Index |Subscribe mailing list | Help | E-mail us

வெட்கம்

M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி

 

வெட்கம் மனிதர்களிடம் இருக்க வேண்டிய ஓர் அவசியமான பண்பாகும். இதனைக் கைவிட்ட மனிதர்கள், மிருகங்களை விடக் கேவலமாக அலைந்து கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஓர் உன்னத ஒழுங்குமுறைகளை இஸ்லாம், மனிதர்களுக்குக் கற்றுத் தருகிறது.


மதினாவாசியான ஒரு நபித்தோழர், தன் சகோதரர் அடிக்கடி வெட்கப்படுவதைக் கண்டித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள், அவரைக் கண்டிக்காதீர்கள் நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானின் (நம்பிக்கையில்) ஒரு பகுதி என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

இந்த நபி மொழியில் இருந்து ஒரு முஃமினிடம் நாணம் இருந்தாக வேண்டும் என்பதனை உணர்கிறோம். நாணம் உள்ளவன் தவறு செய்ய யோசிப்பான். பிறர் முன் அசிங்கப்பட்டு நிற்க வேண்டுமே என்ற நாண உணர்வுதான் ஒருவனை சிறந்தவனாக மாற்றுகிறது. நபி(ஸல்) அவர்கள் அதிக நாண உணர்வுள்ளவர்களாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தைக் கண்டால் அதன் பிரதிபலிப்பை அவர்களின் முகத்தில் காணலாம். (நூல் : புகாரி)

பெண்களிடம் ஏற்படும் இயற்கையான வெட்க உணர்வு அவர்களுக்கு மேலும் அழகூட்டி மதிப்பையும் அதிகரிக்கச் செய்யும் நாணத்தால் ஒதுங்கி நிற்கும் பெண்ணைக் காணும் எந்த ஒரு நல்ல ஆண்மகனும் அந்த பெண்ணிற்கு மதிப்பளிக்காமல் போகமாட்டான் என்பதே உண்மை.

இன்றைய நாகரிக உலகில் பெண்களின் நிலை என்ன?


அடுப்பூதும் பெண்ணிற்கு கல்வி எதற்கு என்ற நிலை போய் கல்வியில் பெண்கள் முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், இப்பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளும் மாதத்திற்கு ஒரு
Boy Friend என்ற பெயரில் நாணத்தை எடுத்தெறிந்து விட்டார்கள்.

ஒரு கவிஞர் கூட இந்நிலையைக் கண்டு,


"நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலைகிறாயே!" என்கிறார்.


ஆண்களால் தங்கள் கற்புக்குப் பாதிப்பு என்றுப் பல பெண்கள் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் கூறினாலும், பெண்களின் கற்பு பறிபோக அவர்களின் நடவடிக்கைகளும் ஆடைகளுமே அதிக காரணமாக அமைந்துவிடுகிறது.

வெட்கம், நாணம் கொள்வது பெண்களிடம் இருக்க வேண்டிய இயற்கைப் பண்பாகும். ஆனால் இன்று இப்பண்புகள் உள்ள பெண்களைக் காண்பதே அரிதுதான்.

 

இக்காலப் பெண்களில் சிலர் கணவனை தாங்களே தேர்வு செய்கிறேன் என்ற பெயரில் பீச், லாட்ஜ் என்ற தனிமை சந்திப்புக்களால் கருவுற்று ஏமாந்து நிற்கும் நிலைமைகளைப் பார்க்கிறோம். காரணம் அவர்கள் நாணத்தை கைவிட்டதால்தான்.

நபியே முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் தங்கள் அலங்காரத்தில்(சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர(வேறு எதையும்) வெளிக்காட்ட வேண்டாம். மேலும் அவர்கள் தங்கள் மார்புகளை முந்தானைகளால் மறைத்துக் கொள்ளட்டும் (அல்குர்ஆன்: 24:31) என்று இறைவன் கூறுகிறான். இன்னும்,

கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் ஒப்புதல் பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள் என நபி(ஸல்) அவர்கள் கூறிய போது (கன்னிப் பெண்ணிடம்) அனுமதிக் கேட்பது எப்படி? (அவள் வெட்கப்படுவாளே) என்று நபித்தோழர்கள் கேட்டனர். அவளின் (வெட்கத்தால் ஏற்படும்) மவுனமே அனுமதியாகும் என்று பதில் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்).

திருமணம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. மணமுடிக்க விருப்பம் இல்லை எனில் துணிவுடன் மறுத்துவிடும் பெண்கள் கூட சம்மதமெனில் ஆம் என்று கூறாமல் மவுனத்தால் சம்மதம் தெரிவிப்பார்கள். இதுவும் கூட பெண்களிடம் ஏற்படும் நாணத்தின் வெளிப்பாடு என்பதனை இதன் மூலம் அறியலாம்.

பெண்களுக்கு இஸ்லாம் ஒரு வரம்பைப் போடுகிறது.

1. பிற ஆடவரைக் கண்டால், பார்வையைத் தாழ்த்த வேண்டும்
2. ஆடைகளில் ஒழுங்கைப் பேண வேண்டும்
3. அந்நிய ஆண்களிடம் பேச்சில் நளினம் காட்டக் கூடாது
4. அந்நிய ஆணுடன் தனிமையில் இருக்கக் கூடாது

இவை அனைத்தும் வெட்கம் நாணம் உள்ள பெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகளாகும். வெட்கம், நாணம் தொலைந்தால் இவை அனைத்தும் விடுபட்டுப்போய் இறைக் கோபத்திற்கு ஆளாக நேரிடுவதோடு, பெண்களின் வாழ்வு சீரழிந்துப் போகும்.

எனவே பெண்களே!, வெட்கம் நாணம் உள்ள பெண்மனிகளாக திகழ்ந்து இறையன்பைப் பெறுவோமாக!.