blockquote { BACKGROUND: #C1E0FF; BORDER-RIGHT: #2D96FF 2px solid; BORDER-TOP: #2D96FF 2px solid; PADDING-RIGHT: 20px; PADDING-LEFT: 20px; PADDING-BOTTOM: 0px; MARGIN: 0px; BORDER-LEFT: #2D96FF 2px solid; BORDER-BOTTOM: #2D96FF 2px solid; PADDING-TOP: 0px }

 

 

 

Index |Subscribe mailing list | Help | E-mail us

 
 

மினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்?

அபூ உமர்

 

கடந்த 12-ந்தேதி ஜனவரி 2006 (துல்ஹஜ் பிறை 12) மதியம் 12.30லிருந்து 1.30க்கு இடைப்பட்ட நேரத்தில் மினாவில் கூட்ட நெரிசலில் நசுங்கி இறந்த 363 பேர்களின் இறப்புச் செய்தி பலரை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. ஊடகங்களால் மேம்போக்காக பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி மற்றும் அதனை பிரதிபலிக்கும் மக்களின் மனநிலை இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டதோடு, இதுபோன்ற துயர சம்பவம் இனிமேலும் நடவாமல் இருக்க ஒரு துரும்பையாவது நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன்.

 

வந்திருந்த ஹாஜிகளின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 25 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 363 பேர்களின் இறப்பு (0.01 %) ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் மட்டுமே நடந்திருப்பதால், அதனைத் தடுக்க வேறு வழியே இல்லையா என்பதுதான் நம் அனைவரின் ஆர்வமாக இருக்கிறது.

சம்பவம் நடந்த பாலத்தை இடித்துவிட்டு 4 அடுக்குகளில் 4.2 பில்லியன் சவுதி ரியால் செலவில் மிக நவீன வசதிகளுடன் ஏர் ஆம்புலன்ஸ் இறங்க 2 ஹெலிபேட் வசதிகளுடன் கட்டுவதற்காக கடந்த 15ந் தேதியே  பாலம் இடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பாலத்தின் இரு ஓரங்களிலும் உள்ள 8 கட்டடங்களின் வழியே ஹாஜிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக 90 மீட்டர் அகலத்திற்கு எஸ்க்லேட்டர்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

 

ஒவ்வொரு தடவையும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடும்போது அதனைத் தடுக்க புதிய வழிகளை கையாளுகிறார்கள். ஆனால் பிரச்னை புதிய உருவில் வந்துவிடுகிறது. இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தவிர்க்க என்ன முன் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் என்பதை நடந்து முடிந்த ஹஜ்ஜில் அங்கு இருந்ததாலும் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் உதவியோடு எழுதுகிறேன்.

மினா என்ற இடம் எந்த வசதியும் இல்லாததுபோல் ஊடகங்களால் விமர்சிக்கப்படுகிறது. 25 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடுவதால், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை எனக்கு தெரிந்தவரை கட்டுரையின் இறுதியில் பட்டியலிட்டுள்ளேன்.

 

"இத்தனை வசதிகள் செய்யப்பட்டிருந்தும் ஏன் இந்த மரணங்கள் நிகழ்கின்றன?" என்பதுதான் இங்கு கேட்கப்படும் முக்கிய கேள்வியாகும். நிர்வாகம் எத்தனை வழிகளில் முயற்சி செய்தாலும் ஹாஜிகளும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா? உள்நாட்டில் உள்ளவர்கள் 5 வருடத்திற்கு ஒரு முறைதான் ஹஜ் செல்ல அனுமதி கிடைக்கும். ஆனால், வெளிநாட்டிலிருந்து வருபவர்களை கட்டுப்பாடு இல்லை.

 

இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு பொறுப்பு யார்?


துல்ஹஜ் பிறை 8-லிருந்து 13 வரை ஹஜ்ஜின் முக்கிய நாட்களாகும். மக்கா, மினா, முஸ்தலிஃபா, அரஃபா ஆகியவை ஹஜ் காரியங்கள் செய்யும் இடங்களாகும். (பார்க்க ரூட் மேப்).

 

துல்ஹஜ் பிறை 8 ல் ஹாஜிகள் மினாவை வந்தடைவார்கள். பிறகு துல்ஹஜ் பிறை 9ல் அரஃபாவை அடைவார்கள். இதுதான் ஹஜ்ஜின் முக்கிய நாளாகும். இங்கு ஹாஜிகளுக்கு படைத்த இறைவனிடத்தில் கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும்தான் பணி. அன்று மாலை சூரியன் மறையத்தொடங்கியதும் முஸ்தலிஃபாவிற்கு திரும்பி இரவு தங்கிவிட்டு துல்ஹஜ் 10-ம் நாள் மினாவிற்கு மீண்டும் திரும்புகிறார்கள். (பெண்கள் இரவிலேயே கிளம்புவதற்கு சலுகை உண்டு). துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய பிறைகளில் இங்குதான் தங்க வேண்டும். (பிறை 13-ல் விரும்பினால் தங்கலாம் அல்லது பிறை 12-லேயே மக்கா திரும்பினால் குற்றமில்லை). ஹஜ் கடமைகளை விபரமாக தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும்).

துயர சம்பவங்கள் துல்ஹஜ் பிறை 12-ல் மட்டுமே அதிகம் நிகழ்கிறது. அதற்கு காரணம், அன்று ஜமராத்திற்கு கல்லெறிந்துவிட்டு சூரியன் மறைவதற்கு முன்பு மினாவில் இருந்து புறப்பட்டுவிட வேண்டும். இல்லையென்றால் 13-ம் பிறையும் தங்கி கல்லெறிந்துவிட்டுத்தான் புறப்பட வேண்டும். கல்லெறியும் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயத் தொடங்கியவுடன் ஆரம்பமாகிறது. சுமார் 12 மணியிலிருந்து அடுத்த 6 மணி நேரத்திற்குள் 90 சதவீத ஹாஜிகள் கல்லெறிந்துவிட போதுமான அவகாசம் கிடையாது. உள்நாட்டிலிருந்து வந்த ஹாஜிகளுக்கு துல்ஹஜ் பிறை 13, 14 -ல் வேலைக்கு செல்லவேண்டும் என்ற அவசரம். வெளிநாட்டு ஹாஜிகளுக்கு மக்காவில் உள்ள தங்குமிடத்திற்கு சென்று இளைப்பாற வேண்டும். அதற்கு காரணம், ஹஜ்ஜிற்கு வரும் பலர் முதிய வயதில் உடல் வலிமையற்றவர்களாக வருகிறார்கள்.

 

ஹஜ் செய்வதற்கு பொருள் பலமும் உடல் பலமும் இருந்தால் மட்டுமே கடமை. ஆனால் உடல் பலம் இருக்கும்போது பலருக்கு ஹஜ் கடமை ஞாபகம் வருவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

 

உடல் பலகீனமானவர்கள் முக்கியமாக துல்ஹஜ் பிறை 12-ல் காலையிலேயே கல்லெறியலாம் என்று மார்க்க தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இங்கு வரும் ஹாஜிகள் பலருக்கு ஹஜ் செய்வது எப்படி என்று தெரியாததால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மார்க்க சலுகைகள் தெரிவதில்லை. அதிக நெரிசலில் பலகீனமானவர்கள் மற்றும் பெண்கள் ஜமராத்திற்கு சென்று கல் எறிவதற்கு பதிலாக மற்றவர்களிடம் கொடுத்து எறியச்செய்யலாம்.

ஹாஜிகளில் சிலர் சூழ்நிலையை உணர்ந்து அதற்கு தக்க தங்கள் நடவடிக்கைகளை வைத்துக்கொள்வதில்லை. பிறை 12 அன்று கல்லெறிய போகும்போது பயண பொருள்களை கூட எடுத்துச்செல்கிறார்கள். பொருள் கீழே விழுந்ததால் எடுக்க குனிந்தபோது நடந்த விபரீதம்தான் இத்தனைப் பேரை இழக்கச் செய்திருக்கிறது.


ஹாஜிகளில் சிலர் முறையான அனுமதி இல்லாமல் வந்தவர்களாகும். ஆகவே இவர்கள் 6 நாட்களும் ஜமராத்தை சுற்றியுள்ள பெருவெளியில் தங்கிவிடுகிறார்கள். பல தற்காலிக கூடாரங்களை (Portable Tents) சர்வ சாதாரணமாக  இங்கு காணமுடியும். இத்தகையவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் குறையலாம்.

 

தற்போது இறந்தவர்களின் பலர் (3ல் 1 பங்கு) இதுவரை அடையாளம் தெரியவில்லை. காரணம் இவர்கள் ஹஜ்ஜிற்கு முறையான அனுமதி பெறாமல் வந்திருக்கலாம். அனுமதியுடன் வந்தவர்களுக்கு கைகளில் கட்டப்படும் தங்குமிடம் அடையாளத்துடன் கூடிய வளையம் கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒரு பிளாஸ்டிக் வளையமும், தொலைபேசி எண், போட்டோவுடன் உள்ள கார்டும் கொடுக்கப்படும். இந்த அடையாளங்கள் அவர்கள் எந்த கூடாரத்தை மற்றும் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை காட்ட உதவுகின்றன.


துயர சம்பவங்களை தடுக்க:

 

தற்போது ஹஜ் பயணத்திற்கு வந்தவர்களில் சிலர் முன்பே ஹஜ் செய்தவர்களாகும்.  நெருக்கடியால் ஏற்படும் விபத்து போன்ற சூழ்நிலையை நினைத்து, இவர்கள் புதியவர்களுக்கு வழிவிடவேண்டும். வழிகாட்டியாகவோ அல்லது மனைவி மற்றும் வயதானவர்களுக்கு துணையாகவோ வரும் சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர ஏற்கனவே ஹஜ் செய்தவர்கள் மீண்டும் ஹஜ்ஜிற்கு வரக்கூடாது என்று அவராகவே முடிவு எடுக்க வேண்டும்.

 

பணம் இருக்கிறது என்பதற்காக வருடா வருடம் ஹஜ் செய்யும் ஹாஜிகள், தங்களின் உறவினர் மற்றும் தெருவிலுள்ள, ஊரிலுள்ள, நாட்டிலுள்ள, உலகத்திலுள்ள ஏழைகளுக்கு உதவி செய்வதையும் நினைத்துப் பார்க்கட்டும். வசதி இருந்தால் (உடல்வலிமை+பண வசதி) ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகும். ஒரு தடவை செய்யவேண்டிய வணக்கத்தை வருடா வருடம் செய்யும் ஹாஜிகள், தினமும் செய்ய வேண்டிய தொழுகை போன்ற வணக்கங்களை பலர் செய்யாமல் இருப்பது ஏனோ? ஹஜ்ஜுடைய காலங்களில் நெருக்கடி காரணமாக ஒருவர் இறந்தால் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய வந்தவரும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டாமா?

 

நேரில் கண்ட காட்சிகள்:


(Tent City என்று அழைக்கப்படும் மினா நகரத்தின் படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்) துல்ஹஜ் 12 பிறை அன்று நெரிசலாக இருக்கும் என்பதால் பெண்களையும் குழந்தைகளையும் கூடாரங்களில் இருக்கச் செய்துவிட்டு ஆண்கள் மட்டும் கல் எறிவதற்காக வெளியேறினோம். சம்பவம் நடந்த இடம் 5 நிமிட நடை தூரத்தில் இருக்கும்போது எங்களுடன் வந்தவர்களில் பாதிபேர் பிரிந்து விட்டார்கள். அவர்கள் இடதுபுறமாக சென்றிருக்க வேண்டும். வலது புறத்தில் கூட்டத்தின் அடர்த்தி குறைவாக தெரிந்தமையால் அங்கு நகருவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இராணுவத்தினர் வந்து மனித பாதுகாப்பு வலையத்தை உருவாக்கி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டார்கள். 1, 2, 3 என்று தொடங்கி நிறைய ஆம்புலன்ஸ்கள் வரத்தொடங்கிவிட்டன. உள்புறத்தில் ஆபத்து நிலையில் உள்ளவர்களும் மேற்புறத்தில் சிறிது பாதிக்கப்பட்டவர்களையும் ஏற்றப்பட்டார்கள். போவதற்கு வசதியாக இராணுவம் வசதி செய்து தந்தமையால் அந்த அடர்த்தியான கூட்டத்திலும் ஆம்புலன்ஸ்கள் நகரத் தொடங்கிவிட்டன. அப்போதுகூட இத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.
 

கல்லெறியும் இடத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்காக, ஜமராத் பாலத்தை ஹாஜிகள் நெருங்கும்போது காவலர்கள் அவர்களை தடுத்து சிறிது சிறிதாக அனுமதிக்கிறார்கள். தடுக்கப்பட்டு நிற்பவர்களில் சிலர் தனக்கு முன்னே நிற்பவர்களை கண்டுக் கொள்ளாமல் முண்டியடித்துக்கொண்டு முன்னேற பாய்வார்கள். இவ்வாறானோர் தான் பிரச்னையே. இதனால்தான் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மரணிக்கின்றனர்.
 

அப்போது "ஜமராத்தின் இடது புறமாக செல்லுங்கள்" என்று ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். எனவே மெதுவாக இடதுபுறமாக மக்கள் வெள்ளத்தில் நீந்தினோம். இதில் யாராவது சற்று சறுக்கினால் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து ஜாக்கிரதையாக கால்வைத்து சென்றோம். முழங்கால் அளவு பொருட்கள் விழுந்துகிடந்தது. பயண சாமான்களை கையில் சுமந்திருப்பவர்களை பாலத்தின் கீழ்பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பாலத்தின் மேற்புறம் எறிவது போல, பாலத்தின் கீழ்புறமும் கல்லெறிய முடியும்.  

 

பாலத்தின் மேற்புறம் ஒருவழி பாதைதான். கல் எறிந்தவுடன் திரும்பிவர இயலாது. வலது, இடது என பிரியும் பாலத்தின் இரண்டு கிளைகளின் வழியே நாம் செல்ல வேண்டிய வழியை அடைந்துவிடலாம். ஆனால் கீழ் புறத்தில் எதிர்பார்க்காதபோது திடீர் திடீரென மக்கள் கூட்டம் வரலாம் என்பதால் அதனைத் தவிர்த்துவிட்டோம். மெதுவாக நகர்ந்து நசுங்கி பிழியப்பட்டு ஜமராத் பாலத்தின் ஆரம்பத்தை அடைந்துவிட்டோம். பாலத்தில் நுழைந்தவுடன்தான் நெருக்கம் குறைந்திருந்தது.

 

போனவருடம்தான் (ஹஜ் 2005) தூண் போல இருந்த ஜமராத் உயிர் சேதத்தைத் தவிர்க்க சுவர் போன்று நீட்டி கட்டியிருந்தார்கள் (பார்க்க படம்). கூட்டம் நிரம்பி வழிந்தது. நாங்கள் வலது புறமாக பாலத்தின் விழிம்பிற்கு ஒதுங்கி ஜமராத்தின் இறுதி வந்ததும் இடது புறமாக ஜமராத்தை நெருங்கினோம். மக்கள் ஜமராத்தை நெருங்கி கல்லெறிந்துவிட்டு "V" வடிவத்தில் பிரிந்து சென்றார்கள். ஜமராத்தின் முடிவில் கூட்டம் இல்லாததால் அங்கு நின்றுக்கொண்டு 'அல்லாஹ் அக்பர்' என்று சொல்லி பட்டாணி அளவில் இருக்கும் 7 கற்களை ஒவ்வொன்றாக ஜமராத் சுவரின் மீது எறிந்தேன். ஜமராத்தின் சுவரை நெருங்க முடியாதவாறும், எறிந்த கற்கல் நமது தலையில் விழாதவாறும் கட்டியிருந்தார்கள். நான் சற்று கவனித்தபோது சில செருப்புகளும் அவ்வப்போது வந்து விழுவது தெரிந்து. சிலர் இதனை சைத்தான் என்று நினைத்துக்கொண்டு அறியாமையினால் இவ்வாறு செய்கிறார்கள்.


3 ஜமராத்திற்கும் கல் எறிந்துவிட்டு வலது புறத்தில் உள்ள கீழிறங்கும் வழியை அடைந்த போது இறந்த உடல்களை, குளிரூட்டப்பட்ட பெருவாகனத்தில் அடுக்கிக்கொண்டிருந்தார்கள். வாகனத்தில் மட்டுமே 21 இருப்பதாக நண்பர் சொன்னார். அதுவல்லாமல் கீழே வரிசையாக போர்த்தப்பட்டு இருந்த உடல்களை சரியாக கணக்கிடும் அளவிற்கு தூரத்திலிருந்து பார்க்க இயலவில்லை. ஆகவே பாதைவழியே இறங்கத் தொடங்கினோம். இறந்தவர்களை அடுக்க குளிரூட்டப்பட்ட புதிய பெருவாகனம் வந்து நின்றது. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும் 400, 500, 700 என்று இஷ்டத்திற்கு ஃபிளாஷ் செய்தி வந்ததால் அவரவர் குடும்பத்தினர்களும் நண்பர்களும் செல்பேசியில் தொடர்பு கொண்டார்கள்.


நாங்கள் ஜமராத் பாலத்தில் இருந்தபோது முதியவர் ஒருவர் சப்தமாக, 'ஹாஜிகளை ஹாஜிகள் கொல்வார்களா' என்று சம்பவம் நடந்த திசைநோக்கி கைகாட்டி புலம்பிக்கொண்டிருந்ததை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது.

 

ஹஜ் அமைச்சகத்தால் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள்:

 

1) சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜிகளின் கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் தீ பற்றாத கூடாரங்களை உடைய நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய முதவ்விஃப் என்ற ஒழுங்குமுறையை பல கோடி செலவில் ஏற்பாடு செய்தது. அக்கூடாரங்கள் போதாததால் மினாவின் இடத்தையும் தாண்டி முஸ்தலிஃபாவின் ஒரு பகுதிவரை கூடாரங்களை நிறுவியுள்ளார்கள்.

 

2) தொற்று நோயை தவிர்க்க தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான அத்தாட்சி இருந்தால்தான் ஹஜ் செய்ய அனுமதி கிடைக்கும். (தடுப்பு ஊசி, மக்கா செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்னரே போட்டால்தான் அதன் முழுமையான பலன் கிடைக்கும்)


3) ஜமராத்தில் நடக்கும் விபத்தை தவிர்க்க தூண் போன்ற பழைய அமைப்பை மாற்றி நீண்ட சுவர் போன்றதை 2005-ம் வருட ஹஜ் முதல் உருவாக்கப்பட்டது. (ஹஜ் அல்லாத மற்ற காலத்தில் காணப்படும் ஜமராத் பாலத்தைதான் படத்தில் பார்க்கிறீர்கள். படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்).


4) மினா, முஸ்தலிஃபா, அரஃபா ஆகிய அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் நவீன டாய்லட் வசதிகள்.


5) கண்டெய்னரில் இலவச தண்ணீர், பழச்சாறு, மோர் பாட்டில்கள் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டு அது முறையாக கண்காணிக்கப்படுகிறது.

6) மக்காவிலிருந்து மினா முஸ்தலிஃபாவின் ஒரு பகுதி வரை நடை வழியாக செல்லும் ஹாஜிகளுக்கு நிழல்தரும் விதமாக இரும்பு பந்தல் அமைப்பை ஏற்படுத்தி தந்திருப்பது.

7) அருகருகே கூடாரங்களை தவறவிட்டவர்களுக்கு சவுதி சாரணர்கள் மூலம் வழிகாட்டுவது. இந்த அலுவலகத்தின் மேல் வட்டவடிவ பலகையில் "i" என்று பெரிதாக எழுதியிருக்கும்.

 

8) வாகனங்கள் செல்வதற்கு தனித் தனியாக பல வழிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். ஹஜ் பயணிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தனியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

9) குறைந்தது 3 ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டபடியே இந்த 6 நாட்களும் கண்கானிப்பில் ஈடுபடும்.


10) போலீஸ், செக்யூரிட்டி, தீயணைப்பு, இராணுவம், தற்காலிக ஊடக இணைப்பாளர்கள் என சுமார் 60,000 பேர் உள்ளனர்.

11) பல கூடாரங்கள் சேர்ந்தது ஒரு முதவ்விஃப் ஆகும். அதன் எண் செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் உயரமான பலகையில் எழுதப்பட்டுள்ளதால் மினாவில் உள்ள ஏதேனும் ஒரு பாலத்தில் நின்றுக்கொண்டு குறிப்பிட்ட முதவ்விஃப் கூடார தொகுப்பு எங்கு உள்ளது என்பதைக் கண்டுக்கொள்ள இயலும். இது உங்கள் கண்கள் புலப்படும் தூரம் வரைதான். (இவ்வெண்கள் சிலவற்றை வரிசையாக காண முடியவில்லை. எனவே இதனை நிர்வாகம் மேம்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்).

 

12) செம்பிறை ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. (பார்க்க படம்).

 

13) இதுவல்லாமல் கூட்டத்தில் புகுந்து செல்லக்கூடிய மற்றும் ஒரு ஆள் படுக்கக்கூடிய வகையில் பலவகை அவசர ஊர்திகள் (ஆட்டோ, மோட்டார் பைக் உட்பட) தயார் நிலையில் உள்ளன.

 

14) ஆங்காங்கே முதலுதவி மருத்துவ மையங்கள் உள்ளன.

 

15) நடந்து வரும் ஹாஜிகள் குறுக்குவழியாக மினாவை அடைவதற்கு குகைப் பாதைகள் (ஒரு வழிப்பாதை) உதவுகின்றன. இக்குகைள் இராட்சத மின்விறிகளை வைத்து காற்றோட்டம் செய்யப்படுகிறது. (படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்)

 

16) ஜமராத் பாலத்தின் மேற்பகுதிக்கு செல்லும் வழியில் நவீன மின்னணு அறிவிப்புப் பலகைகள் உள்ளன.

 

17) ஜமராத் பாலத்திற்கு பயணப் பொருட்களை (Luggages) கொண்டு செல்லாதீர்கள் போன்ற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன.

 

18) ஜமராத் சுவற்றில் மக்கள் நசுங்கிவிடக்கூடாது என்பதற்காக முதலாவதாக எதிர்படும் முனையில் இராணுவங்களை நிறுத்திவிடுகிறார்கள். அதன் முனை ஓவல் வடிவத்தில் இருக்கும்.

 

Courtesy of Images:

www.hajinformation.com, www.arabnews.com and www.bbc.co.uk

 

இக்கட்டுரைக்கு வலைப்பதிவில் இடப்பட்ட மறுமொழிகளை பார்வையிட கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

http://nihalvu.blogspot.com/2006/01/blog-post_20.html

 

- அபூ உமர்

நாள் : 20 ஜனவரி 2006

 

தொடர்புடைய சுட்டிகள்:

 

SR4bn Jamrat Expansion Begins

Nearly 3 Million Performed Haj: Al-Farsy

Indian, Pakistani Expats Fume Over Raw Haj Deal

 

Local Hajis Offer Feedback on Conduct of Pilgrimage

Families Claim Stampede Dead

Diplomats Suggest Website to Help Identify Bodies

 

Grieving Relatives Gather to Identify Stampede Victims

Death Toll in Stampede Crosses 360

‘It Was Like a Huge Wave of Sea Gushing Down on the Pilgrims’

 

345 Dead in Jamrat Tragedy

Editorial: Disastrous Indiscipline

 

Jamrat Project Aims to Avoid Stampede During Haj

Work on Jamrat Bridge Expansion to Start in February