Index |Subscribe mailing list | Help | E-mail us

 

 

பரிந்துரை யாருக்கு..?

நெல்லை இப்னு கலாம் ரசூல்

 

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்புவியிலுள்ள படைப்பினங்களில் மனிதர்களையும் படைத்து அவர்கள் சுபிட்சமாக வாழ எல்லா அருட்கொடைகளையும் வழங்கி அவன் இடும் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்குமாறு உத்தரவிட்டான். அவன் படைத்ததன் நோக்கத்தை திருமறை குர்ஆனில் குறிப்பிடுகையில் "மேலும் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்க வில்லை" (அல்குர்ஆன் : 51:56) என்று அழுத்தம் திருத்தமாக அழகாகக் கூறுகிறான்.


தவறுகளையும், குற்றங்களையும் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய மனிதர்களைச் சீர்படுத்த நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலம் நேர்வழி காட்டும் வேதங்களை வழங்கி மனித சமுதாயத்தின் மீது அல்லாஹ் சொரிந்திருக்கும் அருட்கொடைகள் ஏராளம் ஏராளம். அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்படிவதுடன் அவனின் திருத்தூதரின் வழியைப் பின்பற்ற வேண்டுமென்பதை

 

"நம்முடைய தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மனம் விரும்பி) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (அல்-குர்ஆன் 59:7) என்றும்,

 

நபிவழி நடந்தால் அல்லாஹ்வின் நேசத்தையும் பாவ மன்னிப்பையும் பெறலாம் என்பதனை "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்தால்) அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான்" என்று மனிதர்களிடம் நபியைக் கூறச் சொன்னதையும் அருள்மறை (3:31) வசனம் நமக்கு வலியுறுத்துகிறது.

 
மொத்தத்தில் அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் பின்பற்றி நடக்கும் நல்லடியார்களுக்கு சுவனத்தையும், அவனின் தூதரின் கட்டளைகளை வழிமுறைகளைப் புறக்கணிப்போர் வரம்பு மீறுவோர்க்குத் தண்டனையாக நரகத்தையும் அல்லாஹ் மறுமையில் வழங்கயிருக்கிறான் என்பதை அறிவோம். தீர்ப்பு நாளாகிய மறுமை நாளில் அல்லாஹ்வின் அனுமதி பெற்று ஈமான் கொண்ட நல்லடியார்களுக்கு சுவனம் வழங்க உத்தமத் திருநபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்யவிருக்கிறார்கள் என்பதை கீழ்காணும் நபிமொழி உணர்த்துகிறது.


இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது, நபி(ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு "நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) "உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த்தேடிப்) பார்க்கமாட்டீர்களா?" என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், (உங்களுடைய ஆதி பிதா) ஆதம்(அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.


எனவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, "நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு "ஆதம் (அலை) அவர்கள் (நான் செய்ததவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப்போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது" என்று கூறிவிட்டு "நீங்கள் வேறு யாரிடமாவது சொல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்" என்று சொல்வார்கள்.

 

உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று "நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். "நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது." (எனவே,) வேறு யாவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.

 
அவ்வாறே மக்களும் மூஸா(அலை) அவர்களிடம் சென்று "மூஸாவே நீங்கள் இறைத்தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கூறுவார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள் "இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (எனவே) வேறு யாவரிடமாவது நீங்கள் சொல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.

 
அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, "ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை - (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் - நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (எனவே,) நீங்கள் வேறெவரிடமாவது (வேறு யாவரிடமாவது) சொல்லுங்கள். நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள" என்று கூறுவார்கள்.


அப்போது மக்கள் என்னிடம் வந்து "முஹம்மதே! நீங்கள் இறைத்தூதர். இறைத் தூதர்களில் இறுதியானவர். உங்களின் முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) ஸஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான்.

 

பிறகு "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்! உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி "இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்" என்பேன். அதற்கு "முஹம்மதே! சொர்க்கத்தின் வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்வி கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள், அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம்" என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரண்டு பக்கங்களுக்கிடையேயான தூரம் "மக்காவிற்கும் (யமனிலுள்ள) "ஹிகியர்" எனும் ஊருக்கும் இடையிலுள்ள அல்லது "மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள தூரமாகும்" என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரி: அபூஹுரைரா(ரலி) ஹதீஸ் எண் 4712)


மேலும் தம் உம்மத்தார்களிடம் உத்தம திருநபி (ஸல்) அவர்கள் கொண்ட பரிவையும் பாசத்தையும் உணர்த்தும் நபிமொழியைப் பாருங்கள்.

 

"ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட (அங்கீகரிக்கப்பட்ட) துஆ உள்ளது. அதனை அத்தூதர்கள் இப்புவியிலேயே துரிதப்படுத்தி கேட்டு விட்டார்கள். நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையின் மகத்துவத்தை உணர்த்தும் மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்.


"எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் தூரம் (அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம்) நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 335)


இத்தனை மகத்துவமும் மாண்பும் மிக்க உத்தம திருநபிகளாரின் மறுமை பரிந்துரை ஒருபுறமிருக்க நம் சமுதாயத்தாரிடம் நடப்பிலுள்ள பரிந்துரை எனும் பெயரால் நடக்கும் அலங்கோலங்களோ எழுத்தில் வடிக்கமுடியாத அளவில் ஏராளமுள்ளன, அவற்றில் சிலவற்றை ஆய்வுக்கு எடுத்து அலசி நேர்வழியின் சிறப்பை எடுத்துக்கூறுவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.

 

ஒரு தனியார் அல்லது பொது நிறுவனங்களில் பணிபுரியும் ஒருவரின் அலுவலகத்தில் ஏதேனும் பணிக்கு காலியிடமிருந்தால் அவ்விடத்தை நிரப்ப விரும்புபவர் அவ்வலுவலகத்தில் பணிபுரிபவரை அணுகி எனது இன்னவரை உங்கள் அலுவலகத்திற்க்குத் தேவைப்படும் இப்பணியில் அமர்த்த உங்களின் பரிந்துரையும், ஒத்துழைப்பும் நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வார். அவ்வாறே பரிந்துரை செய்பவர் செய்யப்படுபவரை மிகவும் நம்பகமானவர் இப்பணிக்கு மிக உகந்த பணியாளர் நான் இவரை நன்றாக அறிந்தவன் என்றெல்லாம் கூறி நிறுவனத்தாரிடம் தேவைக்குரிய நபரைத் தேர்வு செய்ய வழிவகை செய்வார்.


இப்பரிந்துரை போன்றே நாளை மறுமையில் "இந்த இமாம், இந்த அவுலியா, இந்த பெரியார் எனக்குப் பரிந்துரை செய்வார்கள், என்னை சுவனத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச்செல்வார்கள்" என்ற வாதம் மிகப் பிரபலமாக நம் சமுதாயத்தாரிடம் நிலவி வருகிறது. இதனடிப்படையில் நம்மில் பெரும்பாலோர் இக்கூற்று சரியெனக்கருதி வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர். தரீக்காக்களில் தக்லீது எனும் கண்மூடிப் பின்பற்றுதல் ஆகியவற்றில் சிக்கித் தவிக்கின்றனர். சீரழிவை நோக்கி முன்னேறுகின்றனர்.
கண்மூடிப் பின்பற்றும் அவ்லியாவின் அருள்கடாட்சம் என்றென்றும் தட்டாமல் கிட்ட மறுமையில் அவ்லியாவின் பரிந்துரை பரோபகாரம் பக்குவமாக கிடைக்க அவ்லியாவின் சன்னதியில் சென்று அவரின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் வார்த்து, சாம்பிராணி போட்டு, அகர்பத்தி கொளுத்தி ஆராதனை செய்யும் அவ்லியா பக்தர்கள் ஒருவகை. கேட்கின்ற பிரார்த்தனைகளை செவி மடுத்து எனது விருப்பங்கனை நிறைவேற்றினால் அவ்லியாவே உங்களின் உருஸ் தினத்தில் உங்களின் சன்னதிக்கு வந்து ஒரு ஆட்டை அறுத்து அன்னதானம் செய்வேன் என்று நேர்ச்சை நேர்வோர் இன்னொரு வகை. அவ்லியாக்களின் உருஸ் வைபவங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்ற இன்னிசைக் கச்சேரிகள், நாட்டியங்கள் இவைகளில் பங்கெடுத்து அங்கு விநியோகிக்கப்படும் தபருக்குகளில் அருள் நிரம்பி வழிகிறது என்று அங்கலாய்ப்பவர்கள் மற்றொரு வகை. இவற்றிற்கெல்லாம் மேலாக உருஸ்களில் கூடும் கூட்டத்தில் ஆண்-பெண் பாகுபாடின்றி ஒட்டி உரசி நின்று குளிர்காய நினைப்பவர்கள் வேறொரு வகை.


இப்படி அலங்கோலங்கள் பல நிறைந்து காணப்பட்டாலும் நம் நெஞ்சை நெகிழச்செய்யும் சில நிகழ்ச்சிகளும் நடந்தேறுகின்றன. அவ்லியாக்களின் தர்காக்களை அடுத்திருக்கும் அல்லாஹ்வின் ஆலயங்களில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கோசை கேட்டாலோ அவ்லியாக்களின் பக்தகோடிகளுக்கு விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுகின்றன. சமீபத்தில் அவ்லியாவின் சன்னதி ஒன்றில் அவ்லியாவைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த கவ்வாலிப் பாடகரை பாங்கோசை கேட்ட ஒருவர் எழுந்து பள்ளிக்குச் சென்று அல்லாஹ்வைத் தொழுது விட்டுவந்து பின்னர் உங்கள் பாடல்களைப் பாடுங்கள் என்று கூற, பாடகரோ உணர்ச்சிவசப்பட்டு உரக்கக் கத்தினார். அவ்லியாவின் சன்னதியில் சேவகம் செய்யும் என்னைப் போய் இந்த மடையன் தொழச் சொல்கிறான் என்று கொட்டித் தீர்த்தார்.

 

இப்படி அவ்லியாக்களின் மீது கொண்ட அளவு கடந்த அன்பால் அடிப்படைக் கடமையைக்கூட அம்பேலாக்கூடிய அறிவு ஜீவிகள் பிரிதொரு வகை, இப்படி பல வகைகளில் அல்லாஹ்வின் அடியார்கள் அவ்லியாக்களின் பரிந்துரை என்ற பெயரால் படுபாதகமாக வழிகேட்டின்பால் செலுத்தப்படுகின்றனர். இந்த அவ்லியாக்கள் பரிந்து பேசுவார்கள், அதுவும் மார்க்கத்திற்கு முரணான வழிகேட்டிலுள்ளவர்களுக்கு மகான்கள், பெரியார்கள், அவ்லியாக்கள், நாதாக்கள் பரிந்து பேசி சுவனத்திற்கு அழைத்துச் செல்வர் என்று இந்த மக்கள் கூறுவதற்கு ஏதேனும் அத்தாட்சிகள் ஆதாரங்கள் பெற்றுள்ளனரா? என்று பார்த்தால் அடிப்படையற்ற ஆதாரமில்லாத கூற்றையே இவர்கள் பின்பற்றுகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்,
அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்து பேசுபவர் யார்? (அல்குர்ஆன் 2:255).


தனக்கு இணை வைக்கக்கூடிய தனது ஸிஃபத்துக்களை (தன்மைகளை) பிறருக்குப் பங்குபோட்டுக் கொடுக்கும் இத்தகையவர்களுக்கு பரிந்துரை செய்ய நல்லடியார்களாகிய இமாம்கள், அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள் முன்வருவார்களா? அல்லது பரிந்துரைக்கு அல்லாஹ் அனுமதி வழங்குவானா? நிச்சயமாக இது நடக்கப்போவதில்லை. ஏனென்றால் திருமறைக்குர்ஆனின் மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்,


நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான் இதனைத்தவிர பிற பாவங்களைத் தான் நாடியோர்க்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)


ஆக அல்லாஹ் மன்னிப்பளிக்காத மக்களுக்குப் பரிந்துரையால் என்ன பயன்? அதனை யார் பரிந்துரைத்தால்தான் என்ன?


பயனற்ற பரிந்துரைகளில் சில
அல்லாஹ்வின் நல்லடியார்களின் பின்னால் பரிந்துரைக்கும் அருள் கடாட்சத்துக்கும் வேண்டி அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஒரு சில ஆதாரங்களை முன் வைப்போம். இந்த நல்லடியார்களைக் காட்டிலும் பன்மடங்கு சிறந்தவர்களும் அல்லாஹ்வின் அடிமைகளும் தூதர்களுமாகிய நபிமார்களின் வாழ்க்கை நமக்கு நல்லதோர் முன்னுதாரணம் ஆகும்.


பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள் காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே! என்று நூஹ் அழைத்தார், அதற்கு அவன் "என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்" எனக் கூறினான். "இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத்தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார்". அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான். பின்னர்; பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள் என்று சொல்லப்பட்டது நீரும் குறைக்கப்பட்டது (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது. நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய் எனக் கூறினார்.
அ(தற்கு இறை)வன் கூறினான்: "நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன் நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான். ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.


என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே நான் கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விடுவேன் என்று கூறினார். (அல்குர்ஆன்
11:42-47)


மேற்கூறிய இறைமறை வசனங்கள் அல்லாஹ்வின் தூதரும் நபியுமான நூஹ் (அலை) அவர்கள் இணைவைப்பாளனாகிய தம் மகனை விசுவாசம் கொள்ள அழைத்து வெள்ளப்பெருக்கில் இருந்து தப்புவதற்கு கப்பலிலேற வேண்டுகிறார், மறுத்த மகனை வெள்ளப் பேரலை வாரிச்சுருட்டிச் செல்கிறது, அவன் தன் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று நபி நூஹ் (அலை) கூற இணைவைப்பாளனான அவன் நபியின் குடும்பத்தைச் சார்ந்தவனல்ல என்று அல்லாஹ் அவருக்கு உணர்த்தியதுடன் அவன் செய்யும் இணைவைப்பு ஒரு ஒழுக்கமற்ற செயல் என்பதைத் தெளிவு படுத்துவதுடன் நபிக்கு அறியாததை தன்னிடம் கேட்டு அறியாதவர்களில் ஒருவராக ஆகிவிட வேண்டாம் என்று இம்மையில் அறியாது செய்த ஒரு பரிந்துரைக்கு படைத்தவன் அல்லாஹ் கொண்ட கோபத்தை நபி நூஹ் (அலை) அவர்கள் கியாம நாளில் மக்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கு வேண்டி அணுகும் போது பக்குவமாகக் கூறுவதைப் பாருங்கள்.


... மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)


ஆக, அறியாமல் செய்யும் பரிந்துரைகள் அபாயமானவை என்பதுடன் அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாகும் என்பதை மேற்கூறிய குர்ஆன் வசனங்களும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றன. அபுல் அன்பியா என்று அழகுபட அழைக்கப்படும் நபிமார்களின் தந்தை இபுராஹீம் (அலை) அவர்கள் இணைவைப்பை எதிர்த்து ஏகத்துவத்தை நிலைநாட்ட சந்தித்த சோதனைகள் மிக அதிகம். சுடும் தன்மையுள்ள நெருப்புக் கூட அதன் குணத்தை மாற்றி தேகத்துக்கு இதமாகத் திரும்பியது. அல்லாஹ்வின் சோதனையில் சகிப்புத்தன்மை காட்டிய அந்த இறைத்தூதருக்கு இறைவன் வழங்கிய அற்புதமாகும். அந்த நபிகளாரின் தந்தையோ இணைவைப்புக்குத் தூபம் போடும் அல்லாஹ்வின் எதிரி. நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தந்தையிடம் காட்டிய பரிவு மறுமைப் பரிந்துரை வரை சென்றது. இணைவைப்போர்க்கு இறைவனிடம் செய்யும் பரிந்துரைகள் எப்படியிருக்கும்? என்பதனை வல்லோன் அல்லாஹ் வான்மறையில்


மேலும் (நபி) இப்றாஹீம் தன் தந்தைக்காக மன்னிப்பு கோரியது ஒரு வாக்குறுதியே தவிர வேறு இல்லை, அதை அவருக்கு இப்றாஹீம் வாக்களித்திருந்தார், பின்னர் நிச்சயமாக அவர் தந்தை அல்லாஹ்வுக்கு விரோதி எனத் தெளிவாகிவிட்டபின் அதிலிருந்து அவர் விலகிக்கொண்டார். (அல்குர்ஆன் 9:114)


மேலும் ஸஹீஸுல் புஹாரியில் இடம்பெறும் நபிமொழியொன்று கூறுவதைப் பாருங்கள்:


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, இன்று உனக்கு நான் மாறு செய்யமாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது? என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்) என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும், பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் (ஹதீஸ் எண் 3350).

 

சுவனத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்பவர்கள் அவ்லியாக்கள், நாதாக்கள், இமாம்கள், பெரியார்கள் என்று அர்த்தமில்லாமலும் ஆதாரமில்லாமலும் சொல்பவர்களுக்கு பரிந்துரை பெறுவதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அலசுவோம்.

 

உத்தம திருநபி (ஸல்) அவர்கள் இளமையிலேயே தந்தை-தாயை இழந்து பாட்டனாரின் பரிவு பாசத்தில் வளர்ந்த காலமோ மிகமிக குறைவு. பாட்டனாரின் மறைவுக்குப்பின் நபி (ஸல்) அவர்களை எடுத்து வளர்த்து அன்பைச் சொரிந்தவர் பெரிய தந்தை அபுதாலிப் அவர்கள். சிறு வயதில் நபி (ஸல்) அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று வாணிபத்துடன் உள்ள தொடர்பைக் கற்றுக் கொடுத்த ஆரம்ப ஆசான்.


ஏகத்துவப் பிரச்சாரத்துக்கு ஈடு கொடுக்க முடியாத குறைஷிய கொடுமையாளர்கள் அபுதாலிபிடம் நபிகளாரை அடக்கி வையுங்கள் என்று அன்புடன் சொல்லிப் பார்த்தனர், குலம் கோத்திரம் போன்ற பெருமைகளைச் சொல்லி மிரட்டியும் பார்த்தனர். ஒரு கையில் சந்திரனையும் மறு கையில் சூரியனைக் கொடுத்தாலும், தான் கொண்ட கொள்கையில் மாறாத உறுதியுடன் திகழ்ந்த நபிகளாரை சமூகப்பகிஸ்காரம் என்னும் ஊர் நீக்க உத்தரவைக் கொண்டு குறைஷிய கொடுமையாளர்கள் துன்புறுத்திய போதும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அந்த நேரத்திலும் அன்புடன் அரவணைத்து ஆதரவு நல்கியவர் அபுதாலிப் ஆவார்.


மொத்தத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் முடங்கி விடாமல் முழு மூச்சுடன் நடக்க மிகவும் ஒத்துழைப்பு நல்கியவர் அபுதாலிப். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபுதாலிப் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலிருக்கும் போது உத்தம திருநபி (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தையார் ஈமான் கொண்டு ஈடேற்றம் பெற்று சுவன வாழ்வை சுவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவரை அணுகியதை விளக்கும் நபிமொழியைப் பாருங்கள்.


நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணவேளை வந்தபோது அவரருகில் அபூ ஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் இருக்க, நபி (ஸல்) அவர்கள் வந்து, என் பெரிய தந்தையே! "லாஇலாஹ இல்லல்லாஹ்" (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லுங்கள். நான் அல்லாஹ்விடம் தங்களுக்காக வாதாடுவேன் என்று கூறினார்கள்.


அப்போது அபூ ஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு உமய்யாவும், அபூ தாலிபே! (உங்கள் தகப்பனார்) அப்துல் முத்தலிப் அவர்களின் மார்க்கத்தையா நீங்கள் வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், (பெரிய தந்தையே!) உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும்வரை நான் (உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன் என்று கூறினார்கள். அப்போதுதான், "இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் - அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பதற்கு நபிக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை" எனும் (திருக்குர்ஆன் 9:113 வது) இறைவசனம் அருளப்பட்டது. ஸஹீஹ் புகாரி 4675, அறிவிப்பாளர்: முஸய்யப் இப்னு ஹஸன் (ரலி).


இணைவைக்கும் எவருக்கும் பாவமன்னிப்போ பரிகாரமோயில்லை என்பதை உறுதியாக விளக்குகிறது மேற்கூறிய ஹதீஸ். படைத்த இறைவனின் பரோபகாரம், பரிவு கிட்டாது என்பது ஒருபுறமிருக்க இணைவைப்பவருக்குப் பாவ மன்னிப்பு கோருவதைக்கூட தடை செய்கிறான் படைத்த வல்லோன். அபுதாலிப் சம்மந்தமான மற்றொரு நபிமொழியைப் பாருங்கள். அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) அறிவித்தார்கள் நான், இறைத்தூதர் அவர்களே! அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (தங்கள் எதிரிகளின் மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே! என்று கேட்டேன், நபி (ஸல்) அவர்கள், ஆம்; அவர் இப்போது (கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார் என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி - 6208)


மற்றொரு நபிமொழியை அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும் என்று சொல்ல நான் கேட்டேன். (ஸஹீஹ் புகாரி - 6564).


நபி (ஸல்) அவர்களின் பரிந்துரைக்குப் பின்னரும் கூட அபுதாலிப் தண்டிக்கப்பட்ட செய்தியை மேற்கூறிய இரு ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன. இணைவைப்பின் நிழல் பட்டுவிட்டால் பரிந்துரை கிட்டாது என்பது ஒருபுறமிருக்கட்டும் பாவமன்னிப்பு கேட்பதைகூட அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான், இப்படியிருக்க இணைவைப்பையே பழக்கமாகக் கொண்டிருக்கும் எம் சமுதாய அறியாத மக்களுக்கு யார் எடுத்துச்சொல்வது? குர்ஆன் ஹதீஸைப் பேசுகிறோம் என்று சொல்லக்கூடிய நாமும் பிறரை விமர்சிக்க எடுத்துக்கொள்ளும் எள்முனை அக்கறையை இவ்விஷயத்தில் செலுத்தினால் வழிகேட்டில் செல்லும் மக்களைத் தடுத்து நன்மையை ஏவித் தீமையைத் தடுத்த பாக்கியம் பெற்றவராவோம். அல்லாஹ்வின் அனுமதியின்றி ஆதாரமில்லாமல் இன்னாரின் பரிந்துரையால் நான் சுவனம் போவேன் என்ற வாதத்தை எவராலும் வைக்கமுடியாது, ஏனென்றால் உத்தம திரு நபி (ஸல்) அவர்களைக் காட்டிலும் உயரிய தன்மைகள் இந்த அவ்லியாக்களுக்கு இருப்பதாக உசுப்பி விடுவார்கள் சிலர்.


நபிகளாரின் தாய்-தந்தை பற்றிய சில நபிமொழிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் என் தந்தை எங்கே? என்று வினவ "நரகில்" என நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்க நிராசையுடன் திரும்பிய அவரை அழைத்து நபி (ஸல்) அவர்கள் "நிச்சயமாக என் தந்தையும் நரகில்தான்" என்று கூறினார்கள். (முஸ்லீம் - 398).


மற்றொரு நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் "என் தாயின் அடக்கஸ்தலத்திற்கு சென்று கண்டுவிட்டு அவருக்கு பாவமன்னிப்பு கோர அல்லாஹ்விடம் அனுமதி கோரினேன், அல்லாஹ் என் தாயின் மண்ணறையைச் சென்று காண மட்டும் இசைவு தந்துவிட்டு அவருக்கு பாவமன்னிப்பு கேட்க தடை விதித்து விட்டான்" எனக் கூறினார்கள்.


உத்தம திரு நபி (ஸல்) அவர்கள் தம் உம்மத்தாருக்கெல்லாம் பரிந்துரை செய்தாலும் தன் தாய், தந்தை, பெரியதந்தை விஷயத்தில் படைத்தவனின் அனுமதியை நாட வேண்டிய நிலையிலிருப்பதையும் பரிந்துரை செய்யத் அவனின் அனுமதி தேவை என்பதுடன் இணைவைப்போர்க்காக செய்யும் பரிந்துரை விழலுக்கிறைத்த நீராகும் போன்ற உண்மைகள் இதுவரை தந்த ஆதாரங்களில் கண்டோம், இனி பரிந்துரை யாருக்கு என்று பார்ப்போம்?.


நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை யாருக்கு?
சுவனத்தின் சுவையை நுகர என்றென்றும் நிலைத்து மரணமற்ற நித்திய சுக வாழ்வையடைய படைத்தவனின் அருளும் கருணையும் பெற்ற உத்தம திருநபி (ஸல்) அவர்களின் பரிந்துரையைப் பெற ஈமான் கொண்ட விசுவாசிகள் என்ன செய்ய வேண்டும்?. குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆராய்ந்தால் அதற்குரிய பதில் கிடைக்கிறது.


வல்ல அல்லாஹ் அருள்மறையில் எவர்கள் (இம்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான் ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். (அல்குர்ஆன்
47:1-2).


ஆக ஈமான் கொண்ட விசுவாசி ஆற்ற வேண்டிய பணி எப்படி இருந்தால் என்ன பலன் என்பதை இறைவன் இரத்தினச் சுருக்கமாக கூறியதைக் கண்டோம். இனி இறைவிசுவாசியின் இலக்கணத்தை மற்றொரு அருள்மறை வசனம் கூறுவதைப் பார்ப்போம்.


முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்கள் அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையில் இரக்கமிக்கவர்களாகவும் ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப் பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்களது உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் வாக்களிக்கின்றான். (அல்குர்ஆன் 48:29).


ஒரு இறை விசுவாசியின் தன்மை, அவனின் செயல்கள், அவனின் இலக்கணம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற நியதியை நிர்ணயித்த இறைவன் விசுவாசிகளுக்கு கூலியாக சுவனத்தை தருவதுடன் நிராகரிப்போர் (அவனின் மேற்கூறிய இலக்கணங்களுக்கு மாறாகச்) செய்யும் அமல்களை அங்கீகரிக்காமல் அவர்களை கோபமூமட்டுவதை மேற்கூறிய அருள்மறை வசனம் விளக்குகிறது.
மறுமையில் பாவ மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பைத் தவிர்ந்து கொள்ள இறைவன் கூறும் மற்றொரு விளக்கத்தைப் பாருங்கள். இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது தம் சமூகத்தாரிடம் அவர்கள், உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றை விட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன என்றார்கள். (ஆனால்) இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்) எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது. (அல்குர்ஆன் 60:4)


முன்மாதிரிகளைச் சுட்டிக்காட்டிய அல்லாஹ் முஷ்ரிக் (இணைவைப்பாளர்) தந்தைக்கு பாவ மன்னிப்புத் தேடக்கூறியதைத் தவிர என்று பரிந்துரைக்கு பெற வேண்டிய படிப்பினையை பக்குவமாக நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வாழ்வு மூலம் நமக்கு கற்றுத்தருகிறான்.

 

நபி (ஸல்) அவர்களிடம் பணிவிடை புரிந்த நபித்தோழர் ரபிஆபின் கஹ்ப் (ரலி) அவர்களிடம் உத்தம திருநபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்புவதை என்னிடம் கேளுங்கள் என்று கூற நபித்தோழரோ அல்லாஹ்வின் தூதரே மறுமையிலும் சுவனத்தில் உங்களுடன் இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை முன் வைக்கிறார். நபி (ஸல்) அவர்கள் அந்நபித் தோழரை நோக்கி நீர் உமது விருப்பம் நிறைவேற ஸஜ்தாக்களை (சிரம்பணிதலை நஃபிலான தொழுகைகளை) அதிகமாக்கி உதவி புரிவீராக என்று கேட்டுக்கொண்ட செய்திகளை ஹதீஸில் காண முடிகிறது. மற்றொரு நபிமொழியில் கலப்பற்ற தூய உள்ளத்துடன் கலிமா ஷஹாதாவை மொழிந்து அதில் உறுதியாய் நிற்பவர் என் பரிந்துரைக்குரியவர் என நபி (ஸல்) அவர்கள் கூறியதையும் பார்க்கிறோம்.


ஸஹீஹ் புகாரியில் இடம்பெறும் நபிமொழியொன்று கூறுவதைப் பாருங்கள். பாங்கு முடிந்த பின் கூறும் துஆ

 

பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக! என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள். (புகாரி - 614)


மற்றொரு அறிவிப்பில் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள், மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்பார்கள். (ஒவ்வொருவராகத் தம்மால் இயலாதென்று மறுத்துக்கொண்டே வர) இறுதியில் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள் நபியவர்களை அல்லாஹ் (மகாமு மஹ்மூத் எனும்) உயர் அந்தஸ்திற்கு அனுப்பும் நாளில் இது நடக்கும், என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும் போது இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சுவர்க்;கத்தின்) உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அன்னாருக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை அனுப்பி வைப்பாயாக! என்று பிரார்த்திக்கிறவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும், இதை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்கள் (புகாரி - 4718-4719).


பாங்கோசை கேட்டபின் நாம் செய்யும் பிரார்த்தனைக்குரிய மிகப்பெரும் பலனை மேற்கூறிய நபிமொழிகள் நமக்குணர்த்தின. உத்தம திரு நபி (ஸல்) அவர்கள் கியாம நாளின் பயங்கரத்தைப் பற்றி இணைவைக்கும் குறைஷியக் குடும்பத்தாரை எச்சரித்தது எப்படி என்பதை கீழ் காணும் நபிமொழி விளக்குகிறது.


இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள் (நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அதாவது,) தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!) எனும் (திருக்குர்ஆன்
26:214-வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ஸஃபா (மலை) மீதேறி உரத்த குரலில், யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், யார் இவர்? என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?) என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன் என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூ லஹப், உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்று கூட்டினாயா? என்று கேட்டான். பின்னர் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது அழியட்டும் அபூ லஹபின் இரண்டு கரங்கள்; அவனுமே அழியட்டும் எனும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது (புகாரி - 4719).


அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் காட்டித் தந்த வழிமுறையில் வாழ்ந்து ஏவியதைச் செய்து விலக்கியதைத் தவிர்ந்து, மறுமை வாழ்வைச் செம்மைப்படுத்தவே இப்புவியுக வாழ்க்கையை நாம் பயன்படுத்தி நிரந்தர மறுமை வாழ்வின் சிறப்பை உணர்ந்து உத்தம திரு நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை பெறும் பாக்கியம் பெற்றவர்களாகத் திகழ நம் அமல்களை நாம் ஆக்கிக் கொள்வோமாக.