும் பலஹீனர்களை வைத்துதான். இச்சமுதாயத்தின் உதவியும் பலவீனமானவர்களை கொண்டே என உபதேசித்தார்கள்.

தனிமனிதவழிபாட்டை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. காதிஸிய்யா யுத்தத்தில் நபித்தோழர் காலித் பின் வலீத் (ரலி) ஒரு புறமும் மற்றொரு புறம் முஸன்னா (ரலி) எதிரிகளைத் தீரமாகப் போரிட்டதில் வெற்றி முஸ்லிம்களுக்கு கிட்டியது. காலித் (ரலி) அவர்களால்தான் வெற்றி கிடைத்தது என மக்கள் கூறலாயினர். செய்தியறிந்த கலீஃபா உமர்(ரலி)அவர்கள் அவ்விருவரையும் பதவி இறக்கம்செய்துவிட்டு வெற்றியை தோல்வியை வழங்குபவன் அல்லாஹ் மட்டுமே என்ற உண்மையை நிலைநாட்டினார்கள். தனிமனிதனின் எழுச்சியால் வீழ்ச்சியால் இஸ்லாத்துக்கு மாற்றமும் ஏற்படாது. உஹதுப்போரின் இறுதியில் அன்றைய முஷ்ரிக்குகளின் தலைவர் அபூஸூஃப்யான் (ரலி) அவர்கள், "இப்போரின் வெற்றி பத்ருக்குப் பதிலடி. எங்களிடம் தெய்வங்கள் லாத் உஸ்ஸா உள்ளன" என முழங்கியவர் மக்கா வெற்றியின் போது முஸ்லிம்களின் அரவணைப்பில் ஆனவுடன் அல்லாஹ் மகத்துவம் மிக்கவன் எனக் கூறும் நிலைக்கு காலச் சக்கரம் சுழன்றது. இஸ்லாம் என்றென்றும் மேலோங்கி நிற்கும் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகளைக் கூறலாம். காலச்சக்கரத்தின் சுழற்சியில் காலம் மாறும் ஆயினும் இஸ்லாத்தின் கோட்பாடுகளில் எந்த மாற்றமுமில்லை. இஸ்லாம் எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கும் எனக்கூறி தம் உரையை சகோ. முஜீபுர்ரஹ்மான் உமரீ அவர்கள் நிறைவுசெய்தார்.

 

 

திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு

அதனையடுத்து உரையாற்றிய சகோ. ஜமால் முஹம்மது மதனீ அவர்கள் திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு என்ற தலைப்பில் நீண்டதொரு அழகிய உரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில் :

அல்லாஹ்வின் அருள்மறையாகிய இக்குர்ஆனுக்கு இருக்கக்கூடிய மகத்துவத்தில் அது இறங்கிய வரலாறு தொகுக்கப்பட்ட விதம் ஆகியவற்றுக்குப் பெரும் பங்குண்டு. கியாமநாள் வரை மக்களால் பின்பற்றப் படும் இப்புனித வேதம் பிற வேதங்களைப் போல் மனிதகரங்களால் மாசுபடுத்தப்பட்டு இடைச்செருகல்கள் மாற்றங்கள் போன்றவற்றுக்கு ஆளாகாமல் எப்படி அருளப்பட்டதோ அது அப்படியே பாதுகாப்புடன் உள்ளது இவ்வேதத்தின் சிறப்பு.

இவ்வேதத்தை மாசு படுத்த, குறைகூற யூத, கிறிஸ்தவர்கள் செய்த முயற்சிகள் அதிகமதிகம். அவ்வேதத்தை ஏற்க மறுத்தவர்களுக்கு நிராகரித்தோர்க்கு அல்லாஹ் அருள்மறை வசனங்களில் கியாமநாள் வரைக்கும் தொடர்கின்ற சவால்களை விடுக்கிறான். அவை இவ்வேதத்தில் முரண்பாடுகளில்லை (4:82).

இவ்வேதத்தில் உள்ள அத்தியாயம் போன்ற ஏதேனும் ஒரு அத்தியாயத்தையாவது அல்லாஹ் அல்லாத படைப்பினங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டாலும் உருவாக்கவியலாது (2:23).

இவ்வேதத்தில் எந்த மாற்றமோ மாறுதலும் செய்யவியலாத வகையில் அல்லாஹ்வே இதனைப் பாதுகாக்கிறான் (15:9).

"முந்திய நபிமார்கள் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு சில அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றலைப் பெற்றிருந்தனர். அவற்றை அச்சமுதாய மக்களிடம் நிகழ்த்திக் காட்டினார்கள். மக்களில் சிலர் நபிமார்கள் போதித்தவற்றை ஏற்றனர். பலர் மறுத்தனர். ஆனால் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அற்புதம் அருள்மறைக் குர்ஆனே. உத்தம திருநபி (ஸல்) அவர்கள் இக்குர்ஆனிய வசனங்களை அன்றைய அரபுலகோர்க்கு எடுத்துரைத்த போது சிலர் ஏற்றனர். சிலர் இது சூனியம் என்றனர்.

மகத்துவங்கள் பல பெற்றுத்திகழும் அருள்மறையின் இச்சிறப்புகளை சந்தேகிக்கும் நிலையை இன்று சிலர் உருவாக்கியுள்ளனர். குர்ஆனை மொழிபெயர்க்கும் போர்வையில் குர்ஆன் மீதே அதன் தொகுக்கப் பட்ட வரலாறு என்ற தலைப்பில் ஏகப்பட்ட சுய கருத்துக்கள் இவ்வேதத்தை சந்தேகிக்கும் வகையில் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு கூறப்பட்டுள்ள விஷயங்களை நான் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் எந்த இயக்கத்தையும் அமைப்பையும் சங்கத்தையும் சார்ந்தவனல்ல. (யாருடைய தவறை சுட்டிக்காட்டுகிறேனோ அவரின் நாட்டை) அதாவது இந்திய நாட்டைச் சார்ந்தவனும் அல்ல. மார்க்கத்தின் மீது வாரி வீசப்படும் அவதூறுகளை அகற்றுவதுதான் என் நோக்கம்" என்ற அவரின் உரை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர்தம் உரையினைத் தொடர்கையில்:
குர்ஆன் தொகுப்பு 4 கட்ட நிலையில் உள்ளதாகும்.

1.நபி(ஸல்) அவர்கள்காலம்.
2.அபூபக்கர் (ரலி)அவர்களின் ஆட்சிகாலம்.
3.உஸ்மான் (ரலி)அவர்கள் ஆட்சிகாலம்.
4. அதற்குப் பின் வந்த உமைய்யாக்களின் காலம்.

நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வந்ததும் அவ்வஹி செய்திகளை நபிகள் கூற அதனை காத்திப் வஹீ என்ற எழுத்தாளர்களாகிய நபித்தோழர்களில் சிலர், தோல்களில் ஈச்சமர மட்டைகளில் எலும்புகளில் எழுதி பாதுகாத்து வைத்திருந்தனர். எந்த வசனங்களளை எங்கு எந்த அத்தியாயத்தில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதை நபிகளார் கூற அதை அப்படியே காத்திப்வஹீ எழுத்தர்கள் எழுதி வைத்திருந்தனர். இவ்வாறு அருள்மறை வசனங்கள் ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் மனதில்,அருள்மறை வசனங்களை மனனமிட்டிருந்த நபித்தோழர்கள் சிலரின் உள்ளத்தில் காத்திப்வஹீ எழுத்தர்களின் ஏட்டில் என்ற நிலையில் இருந்தன. நபி(ஸல்)அவர்கள் உயிருடன் இருக்கும்போது வானவர் ஜிப்ரீல் (அலை )அவர்கள் ரமலானில் குர்ஆனை ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் (அலை) ஓதிக்காட்டுவார்கள். (புஹாரி 1902)

.நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின் கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சிகாலத்தில் நபி என்று தன்னை வாதித்த முஸைலிமா என்ற பொய்யனை எதிர்த்து நிகழ்ந்த யமாமாபோரில் ஏராளமான நபித்தோழர்கள் ஷஹீதாக்கப்பட்டனர். அந்நிலையைச் சுட்டிக்காட்டி உமர்(ரலி) அவர்கள் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் குர்ஆனைத் தொகுத்து முறைப்படுத்த வேண்டியதின் அவசியத்தை எடுத்துக்கூற நபி(ஸல்) அவர்கள் செய்யாத வேலையை நாம் செய்ய வேண்டுமா? என வினவ உமர்(ரலி) அவர்கள் குர்ஆன் தொகுக்கப்பட்டு அதன் வசனங்கள் முறையாக வருங்கால மக்களுக்குப் பயன்தரவேண்டும் என்ற ஆலோசனையை வலியுறுத்த அபூபக்கர் (ரலி) அவர்களின் உத்திரவில் நபித்தோழரும் காத்திப்வஹீ எழுத்தர்களில் ஒருவருமாகிய ஜைதுபின் ஸாபித் (ரலி) அவர்கள் தலைமையில் ஒரு நபித்தோழர்கள் குழவை அமைத்து அவர்கள் குர்ஆனை ஒன்று திரட்டினார்கள்.

அதன் பிரதி நபி(ஸல்) அவர்களின் மனைவி ஹப்ஸா(ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்தது. உஸ்மான்(ரலி) அவர்கள் ஆட்சிகாலத்தில் ஹப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த ஒன்று திரட்டப்பட்ட குர்ஆனிய தொகுப்பு பல பிரதிகளாக ஆக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. குர்ஆன் தொகுக்கப் பட்ட வரலாறு, நபித்தோழர்களாகிய காத்திப்வஹீ என்ற எழுத்தர்கள் குர்ஆனிய வசனங்களை தோலில் ஈச்சமரமட்டைகளில் எலும்புகளில் எழுதிச் சேகரித்து வைத்த செய்திகள் ஆகியவை ஹதீஸ் நூல்களாகிய புஹாரி, திர்மிதி, அஹ்மது, இப்னுஹிப்பான் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்செய்திகள் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்தும் சகோ,பீ.ஜே. அவர்கள் மொழியாக்கம் செய்துள்ள தமிழ் குர்ஆனிய மொழிபெயர்ப்பில் ஏராளமான சந்தேகங்களைக் கிளப்பும் வகையில் குர்ஆன் தொகுப்பு வரலாறு என்ற பகுதியில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன. அத்தியாயங்களின் பெயர் சூட்டப்பட்டது, அத்தியாயங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்றுள்ள வசனங்களின் எண்ணிக்கை, வசன எண்கள் இடப்பட்டதில் எழுவாய் பயனிலை எது என்பதை முறைப்படுத்தாமல் வசன எண்கள் இடப்பட்டுள்ளன, குர்ஆனிய வசனங்கள் சிலவற்றில் உள்ள எழுத்துப் பிழைகள் என பட்டியல் தொடர்கின்றது.

 

 

அத்தியாயங்களுக்கு பிற்காலத்தில் தான் பெயரிட்டுள்ளனராம்..

 

இது போல் 114 அத்தியாயங்களையும் தேடினால் மிகப் பெரும் அளவிலான அத்தியாயங்களுக்கு அதில் உள்ள செய்திகளின் அடிப்படையில் பிற்காலத்தில் தான் பெயரிட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

 

குர்ஆனில் எழுத்துப் பிழைகளாம் ..

 

உஸ்மான் (ரலி) அவர்களால் குர்ஆன் பல பிரதிகள் எடுக்கப்பட்ட போது எழுதுகின்ற எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்.

 

 

அத்தியாயங்களை வரிசைப்படுத்துதலை நபிகள் நாயகம் செய்யவில்லையாம் ..

 

ஒவ்வொரு அத்தியாயமும் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டிருந்தாலும் எதை முதல் அத்தியாயமாக அமைப்பது, எதை இரண்டாவது அத்தியாயமாக அமைப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளை எதுவும் பிறப்பிக்கவில்லை.

 

- பி.ஜைனுல் ஆபிதீன்

 


 

இவைகள் எல்லாம் தவறுகள் எனச்சுட்டிக்காட்டிய சகோ.பீ.ஜே, அவர்கள் அதே தவறைத் தம் மொழிபெயர்ப்பிலும் கையாண்டிருப்பது ஏன்?

 

இச்செய்திகள் கவனமாக தொகுக்கப்பட்டு எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு எழுத்துப் பிழைகூட இல்லாமல் அப்படியே 1400 வருங்களாக மக்களுக்கு கிடைக்கிறது என்பதும் அறிஞர்கள் அதற்கான வழிவகைகளை செய்துள்ளார்கள் என்பதும் இன்றுவரை நாம் அறிந்த சரித்திரம். இதை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் கூட தனது உரைகளில் உறுதி படுத்தியிருக்கிறார். (Play video / Download) ஆனால் தன்னுடைய குர்ஆன் மொழிப் பெயர்ப்பில் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்.

 

சந்தேகங்களைக் கிளறிவிட்டு மக்கள் மன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய சகோ.பீ.ஜே. அவர்கள் தம் உரைகளில்கூட மேற்கூறிய இக்குறைகளை மறுத்து முரணான கருத்துக்கள் கூறியிருப்பதை இத்துடன் இணைத்துள்ள வீடியோ கிளிப்புகளில் காணுங்கள். குர்ஆனின் வரிவடிவம்தான் மாறியது ஒலிவடிவம் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகவில்லை. குர்ஆன் தொகுக்கப் பட்ட வரலாறு குறித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள், சூரா கஹ்ஃப் முதல் 10 வசனங்களை ஓதினால் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு (அபூதாவூத்) போன்ற பல்வேறு ஹதீஸ்களை கண்டுகொள்ளாமல் தம் சுயவிளக்கங்களை முன்னிறுத்தி மொழிபெயர்ப்பில் குர்ஆனிய தொகுப்பு வரலாறு தந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

இவரின் அல்குர்ஆன் மொழிப்பெயர்ப்பில் சூரா அல்ஃபாத்திஹா வசன எண்களும் அடிக்குறிப்பும்.
 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.

4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.


அடிக்குறிப்பு:

26. பொருத்தமில்லாத வசன எண்கள்

திருக்குர்ஆனின் வசன எண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலோ, நபித் தோழர்களாலோ இடப்படவில்லை. பிற்காலத்தில் வந்தவர்கள் தான் எண்களிட்டனர். பல இடங்களில் ஏற்கத்தக்க வகையில் எண்கள் இட்டாலும், சில இடங்களில் பொருத்தமில்லாமலும் எண்கள் இட்டுள்ளனர். அத்தகைய இடங்களில் இதுவும் ஒன்றாகும். ...

 

- பி.ஜைனுல் ஆபிதீன்

 

ஆனால் மேற்கண்ட கருத்துக்கு எதிராக, அவரே பேசிய வீடியோ இதோ.  (Play video / Download)


ஒவ்வொரு ரமலானின் இரவுகளிலும் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதிக்காட்டியதை "அந்த வருடத்தில்" இறங்கிய வசனங்களை என்ற ஹதீஸில் இல்லாத நூதன விளக்கத்தை சகோ. பீ.ஜே. அவர்கள் தந்திருப்பதைப் பார்க்கலாம். இப்படி ஏராளமான நூதன விளக்கங்கள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக குர்ஆனையே சந்தேகிக்க வைக்கும் போக்கு யூத, கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தைக் களங்கப் படுத்த செய்த சதிகளின் அடிப்படையை சகோ.பீ.ஜே. அவர்களும் கையாள்கின்றார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

 

முஸ்லிம்களை மார்க்கத்தை சொல்லி மட்டுமே வழிகெடுக்க முடியும் என்று சொன்ன பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் (Play video / Download), அதே வழிகெடுக்கும் வேலையை அவர் செய்வது எதற்காக என்று மக்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். பொய் சொல்பவனை  இல்லையென்றால் அவரின் தற்போதைய தடுமாற்றங்களை புரிந்துக் கொண்டு, அவரின் விஷயங்களில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தமிழ் பேசும் முஸ்லிம்களின் கட்டாய கடமையாகும்.

 

ஒன்னா நம்பர் பொய்யன், அயோக்கியன் ஆகியோர்களை, அவர்களின் எழுத்துகளில் இருந்தே முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்து உலக மக்களுக்கு இறைவன் அடையாளம் காட்டுகிறான் என்பதை பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வாயாலேயே கேளுங்கள். (Play video / Download)  அதேபோல, தனது எழுத்துக்களிலேயே முரண்பாடுகளை கொண்டுள்ள பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எந்த வகையில் சேர்ப்பது என்பதையும் முடிவு செய்யுங்கள்.

 

இதுபோன்ற எண்ணற்ற வரலாற்று புரட்டுகளையும், தடுமாற்றங்களையும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்பிலிருந்தும், பி.ஜேயின் வீடியோக்களிலிருந்தும் எடுத்துக்காட்டிய சகோ. ஜமால் முஹம்மது மதனீ அவர்கள், இறுதியில் சத்தியத்தை அறிந்து அதன்வழி நடக்க நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக என்ற பிரார்த்தனையுடன் உரையை முடித்தார்.